குழந்தைகளுக்குப் பேரானந்தமே! – சாந்த சீலா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும் குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது”

“குழந்தைகளுக்குக் கற்று தரும் அறிவு படைத்தோர், குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் என அனைத்தும் பெரியவர்களாலேயே முடியும்”

“குழந்தைகளின் மூளை களிமண் போன்றது அதை நாம் விரும்பிய வடிவத்தில் வார்த்து பொம்மைகள் செய்து பக்குவப்படுத்துவது நம் பொறுப்பு”

“குழந்தைகள் என்பவர்கள் விளைநிலம் போன்றவர்கள்”….

இப்படி பல கருத்துக்கள் சமூகத்தின் பொது புத்தியில் இருக்கு. சரி! இது ஒரு பக்கம் இருக்கட்டும். வாங்க! நாம் இப்போது குழந்தைகளின் இயல்பை ஒட்டி சில விசயங்களை சிந்திப்போம்.

பெரியவர்கள் மூளை பல சமூக கட்டமைப்புகளைக் கொண்ட முடிவுவுகளால் நிரம்பி ஒரு வரையறைக்குள் மட்டுமே சிந்திக்கும் இயல்பைப் பெற்றிருக்கும். எவ்வித சமூக கட்டமைப்புகளும் நிரப்பப்படாமல் படைப்பாற்றலும் கற்பனைத்திறனும் அபாரமாய் கொட்டிக் கிடக்கும் குழந்தைகளின் மூளையே முழுதும் புத்தம் புதியதாய் பூத்த மலர் போல இருப்பதை குழந்தைகளோடு பழகியர்களாய் உணர முடியும்.

குழந்தைகள் இயல்பிலேயே படைப்பு இயல்பூக்கம்(creative instinct)கொண்டவர்கள். அந்த வகையில் மேற்சொன்ன குழந்தைகள் சார்ந்த கருத்துகள் உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியத்தைத் தருகிறதோ அதுபோல குழந்தைகளுக்கான படைப்பாற்றலோடு குழந்தைகளால் இதழ் வெளிவருகிறது என்பதும் பெரும்பான்மையோர்க்கு ஆச்சர்யத்தைத் தரத்தான் செய்யும். இயல்பிலேயே படைப்பாற்றல் மிக்க குழந்தைகளுக்கு அவர்களாலேயே இதழ் உருவாக்கி வெளிவருவது தாமே மிகச் சரியானதாக இருக்கும்.

குழந்தைகளுக்கான கல்வி என்பதில் குழந்தைகளே முடிவு செய்து வழங்கப்படுவதே குழந்தை மையக் கல்வியாய் அமையும் .அந்த வகையில் பஞ்சு மிட்டாய் சிறார் இதழ் என்பது குழந்தைகள் உலகில் அவர்களை நோக்கிய இலக்கிய பயணத்தில் மையத்தைத் தொட்டது என்று கூறுவது மிகையில்லை.

பஞ்சு மிட்டாய் இதழைப் பற்றி முன்பொரு முறை ஒரு நிகழ்வில் அறிமுகம் செய்யும்பொழுது பெரியவர்களின் மூளையால் பட்டி, டிங்கரிங் செய்யப்படாத, குழந்தையால் அருளப்பட்ட இயல்பான படைப்பிற்கான அங்கீகாரமே என்று கூறியிருந்தேன். இன்றும் சுருக்கமாய் அதே என் கூற்று. பஞ்சு மிட்டாய் வாசகர்கள் அனைவரின் கூற்றும் அதுவாய்தான் இருக்கும் என்பது திண்ணம்,

பொதுவாக குழந்தைகளின் இதழ்களில் அவர்களுக்குப் பிடித்த விலங்குகள், செடி, கற்பனா பாத்திரங்கள், பொம்மைகள் ஆகியவைகளை கதை மாந்தர்களாகவோ படைப்புகளில் பெரியவர்கள் குழந்தைகளுக்காக வெளிவரும் இதழ்களில் கண்டிருப்போம். பஞ்சு மிட்டாய் இதழில் குழந்தைகளே படைப்பாளர்களாய் உள்ளதால் படைப்புகள் குழந்தைமையோடு துள்ளலோடு குழந்தை விரும்பும் படைப்பியல் பாத்திரங்கள் இருப்பது குழந்தைகளின் விருப்பம், அவர்களுக்கு எவை பிடிக்கும் என நம்மை குழந்தைகள் சார்ந்து கற்க வாய்ப்பாய் அமைகிறது. குழந்தைகளின் இயல்பும் வெளிப்படுகிறது.

