குழந்தைப் பாடல்களும் கவிமணியும் – ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா(வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – 4)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(1980-களில் எழுதிய பதிவு) இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டான 1901ஆம் ஆண்டு தமிழ்க் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான ஓர் ஆண்டாகும். அந்த ஆண்டில் தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடத் தொடங்கினார். கணிமணிக்குப் பிறகே பாரதியார் குழந்தைப்பாடல்கள் எழுதத் தொடங்கினார். பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி பாப்பாவாக இருந்த பொது, பாரதியார் பாடியதே பாப்பா பாட்டு. சகுந்தலா பாரதி பிறந்தது 1908ஆம் ஆண்டு. அதனால் ‘பாப்பா பாட்டு’ பிறந்தது 1908ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் என்பது தெளிவாகிறது. அது 1915ஆம் ஆண்டு ‘ஞானபாநு’ என்னும் இதழில் முதன்முதலாக வெளிவந்தது.

பாரதியார் குழந்தைகளுக்காகப் பாப்பாப் பாட்டும், புதிய ஆத்திசூடியும் இயற்றினார். கவின்மணியோ பேசப்பழகும் பாப்பாவிலிருந்து 15 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் வரை பாடுதற்கேற்ற ஏறத்தாழ 60 பாடல்களைத் தந்துள்ளார்.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி.

இந்தப் பாட்டைப் பாடும்போதே, குழந்தையினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது; உடலும் துள்ளுகிறது. துள்ளிக்குதித்துக் கொண்டே மழலை மொழியில் குழந்தை பாடும் இப் பாடலைக் கேட்டுச் சில சமயம், பெற்றோரும் துள்ளிக் குதிக்கத்  தொடங்கி விடுகின்றனர் !

கன்றுக்குட்டியைப் பொல்லாத துள்ளி எழும் சந்தமும், ஒரு முறை கேட்டாலே உள்ளத்தில் பத்தியக்கூடிய அளவு எளிமையும், மீண்டும் மீண்டும் பாடினாலும் அலுப்புத் தட்டாத இனிமையும், முந்திய வரியின் இறுதியிலே, வெள்ளைப்பசு, அடுத்த வரியின் இறுதியிலே கன்றுக்குட்டி- இப்படி மாறிமாறி வருமாறு பாடலை அமைத்துள்ள உத்தியும் குழந்தைகளின் உள்ளத்தைப் பெரிதும் கொள்ளை கொண்டு விடுகின்றன.

அம்மா என்குது வெள்ளை பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப் பசு – பாலை
நன்றாய் குடிக்குது கன்றுக்குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளை பசு – மடி
முட்டிக் குடுக்குது கன்றுக்குட்டி

‘அன்னைச்சொல், அமிர்தம்’ என்றோ ‘தாயின்  சிறந்தொரு கோயிலும் இல்லை’ என்றோ அறிவுரை கூறுவதை விட இப்படி அன்னையின் அன்பைப் பசு மூலமாகப் படம் பிடித்துக் காட்டுவது என்றென்றும் நினைவிலே நீங்காமல் நிற்குமன்றோ ?

‘Talk to children to write for children” என்பார்கள். குழந்தைகளுடன் பேசிப் பழகி, அவர்கள் நிலை அறிந்து, உளம் அறிந்து பாடியவர் கவிமணி. இதுவே அவரது வெற்றிக்குக் காரணம். சென்னை நகரிலுள்ள பவழக்காரத்  தெருவிலே ஒரு காலத்தில் பவழ வியாபாரம் நல்ல முறையில் நடந்திருக்கலாம். பவழங்கள் அங்கே குவியல் குவியலாகக் கிடந்திருக்கலாம். ஆனால் இப்போது..

பவழக்காரத் தெருவிலே  
பவழம்  காண வில்லையாம்;
எவர் எடுத்துச் சென்றனர்
எனக் கறிந்து சொல்வையோ?

என்று பச்சைக்கிளியைப் பார்த்துக் கேட்கிறது ஒரு  குழந்தை.

எவர் எடுத்துச் சென்றிருப்பார்? இதோ நீதான் எடுத்துச் சென்று உன்  அலகிலே வைத்திருக்கிறாயே! என்று கூறாமல் கூறிக்  சாட்டுகிறது அக்  குழந்தை. கிளியின் சிவந்த அலகினை நேரடியாகப் பவழத்திற்கு ஒப்பிட்டுப் பாடாமல், மறைமுகமாகப் பாடியிருப்பது உண்மையிலே மகிழ்ச்சி அளிக்கிறது. வீட்டிலே ஒரு பசு இருக்கிறது. அது தினமும் பால் தருகிறது அந்தப் பால் எப்படியெல்லாம் உருமாறுகின்றது, உபயோகப் படுகிறது, என்பதை எளிய பாடலில் கவிமணி எடுத்துக் கூறுகிறார்.

