நேரடியான சிறார் இலக்கியம் என்பது 1901 ஆம் ஆண்டு கவிமணி தேசியம் விநாயகம் பிள்ளை அவர்களின் காலத்தில் தான் தொடங்கப்பட்டது. பிற்காலத்தில அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு ‘இளந்தென்றல்‘ என்ற தலைப்பில் ஒரு நூலாக வந்துள்ளது. அதன் பிறகு மகாகவி பாரதியார் அவர்கள் ஓடி விளையாடு பாப்பா பாடலையும், புதிய ஆத்திச்சூடியையும் எழுதியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சிறுவர்களுக்காக சுமார் 300 பாடல்களை எழுதியுள்ளார்.
இவற்றை புதுச்சேரி பேராசிரியர் டாக்டர் சாயபு மரைக்காயர் அவர்கள் தொகுத்து வானதி பதிப்பகம் மூலமாக ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, நமச்சிவாய முதலியார், மணித்திருநாவுக்கரசு, பெரியசாமி தூரன், சக்தி.வை.கோவிந்தன், தமிழ்வாணன், ஆர்.வி, தம்பி ஸ்ரீனிவாசன், லெமன், நெ.சி.தெய்வசிகாமணி, தங்கமணி, வாண்டுமாமா , பூவண்ணன், திருச்சி பாரதன், நாரா நாச்சியப்பன், கே.ஆர், வாசுதேவன், பி.வி.கிரி, அணில் அண்ணா உமாபதி, அரிமதி தென்னகன், மதிஒளி சரஸ்வதி, நெல்லை ஆ.கணபதி , ஆலந்தூர் கோ.மோகனரங்கன் போன்ற பல அறிஞர்கள் சிறுவர் இலக்கியம் படைத்துள்ளனர்.
1942 லிருந்து 1955 வரை புதுக்கோட்டையிலிருந்து நிறைய சிறுவர் இதழ்கள் அச்சாகி வெளி வந்துள்ளன. 1942 ல் பாப்பா மலர், 1944 ல் பாப்பா, 1945 ல் பாலர் மலர், டமாரம், சங்கு, பின்னர் முத்து, 1949 ல் தம்பி, 1957 ல் டிங் டாங் என நிறைய பத்திரிகைகள் வெளியாகின. இதற்கு மிக முக்கிய காரணம் திரு.பரசுராமைய்யர் என்பவர். இவர் கண்ணபிரான் அச்சகம் என்ற ஒரு அச்சகத்தை நடத்தி வந்தார். இந்த அச்சகத்தில் தான் பலப்பல சிறுவர் இதழ்கள் அச்சடிக்கப்பட்டன. பல எழுத்தாளர்கள் இந்த அச்சகத்திற்கு வந்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். 1955 க்கு பிறகு மெல்ல மெல்ல இதழ்கள் நிற்கத்துவங்கின. புதுக்கோட்டைச் சிறுவர்கள் அச்சகத்திற்கே வந்து தங்கள் இதழ் ஏன் வரவில்லை என்று கேட்கத் தொடங்கினார்கள். அவர்களின் வருத்தத்தைக் கண்ட பரசுராமைய்யர் தன் சொந்த செலவில் டிங் டாங் என்ற பத்திரிகையை தனது 17 வயது மகன் வடமலை அழகனை ஆசிரியராக வைத்து ஆரம்பித்தார். 3 ஆண்டுகளாக வெளி வந்த அந்த இதழில் ஏராளமான எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். பின்னர இந்த இதழும் நின்று போனது. இதற்கு அடுத்தபடியாக கண்ணன் இதழ் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 1950 லிருந்து 1971 வரை மதிப்பிற்குரிய ஆர்.வி அவர்கள் ஆசிரியராக இருந்து வெளிவந்த ‘கண்ணன் சிறுவர் இதழ்‘ மிகவும் சிறப்பு பெற்றிருந்தது. இதில் வெளிவந்த சிறுவர் சிறுகதைகள் பின்னர் இராஜராஜன் பதிப்பகம் மூலமாக தொகுக்கப்பட்டு 14 வால்யூம்களாக வெளிவந்தன. 1970 மற்றும் 1980 களில் அணில், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர், பிக்கிக்கா, சுட்டிவிகடன் போன்ற பத்திரிகைகள் சிறுவர்களுக்கான சிறந்த பத்திரிகைகளாகத் திகழ்ந்தன.
சிறுவர்களுக்கான எழுத்தாளர் திரு.முல்லை தங்கராசன் அவர்கள் சிறார் இலக்கிய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். ரத்னபாலா இதழின் ஆசிரியராக 1979 ல் பத்துமாதங்கள் பணியாற்றினார். இந்த இதழில் ஓவியர் செல்லம் மற்றும் முல்லை தங்கராசன் அவர்களின் கூட்டணியில் வெளிவந்த காமிக்ஸ்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன. இவர் எழுதிய விரல் மனிதர்கள் மிகவும் புகழ் பெற்ற காமிக்ஸ் ஆகும். மேலும் இவர் ஜாம்–ஜிம்–ஜாக் என புதிய கதாபாத்திரங்களை வைத்து காமிக்ஸ்களை உருவாக்கினார். 1984 லிருந்து 2005 வரை வெளிவந்த ராணி காமிக்ஸ் 500 இதழ்கள் வரை வெளி வந்து சாதனை படைத்துள்ளது.