படைப்பைத்தான் குழந்தைகள் படைக்கின்றனர் ஓவியத்தை பெரியவர்கள் (ஓவிய கலைஞர்) வைத்து வரைந்தால் தான் நேர்த்தியாய் இருக்கும் என சமரசம் செய்யாமல் படைப்பிற்குத் தக்க ஓவியத்தையும் குழந்தையே குழந்தைமையோடு இயைந்து வரைய வெளிவருவது இன்னும் இதழுக்குச் சிறப்பைக் கூட்டுகிறது. குழந்தைகள் விரும்பி படிக்கும் வழவழப்பான தாளில் குழந்தைகள் படைப்பு படங்களோடு இதழ் இருப்பது குழந்தைகளிடம் நெருக்கத்தை ஏறபடுத்துகிறது.

இலக்கியத்தில் எப்பொழுதும் ஒரு முரண் இருந்து கொண்டே இருக்கும். எழுத்து மொழியிலேயே கலைப்படைப்புகள் வர வேண்டும் என்று அறிஞர்களும், குழந்தைகளுக்கு நெருக்கமான பேச்சு மொழியே குழந்தைமைய மொழி என இன்னொரு சாரரும் வாதங்களை முன்வைப்பதுண்டு. பஞ்சு மிட்டாய் இதழைப் பொறுத்த வரையில் மொழியில் கடுமை காட்டாது குழந்தை படைப்புகளோடு பரிணமிப்பதால் அது குழந்தைக்கு நெருக்கமான மொழியாகவே இதழில் மிளிர்கிறது.

பொதுவாக கதை என்றால் பெரும்பாலும் காலம்காலமாக சொன்ன கதை, கேட்ட கதை, பெரிய்வர்களின் வரையறக்குட்பட்ட கதைகளையே கதை என எண்ணியிருந்த சூழலில் பொம்மைகள் பேசுதல், மலை ஆடுதல் என கற்பனை கொட்டிய சுயசார்பு(சுயம்பு) கதைகளைக் குழந்தைகள் கதைப்பெட்டிகளில் கொட்ட கதை என்பதற்கு குழந்தைகள் புது படைப்பிலக்கணம் குடுத்து குட்டி குட்டி குழந்தைகள் எல்லாம் சிறிய வயது முதல் அசத்துகின்றனர். இப்படித் தான் கதை இருக்கணும் என்று பெரியவர்கள் போட்ட கெட்டிதட்டிப் போன சட்ட திட்டங்களையெல்லாம் குட்டிகள் தம் படைப்புகள் என்னும் சம்மட்டியால் அடித்து நமக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் பஞ்சு மிட்டாய் இதழின் ஊடே….

இதழில் வரும் பாடல் குழந்தைகளின் எண்ண ஓட்டத்தோடு இழையுருகி குழந்தையோடு பயணிப்பதால் குழந்தைகள் விரும்பிப் பாடும் விதமாய் உள்ளது. இதழில் வரும் விளையாட்டும் நம் தாத்தா, பாட்டி மற்றும் நம் வட்டார மண் சார்ந்த, மரபு சார்ந்த விளையாட்டுகளை நினைவூட்டும் விதமாய் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கடத்தி பறைசாற்றும் விளையாட்டாய் அமைந்திருக்கிறது.

