அமர் சித்ர கதா – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 22)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒரு விடுமுறை நாளில் வழக்கம்போல நூலகத்துக்குச் சென்று போன முறை படிக்கத் தொடங்கி பாதியிலேயே விட்டுச் சென்ற புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன். அது ஈசாப் கதைத்தொகுதி. ஏற்கனவே படித்த புத்தகம்தான். ஆனால் எத்தனை முறை படித்தாலும் சலிப்பே தோன்றாத புத்தகம். எல்லாமே ஏதோ ஒரு வகையில் நீதியை வலியுறுத்தும் கதைகள். எல்லாமே முயல், நரி, சிங்கம், கரடி, யானை என காட்டில் வாழும் விலங்குகளைப் பாத்திரங்களாகக் கொண்ட கதைகள்.

ஒரு கதையில் தேளும் தவளையும் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஓர் ஆற்றங்கரையில் ஒரு தேள் நின்று தவித்துக்கொண்டிருந்தது. அதற்கு அவசரமாக ஆற்றின் அடுத்த கரைக்குச் செல்லவேண்டிய வேலை இருந்தது. எப்படி ஆற்றைக் கடந்து செல்வது என்று புரியாமல் தவித்தது. அந்த நேரத்தில் ஒரு தவளை எங்கிருந்தோ வளையிலிருந்து வெளிப்பட்டு தாவி வந்து ஆற்றங்கரையில் வந்து நின்றது.

எங்கே செல்கிறாய்?” என்று தவளையிடம் கேட்டது தேள். ”அதோ, அந்தக் கரைக்குச் செல்கிறேன்” என்றது தவளை. உடனே தேள் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியது. இரக்கம் கொண்ட தவளை தன் முதுகில் ஏறிக்கொள்ளச் சொன்னது. தேள் அமர்ந்துகொண்டதும் தவளை ஆற்றைக் கடக்கத் தொடங்கியது.

நடுவழியில் தேளுக்கு திடீரென ஒரு கெட்ட எண்ணம் உதித்தது. இதுவரை பல உயிரனங்களைக் கொட்டியிருந்தாலும் ஒருமுறை கூட ஒரு தவளையைக் கொட்டியதில்லையே என நினைத்து, தன் ஆசையை தீர்த்துக்கொள்ள விரும்பியது. உடனே தவளையின் நடுமுதுகில் தன் கொடுக்கால் கொட்டியது. ஆனாலும் தவளை எந்த எதிர்வினையும் இல்லாமல் போய்க்கொண்டே இருந்தது.

ஆர்வத்தின் காரணமாக “உன் முதுகில் வலி எதுவும் இல்லையா?” என்று கேட்டது தேள். அதற்கு தவளை, “எனக்கு முதுகில் வலி தெரிவதில்லை. கழுத்துப் பகுதியில்தான் எப்போதும் வலிக்கும்” என்று சொன்னது. அப்படியா சேதி என்ற தேள் மெதுவாக முதுகிலிருந்து நகர்ந்து கழுத்துப் பகுதியில் கொட்ட வந்தது. தேளின் கெட்ட எண்ணத்தை உணர்ந்துகொண்ட தவளை அக்கணமே தண்ணீரில் மூழ்கி உயிர் தப்பியது. கெட்ட எண்ணம் கொண்ட தேள் தண்ணீரிலேயே முழ்கி இறந்தது.

ஈசாப் கதைகளின் வலிமையே அவற்றின் மையமாக இருக்கும் நீதியின் அம்சம். அவற்றின் நம்பகத்தன்மைதான் அக்கதைகளை மீண்டும் மீண்டும் படிக்கவைக்கிறது.

ஈசாப் கதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெரியவர் புத்தகங்கள் நிறைந்த இரண்டு பைகளோடு நூலகர் அண்ணன் அருகில் வந்து நின்றார். யாரோ அனுப்பியதாகச் சொல்லி அறிமுகப்படுத்தினார். “ஞாபகம் இருக்குது. போன வாரம் வந்து சொல்லிட்டுப் போனாங்க” என்று சொன்னபடியே “இந்த பக்கமா எடுத்துட்டு வாங்க” என்று அவரை அறைக்குள் அழைத்துச் சென்றார். அவரையே பார்த்துக்கொண்டிருந்த என்னைக் கவனித்துவிட்டு, “தம்பி, வா. வந்து கொஞ்சம் உதவி செய். அந்தப் பையை தூக்கிவந்து கொடு” என்று கேட்டுக்கொண்டார். ஈசாப் கதைத்தொகுதியை மேசைமேல் வைத்துவிட்டு, பெரியவர் எடுத்து வந்த பைகளை உள்ளே எடுத்துச் சென்று வைத்தேன்.

