நீ கரடி என்று யார் சொன்னது? – கமலாலயன் (புத்தக அறிமுகம்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்த நூலின் ஆசிரியர் பிராங்க் தாஸ்லின், கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஒவியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குர். அவர் எழுதி, ஓவியங்கள் தீட்டிய மூன்று குழந்தை இலக்கிய நூல்களுள் முக்கியமானது இந்தப் புத்தகத்தின் ஆங்கில வடிவமான The Bear That Was Not ‘.

ஒரு பெருங்காட்டின் எல்லையில் நிற்கின்ற கரடியொன்று, தனது வாழ்வியற் பண்புகளின்படி, வானத்தை அண்ணாந்து பார்க்கிறது. இலையுதிர்காலம் தொடங்கப் போகும் சூழல். காட்டு வாத்துகள் தெற்குத் திசை நோக்கி வலசைபோகின்றன. பூமிப்பந்தின் மேற்குப் பகுதியில் உள்ள குளிர் மிகுந்த நாடுகளிலுள்ள மரங்கள், தமது இலைகள் அனைத்தையும் உதிர்க்கின்றன. இவையிரண்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து குளிர்காலம் வருகிறது. இனி காடு, மேடு, குளங் குட்டைகள், ஏரிகள் எல்லாவற்றின் மீதும் வெண்பனிப் போர்வை மூடிவிடும். இந்தக் குளிர் காலத்தில் உணவுப் பற்றாக்குறை நேரும்; எனவே, பெரும்பாலான உயிரினங்கள் குகைகளில் நெடுந்தூக்கத்தில் ஆழ்ந்துபோகின்றன. இந்தக் கரடியும் அதேபோல், ஒரு குகைக்குள் படுத்து நீண்ட நெடுந்தூக்கத்தில் ஆழ்ந்து போகின்றது.

கரடி தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்த அதே வேளை, காட்டின் அமைதி அப்படியே நீடித்திருப்பதுதான் வழக்கம். ஆனால், கரடி தூங்கத் தொடங்கிய கொஞ்ச நாள்கள் கழித்து, மனிதர்கள் பலர் கூட்டமாகக் காட்டுக்குள் நுழைந்தனர். மரங்களை வெட்டவும், துண்டுகளாகக் கூறு போடவும் உதவும் கோடரிகள், அரிவாள்கள், ரம்பங்கள் போன்ற கருவிகளுடன் அவர்கள் வந்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து, டிராக்டர், மண்ணை வாரி அகற்றும் பெரிய இயந்திரங்கள் எல்லாமே வந்து சேர்ந்தன. வந்த ள்கள் மடமடவென்று காட்டு மரங்களை வெட்டித் தள்ளினர். தரையைச் சமன்படுத்தினர். கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

கரடிக்கு, வெளியே நடக்கிற எந்த விஷயமும் தெரிந்திருக்கவில்லை. அதுபாட்டுக்கு எப்போதும்போல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. வெளியே மிகப்பெரிய ஒரு தொழிற்சாலை உருவாக்கி, விரைவிலேயே அதன் உற்பத்திப் பணிகளும் தொடங்கிவிட்டன. வசந்த காலம் வந்துவிட்டது. கரடி தனது நெடுந்தூக்கத்தில் இருந்து விழித்து மெல்லக் குகையை விட்டு வெளியே வந்தது. கதகதப்பான சூரிய வெளிச்சம் உடல்மீது படவே அந்தக் கரடி அப்படியே கொஞ்ச நேரம் நின்றது. புத்துணர்வு பெற்றதும் மெதுவாகச் சுற்றிலும் பார்த்தது. மிகப்பெரிய தொழிற்சாலைக் கட்டடம் கண்ணில் பட்டது.

