கல்வியின் செல் நெறி – கமலாலயன் (கல்வி நூல்கள் தொடர் – 02)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி’ என்ற நூலிலிருந்து சில கருத்துகளை முந்தைய கட்டுரையில் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். இந்தக் கட்டுரையில், அதே நூலின் வேறு சில கருத்துகளையும் காண்போம்: கற்றல், கல்வி இரண்டின் முக்கியத்துவம் குறித்து நமது தொன்மையான இலக்கியங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை நாம் அறிவோம். கல்வி, கல்லாமை ஆகிய அதிகாரங்களிலும், வேறு சில சந்தர்ப்பங்களிலும் வள்ளுவர் கல்வியின் மேன்மை குறித்து மிக வலிமையாகப் பேசியிருப்பதை மீளவும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பிச்சை எடுத்தேனும் கல்வி பயில்வது கடமை என வலியுறுத்தும் வெற்றி வேற்கையை மறக்க முடியுமா?

“திருக்குறள், புலவர் மரபு சார்ந்த கல்வியை அதன் வளர்ச்சிகளோடும், மனிதாயப் போக்கோடும் பெருமளவு தொடர, சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தத்துவக் காலகட்ட வளர்ச்சியின் சமயக்கல்வியை முன்னிறுத்துகின்றன. இவ்விரு நூற்களிலும் துறவியல்லாதவரும் கூட பண்டிதர்களும், புலவர்களுமாக இருந்து வந்ததைக் காணமுடிகிறது. திருக்குறள் கருதுகின்ற இலட்சிய மனிதனைப் படைத்து உருவாக்குகின்ற கல்வி சமயச்சார்பற்ற கல்வியாகவே இருந்திருக்கலாம். அதே போல, அன்றைய தமிழரசுக்காக பயிற்சிகள் பெற்ற பல்வேறு வாழ்க்கைத்தொழில் புரிவோரும், அமைச்சர்கள், படைத்தலைவர்கள், வரி வசூலிப்போர், சுங்கவரித்தணிக்கை அலுவலர்களும் பெற்றுவந்த கல்வியும் கூட சமயச்சார்பற்றதாகவே நடைபெற்றிருக்கலாம்…” – என்கிறார் சேவியர் தனிநாயகம்.

‘இருக்கலாம்’ என அவர் குறிப்பிடுவதன் காரணத்தையும் அவரே சுட்டிக் காட்டுகிறார்: “கெடுவாய்ப்பாக, அக்காலத்திய ஆதாரங்களாக நமக்குக் கிடைக்கும் படைப்புகள் யாவும் சமய உற்பத்திகளாகவே உள்ளன. சமயச் சார்பற்ற கல்வியை வலியுறுத்துகின்ற திருக்குறளிலும் கூட, கற்பித்தல் முறை, கல்விப்பொருண்மை பற்றிய சுட்டல்கள் அரிதாகவே இடம் பெறுகின்றன…”

இவ்வாறு சொல்லும் தனிநாயக அடிகள், வேறு சில சான்றுகளைத் தனது ஆய்வின் வழி தருகிறார்: “மணிமேகலை முழுமையானதொரு பவுத்தக் காப்பியம். சமணக்கல்வி பற்றி சிலப்பதிகாரம் வெளியிடுவதைக் காட்டிலும் பவுத்த சமயத்தின் கல்விப்பொருள், கற்பித்தல் முறைகள், முதிர்ந்தோர் கல்வி பற்றிய பெருமளவிலான தகவல்களை மணிமேகலை முன்வைக்கின்றது.”

“சமணமும், பவுத்தமும் தமது சமய ஆசிரியர்களின் ஆளுமையைப் பெரு மதிப்புடன் போற்றி மனதினுள் ஆழப்பதியச் செய்வதைத் தமது சமயக்கல்வியின் கற்பித்தல் முறையாகக் கொண்டிருந்தன. சமகால நிகழ்வுகளில் இருந்தும், வாழ்வின் போக்கிலிருந்தும், தமது புனித நூற்களினின்றும் அவர்கள் பாடப்பொருள்களைத் தேர்வு செய்தனர். அவ்வாறான புனித நூற்கள் தமிழில் இருந்தனவா? பல்லவருக்கு முற்பட்ட காலத்தில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் எழுத்து எந்த அளவுவரை பயன்படுத்தப்பட்டிருந்தது…?”

