மழ மந்தகாசங்கள் – பி.வி.சுகுமாரன் (எனக்குப் பிடித்த மலையாள சிறார் நூல்கள் – 07)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் புகழ்பெற்ற எழுத்தாளர் கே.ஆர்.மீராவின் மழ மந்தகாசங்கள்” நூலை அறிமுகப்படுத்துகிறார்.

சிறார் கதைகளில் ஒரு வகை மாயாஜாலத்துடன் எழுதப்படுபவை. அவற்றில் விலங்குகள், பறவைகள், மலைகள், ஆறுகள் எல்லாமும் மனிதர்களைப் போலவே பேசும். மனிதர்கள் பறவைகள் போல பறக்கவும் மறைந்துபோகவும் செய்வார்கள். இன்னொரு வகை எழுத்து என்பது நம் வாழ்வில் நடக்கும் இயல்பான முறையில் எழுதப்படுவது. அதிலும் பலர் சிறுவர் கதை என்றதும் மிக மேலோட்டமான கதை மையத்தை எடுத்துகொள்வார்கள். வெகு சிலரே சமூகத்தின் மிகச் சிக்கலான விஷயங்களை சிறார் இலக்கியத்தில் எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படியான ஒரு சிறந்த படைப்பே ‘மழ மந்தகாசங்கள்’.

மலையாளத்தில் பெரியவர் இலக்கியத்தில் தீவிரமாக எழுதும் பல எழுத்தாளர்கள் சிறார் இலக்கியத்திலும் தங்கள் பங்களிப்பைச் செலுத்த தவறுவதே இல்லை. எம்.டி.வாசுதேவநாயர் தொடங்கி இன்று வரை எழுதும் இளம் படைப்பாளிகள் வரை பல உதாரணங்களைச் சொல்லலாம். அவர்களில் ஒருவர் கே.ஆர்.மீரா. அவர் எழுதிய சிறார் நாவலே மழ மந்தகாசங்கள்.

மழ மந்தகாசங்கள் நம் சமூகத்தில் நிலவும் ஒரு தீவிரமான பிரச்சனையின் வேறொரு கோணத்தை வெளிப்படையாகப் பேசுகிறது. அது குறித்து பார்க்கும் முன், மழ மந்தகாசங்கள் நாவலின் கதை சுருக்கத்தை முதலில் பார்த்து விடலாம்.

’நியூ ஏஜ்’ எனும் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நான்கு பேர். ஆதித்ய சுரேஷ் எனும் அப்பு, மைக்கல, பெரோஸ், நிஷான். இவர்கள் எப்போதுமே இணை பிரியாத நண்பர்கள். இந்த வருடத்தில் அல்ல. மூன்றாம் வகுப்பிலிருந்தே இந்த நான்கு பேரும் ஒன்றாகவே படித்து வருகிறார்கள். இவர்களின் குழுவுக்கு ‘ஃபெண்டாஸ்டிக் ஃப்ரெண்ட்ஸ்’ என்று பெயர். நான்கு பேரும் குழுவாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் நிஷான். குழுவுக்கான பெயரை தேர்ந்தெடுத்தவர் மைக்கல.  குழுவுக்கு சில விதிமுறைகளை உருவாக்கியவன் அப்பு.

அப்புவின் அப்பா ஒரு வங்கியில் மேனேஜராகப் பணியாற்றுபவர். அப்பு மீது அன்பைப் பொழிபவர். ஒருமுறை அவர் வேலை தொடர்பாக வெளியூர் சென்று வந்தபோது அப்பு கோபத்துடன் இருப்பது போல தெரிந்தது. மற்றவர்களிடம் விசாரிக்கும்போது, நான்கைந்து நாட்களாகவே அப்புவின் நடவடிக்கை சரியில்லை என்று வீட்டினர் சொல்கிறார்கள். ஆனால், வழக்கமாக எப்போது ஒழுங்கான பையன். திடீரென்று இப்படி நடப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

அப்புவின் அப்பா செய்தித்தாள் படிக்கையில் கடன் தொல்லை தாங்க முடியாமல் ஒரு குடும்பமே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட செய்தியைப் படிக்கிறார். அந்தக் குடும்பத்தில் ஒரு பையன் மட்டும் தப்பித்து உயிர் பிழைக்கிறது. அது வேறு யாருமல்ல, ஃபெண்டாஸ்டிக் ஃப்ரெண்ட்ஸ் குருப்பில் இருக்கும் நிஷான் தான். இந்தச் செய்தி கேள்விப்பட்டு நிஷான் வீட்டுக்குச் செல்ல அப்பாவிடம் அனுமதி கேட்கிறான் அப்பு. கொஞ்ச நேரம் யோசித்த அப்பா அனுமதி தருவதில் இழுத்தடிக்கிறார். அப்புக்கு நிஷான் நினைவாகவே இருக்கிறது.

