குழந்தைகளுக்காக எத்தனை எத்தனையோ நாட்டோடிப் பாடல்கள் தமிழ் மொழியில் வாயமொழியாக வழங்கிவந்திருப்பினும், நூல் வடிவிலே குழந்தைப் பாடல்களைத் தந்த பெருமை ஒளவையாருக்கே உரியது எனச் சிலர் கருதுகின்றனர்.
அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
என மிகச் சிறிய குழந்தைகளுக்கும்,
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
எனச் சற்று வளர்ந்த குழந்தைகளுக்கும் ஒளவையார் அகர வரிசையில் பாடல்களை அமைத்துத் தந்துள்ளார் எனவும் அவர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.
குழந்தைகளை மனக்கண்முன் நிறுத்தி இப் பாடல்களை ஒளவையார் பாடியிருப்பாரா என்பது ஐயத்திற்குரியது. படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் பயன்படும் வகையில் பழமொழி போல் இப்பாடல்களை ஒளவையார் பாடியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில் டாக்டர் மு.வரதராசனார் ஒளவையாரின் ஆத்திசூடியுடன் பாரதியாரின் ஆத்திசூடியையும் சேர்த்துத் தமது கருத்தைக் கூறுகிறார்:
‘இவற்றில் குழ்நதைகளின் அறிவுக்கு எட்டாத ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன. சிறுசிறு சொற்களால், சில தொடர்களால் அமைந்தமை பற்றிச் சிறுவர்களின் இலக்கியம் என்று சொல்லிவிட முடியாது. அவற்றின் வடிவமா மட்டுமே குழந்தை இலக்கியத்திற்கு உரியது. அவற்றின் பொருள் மனத்துக்கு எட்டாதது.’
ஒளவையாரின் மறறொரு நூலான ‘கொன்றை வேந்தன்’ ஒளவையாரைப் பின் பற்றி அதிவீர ராம பாண்டியன் இயற்றிய ‘வெற்றி வேற்கை’, உலகநாத பண்டிதரின் ‘உலக நீதி’ இவற்றில் எதையுமே சிறுவர் இலக்கியத்தில் சேர்க்க இயலாது.
கிரேக்க அறிஞரான, ஈசாப் கூறிய கதைகளின் எதையுமே அவர் குழந்தைகளுக்காகக் கூறவில்லை. நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஆங்காங்கே அவர் மக்கள் மத்தியில் கதைகள் கூறிவந்தார். குட்டிக்குட்டிக் கதைகளாக அவை இருந்ததாலும், பெரும்பாலான கதைகளில் மிருகங்களும் பறவைகளுமே இடம் பெற்றிருந்தாலும், சிறுவரும் அக் கதைகளை கேட்டு மகிழ்ந்தனர். அச் சிறுகதைகளுக்கு புது மெருகிட்டு அவற்றை இன்று பல மொழிகளிலும் குழந்தை இலக்கிய மாக்கிவிட்டனர்!
ஈசாப்பை போலவே மக்கள் மத்தியில் ஒளவையாரும் அதிவீர ராம பாண்டியரும், உலகநாத பண்டிதரும் நீதிகளை எடுத்துக் கூறிய பாடிய பாடல்களை சிறுசிறு சொற்களால், சிறிய வடிவத்துடன் அமைந்ததால் பிள்ளைகள் பாடுவதற்கு ஏற்றவகையாகக் கருத்தப்பட்டிருக்க வேண்டும்.
‘ஆத்திசூடி’, ‘கொன்றைவேந்தன்’, ‘வெற்றி வேற்கை’, ‘உலக நீதி’ ஆகிய நூல்களை முற்றிலும் படித்தவர்கள் இக் கருத்தை ஏற்பார்கள் என்பது திண்ணம்.
ஆத்திசூடியில்
தையல் சொல் கேளேல்
மெல்லினல்லாள் தோள் சேர்
மோகத்தை முனி
மை விழியார் மனை அகல்
வீடு பெற நில்
எனவும்,
கொன்றை வேந்தனில்
ஒருவனைப் பற்றி ஓரகத்திரு
சந்ததிக் கழகு வந்தி செய்யாமை
பிறன் மனைபுகாமை அறம் எனத்தகும்
மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
எனவும் ,
உலக நீதியில்,
கற்புடைய மங்கையரைக்
கருத வேண்டாம்
வாழாமல் பெண்ணைவைத்துத்
திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும்
சொல்ல வேண்டாம்
கொண்டை மேல் பூத்தேடி
முடிக்க வேண்டாம்
எனவும் கூறப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்தே இப்பாடல்கள் குழந்தைகளுக்காகவே பாடப் பெற்றவை அல்ல என்பது புலனாகும். இப்பாடல்கள் அனைத்தும் நீதிபோதனைப் பாடல்களாகவே அமைந்துள்ளன.
