சேக்குட்டி – சேது – பி.வி.சுகுமாரன் (எனக்குப் பிடித்த மலையாள சிறார் நூல்கள் – 04)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது. தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் புகழ்பெற்ற எழுத்தாளர் சேதுவின் “சேக்குட்டி” நூலை அறிமுகப்படுத்துகிறார்.

“நிகழ்காலத்தை எழுதுதல்” என்பது இலக்கியத்தில் முக்கியமான அம்சம். சமகால அனுபவங்கள், சிக்கல்கள், துயரங்கள் படைப்புகளாக மாறும்பட்சத்தில் அவை எதிர்காலத்தில் வாசிக்கக்கூடியவர்களுக்கான ஆவணமாக மாறக்கூடும். ஆனால், இந்த முறை ஆக்கங்கள் தொடர்ந்து எழுதப்படுவதில்லை. சமகாலத்தைப் படைப்பாக்குவதை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால் அந்தச் சிலரைப் பின்பற்றி எழுத புதிதாக வருபவர்களும் இதை மேற்கொள்ள தயக்கம் காட்டுவது இயல்பாகி விட்டது. பெரியவர்கள் இலக்கியத்திற்கே இந்த நிலை எனில் சிறார் இலக்கியத்தில் சமகாலத்தை எழுதுதல் இன்னும் அபூர்வமாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்வதென்றால் சிறுவர்களுக்கு சமகால வரலாற்றைப் படைப்புகளின் வழியே சொல்வது மிகவும் அவசியம். அப்படிச் சொல்லும்பட்சத்தில் படைப்பு விட்ட இடத்திலிருந்து அவர்கள் தங்கள் தேடலை உற்சாசமாகவும் பயனுள்ளதாகவும் தொடங்குவார்கள்.

கேரளாவில் உள்ள சேந்தமங்கலம் எனும் அழகிய ஊர் புடவைகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால், ஓர் இடர்பாட்டில் அந்த ஊரின் நெசவாளிகள் முன்போல வேலையில்லாமல் சென்று துயர வாழ்க்கையின் பிடியில் சிக்கினர். இதை எழுத்தில் வடிப்பது ஒரு படைப்பாளனுக்கு அவசியம். அதுவும் அந்த ஊரின் மைந்தனுக்கு கடமை என்றே சொல்லலாம். அந்தக் கடமையைச் செம்மையாக நிறைவேற்றியிருக்கிறார் எழுத்தாளர் சேது. இவரைப் பற்றிப் பார்க்கும் முன் அவர் எழுதிய சிறார் நாவல் “சேக்குட்டி”யைத் தெரிந்து கொள்வோம்.

சேந்தமங்கலம் எனும் அழகான ஊரில் வசிப்பவர் விநோதினி டீச்சர். இவர் அந்த ஊர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கணவர் இறந்துவிடுகிறார். குழந்தைகள் ஏதுமில்லை. அந்த ஊரை தாக்கிய வெள்ளத்தால் புடவை தயாரிக்கும் நெசவாளர்கள் வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதனால், பலரும் பொம்மைகள் செய்கின்றனர். விநோதினி டீச்சரும் மண்ணாலான பொம்மைகள் செய்கிறார். இயல்பாகச் செல்லும் கதையில் ஃபேன்டஸி நுழைகிறது. இமயமலையிலிருந்து வந்த சந்நியாசி ஒருவர், விநோதினி டீச்சருக்கு ஒரு மந்திரம் சொல்லித் தருகிறார். அதன்படி அவர் ஐந்து பொம்மைகளுக்கு உயிர்கொடுக்க முடியும்.

அன்றைக்கு காலை, விநோதினி டீச்சர் வழக்கம்போல பொம்மைகள் செய்கிறார். அதில் ஓர் அழகான பொம்மைக்கு கண் திறக்கிறார். சின்னு என்று செல்லப் பெயரும் அதற்கு சூட்டுகிறார். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட சின்னு உயிர்பெறுகிறது. வீட்டைச் சுற்றி சுற்றி விநோதினி டீச்சரை மகிழ்ச்சிபடுத்துகிறது. சின்னு எனும் சேக்குட்டியைப் பள்ளிக்கு அனுப்புகிறார் டீச்ச்ர். அங்கிருக்கும் ஒரு குட்டிப்பெண் சின்னுவை “என்னதான் இருந்தாலும் நீ பொம்மைதான்” எனக் கிண்டல் செய்கிறாள். “இனி எனக்கு சின்னு என்ற பெயர்கூட வேண்டாம். சேற்றிலிருந்து வந்தவள்தானே நான். அதனால் சேக்குட்டி என்ற பெயரே போதும்” என்று சொல்கிறாள் சின்னு என்கிற சேக்குட்டி. எது ஒன்று இழிவாகப் பார்க்கப்பட்டதோ, அதையும் இழிவாக நினைக்காது பெருமையாகவே சொல்கிறாள். விநோதினி டீச்சர் இன்னும் நான்கு பொம்மைகளுக்கு உயிர்தருகிறார். அவை சின்னன், சிப்பி, சின்டன், சிஞ்சு. இவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடுகிறாள் சின்னு எனும் சேக்குட்டி. இவர்களின் சின்னு மட்டும் பெரிய பெண் மாதிரி பேசுவதைப் பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

