ராஜா வந்திருக்கிறார் – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 25)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அக்காவின் வீடு இருந்தது. அவர் எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தவர். செய்தித்தாள், வார மாதப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. வாரம் தோறும் நான்தான் அவருக்காக கல்கண்டு, ஆனந்தவிகடன், கல்கி, தினமணிகதிர் வாங்கிவந்து கொடுப்பேன். அவர் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவர் படித்துவிட்டு வைத்த புத்தகங்களை எடுத்துப் படிப்பேன்.

புதுச்சேரியிலிருந்து யாரோ ஒருவர் அவரை பெண்பார்ப்பதற்கு வர இருப்பதாக செய்தி கிடைத்தது. அதை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு முன்னாலேயே அவர்கள் வீட்டைச் சுத்தம் செய்து வெள்ளையடித்து அழகுபடுத்தத் தொடங்கினர்.

வேலியோரமாக வந்து நின்றபடி அக்கா என்னை பெயர்சொல்லி அழைத்தார். நான் ஏதோ ஒரு படம் போட்டுக்கொண்டிருந்தேன். ”கொஞ்ச நேரம் வந்துட்டு போ” என்று என்னை அழைத்தார். நான் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். வீட்டு மூலையில் கட்டுகட்டாக புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் அடுக்கிவைத்திருந்தார்கள். அதையெல்லாம் கடைக்கு எடுத்துச் சென்று எடைக்குப் போட்டுவிட்டு வருமாறு அக்கா என்னிடம் சொன்னார்.

அக்கா கட்டிவைத்திருந்த ஒரு புத்தகக் கட்டில் இருந்த சில புத்தகங்கள் மீது என் கவனம் பதிந்தது. எடுத்துப் பிரித்தேன். மு.வரதராசன் எழுதிய தம்பிக்கு. படிக்கிற காலத்தில் ஏதோ ஒரு போட்டியில் கலந்துகொண்டு அக்கா வாங்கிய பரிசு. உடனே அடுத்த புத்தகத்தை எடுத்தேன். நெருப்புக்கோட்டை. வாண்டுமாமா எழுதிய புத்தகம். அக்காவின் பக்கம் திரும்பி “நீங்க ப்ரைஸ் வாங்கிய புத்தகங்கள்க்கா. ஏன் போடறீங்க?” என்று திகைப்போடு கேட்டேன். அவர் அமைதியாக “என்ன வாங்கி என்னடா பிரயோஜம்? கடைசியில அடுப்பங்கரைக்கு சோறாக்கத்தான் அனுப்பறாங்க?” என்று சொல்லிவிட்டு சோகமாகச் சிரித்தார்.

ஒருகணம் எனக்கு தொண்டையே வறண்டுவிட்டதுபோல இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு “அக்கா, இந்தப் புத்தகக்கட்ட நான் எடுத்துக்கட்டுமாக்கா?” என்று மெதுவாகக் கேட்டேன். அக்கா சிரித்துக்கொண்டே தலையசைத்ததைப் பார்த்ததும் எனக்குப் பறப்பதைப்போல இருந்தது. மகிழ்ச்சியோடு அந்தக் கட்டை மட்டும் எடுத்துச் சென்று ஓடோடி எங்கள் வீட்டில் வைத்துவிட்டுத் திரும்பினேன். ஆறேழு நடையாக எஞ்சிய கட்டுகளையெல்லாம் எடுத்துச் சென்று கடையில் விற்றுவிட்டு பணம் வாங்கிவந்து கொடுத்தேன்.

அன்று மதிய உணவுக்குப் பிறகு, கட்டைப் பிரித்தேன். பத்து பன்னிரண்டு புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் புரட்டினேன். கைவிலங்கு, ஒரு பிடி சோறு, சந்தனக்காவடி, அன்பளிப்பு, கரித்துண்டு என்று ஒவ்வொரு தலைப்பும் வசீகரமாக இருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் நான் அன்பளிப்பு புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டினேன். கு.அழகிரிசாமி எழுதிய கதைத்தொகுதி. ஏதோ யோசனையில் பிரித்த பக்கத்தில் ஒரு கதையின் தொடக்கம் காணப்பட்டது. ராஜா வந்திருக்கிறார். நான் உடனே அதைப் படித்துமுடித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. அவ்வளவு விறுவிறுப்பு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்தக் கதையில் சிறுவர்கள் தமக்குள் விளையாடிக்கொள்கிற ஒரு ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் பள்ளியில் அதை பலமுறை ஆடியிருக்கிறோம். கதையில் அந்த ஆட்டம் அழகாக விளக்கப்பட்டிருந்தது. கதை எனக்குப் பிடித்ததற்கு அது ஒரு காரணம். அந்தக் கதையில் ஒரு தீபாவளி நாளில் வாசலில் வந்து நிற்கும் ஒரு அனாதைச் சிறுவனைக் குளிக்கவைத்து, ஆடை கொடுத்து, சாப்பிடவைக்கிற ஒரு அம்மா இருந்தார். அது இன்னொரு காரணம். அந்தச் சிறுவன் பெயர்தான் ராஜா.

அந்தக் கதையைத் தொடர்ந்து தொகுப்பிலிருந்த மற்ற கதைகளையும் ஒவ்வொன்றாகப் படித்துமுடித்தேன். எல்லாவற்றையும்விட எனக்கு முதலில் படித்த ராஜா வந்திருக்கிறார் கதைதான் மிகவும் பிடித்திருந்தது. அப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையாகவே நடந்ததை நான் நேருக்குநேர் பார்த்ததுண்டு. அதுதான் முக்கியமான காரணம்.

