இயற்கை (குழந்தைப் பாடல்கள்) – ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா(வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – 7)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

காவேரிபாக்கம் நமச்சிவாயரைப் பின்பற்றிக் குழந்தைப் பாடல் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மணமங்கலம் திருநாவுக்கரசர் ஆவார். பூவைப் பார்த்து ஒரு குழந்தை பாடுவதாக அமைந்த அவரது பாடலில், பூவின் மூலம் இப்பூவுலகைப் படைத்த ஆண்டவனின் அருஞ்செயலை வியந்து போற்றுவதைக் காணலாம்.

“பூவே உன்னை படைத்தவர் யார் ?
புதுமணம் உள்ளே நுழைந்தவர் யார்?”

எனத் தொடங்கி,

“உன்னைச் செய்தோன் வல்லவனே
உலகுக் கெல்லாம் நல்லவனே”

என முடிக்கிறார்.

மு.வா இயற்றிய பாடல்களில் ‘என்னை வளர்த்த அன்னை’ என்ற பாடலும் ஒன்று. ஆறு வயதுச் சிறுவன், தான் பிறந்த சமயம் நட்டு வைக்கப் பெற்ற தென்னை மரம் இப்போது நன்றாக வளர்ந்து பலன் தருவதைப் பார்த்து பாடுகிறான்.

“தென்னை மரமே கேளாய்,
தென்னை மரமே கேளாய்!
உன்னை வளர்த்தவர் அப்பா,
என்னை வளர்த்தவர் அம்மா.

உனக்கும் வயது ஆறே,
எனக்கும் வயது ஆறே,
நீ வளர்ந்த உயரம்
நான் வளரவில்லை,

நீ கொடுப்பாய் இளநீர்,
நான் கொடுப்பதென்ன?
ஆனாலும்தான் என்னை
அன்பாய் வளர்ப்பவள் அன்னை.”

நான் எதுவும் தராவிட்டாலும் இன்முகம் காட்டி தன்னை அன்புடன் வளர்க்கும் அன்னையின் சிறப்பைத் தென்னையின் சிறப்புடன் சேர்த்துப் பாடுகிறான் சிறுவன்.

சிறுவருக்காக நிறையக் கவிதை நூல்களை எழுதிய பெருமை நாக. முத்தையாவுக்கு உண்டு. ஆம், 15 சிறுவர் கவிதை நூல்களை இயற்றி குழந்தை இலக்கிய உலகில் நிலையான இடத்தைப் பெற்றவர் இவர். மழலை இன்பம், மழலைச் செல்வம், மழலை விருந்து என்று சின்னஞ்சிறுவருக்காகவே மூன்று நூல்களை வெளியிட்டிருப்பவர். அவர் வானவில்லைப் பற்றிப் பாடுகிறார்;

“வளைக்க முடியா வில்லிது,
வானில் தோன்றும் வில்லிது!

நிலைத்து நிற்கா வில்லிது,
நீண்ட பெரிய வில்லிது!

ஏழு வண்ண வில்லிது,
எவர்க்கும் எட்டா வில்லிது!

அம்பே இல்லா வில்லிது,
அழகு வான வில்லிது!”

குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி அவர்களின் இயல்புகளை நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகமுண்டு. ஆயினும், தமிழில் குழந்தைகளுக்காக எழுதும் பெண் கவிஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ராஜம் சீதாராமன், கடந்த நாற்பது ஆண்டுகளாக குழந்தை இலக்கியம் படைத்து வரும் பெருமையுடையவர். இயற்கையைப் பற்றிப் பாடுவதில் மிகுதியான இன்பம் காண்பவர். அதிலும், குழந்தைகள் நிலையிலிருந்து இயற்கையைப் பாடுவதில் பேரின்பம் அடைபவர்.

