தனி நபர்களிடம் கல்வி ஏற்படுத்துகிற வளர்சிதை மாற்றங்கள் அளப்பரியன. தொடர்ந்து புத்தகங்களை ஈடுபாட்டுடன் வாசிக்கும் வேளையில், நமது சிந்தனைகள் புதுப்புது தளங்களைத் தேடி ஊடுருவிப் பாய்கின்றன. செக்கு மாட்டுத் தடம்போல் ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வரும் சிந்தனையால், தொடக்க நிலைப் பயன்பாடு தவிர, வேறொன்றும் விளையாது. ஆனால், வெவ்வேறு தளங்களில் பயணித்துச் சிறகடித்துப் பறக்கும் சிந்தனைகள், மண்ணைத் துளைத்தும், விண்ணையளந்தும் விரிந்து கொண்டே போகும் இயல்புடையது.
மரபுசார்ந்த தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்த பதிவுகளைப் பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறோம். இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர் ந.ரவீந்திரன் அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வேட்டுக்காக ‘திருக்குறளின் கல்விச் சிந்தனை’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டவர். ஏற்கெனவே பல ஆய்வு நூல்களைத் தமிழுக்குத் தந்தவர் இவர். பாரதியின் மெய்ஞ்ஞானம், கலாசாரம்-எதிர்க்கலாசாரம்-புதிய கலாசாரம், பின் நவீனத்துவமும் அழகியலும், இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும், இந்துத்துவக் காலச்சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம் – போன்ற பல காத்திரமான நூல்கள் ரவீந்திரனுடையவை. தமிழ்நாட்டிற்கு வெளியே வாழ்ந்து வந்தாலும், தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கங்களைத் தொடர்ச்சியாகவும், மிகக் கூர்மையாகவும் அவதானித்து வருபவர் அவர். ஒரு மருத்துவராகத் தன்னை உருவாக்க விரும்பிய தன் தந்தைக்கு, அதைக்காட்டிலும் மேலானதாகத் தான் கருதும் ‘திருக்குறளின் கல்விச் சிந்தனை’ என்ற இந்த நூலைச் சமர்ப்பணமாக வழங்கியதில் கூடுதலான மன நிறைவைப் பெற்றவர் இரவீந்திரன்.
பேராசிரியர் முன்வைக்கும் சிந்தனைகளை இனிப் பார்க்கலாம்:
சொந்த மண்னில் தமிழைப் பேணி வளர்ப்பதில் உறுதியாக இருப்பவர்கள் தமிழர்; அதே வேளையில், வெளிவட்டாரத் தொடர்புகளில் வேறு பொது மொழிகளை ஏற்பதும், பயில்வதும், பயன்படுத்துவதும் தமிழ் மரபு. இது, தமிழ் செம்மொழியாகப் பரிணமித்த ஆரம்ப காலத்திலேயே தமிழகத்தின் நெறிமுறையாக உள்ளது. இன்றும் தமிழ்ப்பற்றில் உறுதியாகவும், பொருளியல் வாழ்க்கைக்கு ஆங்கிலக்கல்வியைப் பயன்படுத்துவதில் விருப்புடனும் இருப்போர் தமிழர். இந்த முரண், இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வழக்காறு எனக் காண முடிகிறது.
இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்ற போதும், சைவ சித்தாந்தம் எனும் உயர் தத்துவநெறியைத் தமிழில் விருத்தி செய்த விழிப்புணர்வு தமிழருக்கு இருந்தது அவதானிப்புக்குரியது. சமஸ்கிருத மொழி சாராத தனித்துவமான இலக்கணம், தனக்கான ஒரு தத்துவ நெறி என்பவற்றை இந்தியாவிலேயே தமிழ் மொழி மட்டுமே கொண்டிருந்தது.
