உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இலண்டனில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் என்னவென்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு அதன் நூலகம் என்று சொல்லிவிடுவேன். நூலகங்கள் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணம், அவை மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்திருக்கிறது என்பதே. அதுவும் குறிப்பாகக் குழந்தைகளோடு. ஆம்! நூலகங்கள் குழந்தைகளோடு இணைந்திருக்கிறது. பள்ளிக்கூடமும் கல்விச் சூழலும் அந்த இணைப்பை ஏற்படுத்தித் தருவதோடு மட்டுமல்லாமல் தொடரவும் உதவுகிறது.

பள்ளிகளே அருகிலுள்ள நூலகத்தில் குழந்தைகளை உறுப்பினர்களாகச் சேர்க்கின்றன. வாசிப்புப் போட்டிகள், வீட்டுப் பாடங்கள் செய்ய உதவி வகுப்புகள், கைவினைப் பொருட்கள் செய்யும் வகுப்புகள், வாரந்தோறும் திரைப்படம் திரையிடல், பள்ளி விடுமுறை என்றால் சிறப்பு நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒவ்வொரு நூலகமும் நடத்துகிறது. மாணவர்கள் அதுவும் குறிப்பாக பதின்ம வயதினர் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்கு நண்பர்களோடு நூலகங்களிலே இருப்பதையும் காணமுடிகிறது. அவர்களுக்கு அங்கு இலவச இணைய வசதி, கணினி வசதி போன்றவை கிடைப்பதும் முக்கியக் காரணமாகும். நூலகங்கள், மாணவர்களின் யதார்த்த வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

நூலகங்களில் சிறார் இலக்கியப் பகுதி, அதிலும் குறிப்பாக 2முதல் 12வயதினருக்கான பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்றார் போல் புத்தகங்கள் பல்வேறு விதமாக அவர்களது உயரத்திற்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவர்களே எளிதில்-துரிதமாகத் தேர்வு செய்யும் வகையில் “Quick-Pick” என்று தனியே சில புத்தகங்களை வைக்கின்றனர்.

Book Series: Guess How Much I Love You.  Author: Sam McBratney, Illustrator: Anita Jeram. First Edition: 1994

கடந்த இரண்டு ஆண்டுகளில், நூலகங்கள், பள்ளிக்கூடம் (குழந்தைகள் வழியே) மற்றும் புத்தகக் கடைகள் மூலமாக எனக்கு நிறைய சிறார் இலக்கியப் புத்தகங்கள் அறிமுகமாகின. அவற்றில் முக்கியமான சிலவற்றை இந்தத் தொடரில் அறிமுகம் செய்ய உள்ளேன். இந்தத் தொடரின் முதல் புத்தகமாக “Guess How Much I Love You” பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

1994 ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியான போது பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான ஆண்டிலேயே 1 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. வெளியாகி 25 ஆண்டுகளுக்கு மேல் கடந்த இந்தப் புத்தகம்,  இதுவரை 47மில்லியன்(4.7 கோடி) பிரதிகள் விற்றுள்ளது. 57 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் வெற்றிக்குக் கதையின் அமைப்பும் அதிலுள்ள எளிமையும் மிக முக்கியமான காரணமாகும். எழுத்தாளர் சாம் அவர்களின் பங்களிப்பிற்கு இணையான ஓவியர் ஜெரம் அவர்களும் பங்களிப்பும்.

