கல்வியின் திசைவழிகள்– சங்க காலம் முதல் இன்று வரை (தேடலுக்கு உதவும் நூல்களினூடே…) – கமலாலயன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“கல்வி என்பது, ஒரு மாணவரை எழுத வைப்பதோ, படிக்க வைப்பதோ அல்ல. மாறாக, படிக்கின்ற மாணவரைச் சிந்திக்க வைக்கவும், பகுத்தறிவுடன் வாழவும், கேள்விகள் கேட்கவும் கற்றுத்தருவதுதான் கல்வி. ”
– அண்ணல் அம்பேத்கர்

முறைசார்ந்த, பள்ளி அல்லது கல்லூரிகள் மூலம் வழங்கப்படுகிற கல்வியின் குறிக்கோள்கள், நிச்சயம் மேற்கண்டவற்றை நிறைவேற்றுவதுதான் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. ஆனால், நடைமுறையில், இது இன்று நிறைவேறியிருக்கிறதா, இனியாகிலும் நிறைவேறுமா என்பதே நமது கேள்வி. முழுமையாக இது நிறைவேறவில்லை என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இராது. அப்படியெனில், இவ்வளவு காலமும் கல்வி சாதித்ததுதான் என்ன? இந்தக் கேள்விக்கான மறுமொழியைக் கண்டறிய வேண்டும் என்பதே இந்தத் தேடலின் இலக்கு.

ஏட்டுக்கல்வியைப் பற்றி நமது மக்களிடையே இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருப்பவரே கல்வி கற்றவர் என்று ஒரு கருத்து. அந்த மாதிரி முறைசார் கல்வித் தகுதிகள் இல்லாதவர் கூட, தனது பட்டறிவின் துணையுடன் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால், பல்கலைக்கழகத்தில் பயின்றவருக்கு இணையாக, ஏன், அவரை விடவும் மேலான கல்வித்திறனை அடைய முடியும் என்பது மற்றொரு கருத்து. இரண்டுக்கும் இடையே தொடர்ந்து மோதலும், ஒருமைப்பாடும் மாறி மாறி நிலவி வருவதை நாம் பார்க்கிறோம்.

அனுபவ அறிவு என்பது, எப்போதுமே வெறும் ஏட்டுக்கல்வியை விடவும் ஒருபடி மேலானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழில் அனுபவ அறிவைக் குறிக்கும் சொல் ‘பட்டறிவு’ என்பது. மனிதர்கள், தம் வாழ்வின் பாடுகளில் பட்டுப்பட்டுப் பெறும் அறிவு அது. அன்றாட வாழ்வில், படிப்பறிவு சிறிதும் இல்லாத சாதாரண மக்கள் கூடப் பட்டறிவின் பலத்தில் கேள்விகளை எழுப்புவதைப் பார்க்க முடியும். அவர்தம் நாட்டார் வழக்காற்றியல் சொல்லாடல்களில், சிந்தனைச் சுடர்களின் பொறிகள் பறப்பதையும் காண்கிறோம். அதே சமயம், மிகவும் உயர்ந்த கல்வித்தகுதிகள் பெற்றிருப்போரும் கூட, பகுத்தறிவுக்கு முரணான, பழங்காலக் கட்டுக்கதைகளிலும், மூடநம்பிக்கைகளிலும் எந்தக் கேள்வியும் இல்லாமல் மூழ்கிக்கிடப்பதையும் பார்க்க முடியும். இந்த மதம், அந்த மதம் என்று இதில் வேறுபாடின்றி எல்லாப் பிரிவுகளிலும் இந்த நிலை நீடித்து வருகிறது.

நவீன அறிவியல், மருத்துவம், வேளாண்மை, இலக்கியம், தத்துவம்-என எல்லாத் துறைகளிலுமே மனிதகுலம் மாபெரும் முன்னேற்றங்களைச் சாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம், முழுக்க முழுக்கப் படிப்பறிவினால் மட்டுமே சாதிக்கப்பட்டதல்ல. பல இலட்சம் ஆண்டுகளாக மனிதகுலம் இடையறாமல் இயற்கையுடன் இயைந்தும், முரண்பட்டும் போராடிப் பெற்ற பட்டறிவுக்கும் இந்த முன்னேற்றங்களில் ஒரு மிகப்பெரிய பங்குண்டு. அந்த வரலாற்றை இங்கு நாம் விவாதித்தல் சாத்தியமில்லாத ஒன்று. எனவே, படிப்பறிவில்லாமல் வெறும் பட்டறிவு மட்டுமே போதுமானதல்ல. அதே போல, அனுபவமற்ற வெறும் ஏட்டுப்படிப்பு மட்டுமே நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவுவதில்லை. இரண்டும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும்.