பொதுமொழியும், தமிழ்ப்பற்றும்: மொழியுணர்வு தொடர்பாக, ஒரு விடயத்தை அவதானிக்க முடிகிறது. முதுமக்கள் தாழி, பாறை ஓவியக் குறிப்புகள், நடுகற்கள் போன்றவற்றில் புராதனக்குறியீட்டு முறையினூடாக, தமிழ்ப் பிராமி எழுத்துக்கும், பின் வட்டெழுத்துக்கும் தமிழ் எழுத்து முறை மாறி வந்துள்ளது. அசோகனின் பிராமி எழுத்துக்குப் பின்பே இங்கு எழுத்து அறிமுகமானது என்பதை இப்போது ஆய்வுலகம் ஏற்பதில்லை. அசோகனுக்கு முன்னரே தமிழகத்திலும், வட இலங்கையிலும் தமிழ்ப்பிராமி எழுத்துகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இது கி.மு.400-க்குரியது எனக் கண்டறியப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தத் தமிழ்ப் பிராமி எழுத்துப் பரிணமிப்பை ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். இந்த எழுத்து, கல்வி மேம்பாட்டில் வணிக வர்க்கத்தினரால் போற்றப்பட்ட சமண, பவுத்த சமயங்கள் பெரிதும் உதவியுள்ளமை கவனிப்புக்குரியது.
திருக்குறளின் நான்கு அதிகாரங்களான கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை ஆகியவற்றுடன் மட்டும் வள்ளுவரின் கல்விச்சிந்தனை நின்று விடுவதில்லை. மாறாக, குறள்பாக்கள் நெடுக அது விரவி ஊடுருவிக் கலந்திருப்பதைத் தன் ஆய்வேட்டின் ஐந்து இயல்களிலும் ஏராளமான சான்றுகளுடன் எடுத்துரைத்து நிறுவியிருக்கிறார் பேராசிரியர் இரவீந்திரன். கடைசி இயலான ஐந்தாவதின் தலைப்பே இப்படி அமைந்திருப்பதைக் காணும் போது, மகிழ்ச்சியும், வியப்பும் நம்மை ஆட்கொள்ளுகின்றன: “கல்வியியல் செல்நெறியில் திருக்குறள்”என்ற இந்தப் பகுதியில், இரவீந்திரன் முன் வைக்கும் சில சிந்தனைகளைச் சுருக்க்மாகப் பார்க்கலாம்: “குரு-சிஷ்யப் பரம்பரையைப் (குருகுலக் கல்வி முறையை) பேணி வளர்க்கும் மத்திய காலப்பார்வையில், ஆசிரியரின் அதிகாரத்துவம் மிகையானது. மாணவரது செயற்பாடு எதுவும் இருக்காது. மாறாக, வெறும் பின்பற்றலே நிலவியது. கற்பித்தல் என்பது திணிப்பாக மட்டுமே இருந்தது. இதற்கு மாறாக, கல்வி வாயிலாகச் சமத்துவத்தை நோக்கி முன்னேறும் இன்றைய சூழலுக்கேற்ற, நவீன சமூகத்தில் முனைப்படைவதாகிய கல்விச் சிந்தனை திருக்குறளில் வீறுடன் காணப்படுகின்றது. கல்வியில் பல தளச்செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகத் திகழ்கிறது.”
உலகளவிலான கல்விச் சிந்தனைப் போக்குடன் இதனை இணைத்துப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும். வள்ளுவர் காலத்துக்கு முன் பின்னாக இருந்த உலகப்புகழ் பெற்ற பல கல்விச் சிந்தனைகள், திருக்குறளைப் போலவே வேறு பல சமூகப் பிரச்சினைகளுடன் இணைத்து முன்வைக்கப்பட்டவையே; தனியே கல்வித்தத்துவம் என முன்வைக்கப் படவில்லை” எனக் கூறும் இரவீந்திரன், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ரூசோ, ப்ரோபெல், ஜோன் டூயி, இரவீந்திரனாத் தாகூர் போன்றோரின் சிந்தனைகளைச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறார்.
“சாக்ரடீஸ்,பிளாட்டோ,அரிஸ்டாட்டில் போன்றோரின் கல்வித்தத்துவத்தைக் காட்டிலும் வள்ளுவரின் கல்வித்தத்துவ வீச்சு எந்த வகையிலும் குறைவுடையதல்ல. இவர்களின் கல்விச் செயற்பாடுகள் நன்கு அறியப்பட்டுள்ளன. அதுபோல், வள்ளுவர் கற்றல்-கற்பித்தலில் எப்படி ஈடுபட்டிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. இந்தக் குறை நமது வரலாற்றியல் அறிவு பதியப்படாத நிலை சார்ந்ததே; அதற்காக,கல்விக் கோட்பாடே இருந்திருக்காதென முடிவு செய்து விட இயலாது.”