விநோதினி டீச்சர் வீட்டின் பணிப்பெண் கல்யாணிக்கு சின்னு உள்ளிட்டோரைத் தொடக்கத்தில் பிடிக்க வில்லை. ஆனால், நாளாக நாளாக பிடித்துவிடுகிறது. அவர்களை நன்கு கவனித்துக்கொள்கிறாள். ஒருநாள் டீச்சரின் முன்னாள் மாணவி ஆலிஸ் வருகிறார். இவர் நர்ஸாகப் பணிபுரிபவர். இவரின் கணவர் ஜெர்மனியில் மருத்துவர். ஆலிஸ் தம் குடும்பத்தோடு ஜெர்மனி நாட்டில் வசிக்கிறார். விடுமுறைக்காக வந்தபோது விநோதினி டீச்சரைப் பார்க்க வந்திருக்கிறார். ஆலிஸ் டீச்சருக்கு தங்க வளையல் பரிசாகக் கொடுக்கிறார். டீச்சர் அதை மறுக்க, வற்புறுத்தி பெற்றுக்கொள்ள வைக்கிறார் ஆலிஸ். அங்கே இருக்கும் பொம்மைகளைப் பார்க்கிறாள். உயிர் பெற்றிருக்கும் பொம்மைகள் தவிர உயிரற்ற பொம்மைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் மூன்று பொம்மைகளை ஆலிஸ்க்குத் தருகிறார் டீச்சர், அப்போது பள்ளிக்குச் சென்ற சின்னு உள்ளிட்ட ஐந்து பேரும் வீட்டுக்கு வருகின்றனர். அவர்களை ஆலிஸ்க்கு அறிமுகப்படுத்தி, இவர்களே என் குழந்தைகள் என்கிறார் டீச்சர். பொம்மைகள் உயிர்பெற்றிருப்பதைப் பார்த்த ஆலிஸ், இதெல்லாம் நிஜம்தானா என்று ஒருநிமிடம் குழம்பி, பின் மகிழ்ச்சியடைகிறாள். பின் தயங்கியவாறே, சின்னுவை தன்னிடம் கொடுக்க முடியுமா? என்று விநோதினி டீச்சரிடம் கேட்கிறார் ஆலிஸ்.

உடனே மறுத்துவிடுகிறார் டீச்சர். ஆலிஸூம் தன் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். அன்றைக்கு இரவு கல்யாணியும் டீச்சருடன் தங்கிவிடுகிறார். மிகவும் சோகத்துடன் இருக்கு தம் அம்மாவிடம் “ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” என வருத்ததுடன் கேட்கிறாள் சேக்குட்டி. தன் மாணவி ஆலிஸ், சேக்குட்டியைக் கேட்ட விஷயத்தைக்கூறி, “நீ ஆலிஸூடன் செல்கிறாயா?” எனக் கேட்கிறார் டீச்சர். அம்மாவின் வருத்தத்தைப் பார்த்த சின்னு கொஞ்சம் யோசித்து விட்டு, “சரி. செல்கிறேன்” என்கிறாள்.

அடுத்த நாள் சின்னுவை ஆலிஸிடம் தருகிறார் விநோதினி டீச்சர். சின்னுவும் அவர்களோடு ஜெர்மனி நாட்டுக்குச் செல்கிறாள். அங்கே பள்ளியில் இவளின் செயல்களால் ஒரு ஸ்டாராகி விடுகிறாள். பள்ளியில் நடக்கும் விழாவில் சேந்தமங்கலத்தின் வரலாற்றையும் வெள்ளத்திற்கு பிறகு நெசவாளிகள் அடைந்த துயரத்தையும் உணர்வுபூர்வமாகப் பேசுகிறாள். அவள் மலையாளத்தில் பேசுவதை ஜெர்மனியில் மொழிபெயர்க்கும் தம்பிச்சாயன் மாஸ்டரே சின்னுவின் பேச்சைக் கேட்டு அசந்துவிடுகிறார். பெரிய பெண் போல பேசுகிறாளே என்று வியக்கிறார். சில சொற்களை எப்படி மொழிபெயர்க்க சிரமப்படுகிற அளவுக்கு இலக்கியச் சொற்களைப் பயன்படுத்துகிறாள் என்று திகைக்கிறார்.

