பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் சிறார் இலக்கிய பங்களிப்பு – ஜெ. மதிவேந்தன் (பகுதி 01/02)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழில் சிறார் இலக்கியம் குறித்தப் பதிவுகள் என்பவை பிற்காலத்தில்தான் வெகுவாகக் காணப்படுகின்றன. ‘சிறார்’ என்ற சொல் குழந்தை என்ற பொருளில் கையாளப்பட்டது. சங்க இலக்கியத்திலும் குழந்தைகள் குறித்தப் பாடல்கள் அதிகம் காணப்படவில்லை. எனினும், பாண்டிய மன்னனான, அறிவுடைநம்பியின் புறநானூற்றுப் பாடல் குழந்தைகளின் செயற்பாடுகளை எடுத்துரைக்கும் வரலாற்றுச் சான்றாக உள்ளது.

“படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ்செல்வர் ஆயினும்
இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குற இல்லை தாம் வாழும் நாளே.”

(பாடல் எண்: 188)

குழந்தைச் செல்வத்தின் இன்றியமையாமையும் அதன்வழியான அகப்புறச் செயல்பாட்டினையும் சுட்டி நிற்கிறது. ஆகையால், குழந்தைப் பாடல் என்ற ஒன்று தனியாகக் கிடைக்கப்பெறவில்லை. ஒருவேளை இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது.

பிற்காலங்களில் நீதி இலக்கியம், சிற்றிலக்கிய நூல்களில் குழந்தைகளை முன்னிறுத்தியும் அவற்றின் செயல்பாடுகளை உவமை, உருவகப்படுத்தியும் பாடல்கள்/படைப்புகள் படைக்கப்பட்டுள்ளன.  அவை பிள்ளைத்தமிழ்’ என்னும் சிற்றிலக்கிய வகையாக விரிவடைந்தது. இது ஆண், பெண் எனத் தனித்தனியான தன்மைகளில் பாடுபொருளாயின. இவற்றிற்கெல்லாம் முன்பே, நாட்டார் பாடல்களில் குழந்தைகளுக்கான பாடல்கள் வாய்மொழியாகப் பாடப்பெற்று வந்துள்ளதை அனைவரும் அறிவர்.

இருபதாம் நூற்றாண்டுகளில் குழந்தை / சிறார்களை மையமிட்டு கதை, பாடல், நாடகம் எனப் பல்வேறு வடிவங்களில்‌ படைப்புகள்‌ படைக்கப்பட்டுள்ளன. பாரதி, பாரதிதாசன்‌ போன்றோரும்‌ சிறார்களுக்கானப்‌ படைப்புகளைப்‌ படைத்துள்ளனர்‌. அந்தவகையில்‌, இருபதாம்‌ நூற்றாண்டில்‌ இவர்களை அடியொற்றி செயல்பட்ட பாவலரேறு. பெருஞ்சித்திரனார்‌, சிறார்கள்‌ குறித்தும்‌ சிறார்‌ இலக்கியம்‌ மீதும்‌ அதிகக்‌ கவனம்‌ செலுத்தினார்‌. அதன்பயனாய்‌ பல சிறார்‌ பாடல்களும்‌ உருப்பெற்றுள்ளன.. அதோடு, அவர்களுக்கென்றே, தனி இதழினையும்‌ தொடங்கி, தம்‌ கொள்கை, கோட்பாடுகளை விதைத்தார்‌. பாவலரேறு பெருஞ்‌சித்திரனாரின்‌ சிறார்‌ பாடல்கள்‌ குறித்தும்‌ “தமிழ்ச்சிட்டு” எனும்‌ சிறார்‌ இதழினைக்‌ குறித்தும்‌: அதன்வழி, அவர்‌ தமிழ்ச்‌. சமூகத்தில்‌ ஏற்படுத்திய விளைவுகளையும்‌, பயன்களையும்‌ ஆராயும்‌ விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்‌

பாவலரேறு பெருஞ்சித்திரனார்‌ தம்‌ வாழ்நாளை, மொழி. – இனம்‌ – நாடு என்ற மூன்றனுக்காகவே செலவழித்தார்‌. துரை. மாணிக்கம்‌ என்ற இயற்பெயர்‌ கொண்ட இவர்‌ தனித்தமிழ்ப்‌ பற்றுக்‌ காரணமாகவும்‌ சங்கப்‌ புலவர்‌ பெருஞ்சித்திரனாரின்‌ வாழ்வியலோடும்‌ இணைந்த, தம்‌ வாழ்வியல்‌ முறையினூடாக அமைந்ததால்‌ – பெருஞ்சித்திரனார்‌ என அழைத்துக்கொண்டார்‌. தமிழுக்கும்‌ தமிழினத்துக்காகவும்‌ போராடினார்‌. அதன்வழி, பலமுறை சிறைச்‌ சென்றார்‌. வாழ்நாளைத்‌ – தமிழுக்காகவே ஈகம்‌ (தியாகம்‌) செய்தார்‌.