“தமிழ் வரலாற்றில் பல்லவர் காலத்திற்கு முற்பட்டனவாக நாம் ஆய்வு செய்த தமிழ்ச்செவ்விலக்கியங்களில் தொகைநூற்களும், காப்பியங்களும் எழுதப்பட்டிருந்தன என்றும், அன்றைய முறைசார் கல்வியில் இந்த நூற்கள் கற்பிக்கப்பட்டன என்றும் கூறுவதற்குத் திடமான சான்றுகள் எதுவுமில்லை. கல்விப்பயிற்சியில் எழுதுதல் இடம்பெற்றிருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. நடுகற்களின் மீது விளக்கங்களாகவும் வணிகம் மற்றும் தூது மடல்களின் வழியே தகவல் அறிவிக்கவும் எழுதுதல் நிகழ்ந்துள்ளது…”

தொன்மையான நமது நூல்களில் உள்ளன எவை, இல்லாதவை எவை, போதாமையுடன் உள்ளவை எவை என பல்வேறு கோணங்களில் விவாதிக்கும் தன்மையை இந்த மேற்கோள்களில் காணலாம். எப்போதுமே, பழைமை போற்றும் மனோபாவம் கொஞ்சம் அதிகமானாலும் உண்மைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் ஆபத்து நிகழும். அந்த வகையில், மிகுந்த கவனத்துடன் தனது ஆய்வின் வழி கருத்துகளை முன்வைக்கிறார் சேவியர் தனிநாயக அடிகள். அன்றைய கல்வி சமயச்சார்பற்றதாகவே இருந்துள்ளது என்பதை வலியுறுத்தி அவர் கூறும் மற்றொரு மேற்கோளைக் கீழே காணலாம்:

“கல்வி, கற்பவனைச் சான்றோனாக்கியது. அவனை உலக வாழ்வுக்குத் தகுதிப்படுத்தியது. கற்றோர் அவையிலும், ஊர்ப்பொது மன்றங்களிலும் முந்தியிருக்கச் செய்தது. அது உலகவாழ்வை மறுதலிக்கும் கல்வியல்ல. அது வாழும் உலகை அதன் இன்பங்களை உறுதிப்படுத்துவது. மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவைக் காட்டுகிறது. அதில் குழந்தைகளின் மீதான அன்பும், இல்லறத்தின் மீதான பற்றும் மிகவே உள்ளன. வீடற்றிருத்தல் நிலை பற்றி மிக மிகக்குறைவான அறிதல்களே அங்கு பதிவு பெற்றுள்ளன.” சுருங்கச் சொன்னால், கல்வி இந்த உலகத்து வாழ்க்கைக்கான வழிகாட்டி. இந்தக்கல்வியைத் தேடி அடைவது மனிதர்களின் கடமை. அதற்காகப் பிச்சை எடுத்தலும் சரியே. கைப்பொருளைச் செலவழித்துக் கல்வி பெறலாம். மிக அவசியமான தருணங்களில் மற்றவர்களுக்கு உதவி கல்வி பெறலாம்.

இன்றைய கல்வியைப்போல் ஏடெடுத்து எழுதியும், படித்தும் பெறும் படிப்பாக அன்றைய கல்வி இருந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் கேள்வி ஞானமாகவே கல்வி ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கைமாற்றித் தரப்பட்டிருக்க வேண்டும். ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்ற முதுமொழி நமக்கு நன்கு தெரியும். வாய்மொழி மரபு என்பது உலகெங்கிலுமே மிகத்தொன்மையானது. தலைமுறை தலைமுறையாகக் கல்வியைக் கைமாற்றித்தர உதவியது அந்த மரபுதான். பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் பட்டறிவின் மூலம் கற்றதை அடுத்தடுத்த தலைமுறை மனிதர்களுக்குக் கற்றுத்தர உதவியது அதுவே இந்தக்கருத்தை சேவியர் தனிநாயகமும் பின்வருமாறு வலியுறுத்துகிறார்: “சங்க காலத்தில் நூல்(சூத்திரம்)எனும் சொல் ஆய்வுரை என்னும் பொருளில் வழங்கி வந்தமைக்கும் சான்றுகள் பல உண்டு. எவ்வாறாயினும், பொது மற்றும் சமயம்சார் இலக்கியங்களைக் கற்பிக்கவும், பாதுகாக்கவுமான வழி வாய்மொழி(கேள்வி)யாகவே இருந்துள்ளது.”

 வாய்மொழி மரபில் வழிவழியாகக் கைமாற்றித் தரப்பட்ட அறிவுச்செல்வம் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு எந்த அளவுக்கு உதவியிருக்கிறது என்பதை உலகு முழுவதிலும் கிடைத்திருக்கிற எண்ணற்ற தரவுகளின் வழி அறியலாம். குறிப்பாக அறிவியலிலும், இலக்கியத்திலும் இந்த வளர்ச்சிப் போக்கைத் துல்லியமாகக் காணமுடியும். தொடர்ந்து தேடிக்கண்டடைவோம்.                               ”

Leave a comment