கல்வி உரிமை, பெண் கல்வி, ஆயுத ஒழிப்பு, சமத்துவ மாற்றம் ஆகிய லட்சியங்களுக்கான உலகளாவிய போராட்டங்களுக்கு வாழும் காலத்திய அடையாளமாகியிருக்கிற பெயர்: மலாலா.
அந்த மலாலாவுக்கு எழுதப்பட்ட கடித வடிவில் ஒரு உலகப் பயணத்தையே மேற்கொள்கிற ஒரு சிறிய புத்தகம் பல பெரிய சிக்கல்களைக் குறித்துப் பேசுகிறது. பாகிஸ்தானின் இயற்கையெழில் கொஞ்சும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய அமைதி விரும்பிகளான பாஷ்டுன் இன இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியான பாஷ்டுனாக்வா மாகாணம் பற்றிச் சொல்கிறது. குரான் கோட்பாடுகளுக்குக் குதர்க்கமான விளக்கங்களைப் போதித்து, இளைஞர்களின் மூளைகளில் வெறியுணர்வையும், கைகளில் துப்பாக்கியையும் கொடுத்தது தாலிபான் அமைப்பு என்று தெரிவிக்கிறது.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று அங்கே பள்ளிப் பேருந்து ஒன்றில் ஏறிய இரண்டு பேர், “உங்களில் யார் மலாலா” என்று மிரட்டிக் கேட்கிறார்கள். குதூகலமாக வந்துகொண்டிருந்த பெண் குழந்தைகள் அச்சத்தோடு மலாலாவைத் திரும்பிப் பார்க்கிறார்கள். மூன்று முறை அவருடைய தலையில் சுட்டுவிட்டு ஒரு கடமையை நிறைவேற்றிய களிப்புடன் அந்த இருவரும் இறங்கிப் போகிறார்கள்.
ஆம், பொதுக்கல்வியிலிருந்து பிரித்து, அவர்களது தலைக்குள் புகுத்தப்பட்ட மதவாதப் போதனையின்படி, பெண்கள் கல்வி கற்பது மார்க்கத்துக்கு எதிரான குற்றம். அந்தக் குற்றத்தைத் தடுப்பதும் மீறுகிறவர்களைத் தண்டிப்பதும் ஒரு கடமை. மலாலா செய்ததோ கொலைத் தண்டனைக்கே உரிய குற்றம் – தான் கல்வி பயிலச் சென்றதோடு, அது ஓர் உரிமை என்று முழங்கினாரே! எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் அந்த உரிமையை உறுதிப்படுத்தச் செயல்பட்டாரே! அந்த உரிமையைப் பறிக்கும் அதிகாரம் தாலிபானியர்களுக்கு ஏது என்று கேட்டதோடு, அவர்களுடைய அழிவரசியல் எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்பதை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க வைத்தாரே! அதற்காகப் பதினைந்து வயதில் சுடப்பட்டதை ஒரு செய்தியாகக் கடந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டாலும், இப்போது படிக்கிறபோதும் அந்த நிகழ்வு மனசைத் துடித்துப் பதறவைக்கிறது.
மலாலா சுடப்பட்டது, அவருக்கு பிரிட்டனில் அளிக்கப்பட்ட சிகிச்சை, மீண்டெழுந்த பின் தொடர்ந்து பெண்களின் கல்விக்காக அவர் பேசி வருவது, பல நாடுகளின் அங்கீகாரம் பெற்றது, உலக அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டது – ஆகிய தகவல்கள் பலருக்குச் செய்திகளாக மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் சுடப்படுவதற்கு முன் அவர் என்னவெல்லாம் செய்தார்? சுட்டுக்கொன்றுவிட வேண்டும் என்கிற அளவுக்கு ஏன் ஆத்திரம் ஏற்பட்டது? பெண்களின் கல்விக்காக நடத்தப்பட்ட ரகசியப் பள்ளிகள் உள்ளிட்ட பின்னணிகளை முன்னால் வைக்கிறது, அவர் சுடப்பட்ட மூன்றாவது ஆண்டில் தமிழில் வெளியான ‘மலாலா: கரும்பலகை யுத்தம்’ என்ற இந்தப் புத்தகம். கல்வியின் அருமையை வலியுறுத்தி, அதன் நிலைமையை எடுத்துக்காட்டிக்கொண்டே இருக்கிற எழுத்தாளரும் கல்வியாளருமான ‘ஆயிஷா’ இரா.நடராசன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கல்வி உரிமைக்களத்தில் ஒரு சுடராக இதனை ஏற்றிவைத்திருக்கிறது பாரதி புத்தகாலயம்.
