குழந்தைப்‌ பாடல்கள்‌ – ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா (வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – 2)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அருமைக் குழந்தையை அன்போடு பாலூட்டிச்‌ சீராட்டிக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறாள் தாய்.குழந்தையை வளர்ப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்குத் துணை நிற்கிறது பாட்டு. ஆம்! குழந்தையின் அழுகையை நிறுத்தி அமைதியாகத் தூங்க வைக்க வேண்டுமா? உடனே தாலாட்டுப் பாடுகிறாள். கையை ஊன்றித் தரையிலே உட்காரும் குழந்தை முன்னும் பின்னும் சாய்ந்தாடு வேண்டுமா ? “சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு” என்று பாட ஆரம்பிக்கிறாள். நன்கு உட்காரத் தெரிந்த குழந்தை, கை வீசிக் களிப்போடு இருக்க வேண்டுமா? “கை வீசம்மா. கை வீசு” என்ற பாட்டு உதவிக்கு வருகிறது. குழந்தை சாப்பிடாமல் அடம் பிடிக்கிறதா? இதோ அதற்கும் ஒரு பாட்டு;

“கொக்குக்கு ஒரு வாய், குருவிக்கு ஒரு வாய்,
காக்கைக்கு ஒரு வாய், என் கண்ணுக்கு ஒரு வாய் ”

என்று சொல்லிக்‌ கொண்டே குழந்தையின்‌ வாய்க்குள் சோற்றை அனுப்பி விடுகிறாள் அன்னை.

இப்படி குழந்தைக்கு உணவூட்டுவது போல், பாட்டின் மேல் இயற்கையாக உள்ள ஆர்வத்தையும் ஊட்டி வளர்த்து வருகிறாள் தாய். பிறந்தது முதல் பாட்டிலே ஊரித் திளைத்துவரும் குழந்தை, தனக்குப் பேசத் தெரிந்த பிறகு சும்மா இருக்குமா? தனது மழலை மொழிகளால் பாடத் தொடங்கிவிடுகிறது.

அப்படிப் பாடும் போதுதான் அதற்கு எவ்வளவு இன்பம்! எத்துணைக் கொண்டாட்டம்!

குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பரம்பரை பிரம்பரையாகப் பாடல்கள் மூலம் வளர்த்து வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பழங்காலத்துப் பாடல் என்றாலே எளிதாகப் பொருள் விளங்காது. பண்டிதர் துணையும் பலநாள் உழைப்பும் நமக்கு வேண்டும் அதைப் புரிந்துக்கொள்ள. அப்படியிருந்தும், எளிய நடையில் இனிய சந்தத்தில் பல குழந்தைப் பாடல்கள் தொன்று தொட்டு நம் நாட்டிலே வழங்கி வருவதை நாம் அறிவோம். “நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடி வா” என்று நிலவைப் பற்றியும் “ஆனை ஆனை அழகர் ஆனை” என்று யானையைப் பற்றியும் பாடுகின்ற குழந்தை, “காக்கா காக்கா எங்கே போனாய்? இறை தேடப் போனேன்” போன்ற வினா-விடைப் பாடல்களையும் மிகுந்த குதூகலத்துடன் பாடுகிறது.

கண்ணாமூச்சிக்கு ஒரு பாட்டு;சடுகுடுவுக்கு ஒரு பாட்டு;நொண்டி ஆட்டத்திற்கு ஒரு பாட்டு எனக் குழந்தைகள் விளையாடும்போது பாடுவதற்கேற்ற பல பாடல்களும், “எட்டு நாளைக்கு முன்னாலே செத்த பாம்பை – நான்  எட்ட இருந்து அடிச்சுடுவேன் நாராயணா” போன்ற வேடிக்கைப் பாடல்களும் குழந்தைகளின் குதூகலத்தை மிகுதிப்படுத்துகின்றன.