சுயசிந்தனை ஆற்றலுடன் மெய்ப்பொருள் காணும் ஆய்வுத்தேடல் வரப்பெறும் கற்றவரை உருவாக்கும் கல்வி இயலாளர்களைத் திருக்குறள் காட்டுகிறது. இது தொடர்பாக ம.சக்கரவர்த்தி என்பாரின் கருத்தை இரவீந்திரன் மேற்கோள் காட்டுகிறார்: “கற்பிக்கும் ஆசிரியர், மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டி, பொறுப்புணர்வுடனும், பொறுமையுடனும் துணை நின்று, அவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாக,அறிஞர்களாக உருவாக வழிவகை காண வேண்டும்.ஆய்ந்தறியும் அறிவு சார்ந்த மானவர்களை உருவாக்குவதில் வல்லவர்களாக ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும் என்பது திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை. இதனை,
“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துரையா தார்”
(அதிகாரம்: சொல்வன்மை குறள் எண்: 650)
– என்ற குறளின் வழி உணர்த்துகின்றார்.
இந்தியக் கல்விப் பாரம்பரியம்: கிரேக்கத்தில் சாக்ரடீஸ் அறிவுத்தீயைப் பரப்பிய சமகாலத்தில், இந்தியாவில் மற்கலி, மகா வீரர் போன்றோர் முறையே ஆசீவகம், சமணம், பவுத்தம் ஆகியனவாகிய இயக்கங்களை வழி நடத்தினர். இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகாலம் வரை இந்தியா முழுவதிலும் வீறுடன் இயங்கி அறிவு விருத்தியை ஏற்படுத்தின.
சமணம், பவுத்தம் போன்ற நெறிகள், அனைத்துத் தரப்பினரையும் தமது பள்ளிகளில் அரவணைத்து முழுமையான கல்வி புகட்டலுக்கு இடமளித்தன. புத்தர், தனது கருத்துகளைக் கூட அப்படியே நம்பி ஏற்க வேண்டியதில்லை என உரைத்து சுயசிந்தனையைத் தூண்டினார். “உனக்கு நீயே விளக்கு” என்பது அவரின் புகழ்பெற்ற மொழியாக அமைந்தது. அந்தந்தக் காலங்களுக்கும், இடங்களுக்கும் அவற்றின் தேவைகளுக்கேற்ப இசைவான புதிய கருத்துகளை உருவாக்கிப் பரப்புரை செய்வதையே புத்தர் வலியுறுத்தினார். இந்திய அறிவுத்தேடலில் புத்தர் ஓர் உச்சமாகத் திகழ்ந்தவர். எதையும் ஆராயாமல் அப்படியே நம்புவதை சமணமும் கூட ஏற்கவில்லை.
பிறப்பினாலன்றி, ஒருவர் உயர்ந்தவரா தாழ்ந்தவரா என்பதை நிர்ணயிக்கும் தகுதிகள், ஒழுக்கமும் கல்வியுமே என்பதை வள்ளுவம் வலியுறுத்துகிறது. மக்களில் சில பிரிவினர் உயர்குலத்தவர் எனக் கொண்டாடப்படுவதும், குறிப்பிட்ட சில குடியினரே நற்குடியினர் என மதிக்கப்படுவதுமான சமூக எதார்த்த நிலையை வள்ளுவர் காணாதிருக்கவில்லை. உயர்குடியில் பிறந்திருந்தாலும், ஒழுக்கமில்லாவிடில் இழிபிறப்பினர் என்றே கருதப்படுவர் என்பதால், ஒழுக்கமுடைமையே உயர்குடிப் பண்பு(குறள்-133).
“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.”
(அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் எண்: 133)
இதற்கு எதிர்முனையில், கவனிக்கப்படாத, தாழ்ந்த அல்லது தாழ்த்தப்பட்ட ஒரு குடியில் பிறந்தவராக இருப்பினும், ஒழுக்கமுடைமையும் கல்வியும் இருக்குமாயின் அவர் உயர்குடிப்பிறப்பாளராகவே மதிக்கப்பட வேண்டும். மேற்குலத்தவர் ஒருவர் கல்வி கற்கவில்லையெனில், கல்வி கற்றவரான கீழ்க்குலத்தவருடன் ஒப்பிடுகையில் அவர் பெருமைக்குரியவர் அல்லர் (குறள்-409) என்பார் வள்ளுவர். எந்தக்குலத்தவராயினும், கல்வியும், உழைப்பும், செல்வமும் ஈட்டி எவரும் முன்னேறத்தக்க சாத்தியங்கள் பற்றிய சமூகச் சூழல் ஒன்றை முன்னிறுத்திப் பேசுவதனால் எந்தக்குலத்தையும் ஒட்டுமொத்தமாக உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ பார்க்காத பண்பு வள்ளுவரிடம் வெளிப்பட்டிருக்கிறது.
“மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.”
(அதிகாரம்: கல்லாமைகுறள் எண்: 409)
இந்த ஆய்வேட்டுக்கு ஓர் அணிந்துரை வழங்கியிருப்பவர் பேராசிரியர், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துனைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள். அவர், பின்வரும் கருத்துகளை முன்வைத்து, வள்ளுவம் காட்டும் கல்விச் சிந்தனைகள் இந்த நூலில் வெளிப்படும் விதத்தைப் பாராட்டுகிறார் :
“வளர்ந்துவரும் இன்றைய கல்விச் சூழலுக்கு ஏற்பவும் மாறிவரும் சமூக வளர்ச்சிக்கு ஏற்புடையதுமான கல்விச் சிந்தனையைத் திருக்குறள் வழங்கியுள்ளது. அறிவைப்பற்றி அறிந்துகொள்ளும் புதிய துறையாகக் கல்விப் புலத்தைத் திருக்குறள் காட்டும். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் காண்பதுதான் கல்வியால் பெறும் அறிவு என்பதைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். திருக்குறளில் மிக அதிகமாகக் கையாளப்படும் சொற்களுள் ஒன்று அறிவு என்பது. கல்வி என்னும் சொல்லும் பெரிதும் கையாளப்படுகிறது. கல்வி சமூகப் பொருத்தப்பாட்டிற்கு மட்டுமன்றிச் சமூக மாற்றச் செயற்பாட்டிற்கும் வழிகாட்டும். இத்தகைய மாற்றத்திற்கும் வழிவகுக்கும் முறையில் வள்ளுவக் கல்விச் சிந்தனைகள் அமைந்துள்ளன.”
“உலகம் இன்று எதிர் நோக்கும் கல்வியின் அடிப்படைக் கூறுகள் நான்கு எனக் கல்வியியல் அறிஞர் கூறுவர். அவை, அறிதலுக்காகக் கற்றல், செயலாற்றுவதற்காகக் கற்றல், சேர்ந்து வாழ்வதற்காகக் கற்றல், வாழ்தலுக் காகக் கற்றல் என்பன. இவையே கல்வியின் நான்கு தூண்கள் என யுனெஸ்கோ அமைப்பும் ஆராய்ந்து ஏற்று, புதிய நூற்றாண்டிற்கான கல்விமுறை இவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. திருவள்ளுவரின் கல்விச் சிந்தனை, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்னும் நான்கு அதிகாரங்களுடன் மட்டும் நின்று விடுவதில்லை. இந்த நான்கையும் ‘அறிதலுக்காகக் கற்றல்’ எனும் வகையில் அடக்கலாம்.”
“வினைத்திட்பம், காலமறிதல், வினை செயல்வகை முதலானவை ‘செயலாற்றுவதற்காகக் கற்றல்’ என்பதற்கு இலக்கணமாய் அமையும். வாழ்க்கைத் துணை நலம், இல்லறம், மக்கட்பேறு, அன்புடைமை பற்றிய கருத்துகளும், காதலர் உறவு பற்றிய சிந்தனைகளும் ’சேர்ந்து வாழுதலுக்காகக் கற்றல்’ என்னும் கோட்பாட்டின் கீழ் அமையும். ஒப்புரவு, மக்கட்பண்பு நலன் பற்றி திருக்குறள் எடுத்துரைக்கும் சிந்தனைகள் ‘வாழக்கற்றல்’ எனலாம். கல்வியியல் செல் நெறியில் காணலாகும் பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகளோடும் திருக்குறளின் கல்விச் சிந்தனைகளை நூலாசிரியர் ஒப்பிட்டு ஆராய்ந்திருப்பது, திருக்குறளின் தனிச்சிறப்பைப் புலப்படுத்துவதாக அமைகின்றது.”
இவ்வாறு திருக்குறள் காட்டும் கல்விச்சிந்தனைகள் பற்றிய பேராசிரியர் இரவீந்திரனின் நூல் ஆழமான சிந்தனைகளின் களஞ்சியமாய் உள்ளது. இந்தப்பகுதியின் நிறைவில், பின்வரும் ஒரு குறள்பாவை நாம் நினைவு கூர்வோம் :
“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.”
(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:383)