சுமையாவின் குழந்தைமை எழுப்பும் கேள்விகள்! – பி.வி.சுகுமாரன் (எனக்குப் பிடித்த மலையாள சிறார் நூல்கள் – 06)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிறார் இலக்கியத்தில் ராஜா, ராணி காலக் கதைகள் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. புதிய பாடுபொருள்களை நோக்கி சிறார் இலக்கியம் முன்னகர்ந்து வருகிறது. அதிலும் மலையாள மொழியில் அறிவியல், வரலாறு உள்ளிட்ட பல விஷயங்களை மையமாக வைத்து பல சிறார் கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. அதற்கு மிகச் சரியான உதாரணம் பேராசிரியர் சிவதாஸ் எழுதிய ‘மாத்தன் மண்புழு’ நாவலைச் சொல்லலாம்.

அது தவிர இன்னும் பல நூல்கள் சமகாலத்தில் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களை துணிவோடு சிறார் இலக்கியத்தில் வெளியாகி வருகின்றன. அவற்றில் புதிய வரவாய் இணைந்துள்ளது தஸ்மின் ஷிஹாப் எழுதிய ’சுமையா’.

சென்ற ஆண்டில் வெளியான சுமையா சிறார் நூல் சிறப்பானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட. சிறிய நூல்தான் என்றாலும் அது எழுப்பும் கேள்விகள் மிக ஆழமானவை. அரசுப் பள்ளியில் நான்காம் படிக்கும் மாணவி சுமையா. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவள். சுட்டிப் பெண்; ஆனால் சேட்டைக்காரி அல்ல. எதையும் கூர்ந்து கவனிப்பவள். பாடங்களையும் நன்கு படிப்பவள். வகுப்பில் எந்தக் கேள்விக்கும் உடனே பதில் அளிப்பவள். அதேபோல பல கேள்விகளையும் எழுப்பக் கூடியவள்.

ஆமாம். தான் பார்க்கும் காட்சிகளில் தனக்கு ஏற்படும் கேள்விகளை யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் எந்தத் தயக்கமும் அச்சமும் இல்லாமல் கேட்டுவிடுவாள். அந்தக் கேள்வி என்னாவாக வேண்டுமானாலும் இருக்கும்.
சுமையா தனது பாட்டியிடம், ‘இந்த வானத்துல திடீர்ன்னு எப்படி இருட்டு வந்துடுது… அந்த நேரத்துல வெளிச்சம் எங்கே ஒளிஞ்சிருக்கும்?’ என்பாள்.

அம்மாவிடம், ‘இந்தக் கனவெல்லாம் எப்படிம்மா வருது?’ என்று சுமையா ஒருமுறை கேட்டதும், சற்றுநேரம் யோசித்த அம்மா, ‘தெரியலையே’ என்றதும், ‘மனுஷங்களுக்கு மட்டும்தான் கனவு வருமா… இல்ல, பூனை, பசு, காக்கா எல்லாத்துக்கும் கனவு வருமா?’ என்று அடுத்த கேள்விக் கேட்டு திகைக்க வைத்துவிடுவாள்.

சுமையாவின் கேள்விகள் இன்னும் ஆழமாகவும் பாயும். இந்து கோவில் ஒன்றில் உள்ள குளத்தில் ‘இஸ்லாமியர்கள் இறங்கக் கூடாது’ என்று அறிவிப்புப் பலகை இருந்ததைப் பார்க்கிறாள். தன் தோழி சுமக்குட்டி அக்குளத்தில் இறங்குகிறாள். அப்போது சுமையாவின் கேள்வி, ‘என் தோழி இக்குளத்தில் குளிக்கும்போது நான் ஏன் இறங்கக்கூடாது?’ என்பதாக இருக்கிறது. அந்தக் குளத்தில் மாடுகளைக் குளிப்பாட்டுகிறார்கள். அதைப் பார்த்ததும், ‘மாடுகளையே குளிப்பாட்டும்போது நான் ஏன் இறங்கக்கூடாது?’ என்று கேள்வியை கூர்மையாக்கி கேட்கிறாள்.