தற்காலத்தில் தும்பி, வண்ணநதி, சிலேட்டு, இறக்கை, கற்றல் இனிது, பெரியார் பிஞ்சு, பஞ்சுமிட்டாய், மின்மினி, பொம்மி, துளிர், மேன்மை, குட்டி ஆகாயம் போன்ற சிறுவர் இதழ்கள் வெளிவந்துக் கொண்டு இருக்கின்றன.
குழந்தை எழுத்தாளர் சங்கம் 15 ஏப்ரல் 1950 ல் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தின் மூலம் புத்தகக் கண்காட்சி, குழந்தைகள் நாடக விழா, நூல்கள் வெளியீடுதல், குழந்தை எழுத்தாளர் யார் எவர் ? நூல் வெளியீடு போன்றவை செய்யப்பட்டன. இந்த சங்கத்தின் மூலம் குழந்தை இலக்கிய மாநாடுகள் 1959 லிருந்து 1987 வரை எட்டு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்க்கான பல போட்டிகள் நடத்தப்பட்டு ஏ.வி.எம். நிறுவனத்தின் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. 1980ல் வெளிவந்த சிறுவர் இலக்கிய வரலாறு என்ற நூல் டாக்டர். பூவண்ணன் அவர்கள் எழுதியது. இதுவரை மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு பெற்றுள்ளது இது. குழந்தை இலக்கிய வரலாற்றின் 1980 வரையிலான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து 101 சிறுவர் எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு மூன்று மாத கடின உழைப்பினால் தொகுக்கப்பட்ட 250 பக்கங்கள் கொண்ட தற்கால சிறார் எழுத்தாளர்கள் என்ற நூல் திரு.ஆர்.வி.பதி அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து 1948 ல் வெளிவந்த பாட்டி முதல் பின்னர் வானம்பாடி, சாக்லேட், சத்யஜோதி, அணில், பதுமை, வெல்லும் தூய தமிழ், பட்டாம்பூச்சிகள், நாற்று, புதிய பாரதி போன்ற பல சிறுவர் இதழ்கள் வெளிவந்தன.
சாகித்ய அகாதமி பால சாகித்ய புரஸ்கார் என்கிற உயரிய விருது சிறுவர் இலக்கியத்தில் சிறந்து செயலாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2010ல் மா.கமலவேலன் அவர்களின் அந்தோணியின் ஆட்டுக்குட்டி என்ற சிறுவர் புதினம் இந்த முதல் விருதினை வென்றது. இதைத் தொடர்ந்து சோளக்கொல்லை பொம்மை, கொ.மா.கோதண்டம் அவர்கள் எழுதிய காட்டுக்குள்ளே இசை விழா, ரேவதி அவர்கள் எழுதிய பவளம் தந்த பரிசு, ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதிய விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள், கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை போன்ற நூல்களுக்கும், டாக்டர்.வேலு சரவணன் அவர்களின் நாடக பணிக்கம், திரு.செல்லகணபதி, திரு.குழ.கதிரேசன், திருமதி.தேவி நாச்சியப்பன் ஆகியோரின் ஒட்டு மொத்த சிறுவர் இலக்கிய பங்களிப்புக்காகவும் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
திரு.நெ.சி.தெய்வசிகாமணி, திரு.தங்கமணி, டாக்டர். பூவண்ணன் ஆகியோர் சிறு வயதிலேயே சிறுவர் இலக்கியம் எழுதியவர்கள் ஆவர். எஸ்.அபிநயாவின் குரங்குகளும் கரடிகளும் ரமணியின் யாருக்கு தைக்கத் தெரியும் போன்ற நூல்கள் இப்போதுள்ள இளம் தலைமுறை சிறுவர்களால் எழுதப்பட்டவை. சிறுவர் இலக்கிய பெண் படைப்பாளிகளில் ஜோதிர் லதா கிரிஜா, விமலா இரமணி, தேவி நாச்சியப்பன், காந்தலஷ்மி சந்திரமௌலி, ஜெயந்தி நாகராஜன், புதுச்சேரி தமிழ்மொழி முதலானோர் முக்கியமானவர்கள். இதை தவிர இன்னும் சிறுவர் இலக்கிய படைப்பாளிகள் பலர் உருவாகியுள்ளது மிகவும் சிறப்பு. இந்த சிறார் இலக்கியத்தை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் நாம் சிறுவர்களின் பிறந்தநாள் அன்று புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டும். மேலும் அத்தகைய நூல்களை அவர்களைப் படிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறுவர் இலக்கியம் வளர்ச்சி அடையும்.
ஆர்.வி.பதி அவர்கள் பற்றிய சிறு குறிப்பு
இவர் தமிழில் சிறார்களுக்காக 65 நூல்களும் பல முன்னணி இதழ்களில் சிறார்களுக்கான 75 சிறு கதைகளும் 15 நாடகங்களும், குழந்தைகளுக்கு 10 கட்டுரைகள் மற்றும் 15 பாடல்களை எழுதியுள்ளார். சிறார் இலக்கியங்களை தொடர்ந்து ஆவணப்படுத்தி வருவதில் இவரது பங்கு மிகவும் முக்கியமானது. சிறார் இலக்கிய படைப்பாளிகளையும், சிறார் இலக்கியங்களையும் தொகுத்தவர் இவர்.
வீடியோ பதிவு :