தனியார்மயமாதல்:
பள்ளிக் கல்வி, உயர் கல்வி ஆகிய இரண்டு நிலைகளிலும் தே.க.கொ. தனியார்மயத்துக்கு அழுத்தந் தருகிறது. இதற்குச் சற்று நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது. 2000-இல், முதல் தேசிய மக்கள்நாயகக் கூட்டணி-I (NDA I)-இன் ஆட்சிக் காலத்தில், முகேச் அம்பானியும் குமார்மங்களம் பிர்லாவும் கல்விச் சீர்திருத்தங்களுக்கான திட்டக்கொள்கைச் சட்டகம் (PFRE) ஒன்றை வகுத்தார்கள்.
அதில்,
(அ) உயர்கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை வலியுறுத்தினார்கள்;
(ஆ) தனியார் துறையில் பல்கலைக் கழகங்கள் என்கிற கருத்தையும் தொடங்கிவைத்தார்கள்.
அப்போது அது கடுமையாகத் திறனாய்வு செய்யப்பட்டது. ஆனால், அதிலுள்ள கருத்துகள் தே.க.கொ. 2020-இல் தெளிவாகத் தெரிகின்றன. அந்த ஆவணத்தின் பரிந்துரைகளில் பல தே.க.கொ-வில் இடம் பிடித்துவிட்டன – தனியார் பல்கலைக் கழகங்கள், சந்தைமயமான கல்வி, “கற்போர் அதற்கான கட்டணஞ் செலுத்துதல்” என்கிற கோட்பாடு, கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக அனுமதித்தல் உள்ளிட்டவை அவ்வாறு இடம்பெற்றன.
கல்வித் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதை மூடி மறைக்கும் விதத்தில் “அறநோக்குள்ள பொதுக் கூட்டாண்மை” என்கிற சொல்லாடலை தே.க.கொ. 2020 பயன்படுத்துகிறது. “அறநோக்குள்ள” என்பதன் பொருள் “தனியார்” என்று கொள்ளவேண்டும். தே.க.கொ.-வில் ‘தனியார்’ என்ற சொல் எந்த இடத்திலும் தனித்து வரவில்லை; “அறநோக்குள்ள” அல்லது “பொதுநலச் சிந்தனையுள்ள” என்கிற அடைமொழிகளுடன் சேர்ந்தே கையாளப்பட்டுள்ளதுii.
“கல்வி முறைமைக்கு வழிகாட்டும் கோட்பாடுகள்” என்கிற தலைப்பில் 5-6 பக்கங்களில் உள்ள பட்டியலில் பின்வரும் வாசகம் இடம்பெற்றுள்ளது:
கல்வி என்பது பொதுச் சேவை; தரமான கல்வி பெறுவது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை என்று கருதவேண்டும்
ஆனால், அடுத்த வரிகளில் பின்வரும் வாசகத்தைக் காண்கிறோம் (பக்கம் 6):
வலுவான, உயிர்த்துடிப்புள்ள பொதுக் கல்வி முறைமையில் பெருமளவு முதலீடு செய்தல்; அத்துடன், உண்மையாகவே அறநோக்குள்ள தனியார் மற்றும் பொதுவாயத்தின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் ஏதுவாக்குதல்.
கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டிய பொதுச் சேவை என்று தே.க.கொ. கூறுகிறது; மேலும், வலுவான, உயிர்த் துடிப்புள்ள பொதுக் கல்வி முறைமை இருக்கவேண்டும் என்றும் கூறுகிறது. அப்படியானால், “அறநோக்குள்ள தனியார் மற்றும் பொதுவாயத்தின் பங்களிப்புக்கு” என்ன தேவை? அது என்ன பங்கு வகிக்கும்?
தே.க.கொ. 2020-இன் நோக்கம் தெளிவாக் குறிப்பிடப்பட்டுள்ளது: கல்வித் துறையில் தனியார் நலனை “ஊக்குவித்தல் மற்றும் ஏதுவாக்குதல்”.
தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கெனக் கடுமையான மதிப்பீட்டு முறைகளும் கண்காணிப்பு வழிகளும் இப்போது நடைமுறையில் உள்ளன. ஆனால், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிடையிலுள்ள இந்த வேறுபாடு கல்வித் துறையில் தனியார் முதலீட்டின் ஊக்கத்தை மட்டுப்படுத்துகிறது. இது தே.க.கொ. 2020-ஐ உளைச்சலுக்கு உட்படுத்துகிறது. தே.க.கொ.-வின் ஈடற்ற, பூடகமான மொழியில் சொன்னால்,
கடுமையான மதிப்பீடுகள் “தற்செயலாக [தம்மையறியாமல்] பொதுநலச் சிந்தனையுள்ள தனியார்/அறநோக்குள்ள பள்ளிகளை ஊக்கங்கெடுக்கின்றன.” (பக்கம் 30)
மேலும், அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களையும் அனுமதிக்கவேண்டும்; அது மட்டுமின்றி, அவற்றைக் கட்டுப்படுத்தும்
ஒழுங்காற்று விதிகள், ஆட்சி விதிகள், உள்ளடக்க நெறிகள் ஆகிய அனைத்தும் உள்நாட்டுத் தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களுக்கு நிகரானவையாக இருக்கவேண்டும். (பக்கம் 39)
தே.க.கொ. 2020-இல் குறிப்பாகத் தவிர்க்கப்பட்டுள்ள ஒன்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கவேண்டும்: உயர் கல்வி நிதியீட்டுக் குழுமம் (the Higher Education Financing Agency – HEFA) எனும் கூட்டு முயற்சி நிறுவனம். இதற்கு நடுவண் அமைச்சகக் குழு 2016-இல் ஏற்பளித்தது – நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல்.
தே.க.கொ-வில் இது பற்றி எதுவுமில்லை. ஆனால், 2017 முதல் அது இயங்கிவருகிறது. அதனிடமிருந்து சவகர்லால் நேரு பல்கலைக் கழகம் ஏற்கெனவே 445 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
உயர் கல்விக் கழகங்களின் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்குத் தேவையான நிதி இனிமேல் அரசிடமிருந்து நல்கையாகக் கிடைக்காது; மாறாக, HEFA-விடம் இருந்து கடனாகவே அந்த நிதியைப் பெறவேண்டும். பின்னர் உயர் கல்விக் கழகங்கள் தாமாக நிதி திரட்டி மேற்படிக் கடனை அடைக்கவேண்டும். அடிப்படையில், “பயனாளிகள் கட்டணஞ் செலுத்துதல்” எனும் கோட்பாட்டை இது செயல்படுத்துகிறது. அதாவது, மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கல்விக் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் அரசு மேற்படிக் கடன்களை அடைக்கும்.
HEFA என்பது தனியார் பல்கலைக் கழகங்களுக்கன்று; மாறாக, அரசு நடத்துவதாக நம்பப்படும் [பொதுத் துறைப்] பல்கலைக் கழகங்களே HEFA-விடம் கடன் வாங்கும் என்பதைக் கவனிக்கவும். HEFA-வின் இணையத் தளம் பின்வருமாறு கூறுகிறது:
HEFA என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் கனரா வைப்பகம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம். நாட்டின் முதன்மையான கல்விக் கழகங்களில் நிலைத்த சொத்து உருவாக்கத்துக்கு நிதியுதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. [ஆனால்] பள்ளிக் கல்வி, நடுவண் நல அமைச்சகத்தின் கீழுள்ள கல்விக் கழகங்கள், இன்னபிற நிறுவனங்களுக்கும் கடன் தருவதற்கேற்ப HEFA-வின் செயற்பரப்பு பெரிய அளவில் விரிவுபடுத்தப்படும்.
‘இன்னபிற’ என்பது, HEFA-வின் தொடுவானம் விரிவடைந்துகொண்டே போகும் என்கிற [தே.க.கொ.-வின் உட்கிடக்கையை] வெளிச்சமிட்டுக் காட்டுகிறது:
கல்விக் கட்டமைப்பு வசதி உருவாக்கத்தில் HEFA-வின் பங்கு முதன்மையாக இருந்துங்கூட, தே.க.கொ.2020 அதைப் பற்றி எதுவும் சொல்லாதது ஏன் என்கிற கேள்வி இங்கு எழுகிறது.
