குழந்தைகளுக்கான படைப்புலகில் புதிய சவால்கள் – அ.குமரேசன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிறார் இலக்கியம் குறித்த ஒரு விவாத மேடையை உருவாக்க ‘செம்மலர்விரும்புகிறது. குழந்தைகளின் கதையுலகில் இயங்கிவருகிற ஆளுமைகள் தொடர்ந்து வருவார்கள். அந்த மேடைக்கு இப்போது கால்கோள் நாட்டுகிறார்கள் இவர்கள்.

உண்மையும் கலையும் – . உதயசங்கர்

(சிறார் புத்தகங்கள் பலவற்றை வழங்கியிருப்பதோடு, பெரியவர்களுக்கான அரசியல்/சமூகச் சிந்தனைகளையும் கதையாக்குகிறவர்)

கலை என்பதே கட்டற்ற புனைவுதான். கலையின் செயல்களம் உணர்வுத்தளம் என்பதால்தான் கட்டற்ற புனைவுவெளியை உருவாக்க முடிகிறது. நம்ப முடியாததை நம்ப வைக்கிறது. நடக்க முடியாததை நடக்க வைக்கிறது. கலையில் உண்மை இருக்கலாம். ஆனால் உண்மையே கலை கிடையாது.

படைப்புகளில் விலங்குகள் மனித குணபாவங்களோடு சித்தரிப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் விலங்குகளின் இயல்புகளிலிருந்து அவற்றை மாறுபடுத்திக் காட்டுவது உதாரணத்துக்கு பாம்பு ஞாபகம் வைத்திருந்து கொத்தும், அதை வணங்கினால் ஆசீர்வதிக்கும் என்பன போன்ற மூட நம்பிக்கைகளைச் சொல்வது குழந்தைகளிடம் பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும். புனைவுகளில் விலங்குகள் மனித குணங்களைப் பிரதிபலிக்கலாம், அதன் நோக்கங்கள் முக்கியமானவை.

ஒவ்வொரு விலங்கும் தன்னுடைய இருத்தலுக்காகத் தனித்துவமான நிறம், மணம், குணம், ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. அதற்கு மனிதகுணங்களை ஏற்றுவது உடன்பாடானதில்லை. உயிரின அறிவியல் வளர்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படியான கதைகளும் கருத்துகளும் உலகப் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன. அறிவியலின் எல்லைக்குள் நுழைவதால் புனைவின் ரசனை குறையலாம் என்ற எச்சரிக்கையையும் புறக்கணித்துவிட முடியாது. புதிய சவால்களை எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

மாற்றங்களைக் கவனித்தோமா? – ஆதி. வள்ளியப்பன்

(கதைகள் எழுதுவதோடு, சூழலியல் சிந்தனைகளைக் கொண்டுசெல்வதைத் தன்னளவில் ஒரு இயக்கமாகவே மேற்கொண்டிருப்பவர்)

இன்றைய தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் நமது முன்னோடிகளை, கடந்த தலைமுறைப் படைப்பாளிகளைப் பெருமளவு வாசிக்கவில்லை. மற்ற இந்திய மொழிகள், வெளிநாட்டு முயற்சிகளையும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. தங்களுக்குத் தெரிந்ததை குழந்தைகளுக்குக் கூறிவிடுகிற ஆவலாதி மட்டுமே இருக்கிறது

வளர்ந்தவர்களுக்கான இலக்கிய உலகில் பேசப்படும் பிரச்சினைகள், குழுக்களாகச் செயல்படுதல், பகிர்வுகள் போன்றவை சிறார் இலக்கிய உலகில் இயல்பாக நடைபெறவில்லை. தமிழில் வெளியாகும் சிறார் புத்தகங்கள் முறைப்படி அறிமுகப்படுத்தப்படுவதில்லை, மதிப்பிடப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை.