கரடிக்கோ ஒன்றும் புரியவில்லை. தான் பார்ப்பது கனவா நனவா என்று திகைத்தது. அங்கிருந்த ‘காடும், புல்வெளிகளும், மரங்களும், மலர்களும் எங்கே, எப்படிக் காணாமற் போயின? காட்டுக்குள் என்னதான் நடந்தது? ‘ என்றெல்லாம் கரடியின் மனதிற்குள் கேள்விக்கு மேல் கேள்விகள் எழுந்தன. எதிரே மிகப்பெரிய மதில் சுவரில் ஒரே ஒரு சின்னக் கதவு திறந்திருந்தது. கரடி மெல்லத் தயங்கித் தயங்கி அந்தக் கதவு வழியே உள்ளே நுழைந்தது. கண்ணாடி றை ஒன்றில் உட்கார்ந்திருந்த ஓர் ஆள், கரடி வருவதைப் பார்த்தான். உடனே அவன் வேகமாக எழுந்து வந்து, “டேய், யாருடா அது? போய் ஒழுங்கா வேலையைப் பாருஇந்த நேரத்துல நீ எதுக்கு வெளில வந்தே? வேல நேரத்துல இங்க என்ன சுத்திக்கிட்டிருக்க? “ என்று கத்தினான். கரடியோ பயந்து போய்ப் பரிதாபமாக முழித்தது. அது திக்கித் திணறிக்கொண்டே, “அதுவந்து..நா ஒரு கரடிங்கநா இங்க வேல செய்யலியே? “என்றது. ஆனால், அவன் கரடி சொன்னதைக் காதிலேயே வாங்காமல், “நீ கரடின்னு சொல்லிக்கிட்டு வேல பாக்காம சும்மா சுத்தி வரலான்னு பாத்தியா? “ என்று கத்தினான்.

கரடிக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. அது மீண்டும் மீண்டும் தான் ஒரு கரடிதான் என்றும், இப்போதுதான் நெடுந்தூக்கத்தில் இருந்து எழுந்துவருவதாகவும் சொல்லிப் பார்த்தது. அந்த ஆளோ, கரடியை தனது மேல் அதிகாரியிடம் கூட்டிப் போய் நிறுத்தினான். அவரும், அடுத்தடுத்த நிலைகளில் உள்ள துணை, இணை, உயர் அதிகாரிகள் அனைவருமே கரடி சொல்வதைக் கேட்க மறுத்தார்கள். கடைசியில் முதலாளியிடம் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அவரும் கரடி சொல்வதைக் கேட்க மறுத்தார். பிறகு எல்லாரும் கரடியை வண்டியில் ஏற்றிக்கொண்டுபோய் விலங்குக்காட்சி சாலையிலும், சர்க்கஸிலும் இருந்த கரடிகளிடம் இதைக் காட்டினார்கள். இந்த உருவம் கரடியா என்று அவர்கள் கேட்டதற்கு அங்கிருந்த கரடிகளும் ‘இல்லை‘ என்றே கூறின. அவை, “இது கரடியாயிருந்தால், எங்களோடு இங்கேயல்லவா இருந்திருக்கும்? “என்று கூறின. இப்போது கரடிக்கு வேறு வழியேதும் இருக்கவில்லை. எல்லாருமாகத் தொழிற்சாலைக்கே கரடியைக் கொண்டு வந்து, ஓர் இயந்திரத்திற்கு அருகே நிறுத்தி அதில் வேலை செய்யுமாறு நிர்ப்பந்தம் கொடுத்தனர்.

வேறு வழியில்லாமல், கரடியும் அதில் வேலை பார்க்கத் தொடங்கியது. பல மாதங்கள் இப்படியே ஓடின. நீண்ட காலம் கழித்துக் குளிர்காலம் வந்ததும் தொழிற்சாலை விடுமுறைக்காக மூடப்பட்டு விட்டது. எல்லாத் தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டனர். கடைசியாக வெளியே வந்த கரடி மெதுவாகத் தனிமையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்த நிலையில் சோர்வுடன் காட்டில் நடந்துசென்றது. தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தது. வாத்துக்கூட்டம் தெற்கு நோக்கிப் பறப்பதையும், இலைகள் அனைத்தையும் மரங்கள் உதிர்த்துவிட்டு மொட்டையாய் நிற்பதையும் கரடி பார்த்தது. அடுத்துத் தான் என்ன செய்ய வேண்டும் என்பது கரடிக்குத் தெரிந்திருந்தது. ஒரு பெரிய மரத்தின் அடியில் குகை ஒன்றின் வாசல் இருப்பதைக் கண்டுபிடித்து, வழக்கம் போல் நெடுந்தூக்கம் போட வேண்டி யதுதான் என்று அந்தக் கரடி தீர்மானித்தது.

