தமிழ்க் குழந்தை இலக்கியம் : இன்றும் இனியும் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நம்மிடையே மாற்றத்தையோ அல்லது சிந்தனை ஓட்டத்தையோ ஒரு புத்தகம் மிக எளிதாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், அந்த மாற்றத்தையும் சிந்தனை ஓட்டத்தையும் தக்க வைத்து அதனை தொடர் செயல்வடிவமாக மாற்றுவதுதான் மிகப் பெரிய சவாலாக அமைந்துவிடுகிறது. அதையும் கடந்த தொடர் செயல்பாட்டிற்கு பக்கத் துணையாக ஒரு சில புத்தகங்கள் இருப்பதை கவனிக்கும் போதும் தான் அதன் உண்மையான வீச்சை உணர முடியும். அப்படி எனது செயல்பாட்டிற்கும் (பஞ்சு மிட்டாய் சிறார் இதழ்), அதன் தொடர்ச்சிக்கும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் புத்தகங்களில் முக்கியமானது சுகுமாரன் அவர்களின் “தமிழ்க் குழந்தை இலக்கியம்-விவாதங்களும் விமர்சனங்களும்”. அதன் தொடர்ச்சியாக இந்தப் புத்தகம் (தமிழ்க் குழந்தை இலக்கியம் : இன்றும் இனியும்) வந்திருப்பது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருகிறது.

குழந்தைகள் சார்ந்து இருக்கும் கலை, இலக்கியம், விளையாட்டு, நூலகம், கல்வி என ஒவ்வொரு துறையின் உண்மையான வரலாற்றை நாம் அனைவரும் அறிந்துக்கொள்வது அவசியம். இதில் தமிழ்க் குழந்தை இலக்கியத்தைப் பற்றி உரையாடும் புத்தகம் தான் இது. இதை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏன் தேவையென்றால் அதன் வழியே தான் நமது சமூகம் செய்த முயற்சிகள் என்னென்ன, தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம், இனி நாம் என்ன செய்ய வேண்டும் என பல முக்கியமான கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், “குழந்தை இலக்கியத்தில் இதழ்கள்” என்ற கட்டுரையில் இப்படி ஒரு வரலாற்றுச் சான்றை ஆசிரியர்  குறிப்பிடுகிறார்:

1940 முதல் 1970 வரை தமிழில் நிறைய சிறுவர் இதழ்கள் வந்தன. அக்கால கட்டத்தை குழந்தை இலக்கிய இதழ்களின் ‘பொற்காலம்’ என்று குறிப்பிடலாம்.  குழந்தை இலக்கிய இதழ்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மிகும். 

“டமாரம்’ குழந்தைகளின் படைப்புகளுக்கு அதிக இடமளித்தது.  அதன் விற்பனை 20,000 பிரதி களுக்கு மேலாக இருந்தது.  வாரம் இருமுறை வெளி வந்த டமாரத்தின் விலை காலணா.”

ஒரு தலைமுறையில் எத்தனை மாற்றங்கள் என்ற எண்ணம் தான் என்னை இப்போதும் தீண்டிக்கொன்டே இருக்கிறது. இது எனக்கு மட்டுமான உணர்வு அல்ல. குழந்தைகளுக்கும் தாய் மொழிக்கும் உள்ள தொடர்பினை உணர்ந்த அனைவருக்கும் பொருந்தக் கூடிய உணர்வு. இன்றைக்கும் நமது சுற்றத்தில் இருக்கும் 50 வயது கடந்த பெரியவர்களிடம் உரையாடிப் பாருங்கள். அவர்களுக்குள் சிறுவயதில் வாசித்த இதழ்களின் நினைவுகள் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த நினைவுகளை உள்ளுக்குள்ளேயே மறைத்து வைக்காமல் வெளிப்படையாக உங்களுடன் உரையாடிப் பார்க்கதான் இந்தக் கட்டுரை காத்திருக்கிறது.

