அப்பா சிறுவனாக இருந்தபோது – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 22)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பத்தாம் வகுப்பிலும் பதினொன்றாம் வகுப்பிலும் எங்களுக்கு ஆங்கிலப் பாடத்தை நடத்தியவர் எஸ்.ஆர்.ஒன். என்று சொல்லப்பட்ட ராமனாதன். ஒரே பெயரில் இரண்டு பேர் இருந்ததால் பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒருவர் எஸ்.ஆர்.ஒன் என்றும் இன்னொருவர் எஸ்.ஆர்.டூ என்று அழைக்கப்பட்டனர்.

எஸ்.ஆர்.ஒன். சாருக்கு ஒரு காது கேட்காது. வெள்ளைக்கூழாங்கல் போல ஒரு சின்ன இயந்திரத்தை காதில் வைத்திருப்பார். ஓங்கிய குரலில்தான் பாடமெடுப்பார். அவரோடு பேச நேரும்போது தானாகவே நம் குரலும் ஓங்கியொலிக்கத் தொடங்கிவிடும். அது ஓர் எளிய தந்திரம் என்பதை போகப்போகப் புரிந்துகொண்டேன்.

ஆங்கிலம் என்றாலேயே மாணவர்கள் அஞ்சி நடுங்கிய காலம் அது. ஆங்கில ஆசிரியர் வருகிறார் என்றாலேயே ஒவ்வொருவர் முகமும் ஏதோ கசப்பு மருந்தைக் குடித்ததுபோல ஆகிவிடும். அந்த எண்ணத்தை முதலில் உடைத்தவர் எங்கள் எஸ்.ஆர்.ஒன். நாக்கில் வைத்தால் கரைந்துபோகும் வெல்லம்போல மாணவர்களுக்கு ஆங்கிலம் பழகவேண்டும் என்று நினைத்தவர் அவர்.  ஒவ்வொரு பாடத்தையும் அவர் முதலில் தமிழிலேயே கதைமாதிரி ஒரு வகுப்பில் சொல்லி முடிப்பார். அடுத்த வகுப்பில் அந்தப் பாடத்தில் இடம்பெறும் முக்கியமான வினைச்சொற்களை மட்டும் ஒவ்வொன்றாக கரும்பலகையில் எழுதி அதற்குப் பொருத்தமான வாக்கியத்தைச் சொல்வார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு மாணவனையும் ஒரு வாக்கியத்தைச் சொல்லவைப்பார். அடுத்த வகுப்பில் ஒவ்வொரு வினைச்சொல்லும் மூவகைக் காலங்களிலும் எப்படி உருமாறும் என்னும் ரகசியத்தைப் புரிந்துகொள்ளவைப்பார். கடைசியில்தான் பாடத்தைத் தொடுவார். மனப்பாடம் முக்கியமல்ல, புரிந்துகொள்வதுதான் முக்கியம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.

பத்தாம் வகுப்பிலேயே ஆங்கிலத்தை சரளமாகப் படிக்கவும் சொந்தமாக எழுதவும் வைத்தவர் அவர். ஒவ்வொரு நாளும் அரைப்பக்கம் ஒருபக்கம் என நான் எழுதிச் சென்று காட்டியதை பொறுமையாகப் படித்து திருத்தியளித்து ஊக்கப்படுத்தியவர். ஆங்கிலக்கட்டுரைகளையோ கேள்வி பதில்களையோ நான் ஒருபோதும் மனப்பாடம் செய்ததில்லை. சொந்தமாகவே எழுதிவிடுவேன். அந்தத் திறமைக்கு அவரே மூல காரணம். ஒருமுறை அவர் டான் குவிஜாட் பாடம் நடத்தினார். பாடத்தில் உள்ள கதையை மட்டுமின்றி, ஏராளமான குவிஜாட் சாதனைகளைச் சொன்னார். “தெனாலி ராமன் கதைமாதிரி இங்கிலீஷ்காரன் கதை அது. பெரிய புத்தகம். பாடத்துல இருப்பது அதுல ஒரு சின்ன பகுதி” என்று சிரித்தார்.

ஒருமுறை நான் அவருடைய ஓய்வறைக்குச் சென்றிருந்தேன். நான் எழுதிவைத்திருந்த ஆங்கிலக் கட்டுரையை அவரிடம் கொடுத்தேன். வழக்கம்போல அவர் அதை பொறுமையாகப் படித்துத் திருத்திக் கொடுத்தார். “இப்படியே எழுதிப் பழகுடா. விட்டுடாத. உனக்கு இங்கிலீஷ் நல்லா வருது. எதிர்காலத்துல இங்கிலீஷ்லயே கதை எழுதலாம்” என்று தட்டிக்கொடுத்தார். புறப்படும்போது மேசையிலிருந்து ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து “இந்தா, இத படிச்சி பாரு. இதுல முப்பது நாப்பது கதைகள் இருக்குது. ஒரு சம்பவத்த எப்படி எழுதணும்ன்னு கத்துக்கலாம்” என்றார். நான் அந்தப் புத்தகத்தை ஆசையோடு வாங்கிக்கொண்டன். உறுதியான அட்டை போட்ட புத்தகம். ஒரு குதிரை திரும்பிப் பார்ப்பதுபோன்ற அட்டைப்படம் அழகாக இருந்தது. “தேங்க்ஸ் சார். தேங்க்ஸ் சார்” என்று சிரித்தபடி அங்கேயே நின்றிருந்தேன். “சரி சரி போ” என்று தட்டிக்கொடுத்து அனுப்பிவைத்தார் சார்.

