வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 24)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒருநாள் உடற்பயிற்சிக்கான பாடவேளையில் திடீரென மழை பொழியத் தொடங்கிவிட்டது. கொஞ்ச நேரம் காத்திருப்போம் என்றபடி அனைவரையும் மரத்தடியில் ஒதுங்கி நிற்குமாறு சொன்னார் மாஸ்டர். பத்து நிமிடங்களுக்கும் மேலாகியும் மழை நிற்காததால் மதிலோரமாகவே ஒதுங்கி வகுப்பறைக்கே திரும்பும்படி சொன்னார். நாங்கள் நடக்க அவரும் எங்களுக்குப் பின்னால் வந்து சேர்ந்தார்.

இன்னைக்கு ஒருநாள் ஆட்டம் போச்சே சார்” என்று வருத்தத்தோடு சொன்னான் குமாரசாமி. “இவன் ஒருத்தன். நாம என்ன ஒலிம்பிக்லயா ஆடப் போறோம். மழ வரலையேன்னு ஊருல அவனவன் நொந்துபோய் கெடக்காறாங்கடா. ஆட்டம் இன்னைக்கு இல்லைன்னாலும் நாளைக்கு ஆடிக்கலாம். மழையை வரும்போதே வாவான்னு வாங்கி வச்சிக்கணும், புரிதா?” என்றார் மாஸ்டர்.

இன்னைக்கு ஒரு புது விளையாட்டு ஆடலாம்” என்று தொடங்கினார் மாஸ்டர். அறைக்குள் என்ன ஆட்டம் என்று விசித்திரமாக நாங்கள் அவரைப் பார்த்தோம். “ஒவ்வொரு ஆளா இங்க வந்து விதவிதமா சிரிச்சி காட்டணும். யாரு ரொம்ப நல்லா சிரிக்கறாங்களோ, அவுங்களுக்கு இந்த பேனா ப்ரைஸ்” என்றபடி தன் பையிலிருந்து பேனாவை எடுத்து மேசைமீது வைத்தார். ஒருகணம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியாமல் திகைத்தோம். புரிந்தபோது அந்தப் புதுமையை நினைத்து மலர்ந்த முகத்தோடு வேகவேகமாக தலையாட்டினோம்.

முதல் ஆளா நானே ஆரம்பிக்கிறேன்” என்று அறிவித்துவிட்டு மாஸ்டர் இடுப்பில் கைவைத்தபடி சில நொடிகள் அழகாகச் சிரித்தார். எங்களை மீறி நாங்கள் கைதட்டி ஓசையெழுப்பினோம். “சரி, நீ வா” என்று சட்டென்று கடைசி வரிசையில் கடைசி ஆளாக இருந்தவனை அழைத்தார். அவன் கூச்சத்தோடு எழுந்துவந்து தாடையைச் சொரிந்தபடி அண்ணாந்தவாக்கில் சிரித்தான். தொடர்ந்து அதற்கு அடுத்தவன் வந்து கண்களை உருட்டி மிரட்டுவதுபோலச் சிரித்தான்.

ஏறத்தாழ அரைமணி நேரம் இப்படி சிரிப்பிலேயே கழிந்தது. சிரிப்பில் எத்தனை வகை என்பதை அன்றுதான் நேரில் பார்த்தேன். வகுப்பு முடியும் நேரத்தில் “சிரிக்கறதுகூட ஒரு வகையில் ட்ரில். புரியுதா? தினம் ஒரு ஐந்து நிமிஷம் சிரிச்சா, உடம்புக்கும் மனசுக்கும் ரொம்ப நல்லது. வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்டா” என்று சொன்னார். மேசையில் இருந்த பேனாவை எடுத்து கையில் வைத்தபடி “இந்தப் பரிசை யாருக்கு தரலாம்?” என்று வகுப்பில் இருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, இறுதியாக சுவரோரமாக உட்கார்ந்திருந்த ஒருவனை ”வாடா வீரப்பா வா” என்று அழைத்து அவனிடம் கொடுத்து தட்டிக்கொடுத்துவிட்டு போனார்.

