தனிநபராக ஒரு செயலில் ஈடுபடுவதை விட நண்பர்களுடன் இணைந்து செயல்படுவது மிகப்பெரிய விசயங்களைக் கூட எளிதாகச் செய்ய முடிகிறது. அப்படித் தான் சென்ற வாரம் “பஞ்சு மிட்டாய் & குட்டித் தோசை” புத்தகங்களை மலைவாழ் சிறுவர்கள் மத்தியில் வெளியிட்டு மகிழ்ந்தோம். நீண்ட நாட்களாகவே நானும் தோழர் கதை சொல்லி வனிதாமணி அவர்களும் மலைவாழ் சிறுவர்கள் இருக்கும் பகுதியில் அவர்களுக்கான புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். சிறுவர்களுக்கான படைப்புகள் எல்லைகளைத் தாண்டி அனைவருக்குமானதாக மாற்ற நம்மால் ஆன முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டும் அதற்கான வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டும் இருந்தோம். அந்த நேரத்தில்தான் “சோளகர் தொட்டி பெரும் கதையாடல்” நிகழ்வு குறித்துத் தெரியவந்தது.
“சோளகர் தொட்டி” – வாசிப்பின் நாட்கள் இன்னும் என் நினைவுகளில் இருக்கிறது. நாவல் வாசித்து முடிக்கும் போது இரண்டு-மூன்று நாட்கள் அப்படியே மனதும் அறிவும் தனது செயல்களை நிறுத்திக் கொண்டதாக ஓர் உணர்வு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு வாசித்த புத்தகம் அது. இன்றும் அதை வாசித்த போது மனதினுள் ஏற்பட்ட அதிர்ச்சியும், கவலையும் நினைவில் இருக்கின்றது. இதுப் போன்ற வாசிப்பு அனுபவங்கள் வாழ்வில் நம்மை ஏதாவது செய்யத் தூண்டும். அல்லது நமது செயற்பாடுகளில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க உதவி செய்யும். அப்படித் தான் குழந்தைகளுக்கான கதை சொல்லலில் பல வாசிப்பு அனுபவங்களின் தாக்கங்கள் இருந்துக் கொண்டே இருக்கும். நிகழ்வுகளை வடிவமைக்கும் போதும், பொதுவில் மக்களை அணுகும் போதும், சில கருத்துகளை உரையாடும் போதும் அவை நமது நிலைப்பாட்டிற்கு என்றும் காரணமாகவும் துணையாகவும் நிற்கும். இதே போன்ற உணர்வை வனிதாமணி தோழர் என்னுடன் ஒரு முறை பகிர்ந்துக் கொண்டார். தான் மலைவாழ் பகுதி சிறுவர்களுக்குப் பயணித்துக் கதை சொல்வதற்கு சோளகர் தொட்டி தான் காரணம் என்று அவர் சொல்லி நான் பலமுறை கேட்டிருக்கிறேன். சிறார்களுக்கான எங்களது பயணம் ஓர் இணைப்புப் புள்ளி என்றால் அதனை மேலும் வலுப்படுத்தியது எங்களது இந்த வாசிப்பு அனுபவம்.
சோளகர் தொட்டி கதையாடல் நிகழ்வில் புத்தக வெளியீடு செய்ய நண்பர்களிடம் அனுமதி கேட்டோம். பெரியோர்களுக்கான இலக்கிய நிகழ்வுகளில் சிறார்களுக்கான இலக்கியத்திற்கும் இடம் வேண்டும் என்ற எங்களது எண்ணங்களை நண்பர்கள் அனைவரும் சரியாக புரிந்துக்கொண்டனர். நிகழ்வின் சிறப்பு விருந்தினர் “கதைசொல்லி & எழுத்தாளர்” பவா செல்லதுரை ஐயா அவர்களும் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா அவர்களும் இணைந்து வெளியிட அதனை பழங்குடியின சங்கத் தலைவர் வி.பி. குணசேகரன் ஐயா அவர்களும் தோழர்கள் அன்பு ராஜ் மற்றும் சுடர் நடராஜ் அவர்களும் பெற்றுக்கொள்வதாகத் திட்டமிட்டோம். நிகழ்வில் இணையும் குழந்தைகளுக்கும் அங்கு சுற்றியுள்ள ஆர்வமுள்ள பள்ளிக்கூடத்திற்கும் சேர்த்து சுமார் 100 புத்தகங்களை அனுப்பியிருந்தோம். அங்குள்ள குழந்தைகள் கைகளில் புத்தகங்கள் ஓர் விளையாட்டுப் பொருளாக மாற வேண்டும் என்பதே எங்களது எண்ணமாக இருந்தது.