நாடோடிப் பாடல்களில் கதை பாடல்களும் உண்டு. “சுண்டெலி ராஜனுக்கு கல்யாணமாம்”,”கதையாம் கதையாம் காரணமாம், காரத்திலே ஒரு தோரணமாம்” என்றெல்லாம் ஆரம்பமாகும் பாடல்களை இன்னும் சில இடங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இப்படிக்கு குழந்தை பருவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளங்கவரும் ஒரு பெரும் சக்தியாக விளங்குகிறது பாட்டு என்பதை நாம் நன்கறிவோம். குழந்தை அடைவதோ ஓசை இன்பம். ஓசை இன்பத்திலே மனம் ஒன்றி மெய்ம் மறக்காத குழந்தையே இல்லை என்று கூறிவிடலாம்.

திரு.கி.வி.ஜகந்நாதன் கூறுகிறார்: “குழந்தையையும் தெய்வத்தையும் வசப்படுத்தப் பெரியார்கள் கண்டுபிடித்த தந்திரங்களுள் பாட்டும் ஒன்று…..மலரால் அருச்சனை செய்வதைக் காட்டிலும், பாட்டால் அருச்சனை செய்வதைக் கடவுள் விரும்புகிறாராம். கடவுள் பாட்டை விரும்புவதும் விரும்பாததும் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமல்ல. ஆனால், குழந்தை பாட்டிலே லயித்துப்போவதைக் கண்கூடாகக் காணலாம்”

இந்தப் பாடல்களையெல்லாம் எத்தனையோ நூற்ராண்டுகளாக வாயமொழியாகவே வந்திருக்கின்றன என்பது மட்டுமே நமக்கு தெரிகின்றது. இவற்றை யார் பாடினார்கள், எப்போது பாடினார்கள், அவர்கள் எங்கு பிறந்தார்கள், எங்கு வாழ்ந்தார்கள் என்பவனவெல்லாம் நமக்குத் தெரியாத போனாலும், ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது. அவர்கள் வாழையடி வாழையாக வரும் குழந்தை குலத்திற்கு வற்றாத இன்பம் தரும் செல்வத்தைத் தேடி வைத்துச் சென்றிருக்கிறார்கள். இதில் ஐயம் இல்லை.

நாடுகளிலும் நகரங்களிலும் காடுகளிலும் கழனிகளிலும் பாடுவதற்கு ஏற்றவாறு நம் முன்னோர்கள், பெரியவர்களும் சிறுவர்களுக்கும் அழைத்த நாடோடிப் பாடல்கள் என்னும் அரிய செல்வம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது. அனைத்துமே அழிந்தொழித்து போகுமா என்று ஐயம் சிலருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக சிலர் இவை போன்ற பாடல்களைத் திரட்ட முற்பட்டனர். அவற்றை வகைப்படுத்திப் புத்தகங்களாகவும் வெளியிட்டுள்ளனர். இப்புத்தகங்களிலே குழந்தைகளுக்கேற்ற பல பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

குழந்தைகளுக்கான நாடோடிப் பாடல்களில் சிலவற்றை படங்களும் வெளியிடும் முயற்சி 1939ல் மேற்கொள்ளப்பட்டது. அன்று தமிழாசிரியர் மு.வரதராசனாயிருந்த டாக்டர் மு.வரதராசனார் தமிழில் வெளிவந்த பல குழந்தைப்பாடல்களுடன் தாமும் சிலபாடல்களை இயற்றி “குழந்தைப் பாட்டுக்கள்” என்ற பெயரில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வாயிலாக வெளியிட்டிருக்கிறார்.

தொடரும்…

குறிப்பு: 1980களில் சென்னைப் பல்கலைக்கழக நினைவுச் சொற் பொழிவு சார்பாக வெளியான ” வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற புத்தகத்திலிருந்து. தமிழ் குழந்தை இலக்கியம் வளர்ச்சியை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக இங்கு பதிவு செய்கிறோம்.

Leave a comment