புத்தகங்களுக்கு உயிர் உண்டு. அவை பேசும் – கமலாலயன் (‘வாசிக்காத புத்தகத்தின் வாசனை’ புத்தக அறிமுகம்)

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

வாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். பச்சை வைரம், சஞ்சீவி மாமா போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம் யேரோ கியே கிராமத்தில் செம்மரம் கடத்தி வாழ்க்கைப்பாட்டை நடத்தி வரும் பம்பா பலடேவின் மகன் அக்கான், அப்பாவுக்கு உதவியாக மரத்தூள் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறான். வானொலியில் கேட்க நேர்ந்த ஒரு நேர்காணலில்  ’உயிர் தரும் மரம்’ என்ற ஒரு நூலைப் பற்றி ஒரு நாள் முழுக்க உலக நாடுகள் பலவற்றில் இருந்து பலரும் தமது வாசக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதைக் கேட்கிறான்.

”புத்தகங்களுக்கு உயிர் உண்டு. அவை பேசும்…” என்று தொகுப்பாளினி பேசும் வார்த்தைகள், அக்கானின் மனதில் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன.” யாராவது எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்திற்கு இந்தப் புத்தகத்தை அனுப்புவீர்களா?” என்று வானொலிப் பெட்டியிடம் கத்திக் கேட்கிறான். அது பேசாது எனத்தெரிந்ததும் மவுனமாகிறான். அப்பாவின் தொழில், சட்ட விரோதமானது; அது, குற்றம் எனத் தெரிந்து அதைத் தடுக்க வகையறியாமல் வேதனையுடன் கண்ணீர் விடும் அக்கானுக்கு நம்மில் யாராகிலும் ‘உயிர் தரும் மரம்’ நூலை அனுப்பி வைக்க முடியுமா?

கடத்தல் லாரியின் முகப்புக் கண்ணாடியில் அந்தத் தலைப்பைப் பிசின் கொண்டு எழுதி விட்டு, காத்திருக்கிறான், அக்கான். அதைப்பார்க்கும் எவரேனும் அக்கானின் கண்ணீரைத்துடைக்கும் வகையில் தம் கரங்களை நீட்டுவார்களா? ஆப்பிரிக்க நாடான செனகலில், ஒரு மலைக்கிராமத்துச் சிறுவனின் உள்ளங்கைகளில், அவனுக்கு வாசிக்கக் கிடைக்காத ஒரு புத்தக வாசனை மணக்கிறது. புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது நம் மனமும் துயர் நிறைந்து கனக்கிறது. கொ.மா.கோ.இளங்கோ அவர்களுக்கு நம் பாராட்டுகளும், வாழ்த்துகளும்…

– கமலாலயன்

புத்தகம் அமேசான் கிண்டில் தளத்தில் கிடைக்கிறது.

ஓங்கில் கூட்டத்தின் மற்ற வெளியீடுகள்.

12+ சிறுவர்களுக்கான அமேசான் கிண்டில் புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஓங்கில் கூட்டத்தின் நான்காவது வெளியீடு. இன்று முதல் விலையின்றி கிடைக்கிறது. நண்பர்கள் அவசியம் தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். உங்களை சுற்றியுள்ள சிறுவர்களுக்கு புத்தகத்தை அறிமுகம் செய்யுங்கள். அவர்களது கருத்துகளையும் எங்களுடன் பகிருங்கள்.

Leave a comment