அந்தப் புத்தகத்தின் பெயர் WHEN DADDY WAS A LITTLE BOY. ஒவ்வொரு நாளும் இரவுச்சாப்பாட்டுக்குப் பிறகு மண்ணெண்ணெய் விளக்குக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு அதைப் படிப்பதுதான் என்னுடைய வேலை. ஒரு நாளைக்கு நாலைந்து கதைகள் படித்துவிடுவேன். பெரும்பாலான சொற்கள் எனக்குத் தெரிந்தவையாகவே இருந்ததால் புரிந்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஒருசில புரியாத சொற்களுக்கு மட்டுமே அகராதி தேவைப்பட்டது. ஒரு சிறுமிக்கு கடுமையான காதுவலி. அதனால் காது கேட்பதில்லை. எந்த மருந்துக்கும் அது சரியாகவில்லை. அவளுக்கு வலி அதிகமாகும்போதெல்லாம் அழுதாள். அவளுடைய அப்பா அவளுக்கு அருகிலேயே இரவும் பகலும் உட்கார்ந்து அமைதிப்படுத்தினார். ஒருநாள் அவளுடைய கவனத்தைத் திசைதிருப்புவதற்காக தன்னுடைய இளமைப்பருவத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைச் சொல்லத் தொடங்கினார்.

அந்தக் கதையைக் கேட்டு மெய்மறந்துபோன சிறுமி அப்பாவின் குழந்தைத்தனமான முட்டாள்தனத்தை நினைத்து சிரித்தாள். மகளின் முகத்தில் சிரிப்பைக் கண்ட அப்பாவுக்கு உற்சாகம் பொங்கியது. மகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துவிட்ட மனநிறைவில் அப்பாவும் துள்ளிக் குதித்தார். பிறகு அவள் வலியால் சோர்வடையும் ஒவ்வொரு முறையும் இளம்பருவத்து நிகழ்ச்சிகளை நினைவிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவ்விதமாக, மகளுடைய மகிழ்ச்சிக்காக சொன்ன கதைகளையெல்லாம் தொகுத்து அவர் ஒரு புத்தகமாக வெளியிட்டார். அதுதான் இந்தப் புத்தகம். அவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். ரஷ்ய மொழியில் எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கதையும் சிரிக்கவைத்த்து. படிக்கும்போதும் சிரிப்பு வந்தது. அதை நினைத்துக்கொள்ளும்போதும் சிரிப்பு வந்தது. நான் சிரிப்பதைப் பார்த்துவிட்டால் போதும், ”என்னடா சிரிப்பு இது? எப்ப பாத்தாலும் கெக்கெக்கென்னு? கிறுக்கா ஒனக்கு?” என்று அம்மா அதட்டத் தொடங்கினார்.

அத்தொகுப்பில் பந்து விளையாட்டு பற்றிய ஒரு கதை உண்டு. ஒரு சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் ஒரு பந்து வாங்கிக் கொடுத்தார்கள். நல்ல அழகான வண்ணப்பந்து. மைதானத்துக்கு அதை எடுத்துவந்து எல்லா நண்பர்களுக்கும் காட்டினான் அவன். ஆனால் அந்தப் பந்தைத் தொட யாரையும் அவன் அனுமதிக்கவில்லை. விளையாட்டிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. தனியாகவே பந்தை உருட்டி விளையாடினான். மற்ற பிள்ளைகள் ஏக்கத்தோடும் பொறாமையோடும் தினமும் அவனைப் பார்த்தார்கள். பெரிய பேராசைக்காரன் என்று அவனைப் பழித்தார்கள். ஒருநாள் ஒரு பையன் தைரியமாக அவனிடம் வந்து “உன் பந்து அழகான பந்துதான். ஒத்துக்கொள்கிறேன். அதில் சந்தேகமே இல்லை” என்றான். “உண்மைதான். அதற்கென்ன இப்போது?” என்று அவனிடம் கேட்டான் சிறுவன். “என்னதான் அழகாக இருந்தாலும் அந்தப் பந்து ஒரு காருக்கடியில் போனால் பட்டென்று வெடித்துவிடும்” என்று சொல்லிவிட்டு பந்து வெடிப்பதுபோல ஓசையெழுப்பிச் சிரித்தான். பையனுக்கு ரோஷம் வந்துவிட்டது. வெகுண்டெழுந்து “என் பந்து ஒன்றும் சாதாரண பந்தல்ல. அதை எதனாலும் வெடிக்கவைக்க முடியாது” என்று வேகமாகச் சொன்னான். ஆனாலும் கிண்டல்காரப் பையன் முதலில் சொன்னதையே திருப்பத்திருப்பச் சொன்னான். அதனால் சீற்றத்தின் உச்சத்துக்கே போய்விட்ட சிறுவன் “சரி, உனக்கு நிரூபிச்சிக் காட்டனா ஒத்துக்குவியா?” என்று கேட்டான். கிண்டல்காரப்பையனும் அதற்கு ஒத்துக்கொண்டான்.

