காலத்தின் கண்ணாடி – குழந்தை இலக்கியம் (முகவுரை) – கமலாலயன்

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் குழந்தை இலக்கியப் போக்குகள் பற்றிய தொடர் உரை அரங்கில், இன்று(செப். 6, 2020) இரண்டாம் நாள் நிகழ்வு. ‘காலத்தின் கண்ணாடி – குழந்தை இலக்கியம்’ என்ற தலைப்பில் இன்றைய குழந்தை இலக்கியப் படைப்புகள் காலத்தின் கண்ணாடிகளாக இருக்கின்றனவா, இருந்தால் அவை எப்படி இருக்கின்றன, எப்படி இருக்க வேண்டும் என தன்னுடைய மதிப்பீடுகளை முன்வைத்து இன்று விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

இந்த உரைத்தொடரின் முதல் நாள் நிகழ்வு சிறப்பான ஒரு தொடக்கம். குழந்தை இலக்கியம் கடந்து வந்த பாதை குறித்து மூத்த எழுத்தாளர்கள் சுகுமாரனும், ஆர்.வி.பதியும் உரையாற்றியிருக்கின்றனர். சமீப காலமாகத் தமிழ் இலக்கிய உலகில் குழந்தை இலக்கியம் சார்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகள் என் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பவையாக உள்ளன. இந்த நிகழ்வும் அப்படியான ஒரு நல்ல முயற்சி. என்னுடைய எழுத்து முயற்சிகள், இலக்கிய ஆர்வம், எழுத்து வாழ்க்கை –இவை எல்லாமே தொடங்கியது குழந்தை இலக்கியத்தில் இருந்துதான். அந்த வகையில்தான் என்னை இன்று முகவுரை ஆற்ற அழைத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் அனுபவத்தில், சிறார்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டி விரிவுபடுத்துவதில் ஒரு பள்ளி நூலகம் எத்தகைய பங்கினை ஆற்ற முடியும் என்பது குறித்து சில செய்திகளைக் கூறிவிட்டு பின் அடுத்துத் தொடர எண்ணுகிறேன். நான் படித்தது திண்டுக்கல் நேரு நினைவு நகராட்சி உயரநிலைப்பள்ளி. திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அந்தப் பள்ளி, இப்போது மேல்நிலைப் பள்ளியாகி விட்டது. அங்கு நான் படிக்கும் போது பார்த்த அதன் பெரிய நூலகம், அன்றைய நாளில் தமிழில் வெளிவந்த அத்தனை முக்கியமான பத்திரிகைகள், வார மாத இதழ்கள், நாளிதழ்கள், ஏராளமான நூல்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டிருந்தது. ஒரு பள்ளி நூலகம், அங்கு இளம் வயதில் ஒருவனுக்குப் படிக்கக் கிடைத்தவை எல்லாம் அந்த மாணவனை எந்த அளவுக்குக் குழந்தை இலக்கியங்களின் மீது ஆர்வம் மிக்கவனாக, எழுத்து ஆர்வமிக்கவனாக மாற்றும் என்பதற்கு நானும், என் தலைமுறையைச் சேர்ந்த வேறு பல எழுத்தாளர்களுமே சாட்சிகள். அந்த நூலகத்தில் நான் கண்டு மகிழ்ந்தவற்றைப் பற்றி இப்போது நினைத்தாலும் மலைப்பாகத்தான் இருக்கிறது.

இன்றைக்கு உள்ள பள்ளி நூலகங்கள், அவற்றின் இருப்பு, செயல்பாடுகள் போன்ற நடைமுறை நிலைமைகளைப் பார்க்கையில், எங்கள் காலம் ஒரு வகையில் பொற்காலம் என்றே சொல்லத் தோன்றுகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில், எங்கள் உயர்நிலைப்பள்ளியிலிருந்த அந்த நூலகத்தைப் போல் ஒரு நூலகம் இல்லாமற் போயிருந்திருந்தால், இன்றைக்கு நான் உங்களிடையே இந்த உரை நிகழ்த்தும் வாய்ப்பே கூட எனக்குக் கிடைக்காமற் போயிருக்கவும் கூடும். இது ஏதோ ஒரு நோஸ்டால்ஜியா பதிவு அல்ல; பழம் பெருமை பேசி, பழைய நினைவுகளில் ஆழ்ந்து அசைபோடும் முயற்சியும் அல்ல. உதாரணமாக, கண்ணன் என்ற ஓர் அற்புதமான சிறார் இதழை அந்த நூலகம்தான் எனக்கு அறிமுகம் செய்தது.

