1990களின் தொடக்கத்தில் இருந்து உயர்கல்வியில் விரவிக் கிடக்கும் நவதாராளமயம், ஜனநாயக விரோதம், மையப்படுத்தப்படும் போக்கு ஆகியவற்றின் தொடர்ச்சியாக தேசிய கல்விக் கொள்கை திகழ்கிறது. இவற்றுடன் சமூக நுண்ணுணர்வின்மை, வகுப்புவாதம் மற்றும் மதவாதமும் உட்பொதிந்து காணப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளவும் வேலைவாய்ப்பு சந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் அவசியமான பல்துறை சார் கல்வியை முன்மொழிவதாக கல்விக் கொள்கைச் சொல்கிறது. ஆனால், நம் சமூக அமைப்பானது கோரும் அரசியலைப்பை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சமூக நீதியை, பன்மைத்துவத்தை நயவஞ்சகமாக புறந்தள்ளுகிறது. நாட்டில் உயர்கல்வியின் நிலைகுறித்து பேசத் தொடங்கும்போது ‘உயர்கல்வி அமைப்பு சிதறிக்கிடப்பதாக’ ஆவணம் கவலைத் தெரிவிக்கிறது. 800-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் நாடு முழுவதும் விரிந்து கிடப்பதுதான் இந்த சிக்கலுக்குக் காரணம் என சுட்டிக்காட்டுகிறது. ’சிதறிக்கிடத்தல்’ என்ற ஒற்றை சொல்லின் வழியாக இங்குள்ள பல்கலைக்கழகங்கள் மூலம் பரவலாக்கப்பட்ட அதிகாரத்தை, சமூக கலாச்சார பன்மைத்துவத்தை, பல்கலையில் இணைக்கப்பட்டதன் வழியாக கிராம மற்றும் நகர் புற மாணவர்களுக்கு கல்வியைக் கொண்டு சேர்த்த கல்லூரிகளின் பங்களிப்பை போகிற போக்கில் நிராகரிக்கிறது. போதாததற்கு இந்த சிக்கலுக்குத் தீர்வு காண பல்துறை சார் உயர்கல்வி நிறுவனங்கள் (HEI – Higher Educational Institutions) நிறுவப்படும் என்கிறது. இது ஒற்றை மயமான கல்வி ராஜ்ஜியத்துக்குத்தான் இட்டுச் செல்லும்.
ஒற்றை மயமாக்கலை நோக்கி
‘இந்தியமயம்’ என்பதை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலம் ஒற்றை மயமாக்கலுக்குக் கல்விக் கொள்கை வழிகோலுகிறது. இந்தியக் கலை, பண்பாடு, இலக்கியத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவிருப்பதாக உறுதி அளிக்கிறது. ஆவணத்தின்படி, “அனைத்து இளநிலை பட்ட படிப்புகளிலும் இசை, (ஓவியம், சிற்பக்கலை, ஒளிப்படக் கலை உள்ளிட்ட) காட்சிக் கலைகள், நிகழ்த்துக் கலைகள், விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியாவின் பாரம்பரிய கலைகள், இசை, விளையாட்டுகள் இவற்றில் கூடுதல் முக்கியத்துவம் பெறும். இவற்றுடன் உள்ளூர் பாரம்பரியமும் கற்பிக்கப்படும். யோகக் கலை இவற்றின் உயிர்நாடியாக போதிக்கப்படும். இக்கலைகளை கற்பிக்கக் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு அவை ஊக்குவிக்கப்படும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கலை, பண்பாடு, இலக்கியங்களுடன் “இந்திய” என்ற வார்த்தை பிரயோகமே சிக்கலானது. இந்தியா என்பது ஒற்றை அம்சம் கொண்ட அமைப்பல்ல. வேறுபாடுகளும் பன்மைத்துவமும்தான் நம் தனிச்சிறப்பு. ஆனால், இந்திய பண்பாட்டைப் படிக்க அறைகூவல் விடுவதன் மூலம் மதவாதம் உயிர்த்தெழுவதற்கான அபாயம் இதில் ஒளிந்துள்ளது. இந்திய பண்பாடு என்ற போர்வையில் பெரும்பான்மை கலாச்சாரம் கோலோச்சும் நிலை அல்லாது பிற பண்பாட்டு வடிவங்கள் இடம்பெற இதில் வாய்ப்பில்லை. இந்தியமயம் எப்படியாவது நிலைநிறுத்தப்படும் என்பதையும் அதற்குக் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்பதையும் இந்த ஆவணம் தெள்ளத்தெளிவாக கூறுகிறது.