பொதுத் துறைக் கல்விக் கழகங்கள் என்பதிலிருந்து அடிப்படையான மாற்றத்துக்கு HEFA வித்திடுகிறது. அரசு இனிமேல் நல்கை தராது; மாறாக, கடன் தரும் அமைப்பாக அரசு மாறுகிறது; கல்விக் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் அந்தக் கடன்கள் இனிமேல் குடிமக்கள், மாணவர்கள் ஆகியோரால் திருப்பிச் செலுத்தப்படும். மேலும், இந்த முறைமை இனிமேல் பள்ளிக் கல்விக்கும் விரிவுபடுத்தப்படும். தே.க.கொ.-வுக்கு மூன்று ஆண்டுகள் முன்னதாகவே அது நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த ஆட்சியாளர்களின் ஒளிவுமறைவான நடத்தையும் பொறுப்புணர்வற்ற தன்மையும் இப்போது கற்பனைக்கெட்டாத அளவு அதிகரித்துவிட்டன.
மீண்டும் தே.க.கொ. 2020-க்குத் திரும்புவோம். “ஒளிவுமறைவற்ற அளவுகோல்களின் அடிப்படையில்” உயர் கல்விக்கு நிதி மற்றும் கடனுதவி தருவதற்கென உயர் கல்வி நல்கைக் குழு (the Higher Education Grants Council – HEGC) என்கிற அமைப்பை தே.க.கொ. ஏற்படுத்துகிறது (பக்கம் 47/18.5). கட்டமைப்பு வசதி உருவாக்கம் நீங்கலாகப் பிற தேவைகளுக்கு இந்த நல்கைகள் கிடைக்கும்.
ஆனால், அரசு சாரா நிதியுதவி பெறுவதையே தே.க.கொ. தீவிரமாக ஊக்குவிக்கிறது (பக்கம் 61/26.6):
கல்வித் துறையில் தனியார் அறநோக்குச் செயற்பாடுகளுக்குப் புத்தெழுச்சி ஊட்டுதல், தீவிரமாக ஊக்குவித்தல், ஆதரித்தல் ஆகியவற்றைத் தே.க.கொ. வலியுறுத்துகிறது. குறிப்பாக, எந்தவொரு பொதுத் துறைக் கல்வி நிறுவனமும் தன் மாணவர்கள் கல்வி பெறும் சூழலை வளப்படுத்தும் நோக்கில் அரசிடமிருந்து வழக்கமாகக் கிடைக்கும் நிதியுதவிக்கும் மேலாகத் தனியார் அறநோக்கு நிதிகளைப் பெறும் முன்முயற்சிகளில் ஈடுபடலாம்.
தனியார் உயர் நிலைக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதைத் தாமே முடிவு செய்துகொள்ளலாம் (பக்கம் 49). ஆனால்,
(அ) கட்டணப் பட்டியலை ஒளிவுமறைவின்றிக் காட்டவேண்டும்,
(ஆ) ஒரு மாணவர் கல்லூரியில் சேர்ந்த பின் அவர் அந்தப் பட்டப் படிப்பை முடிக்கும் வரை அவருடைய கட்டணங்களில் மாற்றம் செய்யக்கூடாது. புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு மட்டும் கட்டணங்களை உயர்த்தலாம். (பக்கம் 49/18.14)
தே.க.கொ. 2019 முன்வரைவானது கல்வியில் சந்தையின் பங்கு குறித்து மிக நேரிடையாக விவரித்திருந்தது. எடுத்துக்காட்டாக, சட்டக் கல்விக் கட்டணங்களைச் சந்தை தீர்மானிப்பது குறித்துப் பக்கம் 303-இலும் உயர் கல்வி நிறுவனங்களைத் தர வரிசைப்படுத்துவது குறித்துப் பக்கம் 329-இலும் குறிப்பிட்டது. இது கடுமையான திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டது; ஓர் எடுத்துக்காட்டுக்கு இந்த மேற்கோளைப் பார்க்கவும்.
