பஞ்சு மிட்டாய் – 5 ஆண்டுகள்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
முதல் நாள் நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது. 4-5 குழந்தைகள், அனைவருக்கும் சுமார் 3-5 வயது இருக்கும். புத்தகங்களை கொண்டு கதைகள் வாசித்து காட்டியப்படி தொடங்கியது முதல் நிகழ்வு. அப்பொழுது குழந்தைகள் மீதான அக்கறை மட்டும் தேடலாக மனதினுள் இருந்தது.

மொழியை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், ஆனால் அவை இயல்பானதாக இருத்தல் வேண்டும் என்ற புரிதலின் வழியே பயணம் தொடர்ந்தது. வாரந்தோறும் கதைகள் சொல்ல வேண்டும், அதிலும் ஏற்கனவே கேள்விப்பட்ட கதைகள் அல்லாது புதிய கதைகளை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறுவர் நூல்களை தேடி தேடி வாசிக்க வைத்தது. குழந்தைகளிடம் உரையாடும் தளமாக அது மெல்ல மெல்ல உருமாறியது. அதுவே பஞ்சு மிட்டாய் இதழாக உருமாறியது.

நிகழ்வுகளிலும் கதைகள் தாண்டி பாடல், விளையாட்டு, உரையாடல், கலைகள் என நிறைய விசயங்களை சமகால செயற்பாட்டாளர்கள் மூலம் தெரிந்துக்கொள்ள முடிந்தது. அது புதிய இடத்திற்கு அழைத்துச் சென்றது. புதிய நண்பர்கள், புதிய குழந்தைகள், புதிய சூழல்கள் என தமிழகம் எங்கும் பயணிக்கவும் வைத்தது. ஒவ்வொரு செயற்பாட்டாளர்களிடமும் அனுபவமும் சிந்தனையும் கொட்டிக்கிடப்பதை காண முடிந்தது. அவை அனைத்தும் பொது தளத்தில் ஆவணப்படுத்திட வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் www.panchumittai.com என்ற இணையதளத்தை உருவாக்கியது.

இந்தப் பயணம் முற்றிலும் நண்பர்கள் அனைவரது ஆதரவுடன் எதிர்ப்பார்த்தபடியே சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் 5 வருடங்கள் என்பது ஒருவித கொண்டாட்ட மனநிலையை தருகிறது அதே நேரத்தில் இன்னும் முயற்சிக்க வேண்டிய விசயங்கள் குறித்தும் சிந்திக்க வைக்கிறது. இந்தத் தருணத்தில் நிகழ்வுகள், சிறுவர் இதழ், இணையதளம், கருத்தரங்கம், புத்தக் வெளியீடு என பஞ்சு மிட்டாயுடன் பயணிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி,
பஞ்சு மிட்டாய் சிறார் குழு

Leave a comment