சுமையாவின் கேள்விகள் ஒரு மதத்தில் பின்பற்றப்படும் நம்பிக்கைகளை விமர்சனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுப்பப்பட்டவை அல்ல. ஒரு இடத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரி உரிமை இருக்க வேண்டும் என்பதிலிருந்து உருவான கேள்விகள் அவை. அதனால்தான் இன்னும் ஆழமாகச் சென்று, ‘காக்கை, பூனைக்கு எல்லாம் ஜாதி, மதம் இல்லையே…மனுஷங்களுக்கு மட்டும் ஏன் இருக்கிறது?’ என்று சுமையாவின் எண்ணத்தில் தோன்றுகிறது.

மேலும், தான் பிறந்த மதத்தில் உள்ள நடைமுறைகளையும் கேள்வி கேட்கிறாள். இஸ்லாமிய பயிற்சி வகுப்பு ஒன்றில், ‘பெண் குழந்தைகளுக்கு என சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உரக்கப் பேசக்கூடாது. கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது, ஆண்கள் முன் நிற்கக்கூடாது’ என்றெல்லாம் ஒருவர் கூறுகிறார். இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஏன் ஆண் பையன்களுக்கு இல்லை என்று சுமையா கேட்கிறாள். அதற்கு சரியான பதில் கிடைக்காததால் அந்தக் கட்டுப்பாடுகளே அவளுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது.

வகுப்பிலும் அவள் நிறைய கேள்விகள் கேட்பாள். பல பள்ளிகளில் இதுபோல பாடம் தவிர்த்து கேள்வி கேட்கும் மாணவர்களை ஆசிரியர்களுக்குப் பிடிக்காது. ஆனால், சுமையா பள்ளியின் ஆசிரியர்கள் வித்தியாசமானவர்கள். சுமையாவின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்வார்கள். மேலும் கேள்விகள் கேட்க ஊக்கப்படுத்துவார்கள். ஒரு விஷயத்தை நன்கு கவனிக்கிறாள் சுமையா என்று பாராட்டுவார்கள்.

மற்றவர்கள் மீது தனிக் கவனம் கொள்ளும் பழக்கம் சுமையாவுக்கு இயல்பாகவே இருந்துவிடுகிறது. ஒருநாள் அப்பளியின் தலைமை ஆசிரியரைச் சந்திக்கிறாள் சுமையா. தன்னிடம் உள்ள காசுகளை அவரிடம் கொடுத்து, “எங்கள் வகுப்பில் மீனாட்சி எனும் தோழி இருக்கிறாள். இன்றைக்கு அவளுக்குப் பிறந்த நாள். அவளுக்குப் புது உடை எடுக்க அவளின் அப்பாவால் முடியவில்லை என்று சொன்னாள். இந்தக் காசு என் அப்பா, அம்மா கொடுத்த காசுகளை உண்டியலில் சேர்த்து வைத்தது. எனவே, இந்தக் காசை வைத்து மீனாட்சிக்கு நல்ல உடை எடுத்துக்கொடுக்க முடியுமா?” என்று கேட்கிறாள் சுமையா. நெகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக்கொள்கிறார் தலைமை ஆசிரியர்.

வழக்கமான நேரத்துக்கு இல்லாமல் சிறப்பு ப்ரேயர் மணி அடிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் சுமையாவை அழைக்கிறார். ‘திட்டப்போகிறாரோ?’ என்று பயந்துகொண்டே வருகிறாள் சுமையா.

“தன் தோழியின் பிறந்த நாளுக்கு புது டிரெஸ் எடுக்க தன் சேமிப்பைக் கொடுத்த சுமையாவுக்கு உங்கள் பாராட்டுகளைத் தெரிவியுங்கள்” என்று எல்லோரும் முன் பாராட்டுகிறார் தலைமை ஆசிரியர். அப்போதுதான் சுமையாவுக்கு அப்பாடா என்று இருந்தது.

ஆனால், சுமையாவுக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் உண்டியல் காசை எடுத்தது தவறுதானே. இது தெரிந்தால் என்ன சொல்வார்களோ என்று அச்சம் அவளுக்கு வருகிறது. அதனால் வீட்டுக்கு தயங்கிக்கொண்டே வருகிறாள். ஆனால், அவளின் அம்மா மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

பள்ளியில் நடந்த சிறப்பு ப்ரேயரில் நடந்ததை ஆசிரியர் ஒருவர் வீடியோ எடுத்து சுமையாவின் அப்பாவுக்கு வாட்ஸப் மூலம் அனுப்பி விடுகிறார். அந்தச் செய்தியை அம்மாவுக்கு தெரியப்படுத்த வீடே சுமையாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது. சாக்லேட் கொடுத்த அம்மா ஆசையோடு முத்தமும் தருகிறார். அப்பாவும் சந்தோஷமாக சுமையாவைப் பாராட்டுகிறார்.