‘மழையே மழையே வா’ என்று அழைத்து ஒரு குழந்தை பாடுகிறது. நான் காகிதக் கப்பல் விடுவதற்காகவோ அல்லது பள்ளிக்குப் போய்ப் பாடம் படிக்காமல் இருப்பதற்காகவோ மழையை அழைக்கவில்லை. பூமி தழைக்க, உயிர்கள் களிக்க மழை வேண்டும் என்று பாடுகிறது.

“பூச்செடிக்குத் தண்ணீர் வேண்டும்,
மழையே மழையே வா,
மாஞ்செடியும் வளரவேண்டும்
மழையே மழையே வா

ஆறுகுளம் நிரம்பவேண்டும்,
அடை மழையே வா உன்
பேரைச் சொல்லிப் பொங்கல் வைப்போம்
பெரு மழையே வா

வயலில் நெல்லும் விளையவேண்டும்,
மழையே மழையே வா,
மாடுகளுக்குப் புல்லும் வேண்டும்
மழையே மழையே வா.”

நாற்பதாண்டுகளுக்கு மேலாகச் சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு, சிறுவர்களுக்காகக் கவிதைகளை இயற்றிவரும் மற்றொரு கவிஞர் ர.அய்யாச்சாமி ஆவார். குழந்தை இலக்கியத்திற்கு வானொலி மூலம் அரிய பல பணி புரிந்த அவர் காற்றைப் பற்றி எழுதிய பாடல் கருத்தைக் கவரும் ஓர் இசைப்பாடல்.

“எங்கிருந்து வருகிறாய் – நீ
எங்கே போகிறாய்? – காற்றே
எங்கே போகிறாய்?

பட்டுப் பூச்சி இறகை விரித்து
பறக்க வைக்கிறாய் -காற்றே
பறக்க வைக்கிறாய்.

வெட்ட வெளியில் மேகம் எங்கும்
மிதக்க வைக்கிறாய் – காற்றே
மிதக்க வைக்கிறாய்.”

இனிய சந்தத்திலே எளிய நடையில், நல்ல தமிழில், காற்றின் செயல்களை எல்லாம் கவிதையாக வடித்துத் தந்திருக்கிறார் அய்யாசாமி.

ஒரு சின்னஞ் சிறிய குடிசை, அந்த குடிசையில் இரவு நேரத்தில் அவள் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், காற்றும் பலமாக அடிக்கிறது. ‘காற்று மாமா, என்னை இப்போது அணைத்து விடாதீர் என்று காற்றிடம் வேண்டிக்கொள்கிறது.

“காற்று மாமா காற்று மாமா
கருணை செய்குவீர்!
ஏற்றி வைத்த ஜோதி என்னை
ஏன் அணைக்கிறீர்?”

குடிசையிலுள்ள ஏழைச் சிறுவன் பாடம் படிக்கிறான். யாரை நம்பி பாடம் படிக்கிறான்?

“ஏழைச் சிறுவன் என்னை நம்பிப்
பாடம் படிக்கிறான்
ஏழும் மூணும் பத்து என்று
எழுதிக் கூட்டுகிறான்.”

அதே விளக்கொளியில் அவன் அன்னை கஞ்சி காய்ச்சுகிறாள். பசியோடு படிக்கும் சிறுவன், அடிக்கடி அடுப்புப் பக்கம் திரும்பிப் பார்க்கிறான். கஞ்சி தயாரானதும் குடிக்கப் போகிறார்கள். இருளிலா கஞ்சி குடிப்பது?

“காய்ச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம்
காட்ட வேண்டாமா?
ஆச்சு, இதோ ஆச்சு என்னை
அணைத்து விடாதே.”

‘கொஞ்சம் பொறு, கொஞ்சம் பொறு’ என்று ஏழைக்கு இரங்கிக் காற்றின் கருணையை வேண்டுகிறது அகல் விளக்கு. உள்ளத்தைத் தொடும் உருக்கமான இப் பாடலை இயற்றியவர் கிருஷ்ணன் நம்பி. ‘யானை என்ன யானை’ என்ற அவரது நூலிலே உள்ள பல சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் பேரன்பைப் பெற்றவர். அவரது தூண்டுதலால், குழந்தைகளுக்கும் கவிதை எழுத தொடங்கியவர், தே.ப.பெருமாள்.

