வீழ்த்தப்பட வேண்டிய வேற்றுமை உணர்வு – ஆதி.வள்ளியப்பன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இன்று உலகில் உள்ள ஒவ்வொருவரும் சென்று வசிக்க விரும்பும் பணக்கார-ஜனநாயக நாடு என்றொரு பிம்பம் அமெரிக்கா மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்தியர்கள் பலருக்கும்கூட,அமெரிக்கா செல்வது முதன்மைக் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா என்ற தேசம் உண்மையிலேயே ஜனநாயகமானதா, அதன் வரலாறு சார்புகள் அற்றதா? 
நிச்சயமாக இல்லை. அறிவு வளர்ச்சியில் உச்சம் தொட்டுவிட்டதாக, எல்லா நவீன வசதிகளும் பரவலாக்கப்பட்டுவிட்டதாகப் 21ஆம் நூற்றாண்டில் பிரகடனம் செய்யப்படுகிறது. ஆனால், ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற ஆப்ரோ அமெரிக்கர், ஒரு வெள்ளைக்கார காவல்துறை அதிகாரியால் நடுத்தெருவில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

வெள்ளையரின் நிறவெறி-ஆப்பிரிக்கக் கறுப்பின அடிமைத்தனம் நவீன உலகிலும்கூட இன்னும் வலுவாக இருப்பதன் அடையாளம் இது. வெள்ளையர்களின் இந்த நிறவெறி இப்போது தோன்றியதல்ல. ஒருபுறம் காலனியாதிக்கம் மூலமாகவும் மற்றொருபுறம் அடிமைத்தனம் மூலமாகவும் வெள்ளையரின் நிறவெறி முந்தைய நூற்றாண்டுகளில் செயல்பட்டது. கால்நடைகளைப் போல் மனிதனை மனிதன் விற்கக்கூடிய-வாங்கக்கூடிய நிலை 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் தோற்றுவிக்கப்பட்டு, 17, 18ஆம் நூற்றாண்டுகள் முழுக்க ஆதரித்து வளர்க்கப்பட்டது. இது ஏதோ அமெரிக்காவுக்கான நோய் மட்டுமல்ல. வெள்ளையர்கள் குடியேறிய பல நாடுகளில் இருந்தது என்றாலும், அமெரிக்காதான் அதன் மையக் களம். அடிமை வியாபாரம் (Slave Trade) என்பது அமெரிக்க வரலாற்றின் அழிக்க முடியாத கறைகளில் முதன்மையானது.

மனித குலம் ஆப்பிரிக்காவில் தோன்றித்தான் உலகெங்கும் பரவியது. இன்றளவும் ஆப்பிரிக்கர்களே உலக அளவில் உடல் வலிமை பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அன்றைய ஜெஸ்ஸி ஓவன்ஸ், இன்றைய உசைன் போல்ட் எனத் தடகளத்தில் தொடங்கி, நெடுந்தூர மாரத்தான் போட்டிகள்வரை அவர்களே இன்றுவரை வெற்றிவாகை சூடிவருகிறார்கள், பெரும் சாதனை படைத்திருக்கிறார்கள். ஆப்பிரிக்க மக்களே உலகின் கடுமையான உடல் உழைப்பாளிகள், அதேநேரம் அவர்களுக்கான கல்வியும் நவீன வசதிகளும் மறுக்கப்பட்டதால் மற்ற துறைகளில் வெள்ளையர்களைப் போல் அவர்களால் பரிமளிக்க முடியவில்லை.

அன்று முதல் இன்றுவரை வெள்ளையர்கள் தாங்களே எதையும் முனைந்து செய்யாமல், குறுக்கு வழிகளிலும் குறைந்த செலவிலும் உழைப்பைச் சுரண்டுவதையே நோக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் அடிமை வியாபாரத்தில் இறங்கினார்கள். அமெரிக்காவில் அடிமை வியாபாரம் சட்டபூர்வமாக்கப்பட்டிருந்தது. அடிமைகள் இயல்பாக-சுதந்திரமாகச் செயல்படுவது குற்றமாக்கப்பட்டது. வல்லான் வகுத்ததே சட்டம் என்பதாகத்தானே உலக நடைமுறை இருக்கிறது.