இந்தப்பயணம், கல்வியின் துனையோடுதான் நடந்தாக வேண்டும். அந்தக் கல்வியைத் தேடி முழுமையானதாகவும், அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட தாகவும் கல்வித்திட்டம் அமைய வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமற் போனால், என்ன நடக்கும்?

“மாந்தர்பால் பொருள் நோக்கிப் பயின்றதாம்,
மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை”

என்று மகாகவி பாரதி மனம் நொந்து பாடியதுதான் நடக்கும்! மனத்துயரின் உச்சத்தில் இருந்த ஒரு வேளையில் இந்த நாட்டின் ‘மடமைக்கல்வி’யால் ஒரு மண்ணும் பயனில்லை என்று கடுமையாகச் சாடியவர், பல மொழிகள் கற்றுத்தேர்ந்த ஒரு கல்வியாளர்தான். அதே பாரதி,”கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று போற்றிப் பாடியிருப்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய தேவையுண்டு. சங்க காலத்துக்கு மிகவும் முன்பிருந்தே, சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்பே தமிழ்ச்சமூகம் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கிய ஒரு முதுபெரும் பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த்து என்பதை அறிந்தவர் பாரதி. அந்தப் பெருமிதம் தொனிக்கும் பாடல்களும் அவர் எழுத்துகளில் உருவானவைதாம்.

இந்தச் சுருக்கமான முன்னுரையுடன், நாம் கல்வி தொடர்பான நூல்களைத் தேடியலையும் பயணத்தைத் தொடங்குவோம். சமீபத்தில் மறைந்த தமிழ் ஆய்வறிஞரான தொ.பரமசிவன் (தொ.ப.) அவர்கள் எழுதிய ஒரு சிறு கட்டுரையின் செய்திகள், நமது கவனத்தை ஈர்க்கின்றன. கல்விக்கடவுள் என நாம் வணங்கும் சரஸ்வதி தேவிக்குக் கலைமகள் எனவும் ஒரு பெயர் உண்டு. இந்தத் தெய்வத்தின் வழிபாடு, சமண மதம் நமக்கு வழங்கிய கொடை என்கிறார் தொ.ப. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு மிகத் தொடக்க காலத்திலேயே வலுவான அடித்தளமிட்டு, தொடர்ந்து அதன் சிறப்புமிக்க முன்னேற்றத்திற்குப் பங்களித்து வந்தது சமணம்.

பாரதி, சரஸ்வதிக்கு ‘வாணி’ என்ற பெயர் சூட்டுகிறார். இந்தப் பெயரும் கூட சமணம் தந்த கொடையே. கல்வி, ஆசிரியம், கல்விக்கொடை(கற்பித்தல்) ஆகியவற்றைப் பெரிதும் கொண்டாடிய மதம் சமணம். கலைமகள் நாக்கில் உறைவதாக சமண மதம் நம்பியதால், சரஸ்வதிக்கு நாமகள் என்றும் ஒரு பெயரிட்டுப் போற்றியிருக்கிறது. சமணக்காப்பியமான சீவக சிந்தாமணியின் நாயகனான சீவகன், கல்வி கற்றதைக் குறிக்கும் பகுதிக்கு ‘நாமகள் இலம்பகம்’ என்று பெயர். சமண மரபில் சரஸ்வதிக்கு ‘வாக் தேவி’ என்றும் ஒரு பெயருண்டு. நெல்லை மாவட்டம், உக்கிரன் கோட்டையில், அழிந்து போன கோட்டையின் அருகில் சரஸ்வதி தேவிக்கு ஒரு கருங்கற் சிலை உண்டு.தொல்லியல் துறையினர், இத்தெய்வத்தை ‘வாக் தேவி’ என அழைக்கின்றனர். சமண மதம், கல்வி கற்பிப்பதில் ஆண்-பெண் இரு பாலாரின் பங்களிப்புகளையும் கொண்டாடிப் புகழ்ந்துள்ளது. தொ.பரமசிவன் அவர்கள் தன் கட்டுரையில் முன்வைத்துள்ள மேற்கண்ட பல சான்றுகளின் அடிப்படையில், கல்வித்தெய்வம் என சரஸ்வதியை நாம் வழிபடும் மரபு, சமண மதம் வழங்கிய கொடையே என்ற முடிவுக்கு வர இயலும்.(நன்றி : காக்கைச் சிறகினிலே , ஜனவரி-2020, இதழ் , தொ.ப.கட்டுரை, பக்கம்-11).