கலைமகள், மஞ்சரி, கண்ணன் – ஆகிய மூன்றும் கலைமகள் குழும இதழ்களாக அன்றைக்கு வந்தன. கண்ணன் இதழின் ஆசிரியர் ஆர்.வெங்கட்ராமன். ‘ஆர்வி’ எனப் புகழ் பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர். கண்ணன் இதழின் ஆசிரியராகத் தொடர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றியவர் அவர். இதழ் வந்ததும் அதே 22 ஆண்டுக்காலம்தான். அந்த இதழில் எழுதிய எழுத்தாளர்கள், அவர்கள் எழுதிய படைப்புகள், அவை பற்றிய ஏனைய விவரங்கள் இவற்றையெல்லாம் விரிவாகப் பதிவு செய்ய இப்போது நேரமில்லை. அந்தப்பணியைச் செய்வதற்கு விஷ்ணுபுரம் சரவணன் தயாராக இருக்கிறார். நான் செய்வது ஒரு சிறிய அறிமுகம் தான். அந்த இதழ் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் என்னிடமும், என் தலைமுறை எழுத்தாளர்களிடமும் இருக்கிறது. திண்டுக்கல்லில் நான் சந்தித்த மா.கமலவேலன் என்னும் மூத்த எழுத்தாளர் கண்ணன் மூலம்தான் எனக்கு அறிமுகமாகி, இன்றளவும் எனக்கு ஓர் எழுத்துலக வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

சாகித்திய அகாதமி, குழந்தை இலக்கிய எழுத்தாளர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த போது, அதன் முதல் ஆண்டுப்பரிசை கமலவேலன் அவர்களின் “அந்தோணிசாமியின் ஆட்டுக்குட்டி” நூல்தான் பெற்றது. அவரின் அறிமுகத்தாலும், கண்ணன் பத்திரிகையாலும் நான் பெற்ற உற்சாகத்தால் அதே கண்ணன் இதழில் நானும் கதைகள் எழுதினேன். கமலவேலன் அதில் ஏராளமான கதைகள், நாடகங்களை எழுதியிருக்கிறார். அதே பள்ளிக்கூட நாள்களில் எனக்கு எழுதும் ஆர்வத்தைத் தந்த இதழ் ‘மத்தாப்பு’. அதன் ஆசிரியர் மகிழ்ச்சிக்கண்ணன். அவரின் இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். ‘விசிட்டர்’ அனந்த் என்ற பெயரில் துக்ளக் இதழில் தொடர்ந்து சமூக விமரிசனக் கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். அவர் நடத்திய மத்தாப்பு இதழில்தான் எனது முதல் சிறுகதை, ‘பிஞ்சு நெஞ்சம்’, 1970-மே மாதம் வெளிவந்தது. சுமார் நான்காண்டுகள் வரை அந்த இதழை அவர் நடத்தினார்.

அதே காலகட்டத்தில் ‘அணில்’ என்ற இதழும் அப்போது வந்தது. இது முந்தைய அணில் அல்ல; எழுபதுகளில், புவி வேந்தன் அந்த இதழின் ஆசிரியர். அவர் புதுச்சேரியிலிருந்து நடத்திய இதழ் இது. இத்தகைய இதழ்கள் சில காலம் நடந்து ஓய்ந்து போனபின், அடுத்த அலையாக கோகுலம், பாப்பா மலர், ரத்னபாலா, முத்து காமிக்ஸ் உள்பட வேறு பல காமிக்ஸ் இதழ்கள், சுட்டி விகடன் ஆகியன வந்தன. அவற்றுள்ளும் பெரும்பாலானவை நின்று விட்டன. இன்றைய சூழலில், மீண்டும் ஒரு புதிய அலை எழுந்துள்ளது என்றே தோன்றுகிறது. இப்போது குழந்தைகளுக்கு எழுதுவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். பஞ்சு மிட்டாய், குட்டி ஆகாயம் போன்ற பல புதிய இதழ்கள் கண்கவரும் வண்ணங்களில் அழகிய படங்களுடன் வெளிவருகின்றன. புக்ஸ் ஃபார் சில்ட்ரென், வானம், ஆகாயம் புத்தக அங்காடி, பஞ்சு மிட்டாய், மதுரை வாசல், நியூ செஞ்சுரி புக் ஹவுசின் சார்பில் நெஸ்ட்லிங், பாரதி புத்தகாலயம், பழனியப்பா பிரதர்ஸ் உள்படப் பல்வேறு பதிப்பகங்கள் இன்றைக்கு ஏராளமாகக் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகின்றன. மிகவும் அழகழகான வடிவமைப்பில், சிறப்பான வண்ண வண்ண ஓவியங்களுடன் வெளியாகி வரும் சிறார் இலக்கியப் புத்தகங்கள் என் போன்றோரின் மனங்களை நிறைத்துப் பெருமிதம் கொள்ளச்செய்கின்றன.