குறுகலாக்கப்படும் கல்விப் பார்வை
வேலைக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல், அடுத்த தொழிற்புரட்சிக்கான மையமாக கல்வி அமைப்பை மாற்றுதல் ஆகியவற்றைக் கல்விக் கொள்கை பின்வருமாறு பரிந்துரைக்கிறது.
“நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய, தனிமனித ஆளுமை சார், படைப்பாற்றலுடன் கூடிய பல்துறைசார் கற்றலை உயர்கல்வி ஊக்குவிக்கும். இதன் மூலம் தங்களுடைய முதல் தேர்வாக இருக்கும் பணிக்கு மாணவர்களை தயார்ப்படுத்தினால் மட்டும் போதாது. அவர்களுடைய இரண்டாம், மூன்றாம் தேர்வாக இருக்கும் பணிகளுக்கும் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான பணிகளுக்கும் அவர்களை தயார்ப்படுத்த வேண்டும். குறிப்பாக அடுத்த தொழிற்புரட்சிக்கான மையமாக உயர்கல்வி அமைப்பு உருபெற வேண்டும்”.
வெளிப்படையாக அல்லாமல் பூடகமாகப் பல சேதிகளை மேலே உள்ள மேற்கோள் சொல்கிறது. அரசாங்கப் பணிகளும் பணி பாதுகாப்பும் காலாவதியாகிப் போன விடயமாக மாறப்போகிறது என்பதைத்தான் மறைமுகமாக இது சுட்டிக்காட்டுகிறது. “நினைத்தால் வேலை தருவேன், பறிப்பேன்” என்கிற முதலாளித்துவ ஆணையின் காலமாக வேலைவாய்ப்பு சந்தை கூடிய விரைவில் மாறவிருப்பதையும் அந்த புதிய நிதர்சனத்துக்கு வேலை தேடுவோர் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
அடுத்த தொழிற்புரட்சிக்கான மையமாக கல்வி அமைப்பு உருவெடுக்க வேண்டும் என்ற சிந்தனை கவலை ஏற்படுத்துகிறது. ஏனெனில் தொழிற் வளர்ச்சிக்கு வழிவகை செய்வது மட்டுமேதான் கல்வியின் நோக்கமாகக் கருதப்படுவது நல்லதல்ல. தலைசிறந்த ஊழியர்களையும், குடிமக்களையும், சமூகக் குழுக்களையும் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு அப்பால் சமூக பிரஞ்சைக் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கம் என்பதன் மீதான தாக்குதல் இது. நாட்டின் அத்தனை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை குறித்த அக்கறை இந்த ஆவணத்தில் இல்லை. சமமான, அனைவருக்குமான குறைந்த செலவிலான கல்விதான் நம் சமூகத்தின் முதன்மையான தேவை. இன்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் பலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், பரம்பரை பரம்பரையாகக் கல்வி பெற்றவர்களுக்கான கல்வி இலக்கைத்தான் புதிய கல்விக் கொள்கை தூக்கிப்பிடிக்கிறது. இதில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் பெருங்கதையாடல்களான சர்வதேசியம், உலகத் தர கல்வி போன்றவை கேட்க உவப்பாக இருக்கலாம். ஆனால், முதலில் கல்வியை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த அக்கறை இந்த கொள்கையில் தென்படவில்லை. அதற்கு பதிலாகக் கல்வியின் தரத்தை உயர்த்தும் முனைப்புடன் ஆசிரிய சமூகம் திகழவில்லை என்கிறது.
தனியார்மயத்துக்கு சாமரம் வீசுதல்
உயர்கல்வியை நிர்மாணிக்கும் பொறுப்பில் இருக்கும் பல்கலைக்கழக மானியக் குழு ஊழலுக்கும் நடுத்தரத்துக்கும் வழிகோலியதாக புதிய கல்விக் கொள்கை குற்றம் சாட்டுகிறது. “பொதுக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் கருதப்படவில்லை… இந்த அணுகுமுறையால் தொண்டு மனப்பான்மை கொண்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தைக்கான சரக்காகவும் காட் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் கல்வி உருமாற்றப்பட்டு இருக்கும் காலகட்டத்தில் தனியார் முதலீட்டுக்கு ‘தொண்டு மனப்பான்மை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள்’ என்ற பதத்தை பயன்படுத்துவது நகைமுரண் என்றே சொல்ல வேண்டும்.
