லட்சுமி என்னும் மகள் ‘பூ’ – ந.பெரியசாமி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பிக்க வேண்டும்; தன்னுடைய உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த உரிமைகளுக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” – அண்ணல் அம்பேத்கரின் கூற்று இது. இதை நினைவூட்டினாள் லட்சுமி. அவள் என் வீட்டுப்பெண்ணோ, இல்லை, எங்கள் தெருவில் வசிக்கும் பெண்ணோ இல்லை. ஆனால் என் பெண் என்னும் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறாள் விழியனின் ‘மலைப்பூ’ நாவலின் நாயகி லட்சுமி.

குறிஞ்சி நிலத்தில் பிறந்த லட்சுமி, தினசரி ஐந்து கிலோ மீட்டர் நடந்து பஸ்சில் பயணித்து மீண்டும் தன் தோழியுடன் சைக்கிளில் சென்று கல்வி கற்பவள். அந்தப் பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக பனைமரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் லட்சுமியும் இணைகிறாள். ஆய்வு தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளப்போகிறாள். அங்கு பிரதமரிடம் இரண்டு கேள்விகள் கேட்பதற்கான ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது. அங்கே அவள் எழுப்பும் இரு கேள்விகள் சுயநலத்தின் மீது விழுந்த செருப்படிகள். அக்கேள்விகளே நாவலின் உயிர்மூச்சு என்பதால் அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

மலைப்பூ சிறாருக்கான நாவல் மட்டுமல்ல; அது எல்லாருக்குமானதாகவே இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள், சுவாரசியங்கள், அவ்வப்போது உருவாகும் நீர்முடிச்சுகள், குற்ற உணர்வை ஏற்படுத்தும் கேள்விகள் என வாசிப்பின் வேகம் தடைப்படாது இருக்கச் செய்துள்ளார் விழியன்.

“உன்னைச்சுற்றி என்ன நடக்குதுன்னு முதல்ல பாரு. அங்க இருந்துதான் ஆரம்பிக்கணும். அறிவியல் வானத்தில் இருந்து குதிக்கறது இல்ல…” எனும் முத்துக்குமாரி டீச்சர் போன்றவர்களே மாணவர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். ஒரு பள்ளிக்கு இப்படி ஒருவரோ, இருவரோ இருக்கின்றனர். அதனால்தான் தனித்திறனும், சமூகப்பற்றும் கொண்ட மனிதர்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றனர். வீடு, பள்ளி, வீடு என்னும் செக்குமாட்டுத் தன்மையிலிருந்து மாணவர்களை வெளிக்கொண்டுவர பெற்றோர்களைச் சந்தித்து உரையாடும் காட்சிகளில் நாம் நமது நேரடி அனுபவத்தில் கண்ட நமது ஆசிரியர்களைப் பொருத்திப்பார்த்து பள்ளிநாள்களில் மீண்டும் வாழ்ந்திடச்செய்கிறது.

அலெக்ஸ் மரம் 

பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா, இது அலெக்ஸ் மரம் என்றான்
சரி செய்யும் பதட்டத்தில் மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன் கூறினான்

என் மரம்
என் பெயர்தான்.

– குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் தொகுப்பிலிருக்கும் என் கவிதை இது. இதன் நீட்சியாக ஆய்வில் கலந்துகொண்ட மாணவிகளைப் பார்க்கத் தோன்றியது. தீர்மானத்தோடும், வெற்றிகொள்ளும் நோக்கோடும் செயலாற்றச் செய்திருப்பதில் விழியன் குழந்தைமையோடு ஊடாடிப் பெற்றிருக்கும் அனுபவத்தின் மிளிர்வை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

சமகாலத்தில் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் த.வி.வெங்கடேஸ்வரன், பேராசிரியர் மோகனா போன்ற ஆளுமைகள் நாவலிலேயே பாத்திரங்களாக வந்து போவது நாவலுக்கு வேறு முகத்தையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துவதாக உள்ளது. அதைத் தேவையற்ற இடைச்செருகலாகவோ, வலிந்து கொண்டுவந்ததாகவோ உணரத்தோன்றாத விதத்தில் லாவகமாகக் கையாண்டுள்ளார் விழியன்.