ஒரு பையிலிருந்து பெரியவர் புத்தகங்களை வெளியே எடுத்து வைப்பதைப் பார்த்துவிட்டு, அடுத்த பையிலிருந்த புத்தகங்களை நானே வெளியே எடுத்துவைத்தேன். எல்லாமே பத்திரிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளை வெட்டித் தொகுத்து உருவாக்கப்பட்ட பைண்டிங் தொகுதிகள். எல்லாத் தொகுதிகள் மீதும் வெள்ளைத்தாளில் பெயர் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

அடுத்த வாரம் குடும்பமே சென்னைக்கு போவுது. டிரான்ஸ்பர். அவசரத்துக்கு தேடனதுல சின்னதாதான் வீடு அமைஞ்சிது. புத்தகங்களை வச்சிக்க முடியாது. அதனால் லைப்ரரிக்கே டொனேஷனா கொடுத்துடலாம்னு நெனச்சிட்டாரு ஐயா. இங்க இருந்தாலும் நாலு பேருக்கு பயன்படும், இல்லைங்களா”

புத்தகங்களின் பெயர்களை ஒரு பட்டியலாக எழுதி, கொண்டு வந்தவரிடம் கையெழுத்து போடுமாறு கேட்டு வாங்கி வைத்துக்கொண்டார். அவரும் வணக்கம் சொல்லிவிட்டு வெற்றுப்பைகளோடு சென்றுவிட்டார். நான் ஒவ்வொரு தொகுதியாக எடுத்து பெயரைப் படித்துப் பார்த்துவிட்டு சுவரோரமாக அடுக்கிவைத்தேன்.

ஏராளமான தமிழ்த்தொகுதிகளுக்கிடையில் நாலைந்து ஆங்கிலத்தொகுதிகள் கிடைத்தன. அமர் சித்ர கதா 1970, அமர் சித்ர கதா -1971 என்று பெயரும் ஆண்டுகளும் குறிக்கப்பட்ட தொகுதிகள். அழகான படக்கதைகள். உரையாடல்களும் நிகழ்ச்சிக்குறிப்புகளும் மட்டும் ஆங்கிலத்தில் காணப்பட்டன. ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் புரட்டி அந்த ஓவியங்களைப் பார்த்தேன். அம்புலிமாமா ஓவியங்களைப்போலவே பலவண்ண ஓவியங்கள். எனக்கு உடனே கண்ணும் கையும் பரபரத்தன.

அடுக்கும் வேலை முடிந்ததும் நான் மீண்டும் கூடத்துக்குத் திரும்பி ஈசாப் கதைகளில் மூழ்கினேன்.

உணவு இடைவேளை நெருங்கியதால் கூடத்தில் படித்துக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து செல்லத் தொடங்கினர். அண்ணனும் ஜன்னல்களை இழுத்து மூடத் தொடங்கினார். “என்னடா, கிளம்பலாமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் எழுந்து நின்று “அண்ணா, ஒரு புத்தகம் வேணும்ன்னா?” என்று இழுத்தேன். என்ன என்பதுபோல அவர் என்னைப் பார்த்தார். நான் வேகமாக அறைக்குள் சென்று கைக்குக் கிடைத்த அமர் சித்ர கதா புத்தகத்தை எடுத்துவந்து காட்டினேன்.

அண்ணன் அவசரமாக “டேய், அது இங்கிலீஷ் புத்தகம்டா” என்றார். நான் மெதுவாக “தெரியும்ண்ணா. நான் இங்கிலீஷ் புத்தகம்லாம் படிப்பேன்ணா. பழக்கம் இருக்குது. வேணும்ன்னா படிச்சி காட்டட்டுமா?” என்றபடி புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைத் திருப்பி வேகமாகப் படித்துக் காட்டினேன்.

அண்ணன் முகத்திலிருந்த கேள்வி மறைந்தது. மேசையில் பரவிக் கிடந்த செய்தித்தாள்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி அடுக்கிவைத்தபடி “சரிசரி, எடுத்துக்கோ. ஆனா சீக்கிரமா திருப்பி தந்துடணும். அப்புறம் எனக்குத்தான் கெட்ட பேராயிடும்” என்று சம்மதம் தெரிவித்தார். நான் அவர் பக்கம் திரும்பி ஒரு நன்றிப்புன்னகை சிந்தினேன்.

அன்று மாலையிலும் இரவிலும் அந்தத் தொகுதியையே புரட்டிப்புரட்டி படித்துக்கொண்டிருந்தேன். படக்கதைகள் எனக்குப் புதிதல்ல என்றாலும், அந்த வண்ண ஓவியங்களில் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதுபோலத் தோன்றியது.

