உயிரினங்கள் (குழந்தைப் பாடல்கள்) – ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா(வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – 8)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சிறுவராய் இருந்த போதே கவி பாடத் தொடங்கியவர் செல்ல கணபதி. ‘வெள்ளை முயல்’, ‘பாட்டுப் பாடவா’, ‘வண்டுகளே உங்களைத்தான்’ ஆகிய கவிதை நூல்களைக் குழந்தைகளுக்காகத் தந்த இவரது இன்னோசை மிக்க பாடல்களில் ஒன்றை இப்போது காணலாம்.

“வண்டுகளே உங்களைத்தான்
நான் அழைக்கிறேன்
வருக வருக தேன் குடிக்கும்
வழியைச் சொல்கிறேன்.

தாமரைப்பூ இதழ் விரித்துத்
தலை அசைக்குது
தலை அசைக்கும் பூவுக்குள்ளே
தேன் இருக்குது.

ஏன் தலையை அசைக்கிறது, தெரியுமா?

உண்பதற்குத் தேன் தரத்தான்
பூ அழைக்குது
உங்கள் பசி போக்கிடத்தான்
மலர் சிரிக்குது!”

இலங்கை கவிஞரான எம்.ஸி.எம்.ஸுபைர் தமது ‘மலரும் மனம்’ என்ற சிறுவர் பாடல் தொகுப்பில், ‘ என்ன சொல்லுது’ என்ற பாடலைத் தந்துள்ளார் .

“மாமரத்தில் கூவும் குயில்
என்ன சொல்லுது – அது
மாம்பழம் போல் இனிய மொழி
பேசச் சொல்லுது.

வாலை ஆட்டும் நாய் நமக்கு
என்ன சொல்லுது – அது
வாழ்வில் என்றும் நன்றியோடு
வாழச் சொல்லுது.

ஓடி ஓடித் திரியும் எறும்பு
என்ன சொல்லுது –
அது ஓய்ந்திடாமல் உழைத்து வாழ்வில்
உயரச் சொல்லுது.”

குயிலும், நாயும், எறும்பும் கற்றுத் தரும் பாடங்கள் என்றென்றைக்கும் உதவுகின்ற இனிய பாடங்களாக, வாழ்க்கையில் சிறக்க வழிகாட்டும் பாடங்களாக அமைந்துள்ளன.

சிறுவருக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர் தமிழ் முடி. ‘பிள்ளைக்கனியமுது’. ‘தமிழ்முடியின் கதைப் பாடல்கள்’ ‘பிள்ளையார் சிலை’ என்னும் இவரது நூல்களில் குழந்தைகள் விரும்பும் பல கதைப்பாடல்களைக் காணலாம்.

அவரது பாடல்களில் புதிர் போடுவது போல் அமைந்துள்ளது, ‘தறி இல்லாத நெசவு’ எனும் பாடல்;

“தறியோ பாவோ இல்லாமல்
சத்தம் எதுவும் இல்லாமல்
சிறிய கைகள் கால்களினால்
செய்யும் நெசவின் அழகைப்பார்.

வயிற்றில் இருந்தே நூலாக்கி
வழவழப் புள்ள மெருகூட்டி
வெயிலின் ஒளியில் வலைபின்னும்
விந்தை அழகு நெசவைப்பார்.

மூலை முடுக்கு முள் வேலி
முன்தாழ்வாரம் கதவிடுக்கில்
நூலைப் பூட்டி நெய்கின்ற
நுட்பமான நெசவாளி!

அந்த நெசவாளி யார்?

ஆதியால் மனிதன் ஆடைகளை
அருமை நூலால் நெய்வதற்குத்
போதித் துள்ள ஆசிரியர்
புகழ்ந்து சொல்வேன், சிலந்தியென!”

ஆதி மனிதனுக்கு ஆடை நெய்யக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் சிலந்திதான் என்று சிறப்பித்துப் பாடுகிறார் தமிழ்முடி.

பறவைகளைப் பற்றியும் மிருகங்களைப் பற்றியும் எத்தனையோ கவிஞர்கள் பாடியிருப்பினும் ‘பாப்பாவுக்கு பறவைகள்’ என்ற ஒரு தனி நூலும்,’ பாப்பாவுக்கு மிருகங்கள்’ என்று ஒரு தனி நூலும் எழுதிய பெருமை கே.எஸ்.லெட்சுமணனுக்கே உரியது.

குழந்தைகளுக்குப் பூனையையும் யானையையும் மயிலையும் குயிலையும் பற்றி தான் பாடவேண்டுமா? கழுதையைப் பற்றியும் பாடலாம் என்று கூறுகிறார், அ. அகமது பஷீர். கழுதை மிகவும் வேடிக்கையான மிருகம் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அது பஷீரின் கற்பனையைத் தூண்டி விடும் மிருகமாகவும் இருந்திருக்கிறது என்பதை அவரது பாடலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

“இடியைப் போன்ற சத்தம் – மிக
ஏங்கி ஏங்கி கத்தும்

காய்ந்த வெற்றிலைக் காது- நீட்டிக்
கத்த மிகவும் தோது

நெல்லைக் கொட்டும் குதிர்போல் -மிக
நீண்ட பெரிய வயிறு

கண்கள் கோழி முட்டை – கோணல்
கால்கள் மிகவும் குட்டை

வெள்ளி மூக்குக் குதிரை பின்னால்
துள்ளி உதைக்கும் கழுதை!”