ஒருநாள் மாலையில் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் அப்பாவின் கடைக்குச் சென்றிருந்தேன். அப்பாவிடமிருந்து வீட்டுச் செலவுக்கு அப்பா கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்குப் போய் வீட்டுக்குத் தேவையான மளிகைசாமான்களையும் காய்கறிச் சாமான்களையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்லவேண்டும். அதற்குப் பிறகே அம்மா இரவுச்சமையலைத் தொடங்குவார்.

அன்று அப்பாவின் கடைக்குச் சென்றிருந்தபோது கடையின் முன்னால் நின்றிருந்த ஒரு பிச்சைக்காரரும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தனர். கன்னங்கரேலென இருந்த அந்தப் பிச்சைக்காரரின் கோலம் அழுக்காக இருந்தது. கரி படிந்துவிட்ட கந்தலான மேலாடை. கிழிந்து தொங்கும் சட்டை. தலையில் புதர்மாதிரி முடியடர்ந்து சடைமாதிரி பின்னிக்கொண்டு தொங்கியது.

இழுப்பறையிலிருந்து துணி வெட்டுகிற கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு தையல் மிஷினைவிட்டு இறங்கிய அப்பா, அந்தப் பிச்சைக்காரரை வாய்க்கால் ஓரமாக அழைத்துச் சென்று மரத்தடியில் உட்காரவைத்து தொங்கிய முடியையெல்லாம் கத்தரித்து ஒழுங்குபடுத்தினார். பிறகு வேகமாகத் திரும்பி கடையிலிருந்த வாளியை எடுத்துச் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவன் தலையில் ஊற்றினார். அவனுக்கு துடைத்துக்கொள்ள கடையிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கொடுத்தார். பிச்சைக்காரர் தன் கிழிந்த கந்தலாடைகளையெல்லாம் அங்கேயே உதறி வீசிவிட்டு அந்தத் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டார். அந்தப் பிச்சைக்காரரை அப்போது பார்க்கும்போது ஏதோ கடையில் வேலை செய்பவரைப்போல காணப்பட்டார்.

பக்கத்திலிருந்த ஒரு கடையிலிருந்து ஒரு டீயும் பன்னும் வாங்கி அவனுக்குக் கொடுத்தார் அப்பா. அவன் அதைப் பருகிக்கொண்டிருந்த நேரத்தில், வளவன் துணிக்கடையிலிருந்து இரண்டு கெஜம் வெள்ளைத்துணியை அவசரமாக வாங்கிவந்து வேகவேகமாக ஒரு ஜிப்பாவைத் தைத்து அவனிடம் கொடுத்து அணிந்துகொள்ளச் சொன்னார். புது ஆடையில் அந்தப் பிச்சைக்காரர் புது ஆளாகவே மாறிவிட்டார். அப்பாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வேகமாக நடந்து மறைந்துபோனார்.

அவன் போன பிறகுதான் அப்பா நான் வந்து நிற்பதையே கவனித்தார். ”என்னடா?” என்று என்னைப் பார்த்து நிமிர்ந்தார். “வீட்டுச் செலவுக்கு காசு கொடுத்தா அரிசி, காய்கறி வாங்கிட்டுப் போய்டுவேன்…..” என்று இழுத்தேன். அதைக் கேட்டதுமே சட்டென்று அவர் நாக்கைக் கடித்துக்கொண்டார். அவசரமாக தன் சட்டைப்பைக்குள் கையைவிட்டுத் தேடி ஒரு எட்டணா நாணயத்தை எடுத்தார். அதற்கு மேல் இல்லை. நெற்றியைத் தேய்த்தபடி பெருமுச்சு வாங்கினார். பிறகு வேகமாக இழுப்பறையைத் திறந்து நூல்கண்டுகளையும் பட்டன் பட்டிகளையும் தள்ளிவிட்டுத் தேடினார். அதற்குள் ஒரு எட்டணா கிடைத்தது.

இரண்டு நாணயங்களையும் சேர்த்து என்னிடம் கொடுத்தார் அப்பா. பிறகு “இதான் இருக்குதுன்னு அம்மாகிட்ட சொல்லு. ராத்திரிக்கு நொய் வாங்கி கஞ்சி காய்ச்சிடச் சொல்லு. பொட்டுக்கடல சட்டினி இருந்தா போதும்” என்று மெதுவாகச் சொன்னார். ஒரு ரூபாய்க்குள் என்ன வாங்குவது என்று தெரியாமல் குழப்பத்துடன் கடைக்குப் போகாமல் வீட்டுக்கே நடக்கத் தொடங்கினேன் நான்.

எங்கள் அப்பா கதையில் ஓர் அம்மாவாக மாறியிருந்தார். பிச்சைக்காரர், ராஜாவாக மாறியிருந்தார். அதுதான் வேறுபாடு. இரண்டுக்கும் அடிப்படையாக இருக்கும் கருணை ஒன்றுதான். காசில்லாமல் கூட ஒருவன் இருக்கலாம். ஆனால் கருணையில்லாதவனாக மனிதன் வாழ முடியாது. அந்தக் கதையை அன்று அப்படித்தான் புரிந்துகொண்டேன்.

Leave a comment