மனிதனை மனிதன் விற்கும் இந்தக் கொடூரம் பல நூற்றாண்டுகளுக்கு அரங்கேறியபோதும், பல தலைமுறைகளாக அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்கர்கள், தொடர்ந்து பல்வேறு வகைகளில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள், போராடினார்கள். அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் தோன்றும்வரை அது நாட்டை உலுக்கும் பிரச்சினையாக, அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கவில்லை. அதன் பிறகு உருவான உள்நாட்டுப் போருக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள்.

ஆப்பிரிக்க அடிமைகளின் துயரம் குறித்து ஹாரியட் பீச்சர்ஸ்டோவ் எழுதிய டாம் மாமாவின் குடிசை (Uncle Tom’s Cabin) உலக கவனத்தைத் திருப்பிய முதல் படைப்பு. அதன் பிறகு அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறைகள் (The Roots) உள்ளிட்ட பல புகழ்பெற்ற படைப்புகள் வெளிவந்துவிட்டன. சமீபத்திய ஆண்டுகளில் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் குவென்டின் டாரன்டினோ இயக்கத்தில் ‘ஜாங்கோ அன்செயின்டு’ உள்ளிட்ட திரைப்படங்களும் ஆப்பிரிக்க அடிமைகள் குறித்து வெளியாகியுள்ளன.

வெள்ளையரின் கொடுங்கோன்மை குறித்தும் ஆப்பிரிக்கர்கள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் சொல்வதற்கு இன்னும் பல்லாயிரம் கதைகள் இருக்கின்றன. மேலை நாட்டு வெள்ளையர்களின் இந்த ஆதிக்க மனப்பான்மை, அடிமைத்தனத்தால் கீழை நாடுகள் சந்தித்த கீழ்மைகள் குறித்து நம் வருங்காலத் தலைமுறைக்கு கற்பித்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் கொ.மா.கோ. இளங்கோவின் ‘பச்சை வைரம்’, மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் நாட்டின் பின்னணியில் கூறப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் வழியாகவே பெருமளவு அடிமைகள் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். அவர்களில் ஒரு பிரிவு ஆப்பிரிக்க அடிமைகள் அமெரிக்காவில் சுதந்திரம் பெற்று நாடு திரும்பிய பிறகு ஒரு இலவ மரத்தடியில் விடுதலை செய்யப்பட்டனர். அதனால், அந்த மரம் சியரா லியோன் மக்களிடையே பெருமதிப்பைப் பெற்றிருக்கிறது.

அந்த மரத்தை பின்னணியாகக்கொண்டு பிளிகி என்ற சிறுமியின் வழியாக ஆப்பிரிக்க மக்களின் அடிமைத்தன வாழ்க்கை குறித்த தடங்களை இந்தக் கதை தேடிச் செல்கிறது. கதையின் நடுவில் ஒரு மர்மமான தீவுக் கோட்டை வருகிறது. அந்த இடத்தில் சிறுமி பிளிகி கடத்தப்பட்டு விடுவாளோ என்றொரு ஐயம் தோன்றுகிறது. அதன் பிறகு அந்த மர்மக் கோட்டைக்கும் அடிமை வியாபாரத்துக்கும் இருந்த தொடர்பு தெரியவருகிறது. ஒரு பக்கம் சியரா லியோன், ஆப்பிரிக்க அடிமைகள் இரண்டுக்குமான தொடர்பு குறித்து விரியும் இந்தக் கதை, நடப்புப் பிரச்சினைகள் சிலவற்றையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

இதுபோன்ற கதைகள் வழி, நம் குழந்தைகளும் இளையோரும் வெள்ளையரின் ஆதிக்கம் கொண்டுவந்த பிரச்சினைகளைப் பற்றி அறியலாம். அதற்கு இணையாக நம் நாட்டில் தற்போதும் நிலவிவரும் சாதி, மத வெறுப்பு, தீண்டாமை குறித்தும் கவனப்படுத்திக் களைய வேண்டி பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த நெடும் பயணத்தை விரைவாகக் கடப்பதற்கும், உலக மக்கள் அனைவரையும் ஒன்றுபோல் நடத்துவதற்குமான முயற்சியில் இதுபோன்ற கதைகள் நம் புரிதலை மேம்படுத்தும்.

Leave a comment