சுமையா பள்ளியின் ஆண்டு விழா. அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவர்தான் சிறப்பு விருந்தினர். அந்த விழாவில் தன் தோழிகள் தனுஜா, மீனாட்சியோடு சேர்ந்து நடனம் ஆடினாள் சுமையா. அதுதான் அவள் முதன்முதலாக மேடையேறிய தருணம். அடுத்து பரிசுகள் கொடுக்கும் நேரம். எல்லோருக்கும் பரிசுகள் கொடுக்கிறார்கள் சுமையாவைத் தவிர. சுமையா பரிசு பெறுவதைப் பார்க்க அவளின் அம்மா, அப்பா இருவரும் வந்திருந்தனர். ஏன் எனக்குப் பரிசு கொடுக்க வில்லை என்று யோசிக்கிறாள் சுமையா. எல்லோருக்கும் பரிசு கொடுத்து முடித்ததும் சிறப்பு பரிசு என்று அறிவிக்கப்பட்டு மேடைக்கு அழைக்கப்படுகிறாள் சுமையா.

‘தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை எப்படிக் கவனிப்பது. அதிலிருந்து எப்படிக் கற்றுக்கொள்வது. என்ன விதமாகக் கேள்விகள் கேட்பது என்பதை சுமையாவிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சுமைதான் ரோல் மாடல் என்று புகழ்ந்து, பாராட்டி பரிசுக் கொடுக்கிறார்கள். அதைப் பார்த்து சுமையாவின் அம்மாவும் அப்பாவும் மகிழ்ச்சியோடு பார்க்க, அவர்களின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிகிறது.

இப்படி முடிகிறது சுமையாவின் கதை. எளிமையான கதைதான் என்றாலுமே சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை இடையிடையே ஆழமாகக் கேள்விகள் மூலம் எல்லோரிடமும் விதைத்து விடுகிறாள். அதைப் படிக்கும் சிறுவர்களுக்கும் அந்தக் கேள்விகள் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கும். பலர் அந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடிச் செல்வார்கள். அந்த வகையில் சமகாலப் பிரச்சனைகள் குறித்த உரையாடலை எழுப்பிய சுமையா நிச்சயம் நல்லதொரு கதையே. சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களுக்கு இதை விரும்பி படிக்கும் வகையில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.

சுமையா கதையை எழுதியவர் தஸ்மின் ஷிஹாப். மலையாளத்தில் குறிப்பிடத்தகுந்த பெண் கவிஞர். மூன்று கவிதைத் தொகுதிகள் இவரின் படைப்பில் வெளிவந்துள்ளது. சிறார் இலக்கியத்தில் இது இவரின் இரண்டாம் நூல். முதல் நூலில் பெயர் உப்பு மாவு மெமோரிஸ். 1979 ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆழீகோட்டில் பிறந்தவர். Perumbavoor Asan Smaraka sahithyavedi award, Sargabhoomi award , Mazhaveil koott Social media award ,Prathilipi award ஆகிய விருதுகளைப் பெற்றவர். தற்போது எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்துவருகிறார்.

மலையாளத்தில் தீவிர இலக்கியப் படைப்பாளிகளும் சிறார் இலக்கியத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றே. அது எம்.டி.வாசுதேவ நாயர் தொடங்கி இப்போது எழுத வந்திருப்பவர்கள் வரை நீள்கிறது. அந்த வரிசையில் தன் இடத்தை அழுத்தமாகப் பதித்து வருகிறார் தஸ்மின் ஷிஹாப்.

சுமையா கதைக்கு பி.எஸ்.பனராஜி ஓவியங்கள் வரைந்திருக்கிறா. கேரளா மாநில இன்ஸ்ட்டியூட் ஆஃப் சில்ட்ரன் லிட்ரச்சர் வெளியிட்டிருக்கிறது.

Leave a comment