மேற்கண்ட திறனாய்வுக்கு எளிமையான தீர்வை தே.க.கொ. 2020 கண்டுபிடித்தது: சந்தை வல்லாதிக்கத்தைப் பற்றி அது எதுவும் பேசவில்லை. ஆனால், [முன்வரைவில்] கல்வியில் தனியார் முதலீட்டுக்குத் தரப்பட்ட விரிவான பங்கை அது ஏற்றுக்கொண்டு உறுதி செய்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடு கல்விக்குச் செலவிடப்படும் என்கிற வாக்குறுதியைப் பெயரளவில் குறிப்பிடுகிறது தே.க.கொ. 2020; ஆயினும், தனியார்மயத்தை அதிகரித்தல் மற்றும் தன்னிதிப் பொதுத் துறைக் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தெளிவாக எதிர்நோக்குகிறது. இந்தச் செயற்பாங்கு கடந்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், “கல்வி வணிகமயமாதலைத் தடுப்பது” குறித்து 18.12 – 18.14 ஆகிய பத்திகளில் உள்ள விளக்கம் பொருளற்றதும் பாசாங்கு மிக்கதும் ஆகும்.
இந்து மேலாதிக்கம்:
தனியார்மயமாக்கலைப் போலவே [கல்வியைக்] காவிமயமாக்கல் என்பதும் தே.க.கொ. 2020-வின் மற்றுமொரு முதன்மையான உட்கிடக்கை. அதை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் வெள்ளந்தியான சொற்களில் பொதிந்து வைத்துள்ளது.
ஆர்.எச்.எச்.-ஐப் பொறுத்தவரை, “இந்தியர்” என்பது பார்ப்பனிய இந்துவைக் குறிக்கிறது; இது குறித்த சங்கேத மொழியை மேற்படி வெள்ளந்தியான சொற்கள் குறிக்கின்றன என்பதை நாம் அடையாளங் காண்கிறோம். ஆனால், இனிமேலும் தொடர்ந்து “காவிமயமாக்கல்” எனும் [ஒப்பீட்டளவில்] மென்மையான சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் சொற்களை – ஆர்.எச்.எச்.-இன் பார்ப்பனிய இந்து மேலாதிக்க உள்நோக்கத்தைத் தெளிவாகக் குறிப்பிடும் சொற்களைப் பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.
“வளமிக்க, பன்மயமான இந்தியப் பாரம்பரியம்” தே.க.கொ.-வில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், “தொடக்கமும் முடிவும் இல்லா இந்திய அறிவும்” குறிப்பிடப்படுகிறது.
அறிவு, மதிநுட்பம், உண்மை ஆகியவற்றைத் தேடுவதே மாந்தரின் மிகவுயர்ந்த குறியிலக்கு என்பது இந்தியச் சிந்தனை மற்றும் மெய்ம்மத்தின் கருத்து. (பக்கம் 4)
ஆனால், “இந்தியப்” பாரம்பரியத்தில் சில விதிவிலக்குகளுக்கு அப்பால் கீழ் சாதியினர், பெண்கள் ஆகியோருக்கு மேற்படி அறிவுத் தேடல் வாய்ப்புகள் தீவிரமாக மறுக்கப்பட்டன என்பதைப் பண்டைய இந்தியா குறித்து ஆராய்ந்தறிந்த வல்லுநர்கள் வழியே நாம் அறிவோம். பெண்களின் “வேதப் பொற்காலம்” என்பதற்கு கார்கி, மைத்ரேயி ஆகிய இரண்டே இரண்டு பெண்களை மட்டுமே எடுத்துக்காட்டுகளாகக் கூற முடியும். பக்தி இயக்கப் பாவலர்கள் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரந்த அளவில் தொடங்கிய இயக்கங்கள் ஆகியவற்றின் வலு மிக்க சாதி எதிர்ப்புப் பேச்சுகளின் பலனாகச் சமத்துவம் கோரும் முயற்சிகள் பிற்காலத்தில் எழுந்தன.
இந்நிலையில், “இந்தியச்” சிந்தனை மற்றும் மெய்ம்மம் என்கிற பெயரில் தே.க.கொ. எதைப் பற்றிக் கூற விழைகிறது?