மலாலா என்ற ஒரு சிறுமி எழுச்சி பெற்ற கதையாக மட்டும் சொல்லியிருந்தால் இது ஒரு நல்ல புத்தகம் அவ்வளவுதான். ஆனால் இதுவோ உலக அரசியலிலிருந்து உள்ளூர்ச் சமூகம் வரையில், மனித உரிமைகளிலிருந்து மானுடப் பண்புகள் வரையில், மத நம்பிக்கைச் சுதந்திரத்திலிருந்து மதவெறி அடிமைத்தனம் வரையில் பேசுகிறது.
கல்விச் சிறப்பு பற்றிய பேச்சுகளிலும் எழுத்துகளிலும் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டப்படுகிற ஒரு குறள்வாக்கு ‘கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக’. ஆனால், கற்றுத் தேர்ச்சியடையும் பெண்களில் எத்தனை பேரால் அதற்குத் தக நிற்க முடிகிறது? ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிறபோதெல்லாம், “இந்த ஆண்டும் பெண்கள்தான் முதலிடம்” என்று செய்திகள் சொல்கின்றன. அவர்களெல்லாம் என்னவாகிறார்கள்? ஆளுமைகளாக அடையாளம் பெற முடிகிற சிலரைத் தவிர்த்து ஆகப்பெரும்பாலோர் “நிற்க இதற்குத் தக” என்று சமையலறை, படுக்கையறை, பூசையறை, மற்ற அறைகள் என வீட்டோடு நிறுத்தப்பட்டுவிடுகிறார்களே? படிப்பறைக்கு வெளியே நிறுத்தப்படுகிறார்களே? பெண்ணை இப்படிப் பூட்டி வைப்பதில் எந்த மதவெறி சளைத்திருக்கிறது?
நாட்டுக்கு நாடு முன்னே பின்னே சதவீத வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. வறுமை, அரசியல் சூழலால் மூன்றாம் உலக நாடுகளில் 72 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதில்லை. சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் 32 மில்லியன் குழந்தைகள் கல்விக்கூடம் போக வாய்ப்பின்றி உள்ளனர். பசிபிக் பிராந்தியத்திலும் மத்திய ஆசியா, கிழக்காசியா போன்ற இடங்களிலும் 27 மில்லியன் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழம் உள்ளிட்ட உள்நாட்டு பூசல்களால் இனப்படுகொலைகளால் அகதிகளாக்கப்பட்ட 12 மில்லியன் குழந்தைகளின் பள்ளிக்கூடக் கனவுகள் முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டது. 14 மில்லியன் பெண் குழந்தைகள் சராசரியாக வாழ்வில் இரண்டே வருடங்கள்தான் கல்வி கற்கிறார்கள். 29 மில்லியன் பெண் குழந்தைகள் வசிக்கும் பாலஸ்தீனம், ஆப்கான், அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் ஒரு பெண் கல்வி நிலையம் கூட கிடையாது. இந்தியாவில், இந்தோனேசியா மலேசியா மற்றும் ஹவாய் போன்ற 22 தீவுகளில், தீபகற்பங்களில் 60 சதவீத பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டுவிடுகிறார்கள். யேமன், சோமாலியா போன்று 53 நாடுகளில் 80 சதவீத பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பற்றுள்ளனர்.
இந்தத் தகவல்கள் சொற்பொழிவுகளில் பயன்படுத்துவதற்கான புள்ளிவிவரங்கள் அல்ல. இதற்கு முடிவு கட்டும் உலகளாவிய பேரியக்கத்தில் நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுத் துளைக்கிற உண்மை நிலவரங்கள். 64 பக்கங்களே உள்ள புத்தகத்தில் இது போல் குறுகத்தறிக்கப்பட்ட பல உண்மைகள் கிடைக்கின்றன.