குழந்தைகளின் உலகம் பற்றிய கடந்த தலைமுறைகளின் புரிதலிலிருந்து தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உலக அளவிலான விவாதங்கள் போன்றவற்றுக்கு தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எவ்வளவு தூரம் காது கொடுக்கிறார்கள் என்பது பெரிய கேள்வி. ஃபேன்டசி என்ற பெயரில் எதையும் சொல்லலாம் என்று கருதப்படுகிறது. அடிப்படை அறிவியல் உண்மைகள் கூட திரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே அறிவியல் மனப்பான்மை குறைவாக இருக்கும் நமது சமூகத்தில் இது மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

தேவையொரு இயக்கம் – விழியன்

(குழந்தைகளுக்கான கதைகளை எழுதி, பேசி வருவதோடு அவர்களின் கல்வியுரிமைக்காகவும் குரல்கொடுப்பவர்)

இன்று பொதுச் சமூகத்தில் வாசிப்பு அவசியத்தைக் கொண்டுசெல்ல விரிவான இயக்கமும் செயல்பாடும் தேவை. எத்தனை நல்ல புத்தகமானாலும் ஒரு வட்டத்திற்குள் போய்விடுகின்றது. முதலில் எல்லா வகையான புத்தகங்களும் கடைக்கோடி மாணவர்கள் கைகளில் தவழ வேண்டும்.

வயதிற்கு ஏற்ற புத்தகங்கள் தயாரிக்கப்படுவது மிக அவசியம். பிரான்ஸ் சென்றிருந்தபோது, ஒரு புத்தகக் கடையில் மார்க்ஸையும் ஐன்ஸ்டினையும் குழந்தைகளுக்கு எப்படி அறிமுகம் செய்கின்றனர் என்று பார்த்து வியந்தேன். இரண்டு வயது குழந்தைக்கு ஐன்ஸ்டீன் கார்ட்டூன்கள் மட்டும். அடுத்த வயதினருக்கு அவர் பிறந்த ஊர், தெரு, வீடு அறிமுகம், அதற்கடுத்த புத்தகத்தில் அவருடைய E=mc2 சமன்பாடு. அடுத்து அவர் வாழ்க்கை. 15-16 வயதினருக்கான கடைசிப் புத்தகத்தில் அவருடைய ஆராய்ச்சி. நாம் நம்முடைய ஆளுமைகளை இப்படியெல்லாம் அறிமுகம் செய்ய முனைய வேண்டாமா?

குன்றில் ஏறிக்கொள்வதா? – மருதன்

(சிறாருக்கான படைப்புலகிலும் இயங்கிவரும் வரலாற்று எழுத்தாளர்)

குழந்தைகளுக்காக எழுத வருகிற பலர் உயரமான குன்று ஒன்றைக் கண்டுபிடித்து ஏறி உட்கார்ந்துகொள்கிறார்கள்.‌ குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது, நமக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கிறார்கள். இரண்டுமே தவறு என்று உணர்வதில் இருந்துதான் குழந்தைகளுக்கான எழுத்து தொடங்குகிறது என்று நினைக்கிறேன்.

குழந்தைகள் ஒரு கதையை அல்லது கட்டுரையைப் படிக்க வருகிறபோது வாழ்க்கைக்கான முக்கியமான பாடம், உன்னதமான தத்துவம் என்று வழிய வழிய அறிவுரைகளை நிரப்பினால் அவர்கள் பாவம் இல்லையா? ‘நான் இதை முக்கியம் என்று கருதுகிறேன், எனவே நீயும் இதை முக்கியமானதாக கருத வேண்டும் என்று எதையும் அவர்களிடம் திணிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? மேல் கீழ் என்றில்லாமல் சமதளத்தில் உரையாடுவதே சரியான அணுகுமுறை. ‘இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன், உனக்கும் இது சரிவருமா பார்,என்பதாக உரையாடுகிறபோது குழந்தைகள் தயக்கமின்றி அணுகுகிறார்கள். கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறார்கள்.

உலகளாவிய தேக்கம் – எஸ்.வி. சுஜாதா

(பத்திரிகையாளர், பதிப்புலகில் குழந்தைகளுக்கான துறையில் செயல்பட்டவர்)

இங்கே மட்டுமல்ல, உலகம் முழுவதுமே குழந்தை இலக்கியத்தில் ஒரு தேக்க நிலை இருக்கிறது. புத்தகங்களின் இடத்தைக் காட்சி ஊடகங்கள் பிடித்திருக்கின்றன.  வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.  காட்சி ஊடகத்தைத் தாண்டி ஈர்க்கக்கூடிய அபாரமான கற்பனைத் திறன் கொண்ட படைப்புகள் வர வேண்டும்.