“இந்தியக் கல்வி முறைமை உருவாக்கிய பேரறிஞர்களின்” பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. “இந்தியா” என்பது எக்காலத்தும் இருந்தது என்றும் பின்வரும் அறிஞர்களை உருவாக்கிய “இந்தியக் கல்வி முறைமை” இருந்தது என்றும் [தே.க.கொ.- உருவாக்கக்] குழு நம்புகிறது போலும்.
சாரகா, சுச்ருதா, ஆர்யபட்டா, வராகமிகிரா, பாச்கராச்சார்யா, ப்ரம்மகுப்தா, சாணக்யா, சக்ரபாணி தத்தா, மாதவா, பாணினி, பதஞ்சலி, நாகார்சுனா, கௌதமா, பிங்கலா, சங்கர்தேவ், மைத்ரேயி, கார்கி, மற்றும் திருவள்ளுவர் (பக்கம் 4)
இந்தப் பட்டியல் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டுடன் நின்றுவிடுகிறது.
கௌதமா (புத்தர்) பகுத்தறிவு மிக்கதொரு புது மதத்தை உருவாக்கியவர்; அந்த மதம் சாதிப் பிரிவினை மிக்க இந்து மதத்துக்கு அன்றும் இன்றும் பெருஞ்சவாலாக உள்ளது. ஆனால், தே.க.கொ. இதைப் பற்றிக் குறிப்பிடாமல், கௌதமா-வும் இந்தியக் கல்வி முறைமை உருவாக்கிய “அறிஞர்”களில் ஒருவராக [மட்டுமே] குறிக்கப்படுவதைக் கவனிக்கவும். மேலும், சார்வாகரின் பொருளாயத மெய்ம்மத்தைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என்பதையும் கவனிக்கவும்.
(மேற்கண்ட பட்டியலில் உள்ள பல பெயர்கள் தனி மனிதரைக் குறிப்பனவல்ல; பல நூறாண்டுகளில் தொடர்ந்து உருவாகி வளர்ந்த சிந்தனை மற்றும் அறிவுத் தொகுப்புகளைக் குறிப்பன என்றே கூரறிவுள்ள வல்லுநர்கள் கருதுகிறார்கள் என்பதைப் பற்றி நான் இங்கு மேற்கொண்டு விவாதிக்கப்போவதில்லை. அதாவது, மேற்கண்ட பெயர்களைக் கொண்ட தனி மனிதர்களை வரலாற்றில் அடையாளங் காணமுடியும் என்றபோதிலும், அவர்கள் பெயரிலுள்ள இலக்கியங்கள் முழுக்க அந்தத் தனி மனிதர்களால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் “எழுதப்பட்டவை” அல்ல என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இலங்கையைச் சேர்ந்த அறிஞர் பேட்ரிக் ஓலிவெல் சாணக்யர்/கௌடில்யர் என்பவரைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்க்கவும்.
தே.க.கொ. பண்டைய இந்தியாவைப் பற்றித் தொடர்ந்து பேசுகிறது. அதன் பிறகு, உடனடியாக 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவைக் குறித்துப் பேசத் தொடங்கிவிடுகிறது. இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் சிந்தனையும் ஆழ்ந்த பேரறிவும் துளிர்க்கவில்லை என்று சொல்வதைப் போல உள்ளது இந்தச் செயற்பாடு.
ஆர்.எச்.எச்.-இன் பின்வரும் இரண்டு செயற்திட்டங்களும் இங்கு தெளிவாகத் தெரிகின்றன:
அ) இச்லாம் அல்லாத பிற மதங்களை இந்து மதத்துக்குள் உள்வாங்குதல்,
ஆ) இச்லாமிய மற்றும் வடமொழி/பார்ப்பனியம் சாராத பாரம்பரியங்களை “இந்தியப் பாரம்பரியம்” என்பதில் இருந்து ஒதுக்கிவைத்தல்.
