முதலாளித்துவத்தின் சுருக்கமான வரலாறு – சிவா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உங்களால் எளிமையாக ஒன்றை மற்றவருக்கு விளக்க முடியவில்லை என்றால் இன்னும் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள் என்று சொல்வார்கள். மற்றவர்களுக்கு விளக்குவதைக் காட்டிலும் இன்னும் கடினமானது சிறார்களுக்கு விளக்குவது. கேள்வி கேட்பது தான் குழந்தைகள் இயல்பு என்று எல்லோருமே ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அக்கேள்விகளுக்கான விடையை எப்போதும் நம்மால் கொடுத்து விட முடிகிறதா?

கடவுள் உண்டா, இறப்புக்கு பின் என்ன, பறவையைப் போல நம்மால் ஏன் பார்க்க முடியவில்லை போன்ற கேள்விகளுக்குக் கூடக் குழந்தைகளுக்கு ஓரளவுக்கு புரியும்படி பதில் சொல்லி விடலாம். ஆனால் பணம், பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது சற்றே கடினம். ஏனென்றால் நம்மில் பெரும்பாலோனோருக்கே அவற்றைப் பற்றிய பெரிய புரிதல் இருக்காது. நம் எல்லோர் வாழ்விலும் பின்னிப் பிணைந்த, இன்னும் சொல்லப் போனால் நம் வாழ்க்கையையே தீர்மானிக்கும் இடத்தில் உள்ள பொருளாதாரத்தைப் பற்றிப் பொது வெளிகளிலும் விவாதங்கள் குறைவு. இந்தச் சூழ்நிலையில் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்காகப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசினால் எப்படி இருக்கும்? அதுவும் அந்தத் தந்தை பொருளாதாரத்தில் வல்லுநராகவும், ஒரு நாட்டிற்கே நிதி அமைச்சராக இருந்த அனுபவமும் உடையவர் என்றால் அவர் எப்படித் தன்னுடைய மகளுக்கு விவரித்திருப்பார்? அது தான் யானிசு வரொபாக்கிசு எழுதிய “பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் – முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு” புத்தகம்.

யானிஸ் வருஃபாகிஸ் கீரீசு நாட்டின் ஏத்தென்சில் பிறந்தவர். பல்வேறு மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கிரீசு நாட்டுக்கு 2015-இல் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் இந்தப் புத்தகத்தை இப்படித் தொடங்குகிறார்: ‘எல்லாக் குழந்தைகளும் அம்மணமாகவே பிறக்கின்றன. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே சில குழந்தைகள் விலையுயர்ந்த பட்டாடைகள் உடுத்துகின்றன, மற்ற குழந்தைகளுக்குக் கந்தலாடை தான் கிடைக்கிறது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? ஒரு வகையில் இந்தக் கேள்விக்கான தேடலே இந்தப் புத்தகம் என்று கூட சொல்லலாம். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? மனிதம் அவ்வளவு முட்டாள்தனமானதா?’ எனத் தன் மகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல அவர் ஆசுதிரிலேயாவில் வாழும் பழங்குடிகளிடம் இருந்து தொடங்குகிறார். ஏன் இங்கிலாந்து ஆசுதிரேலியா மீது படையெடுத்துப் பழங்குடிகள் மீது வன்முறையைச் செலுத்தியது? ஆசுதிரேலியப் பழங்குடிகள் ஏன் இங்கிலாந்திற்குப் படையெடுக்கவில்லை என்கிற கேள்வியில் ஒளிந்திருக்கிறது என்கிற பீடிகையுடன் ஆரம்பிக்கிறார். வேட்டையாடும் சமூகம் வேளாண்மை செய்யத் தொடங்கியவுடன் உபரி கிடைக்கிறது. வேட்டையில் கிடைக்கும் உணவு அன்றாடத் தேவைகளை மட்டுமே நிறைவு செய்யும். அதை உபரியாகச் சேமித்து வைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் வேளாண்மையில் அரிசி உள்ளிட்ட பண்டங்கள் உபரியாகக் கிடைக்கின்றன. ஒரு இடத்தில் உபரி கிடைக்கிற போது அதைச் சேமிக்கக் கிடங்கு, அந்த கிடங்கைப் பாதுகாக்கக் காவல், அந்தக் காவலை மேலாண்மை செய்ய அரசு என மொத்த அதிகாரக் கட்டுப்பாடுகளும் வந்து விடுகின்றன என்கிறார் ஆசிரியர். ஆசுதிரேலியப் பழங்குடிகள் வேட்டையாடித் தங்கள் அன்றாடத் தேவையைத் தீர்த்துக் கொண்டார்கள். இங்கிலாந்து வேளாண்மை செய்து, அதன் மூலம் கிடைக்கும் உபரியின் மூலம் அதிகாரக் கட்டமைப்புக்குள் வந்து விடுகிறது.