பொதுவெளியில்‌ ‘பாவலரேறு பெருஞ்சித்திரனார்‌’ என்றவுடன்‌ தனித்தமிழ்ப்‌ போராளி, தமிழ்த்தேசியத்‌ தந்தை, தமிழ்ப்‌ பற்றாளர்‌, தமிழின உணர்வாளர்‌, தமிழ்மொழிக்‌ காப்பாளர்‌ என வீரம்‌ – போராட்டம்‌ செறிந்த  வாழ்வினை மட்டுமே குறிப்பிடப்படும்‌. அதையும்‌ தாண்டி, குடும்பம்‌, குழந்தைகள்‌ சார்ந்த அகவாழ்வு, இலக்கணப்‌ புலமை, சிறார்கள்‌ குறித்தச்‌ செயற்பாடுகளிலும்‌ கவனம்‌ செலுத்தினார்‌.

தனித்தமிழ்ப்‌ பாவலரும்‌ சிறார்‌ இலக்கியமும்‌

சிறார்‌ இலக்கிய வளர்ச்சியில்‌ மிகவும்‌ குறிப்பிடத்தக்கவர்‌ பாவலரேறு பெருஞ்சித்தரனார்‌. குறிப்பாக, சிறார்‌ பாடல்கள்‌. – சிறார்‌ இதழ்கள்‌ என்ற  இருவகைப்பாட்டிற்குள்‌ கவனப்படுத்தப்பட வேண்டியவர்‌. தம்‌ வாழ்நாளில்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட சிறார்களுக்கான பாடல்களைப்‌: படைத்துள்ளார்‌. அதேபோன்று, தமிழ்ச்சிட்டு -(1965) என்னும்‌ சிறுவர்‌ கலை இலக்கிய. இதழினைச்‌ சிறார்களின்‌ வ்ளர்ச்சிக்காக நடத்தினார்‌. இனி, பாவலரேறுவின்‌ சிறார்‌ பாடல்கள்‌ குறித்த வகைப்‌பாடுகளையும்‌ தமிழில்‌ சிறார்‌ இதழியல்‌ துறையில்‌, தமிழ்ச்சிட்டு பெறும்‌. இடத்தையும்‌ விரிவாகக்‌ காணலாம்‌.

பாவலரேறுவின்‌ பாடல்களை அவர்தம்‌ காலத்திலே மூன்று பகுப்பாகப்‌ பகுத்துள்ளார்‌. குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை எனத்‌ தனித்தனியாகவே சிறார்களைக்‌ கவனப்படுத்தினார்‌. குறிப்பாகத்‌ தொடக்கப்‌ பள்ளி மாணவர்களை, “குஞ்சுகள்‌”  என்றும்‌ உயர்நிலைப்‌ பள்ளி மாணவர்களை, “பறவைகள்‌’ என்றும்‌ வளர்ந்த இளம்பருவ வயதினரை, “மணிமொழி மாலை” என்றும்‌ குறிப்பிடுகிறார்‌. இப்பகுப்பு முறையினைக்‌ கருத்தில்கொண்டே. பாடல்களின்‌ எளிமை தன்மை, கருத்துச்செறிவு, சொற்களின்‌. பயன்பாடு போன்றவற்றைக்‌. கவனமாகக்‌, கையாண்டுள்ளார்‌. தமிழ்ச்சிட்டு இதழ்‌, தென்மொழி இதழின்‌ கடினத்‌ தன்மையான நடையிலிருந்து. மாறி, எளிமை நோக்கி செயல்பட்டது. மாணவர்களுக்குத்‌ தேவையான. கலை, அறிவியல்‌, வாழ்வியல்‌. கருத்துகளைத்‌. தாங்கிய ஒரு தனித்தமிழ்‌ இதழாக, தமிழ்ச்சிட்டு விளங்கியது.தமிழில்‌, அதுவரை வெளிவந்து கொண்டிருந்த சிறார்‌ இதழ்களின்‌ போக்கிலிருந்து மாறுபட்டு. வெளிவந்தது.

குஞ்சுகளுக்கு:

தொடக்கக்‌ கல்வி கற்கும்‌ மாணவர்களுக்கான எளிய பாடல்களை இயற்றினார்‌. அதன்போக்கில்‌, இலக்கியத்‌ தரமான சொற்களைக்‌ கொண்டும்‌ அறிவுரைப்‌ புகட்டும்‌ நோக்கிலும்‌ பாடல்கள்‌ அமையப்‌ பெற்றுள்ளன. தமிழ்‌ இலக்கியச்‌ செய்திகளைத்‌ தம்‌ நடையில்‌ தான்‌ சார்ந்த கருத்தியலோடு இணைத்து, அதனை மாற்றுவடிவில்‌ தர முயற்சித்துள்ளார்‌. அவற்றுள்‌ திருக்குறளின் சாயலில்,

“கற்க! கற்க! கற்க! .
கற்பன வற்றைக்‌: கற்றவை வழியில்‌
நிற்க! நிற்க! நிற்க!”