இந்தியா என்பதைக் குறித்து இவ்வளவு காலாவதியான, வரலாற்றுப் பொருத்தமற்ற, ஏறக்குறைய புராணக் கதைகளைப் போன்ற பார்வையை 21-ஆம் நூற்றாண்டுக்கான தேசியக் கல்வித் திட்டக்கொள்கை முன்வைக்கிறது என்பது அதிர்ச்சியூட்டுகிறது. ஆனால், இந்தியாவின் தொடக்கமும் முடிவுமில்லாத அறிவுப் பாரம்பரியங்களைப் போற்றுகிற அதே வேகத்தில் [தே.க.கொ] நாட்டின் கல்வியைத் தனியார் முதலம் மற்றும் அந்நிய நிறுவனங்கள் வசம் ஒப்படைத்துவிடுகிறது என்பது பேரதிர்ச்சியளிக்கிறது. அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் கண்டிப்பாக “அழிவற்ற இந்திய அறிவின்” தேவைகளுக்கேற்பத் தம் பாடத்திட்டங்களை வகுக்கப்போவதில்லை என்பது உறுதி; இல்லையா?
தே.க.கொ. 2020 என்பது ஆர்.எச்.எச்.-இன் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் மற்றுமொரு வாசகம் வருமாறு. அடிப்படைக் கடமை மற்றும் அரசியற்சட்ட விழுமியங்களைப் பற்றி தே.க.கொ. பல இடங்களில் பேசுகிறது. ஆனால் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. பக்கம் 16/4.28-இல் பின்வரும் 29 அமைப்பு விழுமியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை நாம் முதன்மையாகக் கவனிக்கவேண்டும்.
சேவை, அகிம்சை, தூய்மை, உண்மை, தன்னலமற்ற செயற்பாடு, அமைதி, ஈகம், பொறையுடைமை, பன்மயம், பன்மைவாதம், நியாயமான நடை, பாலினக் கூருணர்வு, மூத்தோருக்கு மரியாதை தருதல், பின்புலத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய உள்ளுறைத் திறன்களுக்கும் மரியாதை தருதல், இயற்கைச் சூழலை மதித்தல், உதவியாக இருத்தல், நன்னயத்துடன் நடந்துகொள்ளல், பொறுமை, மன்னித்தல், ஒன்றுணர்ச்சி, கருணை, நாட்டுப் பற்று, மக்கள்நாயகப் பார்வை, நேர்மை, சகிப்புத் தன்மை, (இறுதியாக!) நீதி, பன்முக விடுதலை, சமன்மை, மற்றும் உடன்பிறப்பாண்மை.
இவை எந்த அமைப்பின் விழுமியங்கள்? ஆர்.எச்.எச்.-இன் கல்விக் கிளையான வித்யா பாரதி உருவாக்கிய பின்வரும் பட்டியலுடன் இதை ஒப்பிடுங்கள்:
‘வித்யா பாரதிப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டப்படும் பத்துப் பண்புகள்’ என்று கூறப்பட்டுள்ளவை இவை:
1. கடவுளுக்கும் இயற்கைக்கும் நன்றியுடன் இருத்தல்,
2. இந்து பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கு மரியாதை தருதல்,
3. நாட்டுப் பற்று,
4. பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்துதல்,
5. ஒழுங்குபடுத்திய வாழ்க்கை,
6. சட்டத்துக்குக் கீழ்ப்படிதல் மற்றும் மரியாதை தருதல்,
7. கடின உழைப்பு,
8. குமுகத்துக்குப் பயன்படும் உருப்படியான வேலைகளில் கூட்டுறவு,
9. பொது நலனுக்கு ஈகஞ் செய்தல்,
10. சேவை மனப்பான்மை.
இவ்விரு பட்டியல்களுக்கும் உள்ள ஒத்திசைவு தெரிகிறதா?
பலனை எதிர்பார்க்காத சேவை என்பது 29 விழுமியங்களில் ஒன்று. அது பகவத் கீதையில் இருந்து பெறப்பட்டது; ஆர்.எச்.எச். தொடர்ந்து வலியுறுத்துவது. ஆழ்ந்த மெய்ம்மவியல் பின்னணியுள்ள இந்தக் கருத்துப்படிவம் பார்ப்பனியச் சாதிப் படிநிலைக்குப் பேருதவியாக உள்ளது.