தற்போது உள்ள உயர்கல்வி அமைப்பை முழுவதுமாக புதுப்பிக்க அறைகூவல் விடுகிறது புதிய கல்விக் கொள்கை. பல்துறை சார் பல்கலைக்கழகங்களை நிறுவ அழைப்புவிடுக்கிறது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் மூன்று வகையாகப் பிரிக்கவிருக்கிறது.
1. ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் (வகைமை 1)
2. கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள் (வகைமை 2)
3. கல்லூரிகள் (வகைமை 3)
இவற்றில் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு வகையறா நிறுவனங்கள் 5,000 முதல் 25 ஆயிரம் மாணவர்கள் கொண்ட பிரமாண்ட உயர்கல்வி நிறுவனங்களாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியான நிறுவனங்களை உருவாக்க விஸ்தாரமான நிலப்பரப்பு, உயர்தர உள்கட்டமைப்பு வசதிகள் என ஏகப்பட்ட வளங்கள் தேவைப்படும். இந்தியக் கல்வி அமைப்பின் இன்றைய நிலவரப்படி இப்படிப்பட்ட நிறுவனங்களை மாவட்டத்துக்கு ஒன்று என்ற ரீதியில்கூட நிறுவ முடியாது. அப்படி இருக்க இத்தகைய பிரமாண்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான முறைமை, நிதி ஒதுக்கீடு, செயல் திட்டம் ஆகியவை குறித்து தெளிவில்லை. ஒரு வேளை, அப்படியான நிறுவனங்கள் நிர்மாணிக்கப்பட்டாலும் சமூகத்தின் அத்தனை அடுக்கு மக்களுக்கும் பல்துறைசார் கல்வியைக் கொண்டு சேர்க்கும் வழி இதில் இருப்பதாக தெரியவில்லை. ஆக தனியார் முதலீட்டைக் கல்விப் புலத்துக்குள் கொண்டு வருவதற்கான அறிவிப்புதான் இது. ராட்சத பல்துறை சார் நிறுவனங்களை நிறுவும் அசுர பலம் பெருமுதலாளிகளுக்குத்தான் உள்ளது. கல்வி அதிகாரத்தைப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றும் திட்டம் இது. ஆனால், இத்தனை பெருமுடிவை ஒற்றை வரியில் சூட்சுமமாக சொல்லிவிட்டுக் கடந்து செல்கிறது இந்த ஆவணம்.
உயர்கல்வியை புனரமைக்க அறிவுறுத்தினாலும் அதற்கான செயல்திட்டம் எதையும் ஆவணம் முன்வைக்கவில்லை. நிதி ஒதுக்கீடு குறித்தோ நடைமுறைப்படுத்துதல் குறித்தோ எந்த தகவலும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களின் தகுதிக்கான அளவுகோலைப் பூர்த்தி செய்யும் கல்லூரிகள் நாடு முழுவதும் எத்தனை உள்ளன என்று தெரியவில்லை. அத்தகைய தகுதி இல்லாதபட்சத்தில் அவை மூடப்படும். அப்படியானால் நம்முடைய கிராமப்புற, சிறு நகர மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளுக்கும் மூடுவிழாதான்.
ஆவணப்படி 3-ம் வகைமை கல்வி நிறுவனங்கள் அதாவது கல்லூரிகளில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டுமாம். இந்த விதியை பூர்த்தி செய்ய தவறும் கல்லூரிகள் அரசுதவிப் பெறும் கல்லூரிகளாகவும் இருக்கலாம் அல்லது சுயநிதிக் கல்லூரிகளாகவும் இருக்கலாம். எதுவாயினும் 2032-ம் ஆண்டுக்குள் பல்கலைக்கழகங்களுக்குள் கரைக்கப்படும் அல்லது தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் அளிப்பதென்பது தற்போது ஆசிரிய நியமனத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு, தகுதி இன்னபிற சமூக நீதியைக் களையும் முயற்சியாகும். அதிகார தலையீடு, ஊழல் உள்ளிட்ட குறுக்கு வழிகள் தலைவிரித்தாடவே இது வழிவகை செய்யும்.
