நீரின்றி அமையாது உலகு – கமலாலயன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

’நீரின்றி அமையாது உலகு’ என்கிற முதுமொழி நமக்கு மிகவும் பரிச்சயமானது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இத்தொடர் பயின்றுவருவதைப் படிக்கிறோம். வெவ்வேறு வார்த்தைகளில் இந்த உண்மை பதிவுசெய்யப்பட்டு இருப்பதால், மூச்சுக்கு முன்னூறு முறை மேடைகளில் இதை முழங்காத தமிழ்ப் பேச்சாளர்கள் வெகு அபூர்வமே. காவிரி நதி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையும், முல்லைப் பெரியாறு அணைத் தகராறும் தலைப்புச் செய்திகளாக இடம்பெறாமற் போன நாள்கள் சமீபத்தில் நம்மைக் கடந்து போயிருக்கின்றனவா? அநேகமாக இருக்காது.

கடந்த பல ஆண்டுகளாகவே பருவமழையின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. அப்படியே சில பகுதிகளில் மழையளவு குறையாமல் வழக்கம்போல் பெய்தாலும், அந்த மழை நீரை சேகரிப்பதற்கான எந்த நடைமுறை ஏற்பாடும் இல்லாததால், எவ்வளவு மழை பெய்தாலும் அவ்வளவும் பேசாமல் விட்டுவிடப்படுகிறது. அல்லது சாக்கடை நீராகிப் போகிறது. ஆண்டு முழுவதும் மழை பெய்துகொண்டிருந்த சிரபூஞ்சியிலேயே வறட்சி நிலைமை உருவாகிவிட்டது குறித்துப் படிக்கிறோம். இத்தகைய ஒரு மோசமான சூழலில் வாட்டி வதைக்கப்போகும் கோடை காலங்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற கவலை நெஞ்சை அரிக்கிறது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த இத்தகைய யோசனைகளுடன் ஒரு பழைய துணைப்பாடப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டுரைத் தலைப்பு பளிச்சென்று என் கண்களிற் பதிந்து கருத்தைக் கவர்ந்தது.

’தண்ணீர் என்றோர் அமுதம்’ – இதை எழுதியவர்? சர் சி.வி. ராமன்! ஆம், இயற்பியலில் ஒளிச்சிதறல் தொடர்பாக ஆராய்ந்து, ’ராமன் விளைவு’ என்கிற கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் முதன்முறையாக அறிவியலுக்கு நோபல் பரிசைப் பெற்ற அறிஞர் ராமன்தான் கட்டுரையாளர்.

தபலா, மிருதங்கம் போன்ற வெவ்வேறு இசைக்கருவிகளின் ஒலிகள் பயணிப்பதையும், ஒன்றோடொன்று ஒத்திசைந்து அதிர்வதையும் சார்ந்த பல்வேறு அம்சங்களையும்கூட ஆராய்ந்தவர் அவர் என்பது குறித்து சிலர் அறிந்திருக்கலாம். ஆனால், இந்தக் கட்டுரையில் அவர் எழுதியிருப்பது, மனித குலத்திற்கு எல்லா வகையிலும் உயிரூட்டமாகத் திகழும் தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி.

அமேசான் கிண்டிலில்: https://www.amazon.in/dp/B099Q3MXZV
குறிப்பு:

சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.  வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் கொண்டுவருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிட்டுவருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர் கமலாலயனின் மேற்பார்வையில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கிவருகிறது.

தொடர்புக்கு: editor.oongilkootam@gmail.com

வெளியீடுகள்: https://amzn.to/3vfOvqX

Leave a comment