(கனிச்சாறு; பா.7;. பக்‌: 8)

என்றவாறு எளிமையாகத்‌ தந்துள்ளார்‌.அந்தவகையில்‌, வாழிவில்‌ எவ்வாறு ஒழுக்கங்களோடு இருக்க வேண்டும்‌ என்பதை வலியுறுத்தினார்‌. மன்‌ மனித வாழ்வியலில்‌ வரையறைகளைக்‌ கற்ற செய்திகளோடு எவ்வாறு பொருத்தமுற நிற்க வேண்டும்‌ என்பனவற்றையும்‌ வலியுறுத்தும்‌ குறளினைத்‌ தம்‌ திறத்தால்‌ அவற்றைத்‌ தந்துள்ளார். இவற்றின்‌ நீட்சியாக, வீட்டு விலங்கினங்களையும் அவற்றின் ஒலிக்குறிப்புகளைக் கொண்டும்‌ ஓசையோடு பாடல்களைப்‌ படைத்துள்ளார்‌.

அவை,

“மியாவ்‌ மியாவ்‌ பூனை
மீசைக்காரப்‌ பூனை!
கொட்டுக்‌-காலுப்‌ பூனை
கொள்ளிக்‌ கண்ணுப்‌ பூனை!
எட்டித்தாவி விரைவிலே
எலிபிடிக்கும்‌ பூனை!”

(கனிச்சாறு; பா.26; பக்‌: 26)

என்றவாறு பூனையின்‌ செயல்பாட்டினை விவரிக்கிறார்‌. இது பூனை என்னும்‌ வீட்டு விலங்கினத்தின்‌ இயற்கைத்‌ தன்மை. எதுவென்பதைச்‌ கட்டும்‌ விதமாக, குழந்தைகளுக்கு அறிவுறுத்தும்‌ நேக்கி. இதனைப்‌ படைத்துள்ளார்‌.

தமிழின்‌ அகர வரிசை முறைகளைப்‌ போலவே, உயிர்மெய்‌. எழுத்துகளை அநிமுகப்படுத்தியும்‌ பாடல்கள்‌ படைத்தார்‌ அவை, பறவையின்‌ங்களின்  ஒலிக்குறிப்பினால்‌ விளக்கும்‌ திறன்‌ பாவலரேறுவிற்கே உரிய தனித்தன்மையாகும்‌, இப்பாடலினை ஆழ்ந்து நோக்கினால்‌ தமிழ்‌ எழுத்துகளை அறிமுகப்படுத்தி, பாடம்‌ நடத்தும்‌ ஆசிரியர்களுக்குப்‌ பயனுள்ளதாக அமைகிறது. குறிப்பாக, மாணவர்களின்‌ மனதில்‌ ஆழப்‌ பதிய ‘பாடல்‌’ எனும்‌ வழிமுறை எளிமையானது. அதேபோக்கில்‌, எழுத்துகளையும்‌ சொல்லிக்கொடுப்பதனால்‌ விரைவாகச்‌ சென்று சேரும்‌ என்று நினைத்திருப்பார்‌ போலும்‌. அந்தவகையில்‌,கீழ்காணும்‌ பாடல்‌ அமைந்துள்ளது.  

“க, கா என்றே காகம்‌ கரையும்‌!
கி, கீ என்றே கிளிகள்‌ சொல்லும்‌!
கு, கூ என்றே குயில்கள்‌ கூவும்‌!
கெ, கே என்றே கோழிகள்‌ கேவும்‌!
கொ, கோ என்றே சேவல்‌ கூவும்‌!
கை, கெளக்‌ என்னும்‌ வான்‌ கோழி!”

(கனிச்சாறு; பா;46, பக்‌:427)

காகம்‌, கிளி, குயில்‌, கோழி, வான்கோழி போன்றவற்றின்‌ ஒலிகளோடு உயிர்மெய்‌ எழுத்துகளை இணைத்திருப்பது பாராட்டத்தக்கது. பாமர, ஏழை எளியவர்களும்‌ கிராமப்புறம்‌ சார்ந்தவர்களும்‌ இவற்றை எளிதில்‌ கண்டு, ஒலிகளைக்‌ கேட்டிருப்பர்‌. அதோடு, அவற்றில்‌ பல பறவையினங்கள்‌ அனைவருக்கும்‌ தெரிந்ததே என்பதாலும்‌ இவ்வாறு பாடலினை அமைத்துள்ளார்‌. மழலைகளுக்குக்‌ கல்வியோடு இணைந்த சமூக விழுமியங்களையும்‌ தமிழ்மொழியின்‌ சீர்மைகளையும்‌ எளிமையான சொற்களின்‌ மூலம்‌ குழந்தைகளிடம்‌ கொண்டு சென்றுள்ளார்‌.

தொடரும்…

நன்றி : நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் மாத இதழ் – பிப்ரவரி 2021.

Leave a comment