“சிறப்பா செய்வோம் பிரபு! நாம செய்யாம வேற யார் செய்வாங்க சொல்லுங்க” என்ற வார்த்தைகள் மூலம் ஐயா பவா அவர்கள் கொடுத்த உற்சாகம் எங்களுக்குள் பல்லாயிரம் வாட் சக்தியை கொடுத்தது என்றே சொல்லலாம். ஐயா வி.பி. குணசேகரன் அவர்களிடம் சிறிய அறிமுகம் ஆன பிறகு புத்தகம் மீதான ஆர்வம் என்னுள் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்தார். பஞ்சு மிட்டாய் செயற்பாடுகளைக் கேட்டறிந்து மிகவும் மகிழ்ந்தார். “இந்தியா வரும்போது கட்டாயம் வாங்க! நேரில் நிறைய பேசுவோம்” என்றார். சோளகர் தொட்டி புத்தகம் வெளிவர மிக முக்கியமான காரணம் வி.பி.ஜி ஐயா. அவரிடமிருந்து கிடைத்த இந்த பேரன்பு எனக்கு மிக முக்கியமானது. அடுத்து தோழர் அன்பு ராஜ் அவர்களிடம் பேசிய போது, குழந்தைகள் சார்ந்த அவரது ஆர்வம் என்னை உடனே அந்தியூருக்கு அழைப்பதாக இருந்தது. தனியே சிறுவர்களுக்காக நிகழ்வுகள் செய்ய வேண்டுமென தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். வாய்ப்பிருக்கும் போதெல்லாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றார். சுடர் நடராஜ் தோழர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர், அவரும் இந்தப் பகுதியில் இருப்பவர் என்பதை வனிதாமணி தோழர் தான் சொன்னார். அவரும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், அதன்வழியே குழந்தைகளுக்கான படைப்புகளைப் பொதுவெளிக்குக் கொண்டு வருவது குறித்து நீண்ட நேரம் உரையாடினார்.
ஆக, சரியான சக்திவாய்ந்த குழு அமைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. இதற்கு முழு முதற்காரணமாக வனிதாமணி தோழர் இருந்தார். பஞ்சு மிட்டாய் இதழ் குறித்தும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இன்னும் ஆர்வமுள்ள பலருக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய முயற்சிகள் குறித்தும் தொடர்ந்து என்னிடம் உரையாடி வருபவர். புத்தகத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நான் எங்கெல்லாம் சோர்ந்து போகிறேன், எங்கெல்லாம் தயங்குகிறேன், எதற்கெல்லாம் பின்வாங்குகிறேன் என்று நன்கு அறிந்தவர். எனது தயக்கத்தை அதன் ஆரம்பப் புள்ளியிலே அடித்து நொறுக்குபவர் என்று கூட சொல்வேன். இணைந்து செயல்படும் போது நண்பர்கள் நமக்கு தரும் சக்தி மிகவும் பெரியது. அதன் முழுவடிவமாக நான் இந்த வெளியீட்டு விழாவைப் பார்க்கிறேன்.