இவற்றில் பல, உயர்ந்த கருத்துக்களையும் சிறந்த நீதியையும் உள்ளடக்கியுள்ளன என்பது உண்மை தான். ஆயினும், அச் செய்யுள்களின் பொருள் இக்காலக் குழ்நதைகளுக்குப் புரிவதில்லை. வடிவம் சிறிதாயிருப்பதால் எளிதில் அவற்றை மனனம் செய்துவிடுகின்றனர். வளர்த்து பெரியவர்களானதும் அச் செய்யுள்களின் உட்பொருளை உணர்ந்து மகிழ, அவற்றின்படி நடக்க வாய்ப்பு ஏற்படலாம்.
இத்தகைய செய்யுள்கள் குழந்தைகளின் உள்ளத்தை எவ்வளவு தூரம் கவரும், குழந்தைகளுக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளிக்கும் என்பதுதான் கேள்வி. பொருள் புரியாதிருப்பதால் குழந்தைகளால் அவற்றை அனுபவிக்க முடிவதில்லை. எளிய நடையில் இனிய சந்தத்தில் உள்ளத்தை நேரிடையாகத் தொட்டு உணர்ச்சியைத் தூண்டும் பாடல்களை சின்னஞ்சிறுவருக்குத் தேவை என்பதை இன்றைய(1980ல்) கல்வி நிபுணர்கள் ஒப்புக்கொண்டு அதற்கேற்றவாறு மாறுதல்கள் செய்துவருவது வரவேற்கத் தக்கது.
மகாகவி பாரதியார், கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை போன்றவர்களின் குழந்தைப் பாடல்களை ஒருமுறை பாடியதுமே, குழந்தைகள் பொருளை உணர்ந்து கொள்கின்றனர். அவற்றைப் பாடும்போது, அவர்களுக்கு உற்சாகம் பிறக்கிறது. உணர்ச்சி பொங்குகிறது. கற்பனை பெருக்கவும் வாய்ப்புக் கிட்டுகிறது.
தற்போது வெளிவரும் (1980ல்) குழந்தைப் பாடல்களில் சில குழந்தைகளைப் பற்றிய பாடல்களாக இருக்கக் காண்கிறோம். குழந்தைக்களுக்கான பாடல்களுக்கும் குழந்தைகளைப் பற்றிய பாடல்களுக்கும் உள்ள வேற்றுமையைச் சரிவர உணராத குறையே இது.
குழந்தை இலக்கியத்தைப் பற்றிப் பேசுகின்ற சிலர், ‘தமிழில் குழந்தைப் பாடல்கள் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருகின்றன; 96 சிற்றிலக்கியங்களில் ஒன்றாகப் பிள்ளைத்தமிழை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்’ எனக் கூறி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் பாடிய , ‘குலோத்துங்கன் பிள்ளைத் தமிழையும்’, குமரகுருபரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை’யும் சான்று காட்டுகின்றனர்.
உள்ளங் கவர்ந்த தெய்வத்தை அல்லது உயர்வு பெற்ற அரசனை அல்லது மக்களால் மதிக்கப் பெரும் மாண்புடைய பெரியோரைப் பிள்ளையாகப் பாவைத்து பாடுவதுதானே பிள்ளைத் தமிழ்? அது எவ்வாறு குழந்தை இலக்கியமாகும்?
இதேபோல் தான் குழந்தைகளை வருணித்துப் பாடும் பாடலும் குழந்தை இலக்கியம் ஆகாது என்பதை அறிவோம்.
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.
எனக் குழந்தையின் செயலையும் சிறப்பையும் எடுத்துக் கூறும் பாண்டியன் அறிவுடைநம்பியின் பாடலைக் குழந்தை இலக்கியம் எனக் கொள்ள இயலுமா?
குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்களையும் குழந்தை இலக்கிய வகையில் சேர்க்க இயலாது.
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
முத்தே பவழமே முக்கனியே சர்க்கரையை !
வண்ணமணித் தொட்டிலிலே, வாய்த்த செம்பொற்கட்டிலிலே
கண்ணே என் கண்மணியே, கற்பகமே நித்திரை செய்!
குழந்தையின் அழகையும் பேச்சையும் அதன் செயலையும் சிறப்பித்துத் தாய் பாடும் இத்தகைய தாலாட்டுப் பாடல்களை குழந்தை இலக்கியத்தில் சேர்க்க இயலாது. என்றாலும் குழந்தைக்கு இசையிலே ஊர் ஈடுபாட்டையும், மொழியிலே ஒரு பற்றையும் ஊட்டுவதற்கு அடித்தளமாக அமைவது தாலாட்டுப் பாட்டுத்தான். சற்றே வளர்ந்த குழந்தைக்கு தாய்மாருக்கு உதவியாகத் தம்பி தங்கைகளைத் தாலாட்டித் தூங்க வைக்க இப்பாடல்கள் பெரிதும் துணைபுரிகின்றன. இதை மனத்தில் கொண்டே சில கவிஞர்கள் தங்கள் குழந்தைப் பாடல் தொகுதியில் தாலாட்டையும் சேர்த்துள்ளனர் எனத் தெரிகிறது.