அந்த நேரத்தில் தொலைவில் ஒரு கார் வருவது தெரிந்தது. கோபத்தில் இருந்த சிறுவன் அதைக் கவனித்துவிட்டு “இந்தப் பக்கம்தான் கார் வருகிறது. நான் பந்தை குறுக்கில் உருட்டிவிடுகிறேன். இந்தப் பக்கம் உருட்டிவிட்டால் அந்தப் பக்கம் போய் நின்றுவிடும் பார்க்கிறாயா?” என்றான். கிண்டல்காரப்பையன் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். சீரான வேகத்தில் கார் வந்துகொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்தை கார் தொட்டதுமே பையன் தன் வசமிருந்த பந்தை உருட்டிவிட்டான். காரின் ஒரு பக்கச் சக்கரங்களைக் கடந்து உருண்டது. எங்கும் மோதவில்லை. பையன் வெற்றிச்சிரிப்பு சிரித்தான். அடுத்த நொடியில் மறுபக்கச் சக்கரங்களில் மோதிய பந்து வெடித்துச் சிதறியது. சிறுவன் நம்பமுடியாதவனாக உடல்நடுங்க உறைந்து நின்றான். திரும்பி வீட்டை நோக்கி ஓட்டமாக ஓடினான். சிறுவர்கள் அனைவரும் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள்.

அடுத்தநாள் அவன் விளையாடுவதற்கு மைதானத்துக்குச் சென்றபோது மீண்டும் அவனைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். முட்டாள் பையன் என்று அவனுக்கு பட்டப்பெயர் சூட்டி சிரித்தார்கள். சிறுவனுக்கு அவமானமாக இருந்தது. அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் அனைவரையும் பார்த்து அதட்டினார். சிறுவனிடம் நடந்ததை விசாரித்தார். அவன் அனைத்தையும் அவரிடம் சொன்னான். இறுதியாக ஆற்றாமை மிக்க குரலில் “நான் முட்டாள் சிறுவனா?” என்று கேட்டான். பெரியவர் “இல்லை இல்லை” என்று தலையசைத்தார். ”நிச்சயமாக நீ முட்டாள் சிறுவனில்லை” என்று நெருங்கிவந்து ஆறுதலாக தட்டிக்கொடுத்தார். அவன் நிம்மதியாக மூச்சுவிட்டான். பெரியவர் தொடர்ந்து அவனிடம் ”ஆனால் நீ பேராசைக்காரன். நீ மட்டும் தனியாக மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு” என்று எடுத்துச் சொன்னார். தொடர்ந்து ”பல பேருடன் சேந்து ஆடும்போதுதான் உன் மகிழ்ச்சியும் பல மடங்காக பெருகும்” என்றார். சிறுவனுக்கு மெல்ல மெல்ல உண்மை புரிந்தது. பெரியவர் அவனையும் தன்னோடு அழைத்துச் சென்று அவனுக்கு புதிதாக ஒரு பந்தை வாங்கிக் கொடுத்தார். மைதானத்துக்குத் திரும்பிய பையன் அனைவரோடும் சேர்ந்து விளையாடினான்.

ஒவ்வொரு நாளும் படித்த கதைகளை அடுத்த நாளே என் வகுப்பு நண்பர்களுக்குச் சொல்வேன். அப்படிச் சொல்லும்போது விறுவிறுப்புக்காக கூடுதலாக சில சம்பவங்களையும் சேர்த்துக்கொள்வேன். மரத்தடியில் பத்துப் பேருக்கு நடுவில் உட்கார்ந்து அனைவரும் கேட்கும்படி கதை சொல்வது ஓர் ஆனந்தமான அனுபவம்.

ஓடுகிற வண்டியை குறுக்கில் படுத்து நிறுத்துவது, இசைப்பயிற்சிக்குச் செல்வது, சர்க்கஸ் பார்க்கச் செல்வது, நாய்க்குப் பயிற்சி கொடுக்கப்போய் கடிபடுவது என ஏராளமான கதைகள் அந்தப் புத்தகத்தில் இருந்தன. அந்த ஆண்டு முழுக்க இந்தக் கதைகளை வெவ்வேறு விதமாக மாற்றிமாற்றி நண்பர்களுக்குச் சொல்லி சிரிக்கவைத்தேன்.

இந்தப் புத்தகமே நம்மாலும் ஆங்கிலத்தில் படித்துப் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு முதன்முதலாக அளித்தது. தன்னைப்பற்றி சொல்லப்பட்ட ஏளனச்சொற்களையும் தன் தவறுகளையும் அவமானங்களையும் கூட மகளிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் அப்பா பாத்திரத்தை ஒருநாளும் மறக்கமுடியாது.

புத்தகம் : http://www.arvindguptatoys.com/arvindgupta/daddy-little-boy.pdf

Leave a comment