உயரப் பறந்த இந்தியக் குருவி – ஆதி வள்ளியப்பன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பறவைகளை நோக்குதல் (Bird Watching), காட்டுயிர்களை-இயற்கையை உற்றுநோக்கி அறிவது போன்றவை மிகப் பெரிய பொழுதுபோக்காகவும் சாகசச் செயலாகவும் இன்றைக்குக் கருதப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதிவிட முடியாது. ஏனென்றால் உலகின் மிகப் பெரிய பறவையியலாளராக மதிக்கப்படுகிற சாலிம் அலி, இப்படித்தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதனால் இயற்கை மீதான காதல், பறவைகள், உயிரினங்களை நோக்குவது, அவற்றின் மீது அக்கறையாக இருப்பது, நாளை நமது முழுநேர வேலையாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

இந்திய பறவைகள், பறவையியல் என்று கூறியவுடன் பலருக்கும் நினைவுக்கு வரும் முதல் பெயர் சாலிம் அலியினுடைய பெயர்தான். பறவை நோக்குதல் போன்ற செயல்பாடுகள் பரவலாகவும் இந்தியப் பறவைகள் குறித்த ஆய்வுகள் அதிகமாக நடைபெறவும் காரணமாக இருந்தவர் அவர்.

ஆர்ப்பாட்டமின்மை, நகைச்சுவை உணர்வு, எடுத்த வேலையில் தீவிரம் போன்ற பண்புகளை வெளிப்படுத்திய சாலிம் அலியின் வாழ்க்கை சாகசங்கள் நிறைந்தது. இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், காடுகளிலும் திறந்தவெளிப் பகுதிகளிலும் பறவைகளைத் தேடியலைந்த அவருடைய வாழ்க்கையில் கதைகளை மிஞ்சும் சுவாரசியச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவர் பிறந்த 125ஆவது ஆண்டு இது. இந்தப் பின்னணியில் அவருடைய கதை, இன்றைய தமிழ் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கூறப்பட வேண்டும் என்று நினைத்ததன் விளைவே இந்தக் குறுநூல்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ரஜினிகாந்த்-அக்ஷய்குமார் நடித்த ‘2.0’ திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். அந்தப் படத்தில் வரும் பட்சிராஜன் கதாபாத்திரம் சாலிம் அலியை மையமிட்டே உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உண்மையில் சாலிம் அலி அறிவியலை அடிப்படையாகக் கொண்டு பறவைகளையும் காடுகளையும் காக்கப் பாடுபட்டவர். ஆனால், படத்தில் வரும் பட்சிராஜனோ அதற்கு நேர் எதிராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

கைபேசி கோபுரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆய்வுகள் எச்சரித்தாலும், சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகள் நகர்ப்புறங்களில் குறைந்ததற்கும் கைபேசி அலைவரிசைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ‘2.0’ படம் இந்த அறிவியல்பூர்வமற்ற கருத்தை அடிப்படையாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு இயற்கைப் பாதுகாவலரை பயங்கரப் பேயாகச் சித்தரித்த படம் ‘2.0’. படத்தின் இயக்குநர், திரைக்கதையாசிரியர் போன்றோரே இதுபோன்ற தவறான, அறிவியல்பூர்வமற்ற சித்தரிப்புக்குக் காரணம்.

சாலிம் அலியின் உண்மையான பங்களிப்பு இதுபோன்ற தவறான சித்தரிப்புகளால் சிதைக்கப்படுகிறது. சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும். அவரைப் போன்றோரின் உண்மையான பங்களிப்பு பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் சாலிம் அலியின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள், சுவாரசியங்கள் ஒரு கதையின் திருப்பங்களுக்கு நிகரானவை. அவருடைய 125ஆவது பிறந்த ஆண்டில் சாலிம் அலியையும் அவருடைய பணியையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சிறு முயற்சியே இந்த நூல்.

அன்புடன்,

ஆதி வள்ளியப்பன்

Leave a comment