சங்க காலத்துக்கும் முந்தையது எனக் கருதப்படும் வைகைக்கரை நாகரிகச் சான்றுகள் கீழடி தொல்லியல் அகழ்வாய்வில் கிடைக்கப் பெற்றுள்ளன என்பதை அறிவோம்.அங்கே கிடைத்துள்ள பானை ஓடுகளில் எழுத்துகளின் வடிவங்களும்,தொன்மைக்கால மக்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. எனில், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச்சமூகம் கற்ற்றிந்த ஒரு பண்பட்ட சமூகமாயிருந்திருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

இவ்வகையான மேலும் பல சான்றுகளை உள்ளடக்கிய ஓர் ஆய்வு நூலில் கல்வி குறித்த சிந்தனைகள் செறிவான வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி”-என்ற அந்த நூலின் ஆசிரியர், இலங்கைத் தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் அடிகள்.இவர் முன் வைக்கும் பல சான்றுகளிலிருந்து பெறப்படும் கருத்துகள் :

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறையிலிருந்த கல்வி எந்தவொரு மகத்தான கல்வித்தத்துவத்தின் இயல்பையும் கொண்டதாக இருந்திருக்கவில்லை. அக்கல்வி முறை, முழுக்க முழுக்கப் பயன்பாடு சார்ந்தது. அதாவது அரசாங்க வேலைத்தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு
நடைமுறைபடுத்தப்பட்டு வந்தது. அந்நியர் ஆட்சியின்போது இறக்குமதி செய்யப்படும் கருத்தாக்கங்கள், ஆட்சியதிகாரமுறை சார்ந்தனவாகவே அமைந்திருக்கின்றன. அவை ஒரு போதும் மதிப்பீடுகள் சார்ந்தனவாக அமைவதில்லை. எனவே, விடுதலை பெற்று எழுந்துள்ள அனைத்து நாடுகளிலும் கல்வி பற்றிய மறு சிந்தனைகளைப் பரிந்துரைக்க வேண்டியுள்ளது.

சங்ககாலச் சமூகத்தில், பெற்றோர்களே ஆசிரியர்கள் அவர்களோடு பாணர்கள், கூத்தர்கள், புலவர்கள் ஆகியோரும் கி.மு.200 க்கும் கி.மு.300-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளின் காலத்தில் ஆசிரியர்களாகச் செயலாற்றியுள்ளனர். சங்ககாலத்தின் தொடக்கத்தில் பொதுத்தன்மையும், முறைசாராத் தன்மையும் கொண்டிருந்த கல்வி, பின்னர் சமயம் சார்ந்த முறைசார் கல்வியாக மாறியது. குறுந்தொகைப் பாடல் ஒன்றில் இடம்பெறும் ‘இளம் மாணாக்கன்’ என்ற சொல்லாடல் சங்க காலத்திய முறைசார் கல்வி பற்றி தெரிவிக்கின்ற ஓர் அரிய சான்று :

“ அன்னாய், இவனோர் இளமாணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ…” ( கு.33-1-2 )

வாழ்த்துப்பாடல்கள் பாடிக்கொண்டிருந்த பாணர்களினின்றும் விலகி சிக்கல்களும் செல்வப்புழக்கமும் மிகுந்த புதிய சமூக நிலைக்கேற்ப புலவர்கள் எழுச்சி பெற்றனர்.,முன்பு பொதுமக்களுக்குத் தம் கலையால் பொழுது போக்களித்தல், கற்பித்தல் எனும் பணிகளைச் செய்து வந்தவர்கள் பாணர்களே. ஆனால், இம்மரபுகளையும் தமது புதிய தகுதிக்கேற்ப புலவர்கள் விரிவுபடுத்தினர். பாணர்களின் பணியாக இருந்து வந்த கல்வியைப் புலவர்கள் முறைசார் கல்வியாகத் தகுதிப்படுத்தினர்.