அப்புக்கு மட்டுமல்ல, மைக்கல, பெரோஸ்க்கும் நிஷான் எப்படியிருக்கிறான் என்று கவலை இருந்தது. என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்புதான் பல விஷயங்களில் தெளிவாகவும் துணிவாகவும் முடிவெடுப்பான். அந்த வகையில் இன்று பள்ளி நேரம் முடிந்ததும் நிஷான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் செல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.

மூவரும் திட்டமிட்டபடியே மாலை பள்ளி முடிந்ததும் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். 14 வது வார்டில் நிஷான் ஒரு பெட்டில் தனியாக படுத்துகிடக்கிறான். அவனைப் பார்த்ததுமே இவர்களின் கவலை அதிகமாகி விடுகிறது. இவர்களைப் பார்த்ததும் நிஷான் ரொம்பவும் மகிழ்ச்சியாகி விடுகிறான். மனம் விட்டுப் பேசுகிறான். சிரிக்கிறான்.

நிஷான் மனதில் அன்றைக்கு அப்பா விஷம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது. ஐஸ்கிரீம் என்று சொல்லி விஷம் தருகிறார் அவரின் அப்பா. நிஷானுக்கு இரண்டு அக்காக்கள். அம்மா, அப்பா, இரண்டு அக்காக்களும் விஷம் குடித்ததில் இறந்துவிடுகிறார்கள். அதை நினைத்துக்கொள்கிறான் நிஷான். நிஷானுக்கு ஆறுதல் சொல்கிறார்கள் மூன்று நண்பர்களும்.

நிஷான் மீண்டும் பள்ளிக்கு வருவது தொடர்பாக பேச்சு வந்ததும், நிஷான் அமைதியானான். ‘நாம் படிக்கும் பள்ளிக்கு நிறைய பணம் கட்ட வேண்டும். எனக்குப் பணம் கட்ட யாருமே இல்லை. மேலும், என் அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்” என்கிறான்.

“நான் இனி நம் ஸ்கூலுக்கு வர மாட்டேன். எங்காவது அனாதை விடுதிக்குப் போய்விடுவேன். என்றாவது என்னைப் பார்த்தால் எப்போதும்போல பேசுங்கள். மைக்கல எனக்கு நீ டீ போட்டுக்கொடுக்க வேண்டும்” என்று நிஷான் சொன்னது மூன்று பேரும் அழுகிறார்கள்.

நான்கு பேரும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அதற்கு மூன்று பேரின் வீட்டினரும் எங்கே தங்கள் பிள்ளைகள் எனத் தேடத் தொடங்கி விட்டார்கள்.

பள்ளியைத் தொடர்புகொண்டு கேட்டபோது பள்ளி நிர்வாகம் ‘ஒரு பொண்ணையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். இது பெரிய விஷயம்” என்று சொன்னதும் மற்ற இரண்டு வீட்டினரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

நான்கு பேரும் மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறார்கள். மழை பெய்கிறது. மைக்கல தனிக்குடையிலும் அப்புவும் பெரோஸூம் ஒரு குடையிலும் வருகிறார்கள். பெரோஸ் தன்னை வீட்டில் தேடுவார்கள்… லேட்டாகப் போனால் திட்டுவார்கள் எனப் பயப்பட, அப்பு தைரியம் சொல்கிறான். பெரோஸைத் தேடி அவனது மாமா வருகிறார். பெரோஸை அழைத்துச் சென்றுவிடுகிறார்.

அப்புவும் மைக்கலவும் தொடர்ந்து நடந்தார்கள். வழியில் போலீஸ் ஜீப் வந்து நிற்கிறது. இருவரையும் பார்த்ததும் சந்தேகப்பட்டு விசாரிக்கிறார்கள். அப்பு தைரியமாக தாங்கள் வந்தது ஏன் என்று சொல்கிறான். நம்பாமல் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.

அப்புவின் அப்பா நிஷான் பற்றி விசாரித்துக்கொண்டு  மருத்துவமனைக்கு வந்துவிடுகிறார். அங்கே மருத்துவர் நிஷான் பற்றிச் சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சி அடைய வைக்கிறது. நிஷான் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகியும் எங்கே செல்வது என இங்கேயே இருக்கிறான் என்றதும் அப்புவின் அப்பா கவலை படுகிறார். அப்போதுதான் நிஷானை தாங்களே படிக்க வைக்கலாம் என்று நினைக்கிறார்.

அப்போது அப்புவின் அப்பாவுக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வருகிறது. இரண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாகச் சொன்னதும் எல்லோரும் அங்கே செல்கிறார்கள். பெரோஸின் அப்பாவும் சிறிதுநேரத்தில் வந்துவிடுகிறார். பள்ளியின் பிரின்ஸ்பல் ஸ்டெல்லா மேரியும் வந்துவிடுகிறார். பள்ளியிலிருந்து வந்திருந்த பிரின்ஸிபலிடம் ‘நிஷானின் பள்ளிக் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்று கேட்கிறார் அப்புவின் அப்பா. மைக்கலவின் பாட்டியும் நிஷானுக்கு உதவுவதாகச் சொல்கிறார்.