அம்மா பாலைக் கறந்திடுவாள்;
பாலைக் காய்ச்சி ஆறவைப்பாள்;
ஆறின பாலில் உறைவிடுவாள்,
உறைவிட்ட பால் தயிராகும்;
தயிரைக் கடைந்தால் மோராகும்;
மோரில் வெண்ணெய் படர்ந்துவரும்;
வெண்ணையை உருக்கினால் நெய்யாகும்,
நெய்யில் அப்பம் சுட்டிடலாம்;
நீயும் நானும் தின்றிடலாம்

நெய்யில் அப்பம் சுட்டிடலாம் என்பதோடு கவிமணி நிறுவிடவில்லை.

நெய்யில் அப்பம் சுட்டிடலாம்;
நீயும் நானும் தின்றிடலாம்

எனப் பகுத்துண்ணும் பண்பினைப் பதிய வைக்கிறார், பாலர்களின் இளம் உள்ளங்களிலே.

குழந்தைகளுக்கான கதைப் பாடல்களை எழுதுவதிலும் கவிமணியே வழிகாட்டியாய்த் திகழ்கிறார். கவிமணிக்கு முன்பு வீரமார்த்தாண்டத் தேவர் பஞ்ச தந்திரக் கதைகளைப் பாடல்களாக இயற்றித் தந்திருக்கிறார். ஆயினும், அப் பாடல்கள் எளிய நடையில் அமையவில்லை. ஆங்கிலத்தில் சிறுவருக்கான கதைப்பாடல்கள் (STORY POEMS) பலவற்றைப் பார்த்தும் படித்தும் மகிழ்ந்த கவிமணி, நம் தமிழ்க் குழந்தைகளுக்கும் அத்தகைய பாடல்களை எழுத விரும்பினார். அதன் விளைவாக எழுதப் பெற்றவைதாம் ‘அப்பம் திருடிய எலி’, ‘ஊகமுள்ள காகம்’, நெற்பானையும் எலியும்’, ஒளவையும் இடைச் சிறுவனும்’ ஆகிய பாடல்கள்.

கவிமணி பெரியவர்களுக்காக ‘ஆசிய ஜோதி’ யையும் , உமர்கய்யாம் பாடல்களையும் தமிழில் தந்தது போலவே, குழந்தைகளுக்காகவும் சில ஆங்கிலப் பாடல்களைத் தமிழிலே தந்திருக்கிறார். வில்லியம் பிளேக் (WILLIAM BLAKE) பாடிய ‘tiger tiger burning bright’ என்று தொடங்கும் பாடலை அழகும் அழுத்தமும் வேகமும் விறுவிறுப்பும் குன்றாதபடி கவிமணி தமிழில் இயற்றியிருக்கிறார். பெலிஷியா  ஹீமன்ஸ் என்ற அம்மையார் பாடிய பாடலைத் தழுவி கவிமணி ‘முதல் துயரம்’ என்னும் மிக உருக்கமான பாடலைப் பாடியிருக்கிறார் . மாக்டொனால்டு இயற்றிய ‘குழந்தை’, குட்ரிச் இயற்றிய ‘ஆறு’ போன்ற பாடல்களையும் அழகு சொட்டும் தமிழிலே கவிமணி ஆக்கித் தந்திருக்கிறார். கவிமணியின் மொழிப்பெயர்ப்புப் பாடல்களைப் படிக்கும் போதெல்லாம் அவர் பாடியுள்ள ‘பசு’ என்னும் பாடல் தான் நினைவுக்கு வரும்.

பச்சைப் புல்லை தின்று வெள்ளைப்
பால் தர நீ என்ன
பக்குவம் செய்தாய் ? அதனைப்
பகருவையோ ? பசுவே !

என்று குழந்தை வியப்போடு கேட்கிறதல்லவா ? பச்சைப் புல்லை தின்று சுவையான வெள்ளைப் பாலைப் பசு தருவது போல, ஆங்கிலப் பாடல்களை நன்கு படித்து, ஜீரணித்து, அருமைமிக்க, அழகுமிக்க சுவைமிக்க தமிழ்ப் பாடல்களாக நமக்குத் தந்து நம்மை வியப்பிலே  ஆழ்த்துகிறார் கவிமணி. மலரும் மாலையும் கவிதை தொகுதியை 1938ல் முதன் முதலாக வெளியிட்ட புதுமைப் பதிப்பகத்தார், அவரது குழந்தைப் பாடல்களை 1941ல் தனி நூலாக இளந்தென்றல் என்ற பெயரில் வெளியிட்டார்கள். அதன் பிறகு, அவர் பாடிய குழந்தைப் பாடல்களும், முன்பு பாடிய குழந்தைப் பாடல்களும் சேர்ந்து ‘குழந்தைச் செல்வம்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இந்நூல், 1957ஆம் ஆண்டு தமிழக அரசின் கல்வித்துறைப் பரிசினைப் பெற்றது. இது நம் குழந்தைச் செல்வங்களுக்கு வற்றாத செல்வமாக என்றென்றும் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை.

தொடரும்…

குறிப்பு: 1980களில் சென்னைப் பல்கலைக்கழக நினைவுச் சொற் பொழிவு சார்பாக வெளியான ” வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற புத்தகத்திலிருந்து. தமிழ் குழந்தை இலக்கியம் வளர்ச்சியை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக இங்கு பதிவு செய்கிறோம்.

Leave a comment