நஸ்-ரீனின்‌ ரகசியப்‌ பள்ளி – ஆஃப்கானிஸ்தானின்‌ ஒரு உண்மைச்‌ சம்பவம்‌

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆஃப்கானிஸ்தானின்‌ பழமைவாய்ந்த நகரமான ஹெராத்தில் என் பேத்தி நஸ்-ரீன் என்னுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு காலத்தில் கலையும் இசையும் செழித்தன இங்கே.

அதன்பின் ராணுவம் வந்தது, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கலையும் இசையும் கல்வியும் மறைந்தன. நகரத்தைக் கருமேகங்கள் சூழந்தன.

பெண்கள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்ட ஒன்று. அதனால், பாவம் நஸ்-ரீன் வீட்டிலேயே நாள் முழுதும் அடைந்துகிடந்தாள். நஸ்-ரீனின் அம்மாவும், நானும் சின்னப் பெண்களாய் இருந்தபோது உலகத்தைக் கற்றதுபோல் பெண்கள் இப்போது படிக்கக் கூடாதாம், இது தாலிபான்களின் விருப்பம்.

ஒரு நாள் இரவு, எங்கள் வீட்டினுள் ராணுவத்தினர் நுழைந்தனர், எதுவும் சொல்லாமல், என் மகனை கொண்டுபோய்விட்டார்கள்.

அவன் திரும்பி வருவான் என இரவும் பகலும் காத்திருந்ததுதான் மிச்சம்.

பரிதவித்த நஸ்-ரீனின் அம்மா அவனைத் தேடி, புறப்பட்டுவிட்டாள். பெண்கள் தெருக்களில் தனியே போவது தடை என்றபோதும், கூட.

நானும் நஸ்-ரீனும் சன்னல் அருகே காத்திருந்தபோது, பல பெளர்ணமிகள் மாதாமாதம் எங்களைக் கடந்தன.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை நஸ்-ரீன். முறுவல் கூட மறைந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் திரும்பி வருவார்கள் என சிலைபோல் காத்து கிடந்தாள். நான் ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என என் உள்மனம் சொன்னது.

கிட்டத்தில் இருக்கும் ஒரு சந்தில், பச்சைக் கதவுக்குப் பின்னால், பெண்களுக்கான ஒரு ரகசியப் பள்ளி இருப்பதை அரசல் புரசலாகக் கேள்விப்பட்டேன். இந்த ரகசியப் பள்ளியில் நஸ்-ரீன் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னைப் போலவே அவளும் உலகைப் பற்றி கற்க வேண்டும். அவள் மீண்டும் பேசவேண்டும்.

எனவே ஒரு நாள் நானும் நஸ்-ரீனும் அந்தப் பச்சைக் கதவைத் தேடி சந்து பொந்துகளில் திரிந்தோம். நல்ல காலம், எங்களை ராணுவித்தனர்ர் யாரும் கவனிக்கவில்லை.

மெதுவாய் தட்டினேன். ஆசிரியை கதவைத் திறந்தார். சடக்கென உள்ளே நுழைந்தோம்.

தாழ்வாரத்தைத் தாண்டி பள்ளிக்குள் நுழைந்தோம். சிறுமியர் குழுமியிருந்த ஒரு வீட்டின் அறை அது.

அறையில் பின்னாடி அமர்ந்தாள் நஸ்-ரீன். ஏ அல்லாஹ்! இந்த உலகைப் பார்க்க அவள் விழிகளைத் திற. அவளை அங்கே விட்டுவிட்டு, இறைவனை மன்றாடினேன்.

மற்ற சிறுமியருடன் நஸ்-ரீன் பேசவேயில்லை. ஆசிரியையிடமும் பேசவில்லை. வீட்டிலும், மெளனம்தான்.

ராணுவத்தினர் எங்கே பள்ளியைக் கண்டுபிடித்து விடுவார்களோ என ரொம்பவே பயந்தேன். அட! அந்தச் சிறுமிகள் சமத்துதான்! சந்தேகம் தோன்றக்கூடாது என்று, அவர்கள் வேறுவேறு நேரங்களில் பள்ளிக்குள் நுழைவதும் வெளியேறுவதுமாய் இருந்தார்கள். கதவருகே ஏதேனும் ராணுவத்தினரைப் பார்த்தால், அவர்களின் கவனத்தை திசை திருப்பினார்கள் சிறுவர்கள்.