சோவியத் குழந்தை இலக்கியங்கள் அன்றைய நாள்களில் போலவே இன்றும் எழுத்தாளர்களுக்கு உத்வேகம் தரும் படைப்புகளாகவே நீடிக்கின்றன. அந்த வரிசையில், நிகலாய் நோசவ் எழுதிய விளையாட்டுப் பிள்ளைகள் தொகுப்பின் எல்லாக் கதைகளும் அமைந்துள்ளன. அதே ஆசிரியர் எழுதிய ‘கோல்யா சினிட்சினின் நாள் குறிப்புகள்’ புத்தகம், தேனீக்கள் வளர்க்கத் துடிக்கும் சிறார்களின் நடவடிக்கைகளை நகைச்சுவை ததும்பப் பதிவு செய்துள்ளது. இந்த நூலை மதுரை வாசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சோவியத் குழந்தை இலக்கியங்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது, இன்றைக்கு அப்படியான சிறந்த படைப்புகள் தமிழில் வரவில்லை என்கிற ஒரு கருத்து தொடர்ந்து இருக்கிறது. பொதுவாக, தமிழில் குழந்தை இலக்கியம் குறித்துப் பேசும் போது, இரு வேறு கருத்துகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

ஒன்று, இன்றைக்குத் தமிழில் குழந்தைகளுக்கு என வெளிவரும் படைப்புகள் அப்படியொன்றும் சிறப்பானவையாக இல்லை, உண்மையான குழந்தை இலக்கியங்களாக அவை அமையவில்லை என்ற கருத்து மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. மற்றொன்று, இப்படி ஒரேயடியாக எதுவுமே சரியில்லை என்ற கருத்து தவறு; நிச்சயம் நல்ல படைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிற கருத்து. என்னுடைய அனுபவத்தில், நான் இந்த இரண்டாவது கருத்தையே வழிமொழிவேன். இப்படி வந்து கொண்டிருப்பவை, உண்மையில் குழந்தைகளுடைய மனநிலையைச் சரியாகப் பிரதிபலிக்கின்றனவா; அவர்களுக்கு ஏற்ற மொழியில், அவர்கள் விரும்பிப் படிக்கும்படியான படைப்புகளாக அவை அமைகின்றனவா என்ற கேள்வி வலுவாக முன்வைக்கப்படுகிறது. இந்த அம்சம் பற்றி ஒரு விரிந்த பார்வை தேவை. வந்திருக்கும் படைப்புகளை முழுமையாகவும், ஆழ்ந்தும் வாசித்து, விருப்பு வெறுப்பற்ற முறையில் அணுகி, ஒரு சரியான மதிப்பீட்டுக்கு நாம் வர வேண்டும். இப்போது வரும் படைப்புகளில் உள்ள பலவீனங்களைப் பற்றி நாம் பேசுவது போலவே, அவற்றின் பலங்கள், நிறைவான அம்சங்கள் பற்றியும் பேச வேண்டும். இவற்றில் போதாமைகள் உள்ளனவா என்றால், ‘ஆம்; போதாமைகள் இருக்கின்றன’ என்பதில் ஐயமில்லை. நம் முன்னால் கிடைக்கிற படைப்புகளில் சிறப்பானவற்றை இனங்கண்டு, அவற்றை அங்கீகரித்து, அவற்றை எழுதியவர்களை உற்சாகமூட்டிக் கொண்டேதான் போதாமைகளைக் களையும் முயற்சிகளைத் தொடரவும் வேண்டும்.