அடுத்து, படைப்புகளில் இருக்கும் பாலின வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டும் “தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பாலின வேறுபாட்டின் தாக்கம்” என்ற கட்டுரை. மிக முக்கியமான கட்டுரை. “ஆம்புளப் புள்ளைங்கலாம் கதை கேட்க மாட்டாங்க” என்பதை பெற்றோர்-ஆசிரியர்கள் வழியே பலமுறை கேட்டிருக்கிறேன். “சொப்பு சமையல் விளையாட்டு பெண் குழந்தைகளுக்கானது”, “கார் பொம்மை ஆண் குழந்தைகளுக்கானது”, “பிங்க் நிறம் தான் பெண்ளுக்குப் பிடிக்கும்” என்று பல கருத்துகளை ஒரு குழந்தை தனது வளர்ச்சியில் கடக்கிறது. ஆனால் இவை அனைத்தும் சமூகம் திணிக்கும் பாகுபாடுகளே தவிர அவை இயற்கையின் வேறுபாடுகள் அல்ல. குழந்தைகளுக்கான படைப்புகளில், அதுவும் குழந்தைகளை எளிமையாகச் சென்றடையும் சிறார் பாடல்களில்  இந்தப் பாகுபாடுகள் நிரம்பி இருக்கின்றன என்பதை  ஆசிரியர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். முக்கியமாக வீரம் மற்றும் கற்பு பற்றிய கருத்துக்களை எப்படி நமது குழந்தை இலக்கியத்தில் கையாளப்பட்டன என்பதை விரிவாக உரையாடுகிறார். இந்தக்  கட்டுரையை எங்கள் இதழின் அனுபவத்தோடு ஒட்டிப் பார்க்க முடிகிறது. பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழில் இட்லி பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது – அதில் “எச்சில் தட்டை எடுத்து கழுவி வைத்தார் அப்பா” என்ற மிக எளிமையான விசயத்தை பிரதிபலித்த வரிக்கு  மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பின் வழியே சமூகம் சமத்துவத்தை நோக்கியே பயணிக்க விரும்புகிறது என்பதை உணர முடிந்தது.  அதே உணர்வை இந்தக் கட்டுரை ஆணித்தரமாக உணர்த்துகிறது.

நூலகம் குறித்த இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலகம் செல்வது நல்லது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள் ஆனால் அதனை செயல்முறைப்படுத்துபவர்கள் மிகவும் குறைவானவர்களே. பெற்றோர்-ஆசிரியரின் ஆர்வமில்லாத தன்மை ஒரு பக்கம் என்றால் நூலகம் என்ற அமைப்பின் மீதான ஈர்ப்பு இன்னொரு பக்கம். “இன்று மக்களின் புறக்கணிப்புக்கு அதிகம் உள்ளாகி இருக்கும் இடம் எதுவென்று கேட்டால் அது பொது நூலகம் என்றுதான் பதிலளிக்க முடியும்.” என்று “நூலகம் இன்றும்… இனியும்…” என்ற கட்டுரையின் முதல் வரியிலேயே குறிப்பிடுகிறார். நூலகத்தில் முதலில் அடிப்படை வசதியாக குழந்தைகளுக்கான புத்தகங்களைத் தனியாக அடுக்கி வைப்பது பற்றி சுட்டிக்காட்டுகிறார். இன்று தொழில்நுட்ப வசதிகள் எத்தனை மாற்றங்களைக் கண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நாம் இன்னும் அடிப்படைத் தேவைகளை பேசிக் கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் (குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்கள்) பெருமையாகச் சொல்லும் விசயத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது நூலகம். இந்தப் புத்தகத்தில் நிறைய இடங்களில் வெளிநாடுகளில் நூலகங்கள் இயங்கும் முறைகளைப் பற்றி குறிப்பிடுகிறார். நூலகங்களில் குழந்தைகளுக்காகக் கடைப் பிடிக்கப்பட வேண்டிய கதை நேரம் , எழுத்தாளர் சந்திப்பு , நூலகத்தோடு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய தொடர்பின் அவசியம், சிறுவர்களுக்காக (முக்கியமாக 3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மழலைகளுக்கான) இருக்கை வசதிகள், அலமாரி வசதிகள். சிறுவர் பகுதிக்கென தனி நூலகர் வேண்டும் என்று நிறைய விசயங்களை குறிப்பிடுகிறார். இறுதியாக “நூலகத் தந்தை திரு.ரங்கநாதனைத் தந்த பெருமையுடையது நம் நூலகத்துறை” என்ற வரியை வாசிக்கும் போது நமது வளர்ச்சியின் சுணக்கம் சுர்ரென சுடுவதை உணர முடிகிறது.

இன்னும் தமிழ்க் குழந்தை இலக்கியத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய பல்வேறு விஷயங்களை இந்தப் புத்தகம் பேசுகிறது. பதிப்பாளர்கள். வடிவமைப்புகள், மொழிபெயர்ப்புகள், குழந்தை மொழி, ஓவியங்கள், குழந்தைகளின் படைப்புகள், போக்குகள், சாகித்ய அகாடமியின் தொகுப்புகள், நாட்டுப்புற இலக்கியத்தின் பங்கு அதனை கையாளும் விதம் என நீண்ட உரையாடலை வாசகர்களுடன் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

தொடர்ந்து இன்னும் பல புதிய தலைப்புகளில் எழுத வேண்டும் என்ற  வேண்டுகோளோடு இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புத்தகம் : தமிழ்க் குழந்தை இலக்கியம் : இன்றும் இனியும் | சுகுமாரன் | Nestling NCBH

Leave a comment