பொதுவாக குழந்தைகளுக்கு நீதியைக் கற்பிக்க எண்ணி குழந்தைகளுக்கு கதை சொல்லி முடிந்தவுடன் கதை சொல்லும் நீதி எனச் சொன்னால் கற்றுக் கொள்ளும் என நினைத்து ஒவ்வொரு கதையின் முடிவிலும் நீதியைச் சொல்ல தவறுவதில்லை நாம். ஆனால் குழந்தைகளுக்கான நீதியை அவர்கள் மற்றவர் வாழ்வில் உற்றுநோக்கி கேவியெழுப்பி கற்றுக் கொள்கின்றனர். ஆக சொல்ல நினைக்கும் நீதியை பொழிந்து வைத்தலோ அது போல் நாமும் வாழ்வில் நடந்து கொள்ள கற்றல் இயல்பாய் குழந்தைகளிடம் நடக்கும். நீதியை பதாகை வைத்து விளம்பரம் செய்வது போல் செய்வதில் வீண் விரயம் தான். மேலும் கதைகளின் இறுதியில் சொல்லப்படும் நீது யாருக்கானது என்ற ஐயமும் நம்மில் எழவே வேண்டும். இது பெரியதாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியதே. அந்த வகையில் பஞ்சு மிட்டாய் இதழில் சமத்துவ நீதியை பாடலில் கதைகளில் என ஆங்காங்கே வாழ்வியலோடு பொதித்துதான் வைத்துள்ளனர்.

சான்றாக,

வட்ட வட்ட தட்டிலே
அம்மா வைத்தார் இட்லி

தேங்காய் மிளகாய் அரைத்து
அப்பா செய்தார் சட்னி

தட்டு குவளை அடுக்கி
தண்ணீர் வைத்தது குட்டி

தஸ்ஸு புஸ்ஸு காரம்
தின்னும் குட்டி வீரம்

ஆவி பறக்கும் இட்லி
சட்டு புட்டுன்னு காலி

எச்சில் தட்டை எடுத்து
கழுவி வைத்தார் அப்பா

அமர்ந்து தின்ற இடத்தை
துடைத்து வைத்தது குட்டி

பகிர்ந்து வேலை செய்ததால்
அம்மா முகத்தில் மகிழ்ச்சி

பிடித்த உணவை தின்றதால்
அனைவருக்கும் நெகிழ்ச்சி

என குடும்பத்தில் வேலை பகிர்விற்கான சமத்துவத்தைப் பாடல் வழியே குழந்தைகளுக்கு கடத்தியிருக்கும்.

அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டும், இயற்கையின் அறிவியல் உண்மைகளையும் படைப்புகளில் இயல்பாய் குழந்தைகளுக்கு அந்நியமாகிடா வண்ணம் தெளித்தலும் இதழில் நடந்திருக்கும்.

பொதுவாய் மறைபொருளைக் கண்டறிவது மூளையைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் புதிர்கள் அமைந்திருப்பது சிந்தனை திறனை உடைய குழந்தைகளையும் (logical intelligence) ஏனைய குழந்தைகளையும் இணைத்து யோசிக்கும் திறனை தூண்டும் சிந்தனை திறனை வளர்க்கும் விதமாய் அமைகிறது.

ஒட்டு மொத்தமாக குழந்தைகளின் பல்வகைத் திறன்களை(multiple intelligence) உள்ளடக்கி அனைத்து வகை திறன் உடைய குழந்தைகளுக்கான திறன்களை வெளிப்படுத்தவும் தொடர்ந்து அதில் இயங்குவதற்காகவும் பஞ்சு மிட்டாய் ஒரு தளத்தினை அமைந்திருப்பது குழந்தைகளுக்குப் பேரானந்தமே.

குழந்தைகளால் வெளிவரக்கூடிய இதழ்களில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையில் உள்ள சிறுவர் இலக்கியத்தில் பஞ்சு மிட்டாய் இதழ் ஒரு ஆகச்சிறந்த குழந்தைகளுக்கான முன்னெடுப்பு. இது போல் இன்னும் குழந்தைகள் படைப்புகள் கொண்ட நிறைய சிறுவர் இதழ்கள் வெளிவர வேண்டும் என்பதே பல குழந்தை நேயர்கள் பேரவா. அவா நிறைவேறி குழந்தைகளோடு குழந்தைகளாய் வேறு நடை போடுவோம்.

குழந்தைமை காப்போம், பாதுகாப்போம் குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள கொட்டிக்கிடக்கிறது, குழந்தைகளின் உலகத்தில் சஞ்சரித்து நாமும் குழந்தைகளாய் கற்க முயல்வோம் பஞ்சு மிட்டாய் இதழ் போல. குழந்தைகள் விரும்பாத அறிவுரைகளத் தவிர்த்து குழந்தைகளோடு மகிழ்வாய் வாழ்வோம்.

Leave a comment