கைபோன போக்கில் புரட்டிச் சென்று ஒரு கதையைப் படிக்கத் தொடங்கினேன். அது கிருஷ்ணன் கதை. வசுதேவருக்கும் தேவகிக்கும் திருமணம் செய்துவைத்து தேரில் உட்காரவைத்து கம்சன் ஓட்டிக்கொண்டு வரும் காட்சியிலிருந்து தொடங்குகிறது அந்தக் கதை. அப்புறம் வானில் எழும் அசரீரி, தேவகி சிறைவாசம், தொடர்ச்சியாக ஆறு பிள்ளைகளின் மரணம், எட்டாவது பிள்ளையாக கிருஷ்ணன் பிறந்ததும் கூடையில் சுமந்துசென்று யமுனையைக் கடந்து கோகுலத்தில் யசோதையிடம் ஒப்படைத்துவிட்டு அவள் பெற்ற பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு திரும்புதல், பெண்குழந்தை என்றும் பாராமல் இரக்கமின்றி அதைக் கொல்ல கம்சன் முயற்சி செய்தல், கம்சனைக் கொல்லவிருக்கும் கிருஷ்ணன் பிறந்து எங்கோ வளர்கிறான் என அறிவித்தபடியே அது மறைந்துபோதல், பிறந்த குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி பூதனைக்கு கம்சன் கட்டளையிடுதல், பூதனை வதம், காளிங்கன் என்னும் ஐந்து தலை நாகத்தை அடக்குதல், இடைவிடாத மழையால் வாடும் மக்களையும் கால்நடைகளையும் காக்கும்பொருட்டு கோவர்த்தன மலையை ஒற்றைவிரலால் தூக்கி நிறுத்துதல், இறுதியில் மதுராவில் நிகழும் மல்யுத்தப்போட்டியில் கிருஷ்ணன் கலந்துகொண்டு கம்சனைக் கொல்தல் என சிறிது நேரத்திலேயே படித்துமுடித்தேன். அந்த ஆங்கிலக் குறிப்புகள் படித்ததும் புரியும் வகையில் எளிமையாகவே இருந்தன.

அரைமணி நேரத்தில் ஒரு பெரிய புராணத்தையே சுருக்கமாகப் படித்துத் தெரிந்துகொள்ள வசதியான அந்தப் படக்கதை முயற்சி எனக்கு மகிழ்ச்சி தருவதாகவே இருந்தது. ராமன், தமயந்தி, சாவித்திரி, சகுந்தலை, ஹனுமான், மகாபாரதம், அரிச்சந்திரன் என அடுத்தடுத்து ஒவ்வொரு புத்தகத்தையும் படித்துமுடித்தேன். ஒவ்வொரு கதையின் முதல் வரியிலேயே தொடங்கிவிடும் விறுவிறுப்பு இறுதிவரி படிப்பது வரைக்கும் சிறிதும் குறைவுறாமல் இருப்பதுதான் படக்கதைகளின் சிறப்பம்சம் என்று தோன்றியது.

கதைகளைப்போலவே ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்திருந்த படங்களும் நன்றாக இருந்தன. ஐந்துதலைப் பாம்பின் மீது கிருஷ்ணன் நடனமிடும் படமும் உறியின் மீதேறி கிருஷ்ணன் வெண்ணெயை எடுத்துண்ணும் படமும் கோவர்த்தன மலையைத் தூக்கி நின்றிருக்கும் படமும் மிகமிக நன்றாக இருந்தன. நான் அவற்றை என் சுவடியில் படங்களாக வரைந்துகொண்டேன். மீண்டும் மீண்டும் வரைந்து கைப்பழக்கமாகிவிட்டதால், பாம்பின் மீது கிருஷ்ணன் நடனமிடும் படத்தை எதையும் பார்க்காமலேயே ஒரு தாளில் வரைந்துவிடும் அளவுக்கு என் பயிற்சி வளர்ந்துவிட்டது.

அடுத்த வாரத்தில் அத்தொகுதியை எடுத்துச் சென்று நூலகர் அண்ணனிடம் திருப்பியளித்தேன். “உண்மையாவே படிச்சியாடா?” என்று சந்தேகமாகக் கேட்டார். ”உண்மையாவே படிச்சேண்ணெ” என்றேன் நான். அவரிடம் என் ஓவியச்சுவடியைக் காட்டினேன். அவர் வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு புன்னகை புரிந்தபடி திருப்பிக் கொடுத்தார். ”கைவசம் பல திறமை வச்சிருக்க போல” என்று சொல்லிக்கொண்டே மேசைக்கு அருகில் சென்றுவிட்டார்.

அன்று மதிய உணவு இடைவேளை சமயத்தில் அமர் சித்ர கதாவின் மற்றொரு தொகுதியைக் கேட்டபோது அண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “ஜாக்கிரதயா படிச்சிட்டு கொண்டு வா” என்று மட்டும் சொன்னார். வாரத்துக்கு ஒரு தொகுதியாக அங்கிருந்த தொகுதிகளையெல்லாம் மகிழ்ச்சியோடு படித்துமுடித்தேன்.

Leave a comment