போதாமை என்கிற விஷயம் பற்றி நாம் பேசும்போது, இன்னோர் அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்புக் கலைஞனுக்கும் போதாமை மன நிலை கட்டாயம் இருக்க வேண்டும். ‘நாம் செய்ததெல்லாம் சிறப்பானவை; மிக உயர்ந்த சிகரத்தை எட்டியாகி விட்டோம்’ என்ற மன நிறைவை அடைந்து விட்டால், அவ்வளவுதான்; அதோடு நமது முனைப்பு தளர்ந்து போகும். அதற்கு மேல், அதை விடவும் சிறப்பானவை நம்மிடமிருந்து பிறக்காது. ‘இன்று சாதித்திருப்பதை விட இன்னும் சிறப்பாக, இன்னும் நிறைவாக, இன்னும் உன்னதமாகப் படைக்க வேண்டும்,அதை நோக்கிய பயணம் தொடர வேண்டும்’ என்ற உந்துதல் நம்மிடம் இருக்கும் வரையில்தான் நாளைய சாதனைகள் மேன்மேலும் உயர்ந்த சிகரங்களைச் சென்றடைய முடியும்.

குழந்தைகளின் மன நிலை பற்றிப் பேசும் போது, நான் சமீபத்தில் படித்த, குட்டி ஆகாயம் வெளியிட்ட ஒரு நூலில் இடம்பெற்றிருந்த மேற்கோள் ஒன்று என் கவனத்தை மிகவும் கவர்ந்தது .

அது: “குழந்தைகள், பேசத் தொடங்கு முன் பாடுகிறார்கள்; எழுதத் தொடங்கு முன் வரைகிறார்கள் ; நடக்கத் தொடங்கு முன் நடனம் ஆடுகிறார்கள்”. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி நமக்கு எழும். எழுதவே தொடங்காத குழந்தை எப்படி வரைய முடியும்? நமது வீடுகளில் குழந்தைகளைக் கவனித்தால், அவர்கள் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதற்கு முன் வரையத்தான் செய்கிறார்கள் என்பதை நாம் காணலாம். ஏதோ ஒரு வடிவத்தை, வட்டமாகவோ, சதுரமாகவோ தமக்குத் தோன்றும் வடிவங்களை குழந்தைகள் கிறுக்கல்களாகவேனும் வரையவே செய்கின்றனர். பேசத் தொடங்கு முன் ஏதோ ஒரு பாடலின் சாயலில் ராகம் இழுக்கிறார்கள். நடக்கத் தொடங்கு முன், தமது மனங்களில் அரும்பும் கலையுணர்வை வெளிக்காட்டும் வகையில், குதித்தும், தாவியும் ஒரு வகை நடன அசைவுகளை வெளிப்படுத்தவே முயல்கிறார்கள். இதைப் படித்த போது ஸ்டன்னிங்காக இருந்தது எனக்கு.

குழந்தைகளின் கைகளில் எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைக் கொஞ்ச நேரத்தில் மின்னல் வேகத்தில் ஒரு விளையாட்டுப் பொருளாக ஆக்கி விடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஓர் அட்டைப்பெட்டி அவர்களிடம் கிடைத்தால், அதை ஒரு போர் பம்ப் ஆகக் காட்சிப்படுத்தி, அதில் இருந்து நீரைப் பெறுவது போல விளையாடுவதை நான் என் பேரப்பிள்ளைகள் விளையாடும் போது கண்டது உண்டு. தமது கைகளில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் வேறொன்றாகக் கற்பனை செய்து அதைக் கொண்டு, சக பிள்ளைகள், மனிதர்களிடம் வேறொரு செய்தியைக் கூற முற்படுவது குழந்தைகளின் இயல்பு. இப்படி அவர்கள் கைகளில் கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு தாங்கள் உணர்வதை சக குழந்தைகளுக்கோ, நமக்கோ சொல்ல முற்படுகின்றனர். அவர்களின் இந்த முயற்சியில் அவர்களுக்கென்றே ஒரு தனித்த மொழி உருவாகி விடுகிறது. சமயங்களில், அந்த மொழியைப் புரிந்து கொள்வதில் நமக்கு ஓர் இயலாமையும் கூட நேர்ந்து விடுகிறது.