கழுதையைப் பற்றிக்கூட உவமை நயத்துடன் இவ்வளவு அழகாக நகைச்சுவை ததும்பப் பாட முடியுமா எனத் தோன்றுகிறதல்லவா? சிங்கப்பூர் வானொலியில் ‘குழந்தை இலக்கியம்’ குறித்துப் பலமுறை பேசிய பேச்சுகளை ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார் பஷீர். ‘சிரித்த முல்லை’ என்பது இவரது சிறுவர் கவித் தொகுதியின் பெயர்.

சந்தக் கவி பாடுவதில் வல்லவரான தமிழழகன் ‘மழலை அமுதம்’, ‘பூ மத்தாப்பு’ என்னும் இரு நூல்களைக் குழந்தைகளுக்காக இயற்றித் தந்துள்ளார்.

“முத்து முத்துப் பல்லக்கு
முதுகில் வைத்த பல்லக்கு
நத்தை ஏந்தி செல்லுதாம்
நாளும் ஊர்ந்து செல்லுதாம்”

பிறருக்குச் சங்காகவும், தண்ணீர்க் குடமாகவும் தோன்றும் நத்தையின் முதுகிலுள்ள ஓடு, தமிழழகனின் கற்பனைக் கண்களுக்குப் பல்லக்காக தோன்றுகிறது!

சந்தக் கவி பாடுவதில் சிறந்து விளங்கும் மற்றொரு கவிஞர் திருச்சி வாசுதேவன் ஆவார். ‘பட்டுக் குடை ‘ ,’கருப்பு வைரம்’, ‘பாலர் பாடல்கள்’, பாலர் கதைப் பாடல்கள்’ இவர் ஆக்கித் தந்த நூல்களாகும்.

‘பெருமாள் மாடு’ அலங்காரத்துடன் வீடுவீடாக அழைத்து வரப்படுவதைக் கிராமத்து சிறுவர்கள் நிச்சயம் கண்டிருப்பர். காணாத சிறுவர்களும் இப்பாட்டிலே கண்டு மகிழலாம்.

“நல்ல பெருமாள் மாடு – அசைந்து
நடக்கும் பெருமை யோடு
சொல்லும் வார்த்தை கேட்டு – மிகவும்
சுகமாய் தலையை ஆட்டும்.

முதுகுச் சட்டை பட்டு – ஆனால்
முழுக்க முழுக்க ஓட்டு
நிதமும் தும்பைப் பிடிக்கும் -உடையோன்
நெஞ்சம் அறிந்து நடக்கும்.”

நமச்சிவாயரைப் போல் பெரும் புலவராக இருப்பினும் பிள்ளைகளுக்கு எழுதுவதிலே மன நிறைவு பெறுபவர் அ.கி. பரந்தாமனார். அவர் வெளியிட்டுள்ள ‘எங்கள் தோட்டம்’ என்னும் நூலில் காணாமல்போன தன்னுடைய நாய்க் குட்டியைப் பற்றி ஏக்கத்தோடு பாடுகிறான், ஓர் இளஞ்சிறுவன்.

“பாலூட்டிச் சோறூட்டிப்
பரிந்து வளர்த்த குட்டி
பரிந்து வளர்த்த குட்டியினைப்
பாய்ந்து பிடித்தவர் யாரோ?

கட்டிலிலும் தொட்டிலிலும்
காத்து வளர்த்தகுட்டி
காத்து வளர்த்த குட்டியினைக்
கட்டி வைத்தவர் யாரோ?

சதங்கை மணி கட்டியின்றி
தரையில் விட்ட குட்டி
தரையில் விட்ட குட்டியினைத்
தடுத்துப் பிடித்தவர் யாரோ?

நாலு தெரு சுற்றிவரும்
நல்ல வெள்ளைக் குட்டி
நல்ல வெள்ளைக் குட்டியினை
நாடிப் பிடித்தவர் யாரோ?”

ஒவ்வொரு கண்ணியிலும் இரண்டாவதாக உள்ள வரியே, மூன்றாவது வரியிலும் திரும்ப வருவதும், கண்ணிகளின் இறுதியில் பாய்ந்து பிடித்தவர் யாரோ? கட்டி வைத்தவர் யாரோ? தடுத்துப் பிடித்தவர் யாரோ? நாடிப் பிடித்தவர் யாரோ? என்று வருவதும் பிள்ளைகள் பாடுவதற்குப் பெரும் மகிழ்ச்சி தரக்கூடியவை.

தொடரும்…

எழுத்தாக்கம் உதவி : நிவேதா

குறிப்பு: 1980களில் சென்னைப் பல்கலைக்கழக நினைவுச் சொற் பொழிவு சார்பாக வெளியான ” வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற புத்தகத்திலிருந்து. தமிழ் குழந்தை இலக்கியம் வளர்ச்சியை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக இங்கு பதிவு செய்கிறோம்.

Leave a comment