பாப்பா பாட்டிலே – நெஞ்சைப்
பறிகொடுத்தேனடா!
சாப்பா டேதுக்கடா – சீனி
சர்க்கரை எதுக்கடா!
என்று பாரதியாரின் பாப்பாப் பாட்டைப் பல படியாகப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிமணி, பாரதியாரின் பாப்பாப் பாட்டை அறியாத தமிழ்க் குழந்தை தமிழ்க்குழந்தையாக இருக்க முடியாது.
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!
என்று பாப்பாவைப் பார்த்துப் பாடுகிறார் பாரதியார்.
எடுத்தவுடனேயே படிப்பைப் பற்றிச் சொன்னால், சில குழந்தைகள் விரும்பி வரவேற்பதில்லை யென்பதை நன்குணர்ந்த பாரதியார், ‘ஓடி விளையாடு’ என்று தொடங்கி, ஓடிவிளையாடுவதிலும் கூடி விளையாடுவதே நல்லது; கூடிவிளையாடும் போது, மற்றக் குழந்தைகளுடன் அன்பாக, ஒற்றுமையாக, ஒரு குழந்தையைக் கூட வையாமல் விளையாடுவதுதான் நல்லது என்கிறார்; கூட்டுறவுக்கு அடித்தளம் அமைக்கிறார் இளம் வயதிலே.
சின்னஞ்சிறு குருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
என்று பாடிய பாரதியார், கொத்தித்திரியும் கோழியையும், எத்தித் திருடும் காக்கையையும், பாலைப் பொழிந்து தரும் பசுவையும், வாலைக் குழைத்து வரும் நாயையும், வண்டி இழுக்கும் குதிரையையும், அண்டிப் பிழைக்கும் ஆட்டையும்பற்றிப் பாடி அந்த உயிர்களிடத்திலெல்லாம் தோழமை கொள்ள வேண்டுமென்கிறார்.
தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
என்று பாப்பாவின் பிஞ்சு நெஞ்சிலே நாட்டுப் பற்று என்னும் நல்விதையைப் பாவுகிறார்.
கடவுளைப் பற்றியும் கல்வியைப் பற்றியும் அன்பைப் பற்றியும் ஆன்றோரைப் பற்றியும், தேசத்தைப் பற்றியும், செந்தமிழைப் பற்றியும் உயர்வான எண்ணத்தைக் குழந்தைகளின் உள்ளத்திலே பதியச் செய்கிறார் பாப்பாப் பாட்டு மூலம் நம் பாரதியார்.
பெரியவர்களுக்காகப் பாரதியார் பாடிய 400-க்கு மேற்பட்ட கவிதைகளின் சாரம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பாடலாகவே ‘பாப்பாப் பாட்டு’ திகழ்கிறது. சின்னஞ் சிறு வயதிலே பாப்பாப் பாட்டை பாடி மகிழ்ந்த பலர், பிற்காலத்தில் பாரதியாரின் பல பாடல்களை மனனம் செய்து மகிழ்ச்சியோடு பாடுவதைக் காண்கிறோம். எந்த ஒரு பாட்டையும் அவர்களால் எளிதிலே மறக்க முடியாது. ஒருவேளை அவர்கள் பாரதியாரின் பாடல்கள் அனைத்தையும் மறக்க நேர்ந்தால் கூட பாப்பாப் பாட்டு ஒன்றை மட்டுமாவது நினைவில் வைத்துக்கொண்டால் போதும். அந்த பாப்பாப் பாட்டிலுள்ள 64 வரிகளில் 60 வரிகளையும் மறந்து விட்டால்கூடப் பரவாயில்லை, கடைசி நான்கு வரிகளை ஒருபோதும் மறக்கக்கூடாது. காரணம் – அந்த நான்கு வரிகளிலே தான் மனிதராகிய நாமெல்லாம் வாழும் முறைமை கூறப்பட்டுள்ளது. ஆம்,
உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா!