இங்கே அத்தகைய படைப்புகளை வாசிக்கச் சிறாருக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்க வேண்டும். சிறாரை வாசிக்க வைப்பதில் பெற்றோர், ஆசிரியருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பள்ளிப் பாடங்கள் அல்லாத புத்தகங்களைத் தாங்களும் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். படித்த புத்தகங்கள் குறித்துக் குழந்தைகளோடு உட்கார்ந்து விவாதிக்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

விமர்சனத்தை வரவேற்போம் – விஷ்ணுபுரம் சரவணன்

(குழந்தைகளோடு உரையாடுவதற்கென்றே பயணங்களை மேற்கொள்கிற படைப்பாளி)

தற்போது உருவாகியிருப்பது நல்ல சூழல்தான். இதை ஆரோக்கியமான சூழலாக மாற்றியமைக்க ஒன்று அவசியம் அதுதான் விமர்சனங்கள். ‘இப்போதுதான் சிறார் எழுத்து அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் கடும் விமர்சனங்களை முன்வைப்பது சரிதானா என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதுதான். ஆனால், வெறும் புகழுரைகள் கனிந்துவரும் சிறார் இலக்கியச் சூழலைப் பாழ்படுத்திவிடும். ஆகவே, எழுத்தாளர்களுக்குள் தெரியப்படுத்தும் வகையிலாவது விமர்சனத்தைத் தொடங்க வேண்டும்.

சிறுவர்களே படித்துப் பாராட்டிவிட்டார்கள். பிறகு என்ன விமர்சனம் என நீட்டுகிறாய் எனச் சிலர் விசனப்படலாம். சிறுவர்களுக்குக் கதையின் சுவாரசியம் புரியலாம், அதன் நுட்பங்களை விளங்கிக்கொள்வார்களா? மொழியும் அரசியலும் காட்சிப்படுத்துவதில் உள்ள போதாமை குறித்து அவர்கள் பேசுவார்களா? சரியான சமூக அரசியல் தெளிவோடு சிறார் இலக்கியம் தொடர இதில் விமர்சனத்துறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இதழ்களின் பங்கு – பஞ்சுமிட்டாய் பிரபு

(சிறாருக்கான ‘பஞ்சு மிட்டாய்இதழை அச்சிலும் இணையத்திலும் கொண்டுவருகிறவர், இணையவழி விவாதங்களை நடத்துகிறவர்)

சிறுவர்களைப் புத்தகம் நோக்கிப் பயணிக்க வைப்பதில் இதழ்களின் பங்கு மிக முக்கியமானது. 1980களில் ஐம்பதுக்கும் மேலான இதழ்கள் வெளியாகியிருக்கின்றன, தற்போது பத்துக்கும் குறைவான இதழ்களே கிடைக்கின்றன. இதன் தாக்கம் சிறார் இலக்கியத் துறையில் பிரதிபலிப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

இதழ்கள் தொடர்ந்து சிறுவர்களுடன் உரையாடுகின்றன. ஓவியங்கள், துணுக்குகள், புதிர்கள், பாடல்கள், விளையாட்டுகள், கதைகள், கட்டுரைகள் என இதழ்கள் ஒரு தொடர் உரையாடலை நடத்துகின்றன. எழுத்தாளர்கள் பெரும்பாலானோர் தங்களது முதல் படைப்பினை சிறார் இலக்கியத்தில்தான் அளித்துள்ளனர். குழந்தைகளே இலக்கியம் படைப்பது இதழ்களில்தான் அதிகம் நடக்கிறது

பள்ளிகள், வீடுகள், பயிற்சி முகாம்கள் என அனைத்து இடங்களிலும் குழந்தைகளின் படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் கிடைப்பதை விட பெரியவர்களால் தரப்படும் பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. குழந்தைகளோ தங்களது படைப்புக்கான தளத்தினைத் தேடுகிறார்கள். அதை அமைப்பதில் இதழ்களில் பங்கு முக்கியமானது. கதைகள், பாடல்கள், ஓவியங்கள், விடுகதைகள், புதிர்கள், நேர்காணல்கள், படக்கதைகள், புகைப்படக் கதைகள், புத்தக அறிமுகங்கள், குழந்தைகளின் அழகிய கேள்விகள் என பல்வேறு பிரிவுகளில் குழந்தைகளின் ஈடுபாடுகளைக் கவனிக்க முடிகிறது. படைப்பாளிகளாக நான்கு வயதினரின் படைப்புகளைக்கூட காண முடிகிறது. குழந்தையின் இயற்கையான படைப்பாற்றலுக்கு வயதோ, வாசிப்புப் பழக்கமோ வரம்பில்லை என்றே இது உணர்த்துகிறது.

நன்றி : செம்மலர் – நவம்பர் இதழ்.

Leave a comment