ஈரோடின் அருகேயுள்ள அந்தியூர் பகுதியில் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. மதியம் தொட்டே கதையாடல்களைக் கேட்க நண்பர்கள் வரத் தொடங்கியிருந்தனர். சுமார் 300க்கும் மேலான வாசகர்கள் கதையாடலைக் கேட்க வந்திருந்தனர். மலைப்பகுதி என்பதால் சமவெளி அரங்கு அங்கு இல்லாததை வீடியோவில் கவனித்தேன். பஞ்சு மிட்டாய் புத்தகங்கள் சிறுவர்களுக்காக அங்கு காத்திருந்ததை புகைப்படத்தில் பார்த்தபொழுதுது என் மனம் முழுதாக அந்தச் சூழலை கற்பனை செய்து கொண்டது. நண்பர்களின் இந்த ஏற்பாடுகளுக்கு என் அன்பின் ஆயிரம் முத்தங்கள். பஞ்சு மிட்டாய் புத்தகங்களோடு மழையும் ஆர்வத்துடன் காத்துக்கிடந்தது, வானில் மேகங்கள் சூழ, நிலத்தில் கதைகேட்க மக்கள் சூழ, குழந்தைகள் வண்ணத்துப்பூச்சிகளாக புத்தகங்களைச் சுற்றி நிற்க வனிதாமணி தோழர் சிறிய அறிமுகத்துடன் புத்தகம் வெளியானது.
புத்தகங்களைக் கைகளில் வாங்கிய சிறுவர்களின் கண்கள் மின்னலென ஜொலித்ததையும், அவர்களின் சிரிப்பொலி இடியெனக் கேட்டதையும், அவர்களின் ஆனந்தம் மழைத் துளியென சாரல் வீசியதையும் சுருதி டிவியின் அழகான பதிவுகளால் நான் பார்த்துத் தெரிந்துக்கொண்டேன். எங்களது குழந்தைகளுக்குப் போட்டியாக இயற்கையும் மழையென பொழிந்து தனது அன்பை வெளிப்படுத்தியது. மழைக்கு ஒதுங்க சின்ன சின்ன குடில்களே அங்கிருந்ததாக நண்பர் சொன்னார், அப்படிப்பட்ட ஒரு சிறிய குடிலில் இசைக்கருவிகளுடன் இளைஞர்கள் சிலரும் வனிதாமணி தோழரும் ஒதுங்கினர். இளைஞர்களின் இசைக் கச்சேரியில் குட்டித் தோசை பாடல்கள் அங்கு கொண்டாட்டமாக உருமாறியது. ஒவ்வொரு பாடலும் புது ராகம் எடுத்தது. இயற்கையின் கொண்டாட்டத்தோடு பாடலும் சேர்ந்து கொண்டது. ஓர் அரங்கில் திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்வையெல்லாம் தாண்டி இயற்கை புது வடிவத்தை இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கொடுத்தது.
மறுநாள் வனிதாமணி தோழர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்திருந்தார், இரண்டு தினங்கள் கழித்து சுருதி டிவியும் பகிர்ந்திருந்தது. ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரம் கதைகளை சொல்லியது. அங்குள்ள குழந்தைகளின் மகிழ்ச்சியை புகைப்படத்திலிருந்த ஒவ்வொரு முகமும் ஆழமாக உணர்த்துகிறது. இந்தப் புன்னகையும் மகிழ்ச்சியும் பஞ்சு மிட்டாய் எனும் தொடர் பயணத்தின் வெற்றியையும் எதிர்காலத்தையும் ஒரு சேரக் கண் முன்னே காட்சிகளாக நிறுத்தின.
இந்த நிகழ்வினை, இந்தக் கொண்டாட்டத்தை, இந்த மகிழ்ச்சியை சாத்தியமாக்கிய கதைசொல்லி & எழுத்தாளர்” பவா செல்லதுரை ஐயா அவர்களுக்கும் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா அவர்களுக்கும், பழங்குடியின சங்கத் தலைவர் வி.பி. குணசேகரன் ஐயா அவர்களுக்கும் தோழர்கள் அன்பு ராஜ் மற்றும் சுடர் நடராஜ் அவர்களுக்கும், இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் நண்பர்களுக்கும், எனது அன்பு சகோதரி, சக பயணி வனிதாமணி அவர்களுக்கும், சுருதி டிவிக்கும், நிகழ்வில் இணைந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
நன்றி,
பஞ்சு மிட்டாய் பிரபு
+91-9731736363 / editor.panchumittai@gmail.com