பாணர் மற்றும் அவருடைய குழுவைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள் அனைத்தும் இசை, கூத்து, ஆடல்-இவற்றுடன் தொடர்புடையவை. ஆனால், புலவர் எனும் சொல் உலக அறிவு, கல்வி,தர்க்கம்(லாஜிக்) என்பனவற்றுடன் தொடர்புடையது. தொகைநூல்களின் காலமென்பது பண்பாட்டிலும், கல்விச் செயல்பாடு களிலும் புலவர்கள் முக்கியத்துவம் பெற்று வந்த காலகட்டமாகும்.புலவர்களின் காலகட்டத்தில் அவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் ஆற்றி வந்த பணிகளும் பெரிதும் விரிவு பெற்றன. தமது மாணவர்களுக்கு முறைசார் ஆரம்பக்கல்வியை அளித்து வந்தனர். அதோடு மட்டுமன்றி சமூகத்திற்கு நீதி வழிகாட்டல், ஒழுக்க விதி கற்பித்தல், ஆலோசனை வழங்குதல் என்ற நிலைகளில் முறைசாரா போதகர்களாகவும் தொழிற்பட்டனர் தமிழகப் புலவர்களின் பெயர்களையும், அவர்தம் தொழில்களையும் காணும்போது, கற்றலிலும், கவிதை புனைவதிலும் பால் வேற்றுமையின்றியும், தொழில் வேற்றுமையின்றியுமே அன்றைய சமூகம் அவர்களை நடத்தியுள்ளது என்பதை அறிய முடிகிறது. கவிதை இயற்றுவதில் கற்றறிந்த புலவர்கள் மட்டுமன்றி, பிறருங்கூடக் கவிதை வடிவில் தமது அறிவை,சிந்தனைகளை,உணர்ச்சிகளைப் பதிவு செய்துள்ளனர்.

கற்றலும், செய்யுள் இயற்றுதலும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு முறையான மாணாக்கர் நிலைவழி கைமாற்றித் தரப்பட்டு வந்தது. தொகை நூல்களின் திணை,துறைக் குறிப்புகளில் இடம்பெறும் சில புலவர்களின் பட்டப்பெயர்கள், அவர்கள் பெருமைமிகு ஆசிரியர்களாக விளங்கியதையும், அவர்கள் புகழ் பெற்ற மாணவர்களைப் பெற்றிருந்ததனையும் காட்டுகின்றன. மனிதர்கள் வாழ்வில் நிறைவு பெற கல்வி-கேள்வி எனும் இரு நிலைகளிலும் கற்றல் வேண்டும்.

கல்வி என்பது, நேரடியாக மாணவர்கள் தன்னார்வத்துடனும், உள்ளுணர்வுடனும் கற்றல் செயல்முறை. கேள்வி,பிறரால் வழங்கப்படும் வழிமுறை,அறிவுரைகளை ஏற்பதன்வழி கற்றலாகும்.

“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்…”

என்ற புறநானூற்றுப் பாடலின் வழி பெறப்படும் (புறம்-183) கல்வி, கற்றல் பற்றிய குறிப்புகளில் இருந்தும், தொகை நூற்களில் இடம் பெற்றுள்ள கல்வி சார்ந்த கருத்தாக்கங்களில் இருந்தும் அன்றைய கல்வி சமயம் சார்ந்த கல்வியாக இருக்கவில்லை என்று அறிகிறோம். கல்வியுடையோரை ‘ஒளியோர்’ என்று வழங்கி வந்திருப்பினும் கூட, அன்றைய கல்வி சமயக்கல்வியாக இருக்கவில்லை.

–மேற்கண்டவாறு சேவியர் தனினாயக அடிகள் முன்வைக்கும் கருத்துகள் தொடர்ந்து ஏராளமான சான்றுகளை முன்வைக்கின்றன. இன்றைய சூழலில் கல்வியின் உள்ளடக்கம் என்னவாக மாறி வந்து கொண்டிருக்கிறது என்பதையும் அன்றைய கருதுகோள்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நமது தமிழ்ச்சமூகத்தின் அணுகுமுறை எத்தனை பரந்த மனம் கொண்டதாய், முற்போக்கானதாய் இருந்திருக்கிறது என்பதை உணர முடியும்.

Leave a comment