இந்தக் கொள்கையை சில வார்த்தைகளில் சுருங்கச் சொல்வதென்றால், மாநில உரிமைகளுக்கு மரண அடி, தங்கு தடையற்ற தனியார்மயம், இந்துத்துவ ஆக்கிரமிப்புக்கு அகலத் திறக்கும் கதவுகள். கல்வியில் 191 நாடுகளில் இந்தியா 145வது ஸ்தானத்தில் தாழ்வுற்றுக் கிடக்கிறது. இன்றைய இந்திய கல்வியில் பெரும் மாற்றங்கள் தேவை என்பது பல காலமாக உணர்ந்து, பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட தேசிய வேதனை தான். ஆனால், இந்தக் கல்விக் கொள்கை அதற்குத் தீர்வாகத் தோன்றி இருக்கிறதா அல்லது பூதமாகக் கிணற்றிலிருந்து புறப்பட்டிருக்கிறதா என்பது தான் நம் முன் நிற்கும் கேள்வி.
பெரும் கனவுகளைக் கடை விரிக்கிறது இந்தக் கொள்கை. ஆனால், அவற்றை எட்டுவதற்கான பாதை அமைக்க முழுவதும் தவறுகிறது. பாதை என்று காட்டப்படுபவை பாதாளத்தில் தள்ளுபவையாக இருக்கின்றன. அல்லது வெறும் கையில் முழம் போடுபவையாக உள்ளன.
பல தேசிய இனங்களின் இணைப்பான, மகத்தான பன்முகச் செழுமை கொண்ட, இந்திய நாட்டிற்கு ஒரே கல்விக் கொள்கை என்பது ஏற்றுக் கொள்ளவே இயலாதது. உலகின் எந்த வளர்ந்த நாட்டிலும் நாடு முழுவதற்குமான மத்தியப்படுத்தும் ஒரே கல்விக் கொள்கை என்பது கிடையாது. சொல்லப்போனால், கல்வி தான் மிக அதிகமாக அதிகாரப் பரவல் செய்யப்பட்ட நிர்வாகப் பிரிவு. இந்தக் கல்விக் கொள்கையோ மாநிலங்களின் அதிகாரங்களை முற்றிலும் பறிக்கும், ஏற்றுக் கொள்ளவே முடியாத துஷ்பிரயோகமான அதிகாரக் குவிப்பு. முன் பருவக் கல்வியிலிருந்து, பல்கலைக் கழகம் வரை அனைத்து மட்டக் கல்வியும் மத்திய அரசினால் மைக்ரோ மேனேஜ் செய்யப்படும் ஜனநாயக மறுப்பான சர்வாதிகாரம். இனி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டுமென்றால், அது மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இயலும்.
இளம் கலை (பி.ஏ), இளம் அறிவியல் (பி.எஸ்.சி), இளம் வணிகவியல் (பி.காம்) எதுவாயினும், அல்லது தொழிற்கல்வியாயினும் நீட் போன்ற, நாடு முழுவதற்கும் ஒரே தேர்வாக மத்திய அரசின் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இடம் பெற முடியும். அப்படி என்றால், மாநிலங்கள் தங்கள் பாடத்திட்டத்தின் படி நடத்தும் பள்ளி இறுதித் தேர்வுகள் தேவையற்றவை, பயனற்றவை. இந்தக் கொள்கை தங்கு தடையற்ற தனியார்மயத்திற்கு அனைத்துக் கதவுகளையும் திறந்து விடுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அரசின் பங்கையும், அதிகாரங்களையும், வலிமைப்படுத்துவதற்கு மாறாக, அவற்றிற்கு முழு சுதந்திரமும், அதிகாரங்களும் அளிக்கப்படுகின்றன. கட்டண நிர்ணயத்திலிருந்து, பட்டங்கள் அளிப்பது வரை அனைத்திலும் எந்தக் கேள்வியும் கேட்கப்படமாட்டாது. கல்வி முழுவதும் வணிகப் பண்டமாகி, சந்தையில் கூவி விற்கப்படப் போகிறது. ஏற்றத் தாழ்வுகளும், நவீன ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் தீவிரமடையப் போகின்றன.
ஒரு பள்ளிக்கு இலக்கணமான தேவைகள் வலியுறுத்தப்பட மாட்டாது. அதாவது, ஒரு பள்ளி நிறுவுவதற்கும், நடத்துவதற்கும் எந்த வரையறைகளும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் பள்ளியை நிறுவலாம், நடத்தலாம். மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்படும். மூன்றாவது மொழி கற்க வேண்டுமென்றால், அது இந்தி ஆகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற பெரும்பான்மை வாதத்தைப் புகுத்தும் முயற்சி தலைதூக்குகிறது. சமஸ்கிருதத்திற்கு அனைத்து ஆதரவும் தரப்படும். இந்திய தேசியம், இந்திய அடையாளம் என்பது இந்து மேல் சாதி அடையாளம் என்பது தெளிவாகிறது.
இந்தியக் கல்விப் பாரம்பரியம் என்பது வர்ணாஸ்ரமத்தில் ஊறிய, சாதியம்-தீண்டாமை-ஆண் ஆதிக்கத்தில் அஸ்திவாரம் கொண்ட, பெரும்பாலான மக்களைப் புறம் தள்ளி, கல்வி மறுத்த, மனித மாண்பையும், கண்ணியத்தையும் மறுத்த பாரம்பரியம். இந்திய அரசியல் சாசன விழுமியங்களான, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் ஒளியில் உருவெடுக்கும் நவீன இந்தியாவில் பண்டைக் கல்விப் பாரம்பரியத்திற்கு எந்த இடமுமில்லை. இந்திய அரசியல் சாசன விழுமியங்களான, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் ஒளியில் உருவெடுக்கும் நவீன இந்தியாவில் பண்டைக் கல்விப் பாரம்பரியத்திற்கு எந்த இடமுமில்லை.
நன்றி : வே.வசந்தி தேவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் & தினகரன்.