“வண்டி அற்புத பொருளாம் – வண்டி
மாடும் அற்புதப் பொருளாம்
வண்டி பூட்டும் கயிறும் – என்றன்
மனத்துக் கற்புதப் பொருளாம்”

எனக் கவிமணி பாடினார்.

அவரை குருவாகக்கொண்ட பெருமாள், புல்லை ஓர் அற்பப் பொருளாய் கருதாமல், ஓர் அற்புத பொருளாகக் கருதி அழகியதொரு பாடல் தந்திருக்கிறார்.

“பச்சை நிற மரகதம் போல்
படர்ந்திருக்கும் புல்லே!
பசுவுக்கும் ஆட்டுக்கும்
பசியடக்கும் புல்லே!”

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். பெருமாளுக்குப் புல்லும் இலக்கியப் பொருளாகிவிட்டது!

திருக்குறளை இசைப் பாடலாக எழுதிப் புகழ் பெற்ற பு.ஆ. முத்துக்கிருஷ்ணன், காவேரியைப் பற்றிப் பாடியுள்ள பாட்டு, ‘குழந்தை பாக்கள்’ என்னும் அவரது கவிதை நூலில் காணப் பெறும் இனியதொரு பாடலாகும், துள்ளி வரும் காவிரி போல் துள்ளும் நடையிலே அமைந்துள்ளது. இப்பாடல், காவிரி நதி எங்கு பிறந்தது, எவ்வெவ் வழியாக வந்து எவ்வெவ் வகையில் பலன் தருகிறது என்பதைக் கூறுகிறார் முத்துக் கிருஷ்ணன். அப் பாட்டிலே சில வரிகளை இங்கே காணலாம்.

“சலசல வெனும் ஓசை – திருச்சி
தஞ்சை மீதில் ஆசை;
கலகல நகை புரியும் – நெல்
கரும்பு வாழை விளையும்.

தங்க மேனி சிலிர்க்க – நம்
தமிழர் வாழ்வு தழைக்க,
வங்கக் கடலில் புகுவாள் – என்றும்
மங்கலமே நிறைவாள்.”

முத்துக்கிருஷ்ணன் மட்டுமன்றிப் பல கவிஞர்கள் காவேரி ஆற்றினைக் குறித்துச் சிறப்பாகப் பாடியுள்ளனர். அவர்களில் சிறப்பிடம் பெறுபவர் கவிஞர் தமிழ் ஒளி ஆவார். பெரியவர்களுக்காக உயிர்த் துடிப்புள்ள பல கவிதைகளை எழுதிப் புகழ்பெற்றவரும் சந்தப் பாடல்கள் பாடுவதில் வல்லவருமான சிறுவர் இலக்கியத்திற்குச் சிறப்பினைச் சேர்க்கும் பாடலாகத் திகழ்கிறது.

“படகு மிதிக்க ஓடி வந்த காவிரி
பாட்டுப் பாடி ஆடிவந்த காவிரி
குடகுமலையில் குதித்து வந்த காவரி
கொண்டுவந்த பொருளும் எங்கே, கைவிரி!

கன்னித் தமிழ் வாழவந்த காவிரி
கடலில் வந்து வீழ வந்த காவிரி
பொன்னி என்று பெயர் படைத்த காவிரி
போய்ப் பறித்த மலர்கள் எங்கே, கைவிரி!”

