ஹம்போல்ட் : அவரை நேசிக்க வைக்கும் எழுத்து – கமலாலயன்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்(1769-1859) என்ற அறிவியலாளரைப் பற்றி ‘இந்து’ தமிழ்திசை நாளிதழில் ஹேமபிரபா எழுதிய சுருக்கமான ஒரு கட்டுரை பளிச்சென்று படிப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. பின்பு ‘துளிர்’ அறிவியல் சிறப்பு மலரில் அதன் விரிவான வடிவத்திலும் வாசித்தேன். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும்’ தமிழுக்கு வர வேண்டுமென விரும்பிய மகாகவி பாரதி, ஹேமபிரபா போன்றோரின் எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பை பெற்றாரானால் எப்படி மகிழ்வார் என கற்பனை செய்கிறேன்.

‘ஓங்கில் கூட்டம்’ அமைப்பு, ஹம்போல்ட் குறித்த மேற்கண்ட கட்டுரையை மின் நூலாக இப்போது வெளியிடுகிறது. மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட வேண்டிய சிறந்த கட்டுரைகளை, அறிவியல்-சமூகம்-குழந்தை இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் சிறுசிறு மின் நூல்களின் வடிவில் சிறப்பான ஓவியங்களுடன் வெளிக்கொணர வேண்டும் என்பது ஓங்கில் கூட்டத்தின் கனவு. நல்ல கனவுகள் மெய்ப்பட வேண்டுமென விரும்புவது மட்டும் போதாதல்லவா? நாம் அனைவரும் இவற்றைப் படித்தும், பிறருக்கு அறிமுகம் செய்தும் கை கொடுப்போம்!

அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவரான ஹேமபிரபா கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், பிற படைப்புகளை எழுதி வருகிறார். கொரானா பரவத் தொடங்கிய சமயத்தில் அது குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் எளிமையும், தெளிவும் மிக்கவை. மிக மெல்லிய நகைச்சுவை இழையோடும் எழுத்து இவருடையது.

ஹம்போல்டின் சாதனைகள் குறித்து இச்சிறு நூலில் வாசகர் மனதில் தைக்கும் வண்ணம் நறுக்குத் தெறித்தாற் போன்ற செறிவான நடையில் எழுதியுள்ளார் ஹேமபிரபா. இதற்கு மிக அற்புதமான மேலட்டையும், உள் ஓவியங்களையும் வரைந்து தந்துள்ள ஓவியர் செந்திலுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள். இவற்றைப் பார்த்தவுடன், புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் உயிர்க்களை ததும்பும் ஓவியங்கள் இவை என உணர முடியும்.

‘பஞ்சு மிட்டாய்’ பிரபுவின் முன்னெடுப்புகளும், ஒருங்கிணைப்பும் தமிழுக்கும், குறிப்பாக குழந்தை இலக்கியத்துக்கும், சமூக அறிவியல் படைப்புகளுக்கும் வளம் சேர்க்கும் விதமாக விரிவும், ஆழமும் பெற்று வருகின்றன. ‘ஓங்கில் கூட்டம்’ மின் நூல்கள் வெளியீட்டு முயற்சிகள் வெல்க!

புத்தகம்: ஹம்போல்ட் (Humboldt): அவர் நேசித்த இயற்கை – ஹேமபிரபா | வெளியீடு: ஓங்கில் கூட்டம்

கிண்டில் தளத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்

Leave a comment