‘இது வாழும் முறைமையடி பாப்பா!’ என அடிக்கோடிட்டுக் காட்டுவதுபோல், அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினால், போர் மூளுமா? பூசல் இருக்குமா? வெறுப்புத் தோன்றுமா? வீண் தொல்லைகள் தொடருமா?
‘தெய்வம், உண்மை என்று தானறிதல் வேணும்’ கடவுள் தான் உண்மை, உண்மை தான் கடவுள் (Truth is God; God is Truth) என்ற காந்திஜியின் தத்துவத்தை எளிய நடையிலே இளம் பிள்ளைகள் உணரும்படி பாடுகிறார்.
வயிர முடைய நெஞ்சு வேணுமாம்.
பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ
பயங் கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்து விடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்ற பழமொழியையும், ‘கொம்புளதற்கு ஐந்து, குதிரைக்குப் பத்து முழம்’ எனத் தொடங்கி ‘வம்பு செறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி என்று முடியும் பாடலையும் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து பாடிவரும் நம் நாட்டில், ‘பாதகம் செய்பவரை மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்துவிடு’ எனப் பாடி வயிரமுடையநெஞ்சாக இளம் நெஞ்சங்களை மாற்ற முயல்கிறார் பாரதியார்.
பாரதியார் சொற்படி குழந்தைகள் நடக்கத் தொடங்கிவிட்டால் இந்த நாட்டில், ஏன் எந்த நாட்டிலுமே பாதகம் செய்பவர் நிம்மதியாக வாழமுடியுமா?
ஔவையாரைப் போல், பாரதியாரும் ஓர் ஆத்திசூடி பாடினார். ‘புதிய ஆத்திசூடி’ என அதற்குப் பெயர் சூட்டினார்.
‘ அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே’ எனப் பாடி அவர் ‘புதிய ஆத்திச்சூடி’யில்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
என்று தான் தொடங்குகிறார்.
உடலினை உறுதி செய் குன்றென நிமிர்ந்து நில் கொடுமையை எதிர்த்து நில் கூடித் தொழில்செய்
தெய்வம் நீ என்றுணர் பாட்டினில் அன்புசெய்
வையத் தலைமை கொள்
எனப் பளிச்சிடும் பல அறிவுரைகளைச் சிறுவருக்குக் கூறுகிறார்.
முரசு எனும் பாடலை, பாரதியார் சிறுவர்களுக்காக எழுத வில்லை என்றாலும், சிறுவர் உள்ளம் கவரும், சிறுவருக்குத் தேவையான சில வரிகளை அதிலே காண்கிறோம்.
வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்! பிள்ளைகள் பெற்றப்பூனை – அவை
பேருக்கொரு நிறமாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி -கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி -வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் – அவை யாவும் ஒரே தரமன்றோ?
எனக் கேட்கும் பாரதியார்,
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமையில்லை.
என எடுத்துக் கூறி வேறுபாடில்லாத ஒரு சமுதாயத்தைக் காண அடி கோலுகிறார். அடிக்கடி குழந்தைகள் காணும் ஒரு பூனைக் குடும்பத்தைக் கொண்டே அரியதொரு கருத்தை அழகாக விளக்குகிறார்.
பாரதியார் குழந்தைகளுக்குப் பாடிய இரு பாடல்களிலும் குழந்தைகளை எதிரே வைத்துக் கொண்டு அறிவுரை கூறுவதுபோல் பாடியிருக்கிறார். ஆனால் கவிமணியோ பெரும்பாலும் குழந்தைகளோடு குழந்தையாக, அவர்கள் அணியிலே நின்று, அவர்களோடு ஒன்றியே பாடியுள்ளார். இந்த இருவரையும் பின்பற்றியே எளிய நடையில் இனிய முறையில் இன்று பெரும்பாலான கவிஞர்கள் குழந்தைப்பாடல்கள் இயற்றி வருகின்றனர்.
தொடரும்…
எழுத்தாக்கம் உதவி : நிவேதா