பேரா. ச.மாடசாமி அவர்கள், “குழந்தைகளின் நூறு மொழிகள்” புத்தகத்தில் கூறுவதைப் போல, குழந்தைகளுக்கு நூறு மொழிகள், நூறு உலகங்கள், நூறு வித ஆச்சரியங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் முழுமையாக உள்வாங்கி உணர்ந்து கொண்டால் மிகச்சிறப்பான படைப்புகளை உருவாக்க நம்மால் முடியும். இந்தப் பின்னணியில் இன்றைக்கு வருகிற குழந்தை இலக்கியப் படைப்புகள், அவற்றை வெளியிடும் இதழ்கள், பதிப்பகங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, அவர்கள் தங்களுக்கென்று ஒரு தனித்த பார்வை, மொழி, அணுகுமுறைகள், வெளிப்பாட்டு வடிவங்கள் ஆகிய அம்சங்களை அழுத்தமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். இவற்றைப் பற்றி நான் மேலே கூறியது போல இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இவர்கள் கடந்த கால குழந்தை இலக்கியப் படைப்புகள், இதழ்கள், பதிப்பகங்களின் முயற்சிகளை உள்வாங்கிக் கொண்டு, இன்றைய தேவைகள், மன நிலைகளைக் கருத்திற் கொண்டு தமது படைப்புகளை உருவாக்குகின்றனர்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது: “அன்றைய கண்ணன், அணில்…இன்னபிற இதழ்களில் வந்தவை, ஆர்வி- அழ.வள்ளியப்பா போன்ற பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளை இன்றைய குழந்தைகள் வாசிக்கும் போது, எனது தலைமுறையினர் உணர்ந்த அதே பரவசத்தை, மன எழுச்சியை உணர்வார்களா?” இன்றைய வாசகர்கள், ஒருவேளை அந்தப் படைப்புகளால் மன நிறைவு அடையாமல் போகலாம். ஒரு வேளை அதிருப்தி அடையவும் வாய்ப்புண்டு.

காரணம், இன்றைய குழந்தைகள் மிக நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், மின்னணு ஊடகங்கள், இணையம் போன்ற மிக முன்னேறிய ஓர் உலகில் வாழ்கிறவர்கள். ஆனால், அன்றைக்கு இப்போதிருக்கும் எந்த வசதியும் கிடையாது. கைகளால் ஒவ்வோர் எழுத்தாக, ஈய அச்சு எழுத்துகளைக் கிடுக்கியால் எடுத்து அச்சுக் கோர்க்க வேண்டும்; அச்சுக்கோர்த்த பலகையை டிரெடில் என்ற, காலால் மிதித்து இயக்கப்படும் அச்சு இயந்திரத்தில் பிணைத்து ஒவ்வொரு பக்கமாக அச்சிட வேண்டும். பின், அச்சிட்ட தாள்களை ஊசி-நூல் கொண்டு தைத்துக் கையால் பைண்டு செய்து கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வளவு நெருக்கடிகளையும் சமாளித்து வெளிவந்த போதிலும், அன்றைய கண்ணன் தீபாவளி மலர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் நாம் மலைத்துப் போவோம். சுமார் இருனூறு பக்கங்கள் கொண்ட கனமான அந்த மலர்களை இரண்டு ரூபாய் விலையில் கொடுத்தது கண்ணன் இதழ். இன்றைக்கு அப்படி ஒரு விஷயத்தைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. ஆனாலும், அந்த இதழ்களின் தொடர்ச்சியாக, அவற்றின் பாரம்பரியத்தை முன்னெடுப்பவையாக நான் மேலே குறிப்பிட்ட இதழ்கள், பதிப்பகங்கள் உள்ளன. இப்போது அந்த மரபின் தொடர்ச்சியாக மட்டுமன்றி, ஒரு வளர்ச்சியாகவும் குழந்தை இலக்கியப் படைப்புகள் வருகின்றன. இப்படி வருபவற்றை மதிப்பீடு செய்து, சிறப்பானவை எவை; இவற்றுள் சமகாலத்தின் கண்ணாடிகளாக விளங்குபவை எவை என்பதை இனங்கண்டு பாராட்டுவது தான் நமது கடமை. நூறு சதவீதம் எல்லாமே சரியாக அமைந்திருக்காது. ஆனால், ஒன்றுமே தேறாமலும் போகாது.

அப்படி இப்போது வந்துள்ள படைப்புகளில், காலத்தைப் பிரதிபலிக்கும் சிறப்பான கண்ணாடிகளாக உள்ள ஒரு சில படைப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டு நான் என் உரையை நிறைவு செய்ய முற்படுகிறேன். கீழடியில் நடைபெறும் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ள பொருள்களை மையமாக வைத்து, ஒரு புனைவான நாவலை தோழர் உதயசங்கர் எழுதியிருக்கிறார். இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகளுக்கு முந்தைய அன்றைய சமூகச்சூழலை  சமகாலத்து ஆய்வினூடாகப் பிரதிபலிக்கும் அற்புதமான படைப்பாக இந்த நாவல் வந்துள்ளது.