அன்று இரவு சாப்பாட்டு வேளை முடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது வகுப்பில் நடந்த சிரிப்புக்கதையை விவரித்தபோது அப்பாவும் அம்மாவும் சிரித்தார்கள். எதிர்பாராத விதமாக ”உங்களுக்கு நான் ஒரு சிரிப்புக்கதை சொல்லட்டுமா?” என்று தொடங்கினார் அப்பா. “சொல்லுங்க சொல்லுங்க” என்று நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டோம்.

ஒரு ஊருல ஒரு கணவன் மனைவி. எப்ப பாரு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குவாங்க. ஒரு நாள் ஆத்திரத்துல மனைவிய அடிக்கறான் கணவன். மனைவியும் திருப்பி அடிக்கிறா. உடனே கணவன் பக்கத்தில இருக்கிற கத்திய எடுத்து மனைவியுடைய மூக்க புடிச்சி அரிஞ்சிடறான். மூக்கு துண்டாகி கீழ விழுந்துடுது. ரத்தமா ஒழுகுது. ஐயோ ஐயோ வலின்னு சத்தம் போடறா மனைவி. அதுக்கப்பறம்தான் நிதானத்துக்கு வரான் கணவன்.”

உடனே அறுந்து உழுந்த மூக்க ஒரு தாள்ல சுத்தி எடுத்துட்டு ரெண்டு பேரும் வைத்தியர்கிட்ட போறாங்க. தையல் போட்டு ஒட்டிடலாம் கவலைப்படாதீங்கன்னு ஆறுதல் சொல்றாரு வைத்தியர். மூக்க வாங்கி பக்கத்துல மேசை மேல வச்சிட்டு மூஞ்சியில இருக்கற ரத்தத்த தொடைக்கறாரு. அப்ப கூரை மேல இருந்து எல்லாத்தயும் பார்த்துட்டிருக்குது ஒரு காக்கா. மெதுவா கீழ பறந்து வந்து மேசை மேல வச்சிட்டிருந்த மூக்க லபக்னு கொத்தி எடுத்துட்டு பறந்து போவுது. ஐயோ என் மூக்கு ஐயோ என் மூக்குன்னு சத்தம் போட்டபடி ஓடறா மனைவி. அடியே அடியேன்னு அந்த பின்னால ஓடறான் கணவன். நில்லுங்க நில்லுங்கன்னு அவுங்க பின்னால ஓடியாறான் வைத்தியன். அதான் கதை.”

நாங்கள் எல்லோரும் விழுந்துவிழுந்து சிரித்துவிட்டு உறங்கச் சென்றோம். சிரிப்பது என்பது மனத்தை எப்படியெல்லாம் லேசாக்கும் என்பதை அன்றைய அனுபவமே எனக்கு உணர்த்திவிட்டது. ஏற்கனவே சிரிப்புக்கதைகளை விரும்பிப் படிப்பவன்தான் நான். ஆனால் கிடைத்தால் படிப்பவன். அன்று முதல் தேடிப் படிக்கத் தொடங்கினேன்.

ஒருநாள் நூலகத்திலிருந்து வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதை புத்தகத்தை எடுத்துவந்து படித்தேன். குருவும் மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் எனப்படும் அவருடைய ஐந்து சீடர்களும் சேர்ந்து செய்யும் ஒவ்வொரு செயலும் சிரிப்பூட்டுபவை. தூக்கத்தில் கடிக்கும் கொசுக்களை போன பிறவியில் தன்னால் கொல்லப்பட்ட வீரர்களின் ஆவிகள் என்று சொல்லும் குரு தன் சீடர்களுடன் அவற்றைக் கொல்ல போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் வயிறுவலிக்க சிரிக்கவைப்பவை. ஒவ்வொரு நாளும் ஒரு கதை என்கிற கணக்கில் என் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் அந்தக் கதைகளைச் சொன்னேன். சொல்லிச்சொல்லி அக்கதைகள் எனக்கு மனப்பாடமாகிவிட்டன.

ஒருமுறை பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ஹாஸ்ய வியாசங்கள் என்னும் புத்தகம் நூலகத்தில் கிடைத்தது. ஹாஸ்யம் என்னும் சொல்லைப் பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ஒவ்வொரு வரியையும் சிரித்துக்கொண்டேதான் படித்தேன். படிக்கும்போதும் சிரிப்பு வரும். நினைக்கும்போதும் சிரிப்பு வரும்.