பெண்ணின் கல்வி உரிமைக்காக வாதாடுவதோடு, கல்வி வழங்குதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு பாடநூலாகவும் விரிகிறது. ஒரு வேலைக்குச் செல்லும் உத்தரவாதமாக உயர்கல்வியை விற்பனை செய்யும் கட்டுக்கதைகளால் ஏழைகளின் எதிர்காலம் என்னும் கனவு சுரண்டப்படுவது பற்றிப் பேசுகிறது. சமுதாய சமத்துவத்திற்காக இயங்குகிறவர்கள் முன்வைக்கும் கல்வியில், பொதுப் பள்ளிகள் அரசாங்கத்தால் நடத்தப்படும். அதற்கு விலை தர வேண்டிய அவசியமில்லை. ஊரின் அனைத்து வகை வர்க்க மத சாதி குழந்தைகளும் ஒரு வகுப்பில் ஒன்றாக உட்கார்ந்து அறிவை பகிரும் இடமாக இருக்கும் அங்கே ஆசிரியர் ஒரு ஆசிரியர் மாணவராக இருப்பார். மாணவரும் ஒரு மாணவர் ஆசிரியராக இருப்பார். விமர்சனப் பூர்வ விவாத முறையில் கல்வி உரையாடலாக தொடரும். மாணவரின் தலையைத் திறந்து அறிவை வங்கியில் பணம் போடுவது போல கொட்டும் ஒருவழிப்பாதை அங்கே இல்லை…
மதம் மட்டுமே அறிவு என்று ஒடுங்கிக் கொண்டவர்கள், உரிமைகளுக்காக எழும் குரல்களை ஒடுக்குவதற்கு வன்முறை ஆயுதங்களைக கையில் எடுக்கிறார்கள். அதை விட வலிமையான ஆயுதத்தை கையில் எடுத்தவர் மலாலா. அறிவியல்தான் அந்த ஆயுதம்! தங்களது மகளுக்காக மட்டுமல்லாமல், ஊராரின் மகள்களுக்காகவும் பள்ளிக்கூடம் நடத்தியவர்கள் ஜியாவுதீன் யூசுப்காய், அவரது இணையர் துர்பக்காய் யூசுப்சாய். தந்தையின் துணையோடு கணினியின் இணையத் தொடர்புகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட மலாலா, அதில் ஒரு பிளாக் தொடங்குகிறார். பள்ளத்தாக்கையே ஒடுக்கிவைத்திருந்த ஆதிக்கவெறியவர்களின் தோட்டாக் கண்களில் சிக்காமல் அந்த வலைப்பூ (பிளாக்) வழியாக உலகத்திற்கு, 150 பள்ளிக்கூடங்கள் தகர்க்கப்பட்டது, இளைஞர்கள் கடத்தப்பட்டு வெறியூட்டப்பட்டது, பெண்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டது, ஆணைகளை மீறிய சிலர் தினமும் பொது இடத்தில் பிணமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது போன்ற கொடுமைகளைத் தெரியப்படுத்தினார். “குல்மக்காய்” (சோளப்பூ) என்ற புனைப்பெயரில் வந்த அந்த வலைப்பூ எழுத்துகள் உலக அரங்கில் பூகம்பத்தையே ஏற்படுத்தின.
கல்வி உரிமையோடு கல்வியையை கல்லறைக்கு அனுப்ப முயன்றவர்கள் மார்க்கநூலையே ஆதாரமாகச் சொல்லி, அதைப் புரிந்துகொள்ளாதவர்களின் வாயை அடைத்தார்கள். ஆனால் உண்மையிலேயே முகமது நபிகள் நாயகம் பெண்ணின் கல்வியையும், சமத்துவத்தையும் ஆதரித்தார் என்று அவரது வாழ்க்கையிலிருந்தே எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர். இஸ்லாம் மக்களை எதிரிகளாகச் சித்தரிக்கிறவர்களுக்கு மட்டுமல்லாமல், அடக்குமுறை ஆணையிடுகிறவர்களாக மாறாவிட்டாலும் அந்தச் சமூகததிற்கு உள்ளேயே பெண் சுதந்திரத்தை ஒடுக்கக்கூடியவர்களுக்கும் இந்தப் பகுதி ஒரு பதிலாக வந்திருக்கிறது. அணிந்துரையில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா கூறியிருப்பது போல, “இந்நூலைத் தோழர்களுக்கு மட்டுமின்றி இஸ்லாம் சமூகத்திற்குள்ளும் குறிப்பாகப் பெண்களிடமும் கொண்டுசெல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.”
ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் அப்படியொரு அழிவு சக்தியாக உருவெடுத்தவர்களை, உலக அரசியல் களத்தில் அன்றைய சோசலிச சோவியத் யூனியனுக்கு எதிரான பகடைக்காய்களாகப் பராமரித்து வளர்த்துவிட்டது யார் என்ற உண்மையையும் புத்தகம் சொல்லத் தவறவில்லை. ஆயினும், “அந்தப் பூவைக் கொய்வதா கடினம்” என்று கொக்கரித்தவர்களை ஒழிப்பதற்கான வியூகங்கள் அரசுகளோடு சேர்ந்து வகுக்கப்பட்டன. இது உலகளாவிய ஆயுத விற்பனை என்ற சந்தை அரசியலோடும் பிணைந்திருப்பது. மலாலா தலையில் பாய்ந்த தோட்டாவிலும், தீவிரவாதிகள் மீது பாய்ந்த அதிகாரப்பூர்வ அரசுப் படையினரின் தோட்டாவிலும் இருந்தது “மேட் இன் யுஎஸ்” என்ற குறிப்பை வெறும் தகவலாகக் கடந்துவிட முடியுமா?