லட்சுமியின் அம்மா யாரோ ஒருவரின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மாலை ஆறு மணிக்கே மகள் லட்சுமி இரவு உணவைச் சாப்பிட்டு விட்டாளா என விசாரிக்கிறார். அதைக்கேட்கும் தோழிகள் சிரிக்கின்றனர். அப்போது, மின்சார விளக்கு வசதியில்லாத எங்கள் குடியிருப்புகளில் இரவுச்சாப்பாடு மாலை ஆறுமணிக்கே முடிந்து விடும் என லட்சுமி விளக்கம் தருகிறாள். நமக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள் எல்லாருக்கும் கிடைத்திருக்கும் என்ற நினைவிலிருக்கும் மூடத்தனத்தைக் கேள்வி கேட்பதாகத் தோன்றியது. சமவெளியிலிருக்கும் பிள்ளைகளுக்கும், மலையிலிருந்து வந்து படிக்கும் பிள்ளைகளுக்குமான வாழ்வியல் மாற்றங்களை மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக உரையாடலை வைத்திருக்கிறார் விழியன். படிப்புக்கு அப்பாற்பட்ட வேறு வேறு தளங்களில் ஒன்றிணைந்து செயலாற்றுகையில்தான் பல புரிதல்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் என்பதை நாவல் சுட்டிக்காட்டுகிறது.

காசியில் நடைபெறும் தேசிய மாநாட்டிற்குச் செல்லும் போது, மாவட்ட மாநில மட்டங்களில் கலந்து கொண்டு தேர்வான மாணவிகளை அங்கு அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது என பெற்றோர்கள் மறுத்துவிடுகின்றனர். இதன் மூலம், நாம் வளர்ந்துவிட்ட நாகரிக சமூகம் எனப்பெருமையடித்துக் கொள்வது வெறும் தம்பட்டம் என்பதை உணர முடியும். இன்னமும் பசங்க, பொண்ணுங்க எனப்பாலின அடிப்படையில் பிரித்து அணுகுவது ஆசிரியர்கள் மத்தியில் அதிகம் நீடித்திருப்பதும், இதுக்குத்தான் பசங்கள மட்டும் வைத்திருக்கலாம் என்றும் இவங்கள்ளாம் போயி என்னத்தக் கிழிக்கப்போறாங்க என்றும் கூறும் பிற ஆசிரியர்களின் பார்வை, காசியில் ஒரு பெண் தொலைந்து மீண்டும் கிடைப்பது – போன்ற நிகழ்வுகள் மூலம் நாவலின் விறுவிறுப்பு நம்மையும் மானாட்டின் பங்கேற்பாளராக மாற்றிவிடுகிறது.

மாநாட்டில் பிரதமரிடம் கேள்விகளைக் கேட்க லட்சுமியின் பெயரை அவளிடம் கேட்காமலே ஒரு தோழி எழுதிப்போட்டு விடுகிறாள். இதை எதிர்பாராமல்  முதலில் தயங்கிய லட்சுமி இரண்டு கேள்விகளைத் துணிவுடன் முன்வைக்கிறாள். யாரும் எதிர்பாராத அந்தக்கேள்விகள், பிரதமரை நோக்கி மட்டுமல்ல, அவரைக் குறியீடாக்கி நம் அனைவரை நோக்கியும் வைக்கப்பட்ட கேள்விகளும் கூட என்பதை உணர முடிகிறது.

லட்சுமியின் கேள்விகள் ஊடகங்களின் பேசுபொருள்களாகின்றன. மாநாடு முடிந்து வீடு திரும்பியபின் மீண்டும் பள்ளிக்கு பஸ்சில் வருகிறாள். தன்னை வரவேற்க வழக்கம்போல் தோழி மட்டும் சைக்கிளோடு காத்திருப்பாள் என நினைத்தபடி வரும் லட்சுமிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. மொத்தப் பள்ளியும் அவளை வரவேற்கக் காத்திருக்கிறது. நாமும் அந்தப் பெருங்கூட்ட்த்தில் ஒருவராக நின்று கொண்டிருக்கிறோம்…

மலைப்பூ – விழியன் | வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரென்- பாரதி புத்தகாலயம் ,சென்னை- 18. | விலை ரூ. 95.

Leave a comment