இதையெடுத்து பெரிய விழாவில் பேசுமாறு சின்னுவை அழைக்கிறார்கள். அங்கே சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பேராசிரியர் ஒரு யூதர். சின்னு தனது பேச்சில் சேந்தமங்கலத்திற்கும் யூதர்களுக்கும் உள்ள உறவைப் பேசுகிறாள். மேலும், சேந்தமங்கலம் நெசவாளர்களின் கண்ணீர் கதையையும் பதிவுசெய்கிறாள். கூட்டம் நெகிழ்ந்து சேக்குட்டியான சின்னுவைக் கொண்டாடுகிறது. இப்படியாக அக்கதை செல்கிறது. “இந்த மண்ணிலிருந்து உருவானவள்தானே சேக்குட்டி. என்றேனும் அவள் நிச்சயம் திரும்பி வந்தே தீருவாள்” என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் விநோதினி டீச்சர்.

சேக்குட்டி நாவல் மலையாள சிறார் இலக்கியத்தில் புகழ்பெற்றது. பல இடங்களில் மேற்கொள் காட்டப்படும் சிறப்புக்கு உரியது. இந்த நாவலை எழுதிய சேது, தமிழுக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரின் பாண்டவபுரம் நாவல் குறிஞ்சி வேலைன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. இந்நாவலில் மொழி பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகிறது. அதைப் பற்றிச் சொல்லுகையில், “சேதுவின் பாண்டவபுரம், சந்தேகமில்லாமல் எழுத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உருவாகும் ஒரு சூழ்நிலை, ஒரே சமயத்தில் யதார்த்தமாகவும் மாந்திரிக யதார்த்தகமாகவும் இருவேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆச்சரியத்தை விளக்கவே முடியாது. எத்தனை முறை வாசித்தாலும் புதுப்புது அனுபவங்களை அளித்துக்கொண்டே இருக்கும் படைப்பு இது” என்று புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நாவல் கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

சேது இதுவரை 16 நாவல்களை எழுதியுள்ளார். இவற்றில் “பாண்டவபுரம்” “அடையாளங்கள்” கிழக்குப் பதிப்பக வெளியீடாக தமிழில் வெளிவந்துள்ளது. (மொழிபெயர்ப்பு: குறிஞ்சி வேலன்) 10 சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். மூன்று முறை கேரள சாகித்ய அகாடமி விருது, முட்டத்து வர்க்கி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார். இவரின் நிஜங்கள் அடிமைகள் (Njangal Adimakal) எனும் கதையை அடிப்படையாக ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. அப்படத்தின் சிறந்த கதைக்காக கேரளா மாநில விருதையும் பெற்றிருக்கிறார். எழுத்தின் மாய உலகைப் படைக்கும் சேதுவின் கைவண்ணத்தில் வந்திருக்கும் ஒரே சிறார் நாவல் சேக்குட்டி. அவர் ஊரில் கிடைத்த அனுபவங்களின் உண்மையை, யதார்த்ததை ஃபேன்டஸியுடன் சிறார்க்கு விருந்து வைத்திருக்கிறார். எனவே, இதன் தாக்கம் சிறார் மனத்தில் மிக நீண்டகாலம் தங்கியிருக்கும். நாவலில் கதை மட்டுமல்ல சேந்தமங்கலம் வரலாறும் தான். பெரியவர்கள் இந்நாவலை வாசிக்கையில் புதிய அனுபவமும் களநிலவரமும் தெரியவரும். அதனால், சிறார் மட்டுமல்ல பெரியவர்களும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டியது அவசியம். பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யும்பட்சத்தில் இக்கதையும் வரலாறும் இன்னும் பரவலாகப் பலரையும் சென்றடையும்.

நூல்: சேக்குட்டி | எழுதியவர்: சேது | ஓவியம்: ரோனி தேவஸ்யா | வெளியீடு: மாம்பழம் பப்ளிஷர்ஸ் | எழுத்தாக்கம் : விஷ்ணுபுரம் சரவணன்

Leave a comment