இப்படியாக, அமைப்பு விழுமியங்கள் எனக் குறிக்கப்படுவன ஆர்.எச்.எச். முன்வைக்கும் விழுமியங்களே. இந்து அரசியத்துக்குத் தேவை என்று ஆர்.எச்.எச். கருதும் 25 விழுமியங்களை முதலில் பட்டியலிட்டுவிட்டு இறுதியாகவே இந்திய அரசியற்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு விழுமியங்கள் (நீதி, விடுதலை, சமன்மை, மற்றும் உடன்பிறப்பாண்மை) பிற்சேர்க்கையாக இடம்பெற்றுள்ளன. தே.க.கொ. ஆவணம் தொடர்பான விவாதங்களில் இது பெரும்பாலும் கண்டுகொள்ளப்படவில்லை.
தே.க.கொ. 2020-இல் இடம்பெற்றுள்ள ஆர்.எச்.எச்.-க்கு இசைவான முழக்கங்களில் இறுதியானது ‘இந்தியா உலகுக்கே ஆசான்’ என்கிற மாயை. இந்து அரசியத்துக்கு ஆர்.எச்.எச். வழங்கிய பட்டம் இது.
கட்டுப்படியாகும் செலவில் உயர்தரக் கல்வியைத் தருவதன் மூலம் உலகளவில் கல்விக்கு உகந்த இடமாக இந்தியா முன்வைக்கப்படும். [அதன் மூலம்] உலகுக்கு ஆசானாக இருந்த இந்தியாவின் [வரலாற்றுப்] பங்கு மீண்டும் நிலைநிறுத்தப்படும். (பக்கம் 39/12.8)
உலகுக்கே ஆசான் என்று இந்தியாவை யார் அறிவித்தார்கள், ஆர்.எச்.எச்.-ஐத் தவிர? அந்த நிலைமையை “மீட்க” வேண்டுமென்று [தே.க.கொ.-வில்] குறிப்பிடவேண்டிய தேவை ஏன் வந்தது.
மெய்ம்மம், அறிவியல் ஆகிய துறைகளில் இந்தியத் துணைக் கண்டம் பல்வேறு பாரம்பரியங்களில் இருந்து வளமான பொருட்குவைகளை உருவாக்கியிருப்பதைக் கல்வியாளர்களும் பேராசிரியர்களுமான நாம் நன்கு அறிவோம். ஆனால், இவற்றை ஏற்கும் அறிவு வளம் ஆர்.எச்.எச்.-இடம் இல்லை. ஐரோப்பாவை நடுவமாகக் கொண்ட பார்வை இப்போது இந்தியாவிலும் உலகளவிலும் வெற்றிகரமாகக் கடுமையான திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. [இந்தியா உள்ளிட்ட] தெற்குலகின் சிந்தனைகள், அறிவுத் திறன்கள் ஆகியவற்றின் வரலாற்றுப் பேழைகள் உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்களால் வெளிக்கொணரப்பட்டுள்ளன. ஆயினும், அரைகுறைக் கல்வியறிவுடன் கண்மூடித்தனமாக இந்தப் பேரறிவின் மிகக் குறுகிய, வட்டார அளவிலான பகுதியை மட்டுமே பார்க்கும் சகதியில் ஆர்.எச்.எச்.-உம் தே.க.கொ. 2020-உம் சிக்கியுள்ளன. நடைமுறையில், கல்வித் துறையை முழுக்கவும் தனியாருக்குத் தாரை வார்க்கும் செயற்பாடுகளில் அவை ஈடுபடுகின்றன.
இந்து மத மேலாதிக்கமும் கொள்ளையடிக்கும் முதலமும் இன்று இந்தியாவைத் தாக்கும் இரண்டு வல்லாற்றல்கள். அவ்விரண்டுக்கும் இடையிலான சமரசப் போக்குக்கு தே.க.கொ. முதன்மையான எடுத்துக்காட்டு.
தே.க.கொ.-வில் உள்ள கவலையளிக்கும் வேறு சில முதன்மைக் கூறுகளைப் பற்றி இனிப் பார்க்கலாம்.
தொடரும்…
ஆங்கில மூலக் கட்டுரையாளர்: நிவேதிதா மேனன் (2020 செப். 08)
தமிழாக்கம்: பரிதி
கட்டுரையை முழுமையாக வாசிக்க :