ஒரு பாகிஸ்தானிய சிறுமிக்காக ஒரு இந்தியர் எதற்காக இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும்? ரத்தச் சிதறலின் வலி அதற்கொரு முக்கியக் காரணம். இந்தியா–பாகிஸ்தான் பிரிவினையின்போது சிதறிய ரத்தம். பின்னர் இங்கே காந்தியும் அங்கே ஜின்னாவும் விரித்த கனவுகளும் ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுத் துயரத்தையும் கரும்பலகையில் பதித்திருக்கிறார் நடராசன்.
இந்தியாவில் பெண் கல்வி மறுக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் பெண்களுக்காக முதல் பொதுப்பள்ளியை உருவாக்கிய சாவித்திரிபாய் பூலே, தடையை மீறி சமஸ்கிருதம் பயின்றவரும பிற்காலத்தில் பாடசாலைகளைத் தொடங்கியவருமான பண்டித ரமாபாய், ஆதிவாசிகள், தேவதாசிகளாக விடப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் குழந்தைகளுக்காகக் கல்விக்கூடம் அமைத்த டாக்டர் முத்துலட்சுமி ஆகியோர் கடும் அச்சுறுத்தல்களையும ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காலமும் வயதும் அச்சுறுத்தல் தளமும் வேறு வேறு என்றாலும் அவர்களுடைய வழித்தோன்றல்கள்தான் எல்லா நாடுகளிலும் இயங்குகிற மலாலாக்கள். தொலைக்காட்சிப் பேட்டியில் “பள்ளி வேண்டும்” என்று கதறிய, சுடிதார் மேலங்கிக்குள் பாடப்புத்தகங்களை மறைத்து எடுத்துச்செல்ல வைத்தவர் மலாலா.
அந்தத் துணிவுக்கு அங்கீகாரமாக அமெரிக்கா முதலான பல நாடுகளின் அரசுகள் பல விருதுகளை மலாலாவுக்கு வழங்கின. ஆனால் அவர் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் வழங்கவில்லை. “ராணுவத் தளவாடங்களை எல்லாம் கட்ட முடிந்த உங்களால் பள்ளிக்கூடங்களை ஏன் கட்ட முடியவில்லை,” என்று கேட்டால் எப்படிப் பதில் சொல்வார்கள்?
புவியில் ஒரு குழந்தை விடாமல் கல்வியளிக்கத் தேவைப்படும் செலவினம் 87 லட்சம் கோடி ரூபாய். அடுத்த ஆறு சந்ததிகள் கல்வி பெற இது போதும். அமெரிக்கா மட்டுமே ஓராண்டுக்குச் செய்யும் ராணுவச் செலவு 196 லட்சம் கோடி! பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட உலக வரைபடத்தின் எல்லா அரசுகளும் எவ்வளவு செலவு செய்கின்றன – போர்த்தயாரிப்புக்காக! ஆனால், “பீரங்கிகள் செய்யவும் பெரிய போர்கள் நடத்தவும் பணம் இருக்கிறது. வசதி இல்லாதவர்களுக்குக் கல்வியளிக்கப் பணம் இல்லையா? சைபீரியப் பள்ளிகளைக் குண்டுவைத்து ஏன் தகர்த்தீர்கள்? ஆளில்லா விமானங்களை அனுப்பி காசாவில் குழந்தைகளை ஏன் கொன்றீர்கள்? பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சட்டங்களை இயற்ற ஏன் தயங்குகிறீர்கள்?” இன்று ஓர் உலக இயக்கமாகவே செயல்படுத்திக்கொண்டிருக்கும் மலாலா எழுப்பிக்கொண்டிருக்கிற இத்தகைய கேள்விகள், குவிக்கப்படும் தளவாடங்களின் உரசல் சத்தத்தில் அரசுகளின் செவிகளில் விழுவதில்லை.
ஆகவேதான் பெரிய எழுத்துகளில் இந்தக் கேள்விகளையே ஆயுதமாக்கி உலகக் கரும்பலகை யுத்தத்தைத் தொடர வேண்டியிருக்கிறது. இதையெல்லாமும் சிந்திக்க வைக்கிற, பெண்ணின் கல்வி உரிமை முதல் பாலின சமத்துவம் வரையிலான லட்சியங்களுக்காகத் தம்மை ஒப்படைத்துக்கொண்டவர்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் விருப்பத்தை ஏற்படுத்துகிற, அவ்வாறு இயங்குவதற்குக் கற்றுக்கொண்டு அதற்குத் தக நிற்கவும் தூண்டுகிற இந்தப் புத்தகம் ஒரு மாறுபட்ட புத்தகம் அல்ல, மாற்றத்திற்கான புத்தகம்.
புத்தகம்: மலாலா: கரும்பலகை யுத்தம்
நூலாசிரியர்: ஆயிஷா நடராசன்
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
பக்கங்கள் 64, விலை ரூ.50
தொலைபேசி: 044-24332424, 24356935, 24332924
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com