அத்தொகுப்பில் உள்ள காது கேட்காதவர்கள் மட்டுமே வாழும் ஒரு ஊரைப்பற்றிய ஒரு கட்டுரை உண்டு. சிரிப்பின் உச்சத்தையே தொடவைக்கும் கட்டுரை அது. ஒரு பெரிய குளக்கரை. அதன் ஓரமாக ஒதுங்கி ஒரு பிராமணன் ஒருநாள் மதிய வழிபாடு செய்கிறான். சற்றே தள்ளி ஒருவன் ஆடு மேய்க்கிறான். இருவருமே செவிடர்கள். சிறிது நேரம் ஆடுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள், சாப்பிட்டு வருகிறேன் என்று பிராமணனிடம் சொல்லிவிட்டு அவன் புறப்பட்டுச் செல்கிறான். திரும்பி வந்து ஆடுகள் பாதுகாப்பாக இருப்பதைப் பார்த்த பிறகு ஒரு நொண்டி ஆட்டைப் பிடித்துக்கொண்டு சென்று பிராமணனிடம் அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளும்படி சொல்கிறான். பிராமணன் தன்னை ஆட்டை வெட்டிச் சாப்பிடச் சொல்வதாக நினைத்து ஐயோ வேண்டாம் என கைகளை உதறிக்கொண்டே சொல்கிறான். அவன் பெரிய நல்ல ஆடு வேண்டும் என்று கேட்பதாக புரிந்துகொண்டு பிராமணனிடம் சண்டைக்குச் செல்கிறான் ஆட்டுக்காரன்.

அந்தப் பக்கமாக வந்த ஒரு வைத்தியரை நிறுத்தி இருவரும் நியாயம் சொல்கிறார்கள். அந்த ஆட்டுக்கு வைத்தியம் பார்க்குமாறு தன்னிடம் சொல்வதாக நினைத்துக்கொண்டு தான் விலங்குகளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரல்ல என்று தலையை அசைக்கிறார் வைத்தியர். இவர்கள் அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டு பஞ்சாயத்துக்கு கிராமத்துத் தலையாரியிடம் போகிறார்கள். தலையாரியின் மனைவி அன்று காலையில்தான் அவனிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபத்துடன் ஊர்க்கடைசியில் உள்ள தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அவள் சார்பாக இவர்கள் பேச வந்திருப்பதாக நினைத்துக்கொண்டு அவர் “நீங்கள் என்ன சொன்னாலும் சரி, அவளோடு நான் வாழமாட்டேன்” என்று கையை உதறுகிறார்.

பிறகு நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பக்கமாக வந்த காவலரிடம் புகார் சொல்கிறார்கள். “நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. எது சொல்வதாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் சொல்லுங்கள்” என்று சொல்லி அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார் காவலர். என்ன செய்தி என்று புரியாமலேயே தெருக்காரர்கள் சிலரும் கூட்டத்தோடு சேர்ந்து செல்கிறார்கள். காது கேட்காத இன்ஸ்பெக்டர் அவர்களையெல்லாம் கலகக்காரர்கள் என புகார் எழுதிக்கொண்டு மாஜிஸ்ட்ரேட்டிடம் செல்கிறார். அவருக்கும் காது கேட்காது. ஆனாலும் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு எல்லோருக்கும் சிறைத்தண்டனை வழங்குகிறார்.

ஒரு அடுக்கில் தேவன் என்னும் எழுத்தாளர் எழுதிய பல கதைப்புத்தகங்கள் இருந்தன. அட்டைப்படத்தில் வளைந்த கோணல் மூக்கோடு காணப்பட்ட ஒருவருடைய சித்திரத்தைப் பார்த்துவிட்டுத்தான் அவருடைய புத்தகத்தை எடுத்துப் படித்தேன். துப்பறியும் சாம்பு. வேடிக்கையும் நகைச்சுவையும் நிறைந்த கதை. ஒவ்வொரு நகைச்சுவைக்கதையையும் படித்துமுடிக்கும் போதெல்லாம் எங்கள் மாஸ்டர் சொன்ன சொற்களையே நினைத்துக்கொள்வேன். அது அவர் எங்களுக்கு அருளிய வேதவாக்கியம்.

Leave a comment