ஒரு ராணுவவீரன் தன்னை உள்ளே விடும்படி கதவை தடதடவென அறைந்தான் என்றுகூட கேள்விப்பட்டேன்.

உள்ளே அவன் கண்ட காட்சி என்ன தெரியுமா? – சிறுமியர் எல்லாரும் குரான் ஓதிக்கொண்டிருந்தனர். அது அனுமதிக்கப்பட்டதுதானே! தங்கள் பாடப்புத்தகங்களை சாமர்த்தியமாக ஒளித்து வைத்து அவனை ஏமாற்றிவிட்டார்கள்.

மீனா எனும் சிறுமி தினமும் நஸ்-ரீன் பக்கத்தில் அமர்வாள். ஆனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டதில்லை. சிறுமியர் எல்லாரும் கற்றார்கள். நஸ்-ரீனோ, தன்னைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினாள்.

பள்ளிக்கூடம் குளிர்கால நீண்ட விடுமுறைக்காக மூடப்பட்டது. நானும் நஸ்-ரீனும் தணலருகே அமரிந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தோம். உற்றார் உறவினர் எங்களுக்குக் கொஞ்சம் உணவும், விறகும் தந்து உதவினார்கள். அவள் அம்மாவையும் என் மகனையும் பிரிந்து ரொம்பவே வாட்டமாய் இருந்தோம். என்ன ஆயிற்று என எப்போதாவது எங்களுக்குத் தெரியவருமா?

விடுமுறைக்குப் பிறகு நஸ்-ரீன் பள்ளி சென்றாள். முதல் நாள் மீனா இவள் காதில் ஏதோ கூறினாள். “உன்னைப் பிரிந்து வருந்தினேன்”

“நானும் தான்”. நஸ்-ரீன் பதிலுக்குச் சொன்னாள்.

 

இந்த வார்த்தைகள்தான், அவள் அம்மா அவளுடைய அப்பாவைத் தேடிச் சென்ற பிறகு, நஸ்-ரீன் முதன்முதலில் பேசியது. மீனாவிடம் தன் மனதில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொண்டாள் நஸ்-ரீன்.

அவளின் அப்பா வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட பின்பு, முதன்முதலாக அன்றுதான் சிரித்தாள்.

ஒவ்வொரு நாளாய், கொஞ்சம் கொஞ்சமாய், ஒருவழியாக நஸ்-ரீன் படிக்க, எழுத, கூட்ட, கழிக்கக் கற்றுக்கொண்டாள்.

அவள் கற்றுக்கொண்டதை ஒவ்வொரு இரவும் என்னிடம் காட்டினாள்.

அந்தச் சின்னப்பள்ளியில், நஸ்-ரீனின் அறிவுக்கான சன்னல் திறந்தது.

பழங்காலக் கலைஞர்கள், புலவர்கள், அறிஞர்கள், ஞானிகள் பற்றிக் கற்றாள்.

ஒரு காலத்தில் இவர்கள் தான் ஹெறாத்தை அழகு செய்தவர்கள்.

இப்போதெல்லாம் நஸ்-ரீன் தனிமையாய் உணர்வதில்லை. மிகச் சிறந்த ஒரு தோழியாய், அவள் பெற்ற அறிவு அவளோடு எப்போதுமே இருக்கும்.

கருமேகங்களைத் தாண்டி மிளிரும் நீல வானத்தை இப்போது அவளால் பார்க்கமுடிகிறது.

என் மன்னம் அமைதி பெற்றுவிட்டது, என் மகனுக்காவும் அவன் மனைவிக்காகவும் நான் காத்திருப்பேன்.

என் பேத்திக்காகத் திறந்த அந்தச் சன்னலை எந்த ராணுவத்தினராலும் மூடவே முடியாது.

நஸ்-ரீனின்‌ ரகசியப்‌ பள்ளி – ஆஃப்கானிஸ்தானின்‌ ஒரு உண்மைச்‌ சம்பவம்‌ (Nasreen’s Secret School: A True Story from Afghanistan) | ஆங்கில மூலம்‌ . ஜேனட்வின்டர்‌ | தமிழ்‌ மொழிபெயர்ப்பு : உத்ரா துரைராஜன்‌ | ஹிந்தி மொழிபெயர்ப்பு : விதாஷக்‌

Leave a comment