1980களில் ‘பூந்தளிர்’, ‘கோகுலம்’ போன்ற இதழ்களையும் 1990-களில் ‘துளிர்’ அறிவியல் இதழையும் தொடர்ந்து வாசித்துவந்தேன். அப்போதெல்லாம் இதழை எடுத்தவுடன் முதலில் சென்றடையும் பக்கம் குறுக்கெழுத்துப் புதிராகவே இருக்கும். கையில் பென்சிலை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று கட்டங்களை நிரப்பத் தொடங்கிவிடுவேன். குறுக்கெழுத்துப் புதிர் தூண்டியிருந்த ஆர்வம் அப்படி.
ஒரு குறிப்புக்கு வேறு வேறு சொற்களை யோசித்து யோசித்து, பல கட்டங்களை நிரப்பிவிடுவோம். குறுக்கும் நெடுக்குமாக மற்ற சொற்கள் தரும் குறிப்புதவியுடன் சில சொற்களைக் கண்டறிந்து எழுதும்போது மகிழ்ச்சி கிடைக்கும். அதேநேரம், எவ்வளவு வாசிப்பு அனுபவம் கொண்டவரையும் சில சொற்கள் திக்குமுக்காட வைத்துவிடும். இப்படி சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடியவையாகவும் மொழி வளத்தை மேம்படுத்தக்கூடியவையாகவும் குறுக்கெழுத்துப் புதிர்கள் திகழ்ந்தன.
பிரபலமான இதழ்களும் குறுக்கெழுத்துப் புதிரை வெளியிட்டு, சரியான பதில் அனுப்புவோருக்கு பரிசு வழங்கும் வழக்கத்தை வைத்திருந்தன. ஆனால், இதெல்லாமே புத்தாயிரம் ஆண்டுத் தொடக்கத்துக்குப் பிறகு குறையத் தொடங்கி, கடந்த பத்தாண்டுகளில் தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் பெருமளவில் குறைந்துவிட்டன.
உயிரினங்களில் அழிந்துவரும் உயிரினங்கள் என்றொரு பிரிவு உண்டு. மனித இனம் முன்னேற முன்னேற இந்த அழிந்துவரும் உயிரினங்களின் வகைகளும் அதிவேகமாக அதிகரித்துவருகின்றன. மொழியிலும் இதுபோல் அழிந்துவரும் ஓர் அம்சமாக குறுக்கெழுத்துப் புதிரைச் சொல்லலாம். சுடோகு போன்ற கணிதப் புதிர், படப் புதிர் போன்றவை பரவலாகியுள்ள அதேநேரம், மொழியை அடிப்படையாகக் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர் அழிந்துவரும் விளையாட்டாகிவிட்டது.
வாசிப்பு ஆர்வம் மட்டுப்பட்டு, தகவல்தொடர்புக் கருவிகள் தரும் போதையில் திளைப்பதிலேயே, இன்றைக்குப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் மூளைக்கு வேலை தரக்கூடிய, மொழி ஆற்றலை மேம்படுத்தக்கூடிய, அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய புதிர்களைத் தேடிச் செல்வோர் குறைந்துவிட்டார்கள்.
இந்தப் பின்னணியில் மோ. கணேசன் இந்த நூலைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நூல் பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை தமிழ் மொழி வழியாக சுவாரசியமான ஒரு பயணத்துக்கு இட்டுச் செல்லும். பாடங்கள் வழியாகப் புதிய சொற்களைக் கற்றுத் தருவதைக் காட்டிலும், இதுபோன்ற புதிர் விளையாட்டுகள் மூலம் மொழி வளத்தை எளிதாக மேம்படுத்தலாம், புதிய சொற்களை அறிமுகப்படுத்தலாம், ஒரு சொல்லுக்கு உள்ள மாறுபட்ட அர்த்தத்தை வாசிப்பவர் மனதிலும் ஏற்றலாம்.
குறுக்கெழுத்துப் புதிர், அவற்றுக்கான விடைகளுடன் முடித்துவிடாமல், ஒரு புதிருக்கு தலா இரண்டு சொற்களுக்கான தகவல்களாக 120 விரிவான பொது அறிவுத் தகவல்களையும் மோ. கணேசன் தொகுத்துத் தந்துள்ளார். அதனால் இந்த நூல் சிறாரின் பொது அறிவு மேம்பாட்டுக்கும் உதவும்.
குறுக்கெழுத்துப் புதிரை நிரப்பும் ஆர்வத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறாரிடையே ஏற்படுத்த வேண்டும். இந்தப் புதிர்களை சிறாரிடையே அறிமுகப்படுத்தி தொடக்கத்தில் உதவினால், பிறகு அவர்கள் இவற்றைப் பின்தொடரத் தொடங்கிவிடுவார்கள். அதற்கு உதவும் வகையில் மோ. கணேசன் மேற்கொண்டுள்ள இந்தப் பணி பாராட்டுக்குரியது.
அன்புடன்,
ஆதி வள்ளியப்பன்