குதித்தோடி வருகின்ற காவிரி பல பொருள்களைக் கொண்டு வரும், பல மலர்களைக் கொண்டு வரும் என்று குழந்தை எதிர்பார்க்கிறது. எதிர்பார்க்கிறது ‘அவையெல்லாம் எங்கே, கைவிரித்துக் காட்டு பார்க்கலாம், என்கிறது.
‘காவிரி கைவிரி’ என்று நயமாகப் பாடிக் குழந்தைகளுக்கு நல்லின்பம் ஊட்டுகிறார் தமிழ் ஒளி.

தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்துப் பல நூல்கள் எழுதியுள்ளார். இரா. தண்டாயுதம் அவர் வெளியிட்டுள்ள ‘மலரும் மனம்’ என்ற நூலிலே கடலுடன் ஒரு சிறுவன் பேசுவதாகக் கற்பனை செய்து எழுதப்பெற்ற அற்புதப் பாடல் ஒன்றிருக்கிறது:

“எத்தனை நாட்டை நீ கண்டாய்?
எத்தனை ஊரில் ஆர்க்கின்றாய்?
அத்தனை இடமும் தமிழகம் போல்
அமைந்தே இருக்கக் கண்டாயோ?”

என ஆசையோடு ஒரு சிறுவன் கேட்கிறான். அத்துடன் நிற்கவில்லை.

“எத்தனை மொழிகள் நீ கேட்டாய்?
எத்தனை வகையாய் ஒலி கேட்டாய்?
அத்தனை மொழிகளில் தமிழைப்போல்
அழகியமொழியைக் கேட்டாயோ?”

இலங்கையிலும் மலேசியாவிலும் குழந்தைகளுக்காகத் தமிழில் கவிதை பாடுபவர்கள் பலர், உள்ளனர். அவர்களில் கோலாலம்பூரில் வாழ்ந்துவரும் எல்.எம். பகதூர் என்ற நேப்பாளி குறிப்பிடத்தக்கவர். ஜெர்மெனியரும், ரஷ்யரும், ஜப்பானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழை விரும்பிக் கற்று, நூல்களை இயற்றியுள்ளது போல் நேப்பாளியாகிய பகதூர் தமிழ் மொழியை பள்ளியிலே பயின்று தமிழரைப் போலவே பேசவும் எழுதவும் பழகி, கவிதை புனையவும் தொடங்கிவிட்டார். இவர் இயற்றிய குழந்தைப் பாடல் நூல் வெளி வந்திருக்கிறது. அதில் இவர் எழுதியுள்ள ‘பூந்தோட்டம்’ என்ற பாடல் பொலிவுடைய ஒரு பாடல்.

“வீட்டைச் சுற்றித்தோட்டமாம்
விதம் விதமாய் மலர்களாம்”

என்று தொடங்குகிறது அப் பாடல்.

“அல்லிமலர் நீரிலே
அழகுத் தாமரை சேற்றிலே
மல்லி முல்லை கொடியிலே
மணக்கும் ரோஜா செடியிலே,

செடியில் பூத்தால் என்ன?
கொடியில் மலர்ந்தால் என்ன?
வடிவில் அழகு தானே,
வாசம் அருமைதானே!”

பிறக்கும் இடத்தினால் பெருமை வருவதில்லை என்பதை எடுத்துக் காட்டும் இனிய பாடல் இது. இயற்கையின் எழிலை உவமை நயத்துடன் பாடக்கூடிய காமாட்சி சீனிவாசன், ஜ்வாலா ஜெயராமன், வெ. நல்லதம்பி, வாணிதாசன், இன்பவண்ணன், மீனவன், புவனை கலைச்செழியன், மு.வை, அரவிந்தன் முதலியோரை இங்கே சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.

தொடரும்…

எழுத்தாக்கம் உதவி : நிவேதா

குறிப்பு: 1980களில் சென்னைப் பல்கலைக்கழக நினைவுச் சொற் பொழிவு சார்பாக வெளியான ” வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற புத்தகத்திலிருந்து. தமிழ் குழந்தை இலக்கியம் வளர்ச்சியை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக இங்கு பதிவு செய்கிறோம்.

Leave a comment