எதேச்சதிகாரத்துக்கு ராஜபாட்டை
எல்லாவற்றையும் விட கல்விக் கொள்கையில் மிகவும் சிக்கலான பகுதி ஒன்று உண்டென்றால் அது பிரதமர் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த கல்விப் புலத்தைக் கொண்டுவருவதாகும். “ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக்” என்ற திட்டம்தான் அது. அரசியலர்களின் தலையீட்டுக்கு அப்பாற்பட்டதாக அறிவுப் புலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது அரசியலமைப்பு. ஆனால், இதற்கு நேர்மாறாக புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கல்வித் திட்டத்தின் வழியாக ஆளும் அரசு தங்களுடைய சதித் திட்டத்தை திணிக்கும் அபாயம் இதில் ஒளிந்திருக்கிறது. கல்வி புலத்துக்கும் அரசியலமைப்புக்கும் இது பெரும் அச்சுறுத்தலாகும்.
இது போதாதென்று விரைவில் நிறுவப்படவிருக்கும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF) முன்னதாக குறிப்பிட்ட பல்துறை சார் கல்வித் திட்டத்துக்கு நேரெதிராக உள்ளது. “தற்காலத்துக்கு பொருத்தமான, சமூகத்துக்கு பயனுள்ள ஆராய்ச்சிகள் மக்களை சென்றடைய ஆராய்ச்சியாளர்களும் அமைச்சவரைகளும் தொழிற்துறையும் இணக்கமாகச் செயலாற்ற வேண்டும்” என்கிறது ஆவணம். அறிவு பெருக்கத்துக்கான சுதந்திர வெளியாகத் திகழ வேண்டியவை ஆராய்ச்சிகள். அவற்றால் உடனடி பலன் விளையாது. அதிலும் கலை மற்றும் மனிதிவியல் படிப்புகள் என்பவை அதிகாரம், கலாச்சாரம், அறிவு குறித்த சமூக அறிவும் வரலாற்று புரிதலும் ஏற்படுவதற்கான ஆராய்ச்சிகளில் கால்பதிப்பவை. ஆனால், கல்விக் கொள்கையைப் பொருத்தமட்டில், “அரசாங்கத்துக்கும் தொழிற்துறைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் லாபகரமான தொடர்பு ஏற்பட வேண்டும்”. அப்படியானால் ஆராய்ச்சிகளும் முதலாளித்துவ சந்தைக்கான சரக்காக மாற்றப்படும்.
“தேசத்துக்கு முக்கியத்துவம் வாயந்த விடயங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றுக்கே முன்னுரிமை அளித்து நிதியுதவி நல்கப்படும்” என்று வலியுறுத்துவதன் மூலம் ஆட்சியாளர்கள் கிழித்த கோட்டுக்குள்ளே கல்வி அதிகாரிகள் செயல்பட நிர்ப்பந்திக்கிறது கொள்கை. ஆராய்ச்சிக்கான வெளியை இது தகர்க்கும் முயற்சியாகும்.
“இந்திய” விழுமியங்களில் காலூன்றுதலே ஆசிரியருக்கான முதற்கண் தகுதி
“இந்திய விழுமியங்கள், நெறிமுறைகள், அறிவு, பாரம்பரியத்தில் ஊறிய” ஆசிரியர்களுக்கு அழைப்புவிடுக்கிறது ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் ஆசிரியர் கல்வி குறித்த பகுதி. இந்த வாக்கியத்துக்குள் மறைந்திருக்கும் உள்நோக்கம் சந்தேகத்துக்குரியது. சமூக நுண்ணுணர்வும், விமர்சன பார்வையும், அதிகாரப்படுத்தும் முனைப்பும், அரசியலமைப்பை தூக்கி நிறுத்தும் மனப்பாங்கும் மனத்தில் குடிகொண்டவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்பது போன்ற வரிகள் ஆவணத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்கவில்லை.
மறுபுறம், அடிப்படை கல்வித் தகுதிகளை எட்ட முடியாத தரம் தாழ்ந்த, செயல் திறனற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் என்கிறது அறிக்கை. ஆனால், எந்தந்த தகுதிகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல் இல்லை.
கட்டுரையாளர்: லட்சுமி பிரியா, துணை பேராசிரியை, மகாத்மா காந்தி கல்லூரி, திருவனந்தபுரம்.
தமிழில் சுருக்கமாக : ம.சுசித்ரா (முகநூல் பதிவு)
ஆங்கில கட்டுரையை முழுமையாக வாசிக்க. https://www.epw.in/engage/article/education-policy-2020-privatisation-higher-education