“உனக்கு அம்மாவை எவ்வளவு பிடிக்கும்?” என்று நாம் குழந்தைகளிடம் விளையாட்டாகக் கேட்டால், குழந்தைகள் அவர்களுக்குத் தெரிந்த வகையில் எல்லாம் இருப்பதிலேயே பெரிதான ஒரு விசயத்தைச் சொல்வார்களே! அதுதான் இந்தக் கதையின் களம். “The Big NutBrown Hare” என்ற அப்பா முயலும் , “The Little NutBrown Hare” என்ற குட்டி முயலும் பேசிக் கொள்வதாக இந்தக் கதை அமைந்திருக்கும். குட்டி முயல் அப்பா முயலிடம், “உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?” என்று கேட்க அதற்கு அப்பா முயல் “எனக்குத் தெரியாதே, நீயே சொல்.” என்கிறது. குட்டி முயலும் தனது இரண்டு கைகளையும் முடிந்த வரை அகல விரித்து “இவ்வளவு பிடிக்கும்” என்கிறது. அதற்கு அப்பா முயல், “உன்னை எனக்கு இவ்வளவு பிடிக்கும்” என தனது இரண்டு கைகளையும் பெரிதாக விரிக்கிறது. “அது என்னை விட மிகவும் பெரியது” என்று குட்டி முயல் சொல்லிவிட்டுத் தன்னால் முடிந்த வரை உயரமாக கைகளை நீட்டி “எனக்கு உங்களை இவ்வளவு பிடிக்கும்” என்கிறது. உடனே அப்பா முயல் வம்பிழுக்கும் நோக்கில், அதைவிட உயரமாக தனது கைகளை உயர்த்திக் காட்டுகிறது. இப்படிக் குட்டி முயல் தனக்குத் தெரிந்த வகையில் எல்லாம் அப்பா மீதான அன்பை வெளிப்படுத்த, அதற்கு அப்பா முயல் அதைவிடத் தனது அன்பைப் பெரிதாகச் சுட்டிக்காட்டுகிறது.

இறுதியாக, குட்டி முயலுக்கு உறக்கம் பிடிக்க அப்பொழுது வானில் தோன்றிய நிலவைச் சுட்டிக்காட்டி “உங்களை எனக்கு அந்த நிலா வரைக்கும் பிடிக்கும்” என்று சொல்கிறது. அதற்கு அப்பா முயலும் “ஆம், அது ரொம்ப தூரம்தான். அதைவிட அதிக தூரம் இருக்க முடியாது.” என்று சொல்கிறது. குட்டி முயல் உறங்கியதும், அதனை வருடிக்கொடுத்துவிட்டு, “உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா, அந்த நிலா தூரம் சென்று திரும்பும் வரை எவ்வளவு தூரம் இருக்குமோ. உன்னை அவ்வளவு  பிடிக்கும்” என்று சொல்கிறது.

எளிமையான கதைதான் என்றாலும், இந்தக் கதையை குழந்தைகளுக்கு நாம் திரும்ப திரும்ப வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அன்பெனும் பெருமழையில் நனைந்திடலாம்.

இந்தப் புத்தகம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அதனைத்  தொடர்ந்து, பத்து வருடங்கள் கழித்து,  ஆசிரியர் மற்றும் ஓவியர்கள் இணைந்து மேலும் சில புத்தகங்களை உருவாக்கியிருக்கின்றனர். “Guess How Much I Love You” in Spring, in Summer, in Autumn, in Winter, Will You Be My Friend?. அதன் பிறகு 2011ல், இந்தப் புத்தகம்  அனிமேஷன் தொடராகவும் வெளியானது. அனிமேஷன் தொடரில் பல புதிய கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தினர். இந்த வீடியோக்கள் யூட்யூப்பிலும் கிடைக்கின்றன. புத்தகத்தில் பார்க்கும் அதே அழகியல் அனிமேஷனிலும் தொடர்ந்து இருப்பது சிறப்பு.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான சாம் (Sam McBratney), 1943ல் இங்கிலாந்து நாட்டின் வட ஐயர்லாந்தில் பிறந்தார். modern history and political science ல் பட்டம் பெற்று, பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார். இவரது முதல் படைப்பு, 1976ல் இளையோருக்கான நாவலாக வெளிவந்தது. 1994 வரை பல்வேறு நாவல்களை இவர் வெளியிட்டிருந்தாலும், “Guess How Much I Love You” என்ற புத்தகம்தான் பெயரையும் புகழையும் அங்கீகாரத்தையும் வாங்கி தந்தது.