ஆனால், கடந்த பல மாதங்களாக நீ கரடி என்று யார் சொன்னது?“ என்ற கேள்விகளையே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த அந்தக் கரடிக்கு, தான் ஒரு கரடி அல்லவே என்ற குழப்பம் ஏற்பட்டது. பனிப்பொழிவில் நனைந்தபடி அது குகைக்கு வெளியே உட்கார்ந்திருந்தது. தான் கரடியா அல்லது ரோமப்போர்வை போர்த்திக் கொண்டிருக்கிற அற்ப மனிதனா என்ற குழப்பம் அதை ள்கொண்டது. இலையுதிர் காலம் முழுவதும் பனிமழையில் நனைந்து, நடுங்கி குளிரில் விறைத்துப் போகும் நிலைக்கு வந்துவிட்டது. வேறுவழியின்றி, குகைக்குள் சென்ற கரடி அங்கு தனக்கு குளிரோ பனியோ தெரியவில்லை என்பதை உணர்ந்தது. கதகதப்பான நிலையில், உள்ளேயிருந்த இலைப்படுக்கையில் படுத்துக்கொண்டது. அப்படியே நெடுந்தூக்கத்தில் ஆழ்ந்தது. தான் கரடியா அல்லது தொழிற்சாலை அதிகாரிகள், முதலாளி, சர்க்கஸ் விலங்குக்காட்சிசாலை விலங்குகள் சொன்னதுபோல் தான் ரோமப்போர்வை போர்த்திய ஓர் அற்ப மனிதனா என்ற கேள்விகள் கரடியை உலுக்கினாலும், தான் ஒரு கரடிதான் என்ற இயல்பூக்கம் அதனிடமிருந்து விலகிவிடவில்லை. அது ஓர் கரடியாகவே இருந்தது.

இந்தக் கதைக்கான ஓவியங்கள் அனைத்தையுமே பிராங்க் தாஷ்லின் வரைந்திருக்கிறார். காடு, வலசை போகும் பறவைகள், இலைகளை உதிர்க்கும் மரங்கள், காடுகளை அழிக்கும் மனிதர்கள், தொழிற்சாலைக்குள் நுழைந்துவிட்டால், எல்லா உயிர்களையும் வெறும் இயந்திரங்களோடு இயந்திரங்களாகவே பாவிக்கும் நிர்வாக அதிகாரிகள், தான் யார் தனது இயல்பு என்ன என்பதைக்கூட மற்றவர்களிடம் நிரூபிக்க முடியாமல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படும் உயிர்கள் என்று நடப்பு வாழ்வின் விநோதப் பிரச்சினைகளை இந்தக் கதை சித்தரிக்கிறது. ஆழமான பல கேள்விகளை எழுப்பும் இந்தக் கதையை ஆதி வள்ளியப்பன் மிக இயல்பான தமிழில் நூலாக்கித் தந்திருக்கிறார். கரடி என்பது காட்டுக் கரடியை மட்டுமன்றி, மனிதர்களுக்கும் ஒரு குறியீடுபோல் உருவாக்கபட்டிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. வாசிக்கும்போதே நம்மை வாழ்வின் துயரங்களால் வதைபடும் உயிர்கள் பற்றிய சிந்தனைக்குள் மூழ்கடிக்கிறது இக்கதை. சின்னச்சிறு கதை எழுப்பும கேள்விகள் ஏராளம்.

நீ கரடி என்று யார் சொன்னது? – பிராங்க் தாஷ்லின் தமிழில் : ஆதி வள்ளியப்பன் புக்ஸ் பார் சில்ரன்

Leave a comment