அதே போல ‘குட்டி இளவரசனின் குட்டிப்பூ’ நாவலையும் உதயசங்கர் உருவாக்கியிருக்கும் விதம் மலைக்க வைத்தது. மிகவும் புகழ்பெற்ற குழந்தைகள் இலக்கியப்படைப்பு ‘குட்டி இளவரசன்’. பிரெஞ்சு மொழியிலிருந்து வெ.ஸ்ரீராம் தமிழில் மொழியாக்கம் செய்த நாவலைப் பின்னணியாகக் கொண்டு இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ப ஒரு மறுவரைவு நாவலை உதயசங்கர் எழுதிப்பார்த்திருக்கிறார்.

அதே போல, ஆதி வள்ளியப்பன் அவர்கள் எழுதியுள்ள “நீ கரடி என்று யார் சொன்னது?” நாவல். இது ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ஓர் அடர்ந்த பசுமை மாறாக் காட்டுக்குள், பனிக்கால நெடுந் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் கரடி, தூக்கத்திலிருந்து கண்விழித்துப் பார்க்கும் போது அதைச்சுற்றி ஒரு மாபெரும் தொழிற்சாலையே உருவாகி இருக்கிறது. அந்தக் கரடியை மற்ற தொழிலாளர்கள் நடுவே அதையும் ஒரு தொழிலாளிதான் என்று நிரூபிக்க நிர்வாகிகள், அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகள், அதனால் கரடி அடையும் மனக்குழப்பம்தான் கதை. இன்று காடுகளுக்குள் பெரும் தொழிற்சாலைகள் உருவாகும் அவலம் நாம் அறிந்ததே. இதைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக இந்த நாவல் அமைந்துள்ளது. இவ்வாறு சொல்லும் போது, மொழிபெயர்ப்புகள் சிறப்பாகத்தான் வருகின்றன; ஆனால், தமிழிலேயே ஒரிஜினலாக எழுதப்படும் படைப்புகள் அப்படியொன்றும் சிறப்பாக இல்லை என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. என் நீண்ட கால வாசக அனுபவத்தின் பின்னணியில், விழியன் எழுதியுள்ள சில நாவல்கள், யூமா வாசுகி மொழிபெயர்ப்பிலும், சொந்தமாகவும் எழுதியிருப்பவை, சரவணன் பார்த்தசாரதி, யெஸ்.பாலபாரதி உள்ளிட்ட பலரின் படைப்புகள் மிகவும் மன நிறைவு அளிக்கும் விதத்தில்தான் வந்துள்ளன என்றே கருதுகிறேன். சமீபத்தில் படிக்கக் கிடைத்த ‘பச்சை வைரம்’ நாவலை கொ.மா.கோ.இளங்கோ அவர்கள், ஆப்பிரிக்கக் கருப்பின மக்களின் வரலாற்றுப் பின்னணியில் மிக அருமையாக எழுதியிருக்கிறார்.

இங்கு குறிப்பிட்டுள்ள ஒரு சிலரின் படைப்புகள் மட்டுமே சிறந்தவை என்பதாக யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. மிக சமீப நாள்களில் என் கையில் கிடைத்தவை ,நான் படித்தவை மட்டுமே இவை. இன்னும் ஏராளமாக வந்து கொண்டிருக்கும் எண்ணற்ற படைப்புகளை நாம் கவனமாக வாசித்து, உரிய வகையில் மதிப்பீடு செய்து சிறந்தவற்றைத் தேர்வு செய்து பாராட்டி, கொண்டாடி மகிழ வேண்டும். மிகுந்த நம்பிக்கையளிக்கும் வகையிலேயே இன்றைய குழந்தை இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன என்றே நான் நம்புகிறேன். இரு கரம் கூப்பி இந்தப் படைப்புகளை, படைப்பாளிகளை வணங்குகிறேன்; இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்.

காணொலி பதிவு :

குறிப்பு:

சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.

வீடியோ பதிவுகளாக காண: Click here.

கட்டுரைகளுக்கு : Click here.

Leave a comment