அங்கே இரண்டு பேரைப் பற்றிச் சொல்லி வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். வீட்டுக்குச் செல்லும்போது அப்பு தன் அப்பாவிடம் நடந்ததற்காக மன்னிப்பு கேட்கிறான். ‘உன்னால் நிஷானின் படிப்பு தொடரப்போகிறது. மன்னிப்பு கேட்க வேண்டாம்’ என்று பாராட்டுகிறார். அத்தோடு நாவல் முடிகிறது.

சிறார்க்கான எளிமையான மொழியில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். கடன் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை எனும் செய்தியை நாம் வாரத்திற்கு ஒரு முறையாவது படித்திருப்போம். ஒருவேளை அதில் தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் கல்வி என்னவாகும் என்று எத்தனை பேர் யோசித்திருப்போம். ஒருவேளை யாருமே இல்லாத அந்தக் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு எங்கே செல்வார்கள்… குழந்தைத் தொழிலாளர் எனும் சிறைக்குள்தானே செல்ல வேண்டியிருக்கும்… அந்தச் சிந்தனையை சிறுவர்கள் மத்தியில் விதைக்கும் செயலைச் செய்திருக்கிறது கே.ஆர்.மீரா எழுதியிருக்கும் இந்த நாவல். எந்த சாகசங்கள் இந்தக் கதையில் இல்லை. ஆனால், நிஷான் எனும் சிறுவனின் கல்வியை மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறது இந்தக் கதைக் களம். ஒரு சிறுவனுக்கு கைதவற இருந்த கல்வி மீண்டும் கிடைத்திருப்பதை விட பெரிய சாகசம் இருக்க போகிறதா என்ன? இப்படி நிஜ உலகில் நடக்கும் மாயங்களைக் குறித்து எழுதுவது மிகுந்த சாவலை எதிர்கொள்வதுபோலத்தான். அதை தன் லகுவான மொழியில் திறமையோடு எதிர்கொண்டிருக்கிறார் கே.ஆர்.மீரா.

கல்வி குறித்த விழிப்புணர்வு கதையாக இல்லாமல், தம் சகாக்களில் ஒருவனை தன் குழுவிலிருந்து தொலைத்து விடாமல் சிறுவர்கள் முன்னெடுக்கும் முயற்சியாக இது மாறியிருக்கிறது.

இந்த நாவலை எழுதிய கே.ஆர்.மீரா மலையாளத்தின் மிக முக்கிய புனைவு எழுத்தாளர்களில் ஒருவர். பெரியவர்களுக்கான இலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் மீரா 1970 ஆண்டு பிறந்தது கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் சாஸ்தம்கோட்டா எனும் ஊரில்.  சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், திரைக்கதை ஆசிரியர் எனும் எழுத்தின் பன்முகத்தன்மையில் இயங்கி வருபவர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் இவர் எழுத்தில் வெளியாகி மலையாள இலக்கியத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சூர்ப்பனகை  பெயரில் இவரின் சிறுகதைகளை ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மழ மந்தகாசங்கள் நூலையும் சேர்ந்து இரண்டு சிறுவர் நூல்களை எழுதியுள்ளார் கே.ஆர்.மீரா.

2002-ம் ஆ ஆண்டு இவரின் ‘ஓர் மாயும் நாரம்பு’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியானது. அத்தொகுப்பே மீராவை மளையாள இலக்கியத்திற்கு காத்திரமாக அறிமுகப்படுத்தி விட்டது. 2004, 2009, 2013 ஆகிய வருடங்களில் கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். வயலார் விருது, முட்டத்து வர்க்கி விருது, டிஎஸ்சி சவுத் ஏஷியன் விருது, வி.வி.கே. விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவர் நூல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

மலையாள மனோரமா இதழில் பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கியவர். அதிலும் பியூசிஎல் மனித உரிமை விருது, குழந்தைகள் உரிமை தொடர்பான தேசிய விருது உள்ளிட்டவற்றையும் பெற்றவர். ஒரே கடல் எனும் திரைப்படத்தில் கே.ஆர்.மீராவின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது.

கே.ஆர்.மீரா சிறார் இலக்கியத்தில் இன்னும் பல்வேறு கோணங்களில் புதிய களங்களைக் கொண்டு பல நூல்களை எழுதுவார் என்று நம்பிக்கை இருக்கிறது.

நூலின் பெயர்: ‘மழ மந்தகாசங்கள்’
எழுதியவர்: கே.ஆர். மீரா
வெளியீடு:  கேரளா ஸ்டேட் இன்ஸ்ட்டியூட் ஆஃப் சில்ட்ரன் லிட்ரேச்சர்,
ஓவியங்கள்: ஜெயந்திரன்

கட்டுரை எழுத்தாக்கம் : விஷ்ணுபுரம் சரவணன்

Leave a comment