இந்தப் புத்தகத்தின் 20 ஆண்டுகள் நிறைவுப் பெற்றபோது புத்தகத்தின் ஆசிரியர் சாம் அவர்கள் இவ்வாறு நினைவு கூறுகிறார்.

“ஒரு தேர்ந்த நாவலை எழுதுவதைவிட, குறைவான சொற்களைக் கொண்ட தனித்து நிற்கும் படக் கதைகளை எழுதுவதுதான் மிகவும் சவாலானாது. எனது புத்தகத்தில் வெறும் 400 வார்த்தைகளே உள்ளன. முதல் பிரதி உருவாகி 6 மாதக் காலம், இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு சொல்லும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள என்னுடன் பெரும் போரை நடத்தியுள்ளது.

இந்தப் புத்தகத்தின் வெற்றி என்பது நான்கு விசயங்களால் சாத்தியமாகியுள்ளன,

  1. எளிமையான சொற்கள்
  2. அழகான ஓவியங்கள்
  3. நேர்த்தியான வடிவமைப்பு
  4. மக்களிடம் கொண்டு சேர்த்த விதம்

என்று குறிப்பிடுகிறார். இந்தப் புத்தகத்தின் 20ஆம் ஆண்டு சிறப்பு பதிப்பில் ஆசிரியர் சாம் தனது வாசகரின் ஒருவரின் வரிகளை மேற்கோள்காட்டியுள்ளார்.

“வீட்டில் அன்று மகளுக்குப் பிடித்தமான நாள் என்றால், என்னை அந்த நிலவு வரை பிடிக்கும் என்பாள். அதுவே அன்று அவளுக்குப் பிடிக்காத நாள் என்றால், வீட்டுக் கதவு வரை மட்டுமே என்னைப் பிடிக்கும் என்பாள்.”

இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய பலம் அதன் ஓவியங்கள், முயலின் ஒவ்வொரு அசைவுகளையும் அழகாக வரைந்திருப்பார். அதன் அழகியலில் ஒரு குழந்தைமையை நாம் உணர முடியும். “Water color” ஓவியரின் கை வண்ணத்தில் நிலப்பரப்பு, புல்வெளி, மரங்கள், இலைகள், பருவங்கள் என ஒவ்வொன்றும் இயற்கையின் அழகியலை கண் முன்னே கொண்டுவரும். ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாக ரசித்தப் பிறகே அடுத்தப் பக்கத்திற்கு செல்ல அனுமதிக்கும்.

இந்தப் புத்தகத்தின் ஓவியர் அனிடா ஜெரெம் தனது அனுபவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்,

“இரண்டு குட்டி முயல்கள் எனது தூரிகையிலிருந்து பேப்பரில் குதித்தன. அங்கிருந்து அவை புல்வெளிக்கு சென்றன,  அங்கிருந்து அவை இன்னும் தூரம் சென்றன.

ஓவியங்கள் குழந்தைகள் போல நாம் சற்றும் எதிர்பார்க்காத, நம் கற்பனைக்கு எட்டாத வாழ்வைக் கொண்டுள்ளன. அவர்களுக்கான பரந்து விரிந்த அடர்ந்த உலகில் அவர்களுக்கான அடர்ந்த பாதையை அவர்கள் தானாகவே கண்டடைகிறார்கள்”

இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான சாம் அவர்கள் 2020ல் தனது 77ஆம் வயதில் மறைந்தார். இந்தப் புத்தகம் வெளியாகி தற்போது 30வருடங்களை நிறைவு செய்ய இருக்கிறது. சிறார் இலக்கியத்தில் க்ளாசிக் வகைமையில்  “Guess How Much I Love You” மிகவும் முக்கியமான படைப்பு.

நன்றி: http://www.guesshowmuchiloveyou.com/

“Guess How much I love you” – Youtube Channel: https://www.youtube.com/@guesshowmuchiloveyou3021/featured

Leave a comment