பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த கலகக்காரர் யார் தெரியுமா? வழுக்கைத் தலையும் நீண்ட தாடியுமாக நம் மனதில் பதிந்துவிட்ட சார்லஸ் டார்வின்தான். பரபரப்பு ஏற்பட்டதற்குக் காரணம் அவர் எழுதிய ‘உயிரினங்களின் தோற்றம்’ (On the Origin of Species) என்கிற புத்தகம். கடவுளே உயிரினங்களைப் படைத்தவர் என்றும், நாமெல்லாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்றும், எல்லா உயிரினங்களும் ஒரே நேரத்தில் படைக்கப்பட்டன என்றும் மேற்கத்திய உலகம் முன்பு நம்பிக்கொண்டிருந்தது.
தனது 20 ஆண்டு கால ஆராய்ச்சியின் அடிப்படையில் உயிரினங்களும், மனித குலமும் இயற்கைத் தேர்வின் மூலமும், பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலும் உருவானவை என்கிற அறிவியல்பூர்வமான, நம்பிக்கைகளை புரட்டிப்போடும் கருத்தை டார்வின் முன்வைத்தார். இதற்காக மத போதகர்களாலும், பொது மக்களாலும் அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். டார்வின் கூறியது ‘சர்ச்சைக்குரிய உண்மை’ என்று மத அடிப்படைவாதிகள் மறுத்துவந்தனர்.
ஆனால் அதே வேளை, மற்ற விஞ்ஞானிகள் அவரைப் பின்தொடர்ந்து, அவருடைய கருத்துகளை அறிவியல்பூர்வ சோதனைகளுக்கு உட்படுத்த முன்வந்தனர். அதுவே உலகத்தைப் பற்றிய அறிவியல்பூர்வ புரிதலைப் பெற வழிவகுத்தது. தான் முன்வைத்த கோட்பாடுகளால், 140 ஆண்டுகளைக் கடந்தும் டார்வின் நம்மை ஆட்கொண்டுள்ளார்.
தன் சிறு வயது முதல் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளைக் கேட்பதன் மூலம் இந்த உலகத்தையும் இயற்கையையும் புரிந்துகொள்ள அவர் முயன்றுகொண்டே இருந்தார். இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்க்கையை, அறிவியல் பயணத்தை, பரிணாமக் கோட்பாட்டை குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதை வடிவில் கொடுக்க முயன்றுள்ளேன். அதிலும் குறிப்பாக, அவருடைய ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருந்த பீகிள் கடல் பயணம் குறித்து அதிகம் பேசியுள்ளேன். நம் சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்கு கற்பிதமான, மூடநம்பிக்கைகள் மூலமாக அல்லாமல் அறிவியல்பூர்வ ஆய்வுகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற தூண்டுதலை இந்த புத்தகம் உங்கள் மனதில் விதைக்கும் என்ற நம்புகிறேன். அதற்குக் காரணமான டார்வினைக் கொண்டாடுவோம்!
அன்புடன்,
அன்பு வாகினி
சார்லஸ் டார்வின்: கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை அமேசான் சுட்டி : https://www.amazon.in/dp/B09NZ52VBL
குறிப்பு:
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் வெளியிட்டுவருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிடுவது வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர் கமலாலயனின் மேற்பார்வையில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கிவருகிறது.
தொடர்புக்கு: editor.oongilkootam@gmail.com
வெளியீடுகளைப் பெற: https://amzn.to/3vfOvqX