அடுத்தடுத்த பக்கங்களில் இந்த உபரி எப்படி சமூகத்தின் ஒரு கூறாக விளங்கிய சந்தையை மாற்றி, மொத்தச் சமூகமும் சந்தையைச் சுற்றிப் பின்னப்பட்டதாக மாற்றியது என்பதை மிக எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். கடனுக்கும் உபரிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஒரு இயலில் விவரிக்கிறார். அதில் கடன் என்பது உபரியைப் பெருக்குவதற்கான வழியாக மாறி, கடன் வாங்குதல் மற்றும் திரும்பிச் செலுத்துதலைச் சந்தைச் சமூகம் எவ்வாறு இயல்பான ஒரு செயலாக மாற்றிற்று என்பதை விவரிக்கிறார். வங்கிகள் பற்றித் தனியாகவே ஒரு இயலில் கூறுகிறார். வங்கிகள் எவ்வாறு செப்படி வித்தை போலக் காற்றிலிருந்து பணத்தைப் பறித்துக் கடனாக கொடுத்துத் தங்களை வளர்த்துக் கொண்டார்கள் என்பதைக் கூறுகிறார். இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் மேல்மட்டத்தின் நடக்கும் ஊழல்களும், அதன் மூலம் சாதாரண வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வங்கிகள் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கும் காலகட்டத்தில் நாம் இருப்பதும் நினைவில் வந்து செல்கிறது.

தமிழைப் போலவே ஆசிரியரின் தாய் மொழியான கிரேக்கத்திலும் வளமையான இலக்கியங்களும் தொன்மங்களும் உண்டு. அவற்றில் இருந்து பல்வேறு கதைகளை தனது கருத்தை விளக்குவதற்காக எடுத்துக் கொள்கிறார். கிரேக்கத் தொன்மங்கள் மட்டுமல்லாது பதினாறாம் நூற்றாண்டின் இலக்கியங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகள், இன்னும் நமக்கு நெருக்கமாக ஆங்கிலத்தில் வந்த மிகப்பிரபலமான மாட்ரிக்சு திரைப்படத்திலிருந்தும் கூட எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார். பூமியில் பிறக்கும் எந்த ஒரு உயிரினமும் தன்னுடைய புறவயச்சூழலுடன் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்கிறது. அதன் மூலம் தான் பிழைப்பது மட்டுமல்லாது தான் இருக்கும் சூழலிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக்கொள்கிறது. ஆனால் இரண்டு உயிரினங்கள் மட்டுந் தான் தான் இருக்கும் சூழலையே சிதைக்கத் தயங்குவதில்லை. ஒன்று நுண்ணியிரியான வைரசு, மற்றொன்று மனிதன். மனிதனும் வைரசு போல பூமியிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்கிற கருத்தை மாட்ரிக்சு திரைப்படத்தில் வரும் இயந்திரங்கள் கொண்டு இருக்கும். ஆனால் ஆசிரியர் மனித இனம் வைரசை விட இன்னும் கொடியவர்கள் என்கிறார். எல்லா வைரசுகளும் தான் இருக்கும் உயிரினத்தை அழிப்பதில்லை. ஆனால் மனித இனம் தெரிந்தே இந்த பூமியை அழிக்கிறது, உபரி என்கிற பெயரால்.

இதற்கான தீர்வாக என்ன இருக்க முடியும் என அலசுகிறார் ஆசிரியர். முதலாளித்துவவாதிகளிடம் கேட்டால் பூமியைக் காப்பாற்றுவதைக் கூட நாம் சந்தைப் படுத்த வேண்டும் என்பர். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு நாடும் இவ்வளவு கரியம் (carbon) தான் வெளியிட வேண்டும் என்கிற ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அளவு கரியத்தை வெளியிடாவிட்டால், மீதியை வெளியேற்றுவதற்கான உரிமத்தை வேறு நாட்டுக்கு விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம். Carbon credit என்று இதைச் சொல்வார்கள். இதைப் போல எல்லா இயற்கை வளங்களையும் தனியார்மயப்படுத்துவதே அந்த வளங்கள் அழியாமல் காப்பதற்கான வழி என்றும் முதலாளித்துவவாதிகள் கூறுவர். ஆனால் சந்தைப் பொருளாதாரம் இதற்கான தீர்வு இல்லை, ஏனென்றால் பூமியை அழித்து அதன் மூலம் பூமியைக் காப்பாற்ற முடியாது. கண்ணை விற்று ஓவியத்தை வாங்குவது போலத் தான் அது.

இதற்கு மாற்றாக அவர் முன் வைப்பது மிக வெளிப்படையான ஒரு சனநாயகச் சமூகத்தை உருவாக்குவது. எல்லாவற்றையும் சந்தைப்படுத்து என்கிற கூக்குரலை விட, எல்லாவற்றையும் சனநாயகப்படுத்துங்கள் என்கிற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்கிறார். சனநாயகத்தில் இலஞ்சம், ஊழல், மக்களை ஏமாற்றுவது போன்றவைகளும் இருக்கின்றன என்பதை மறுக்கவில்லை ஆசிரியர், ஆனால் ஏழைபணக்கார வித்தியாசம் கூடிக் கொண்டே போவதைத் தடுக்க, மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச் சூழல் சீர்கேட்டிலிருந்து புவி வெப்பமயமாவதைத் தடுக்க, மனித இனம் இந்த உலகில் பிழைத்திருக்க சனநாயகம் என்கிற பழுதுகளுடன் உள்ள கருவி மட்டுமே நம்மிடம் உள்ளது. அதனை இன்னும் உறுதியாகக் கைக்கொள்ள வேண்டும் என்கிறார்.

வளரிளம் பருவத்தினர் நிச்சயமாக இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தாண்டிப் பருந்துப் பார்வையில் நம்மைச் சுற்றி நடப்பவை பற்றிப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அறிந்து கொள்ள இந்நூல் உதவும். அடுத்த முறை உங்கள் மகனோ அல்லது மகளோ ஏன் உலகில் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் உள்ளன என உங்களிடம் கேட்டால் தயங்காமல் இந்த நூலின் பக்கங்களைப் புரட்டுங்கள்.

Leave a comment