ஒரு குடையும் குஞ்சுபெங்கலும் முட்டத்து வர்க்கி – பி.வி.சுகுமாரன் (எனக்குப் பிடித்த மலையாள சிறார் நூல்கள் – 03)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மளையாளத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது, தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் “ஒரு குடையும் குஞ்சுபெங்கலும்” எனும் சிறார் நாவல். இந்த நூல் மலையாளச் சிறார் இலக்கியத்தில் புகழ்பெற்றது.
சக மனிதரிடம் நீங்கள் பகிர்வதற்கு அன்பை விடவும் உயரிய பொருளோ விஷயமோ இருக்கின்றனவா என்ன? புறக்கணிப்பும் ஏமாற்றமும் வலிகளும் சூழ்ந்திருக்கும் இவ்வாழ்வில் எப்போதேனும் எட்டிப்பார்க்கும் மகிழ்ச்சியும் சிரிப்புமே எளிய மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கிறது. பரிசுப் பொருள் மீது எழுதும் ஓரிரு வார்த்தைகளில் நீங்கள் பரிமாற நினைப்பது துளி அன்பைத்தானே… பரிசைப் பெறுபவரும் எதிர்ப்பார்ப்பது அந்த அன்பைதானே.

அன்பு பரிமாறல் என்பது உயிரினத்தின் இயல்புகளில் ஒன்றுதான். யார், யாருக்கெல்லாம் அதைப் பகிர்கிறோம் என்பதே இங்கு உரையாடப்பட வேண்டிய ஒன்றாகிறது. சின்ன வயதில் நிராகரிப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட ஒரு பொருள் பற்றிய நினைவுகள் எந்த வயது வரைக்கும் இருக்கும் என்று நம்மால் கணிக்கவே முடியாது. இறக்கும் வரை அப்பொருள் கிட்டாது போய்விடக்கூடிய மனிதர்கள் ஏராளம். சின்ன வயதில் கண் முன் இருந்தும் தொடமுடியாமல் அல்லது கேட்டு மறுக்கப்படுகிற ஒன்றின் மீது அடக்கமுடியாத விருப்பம் வந்துவிடும் சிறுவனையும் அவனின் தங்கையைப் பற்றிய கதைதான் “ஒரு குடையும் குஞ்சுபெங்கலும்” நாவல். எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதாக இருக்கும்போது, பள்ளியில் துணைப்பாடமாக ஒரு கதை இருந்தது. உண்மையில் அது முழுக்கதைக்கூட இல்லை. பெரிய கதை ஒன்றிலிருந்து ஓர் அத்தியாயம் மட்டும்தான். அது என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. அந்தக் கதையைத் தேடியும் அந்த எழுத்தாளரின் மற்ற கதைகள் தேடியும் பள்ளி நூல்கம் மற்றும் ஊரிலிருந்து நூலகத்திற்குச் சென்றேன். அங்குதான் “ஒரு குடையும் குஞ்சுபெங்கலும்” படிக்கக் கிடைத்தது. ஆர்வத்துடன் படித்தேன்; கதையும் என்னை வாஞ்சையுடன் என்னை அணைத்துக்கொண்டது. தொடர்ந்து பல்வேறு நூல்களைப் படிக்க தூண்டவும் செய்தது. கிட்டத்த 40 வருடங்களுக்கு அதிகமாகவே காலம் ஓடிவிட்டது. இந்தத் தொடருக்காக அந்தப் புத்தகத்தை வீட்டில் தேடினேன். புத்தகம் இல்லை. புத்தகக் கடைக்குச் சென்று கேட்டேன். புத்தகம் இருப்பில் இல்லை என்றார்கள். இத்தனைக்கும் அந்தப் புத்தகம் வந்தது 1961-ம் ஆண்டு. 39 பதிப்புகள் இதுவரை வந்துவிட்டது.

“ஒரு குடையும் குஞ்சுபெங்கலும்” என் மனதில் ஆழமாகத் தங்கிய ஒன்று. மிக எளிமையான கதை. பேபி எனும் 11 வயது சிறுவனுக்கு, லில்லி எனும் 10 வயது தங்கை. அம்மா – அப்பா இல்லை. அதனால், பெரியம்மா வீட்டில் வளர்கிறார்கள். பெரியம்மாவும் வசதியானவர் இல்லை. அவரும் கணவனை இழந்தவர். அக்கம் பக்கத்தில் வீட்டு வேலைக்குச் சென்று காலத்தை நகர்த்துபவர். பெரியம்மா வேலைக்குச் செல்லும் ஒரு வீட்டில் இருப்பவள் கிரேஸி. அவள் வீடு வசதியானது. மிக உயர்ரகமான உடைகளை அணிபவள். லில்லியின் சமவயதைக் கொண்டவள். ஆனாலும் லில்லியை கிரேஸிக்குப் பிடிக்காது. காரணம் லில்லி அணிந்திருக்கும் சாதாரண உடைகள். கிரேஸிக்குத் தன்னைப் பற்றி மிகை மதிப்பீடும் உள்ளதால் திமிர் இயல்பாகவே ஒட்டிக்கொண்டது. ஒருநாள் லில்லியும் பேபியும் பள்ளிக்குச் சென்று திரும்புகிறார்கள். திடீரென்று மழை பெய்கிறது. நனையாமல் ஒதுங்க இடம் ஏதுமில்லை. பெரிய குடை ஒன்றைப் பிடித்தப்படி கிரேஸி வருகிறாள். பேபி, “நீ கிரேஸியுடன் செல். நான் பின்னால் வருகிறேன்” என்கிறான். கிரேஸியிடம் லில்லி, “நான் குடைக்குள் வரலமா?” எனக் கேட்கிறாள். ஆனால், கிரேஸி மறுத்துவிடுகிறாள். லில்லியும் பேபியும் நனைந்துகொண்டே வீடு திரும்புகின்றனர்.

பேபிக்கு இந்தச் சம்பவம் பெரிய அவமானமாகப் போய்விடுகிறது. அந்தக் குடையே அவன் நினைவில் வருகிறது. குடைக்குள் வர அனுமதி அளிக்காத கிரேஸியை கல்லால் அடிக்கிறான். அவளின் நெற்றியில் பட்டு ரத்தமும் வந்துவிடுகிறது. அதைப் பார்த்த பேபி, போலீஸ் தன்னைப் பிடித்துவிடுமோ என்று பயந்து ஊரை விட்டே ஓடிவிடுகிறான். ஆனால், பேபி பயந்ததுபோல சூழல் மாறவில்லை. ஓரிரு நாளில் வழக்கம்போல எல்லோரும் மாறிவிட்டனர். ஊரை விட்டுச் சென்ற பேபி, ஒரு நகரத்தில் கிடைக்கும் வேலையெல்லாம் செய்தான். பணம் சேர்த்தான். அவனின் அப்போதைய லட்சியம், கிரேஸி வைத்திருததைப் போல ஒரு குடை வாங்க வேண்டும் என்பதே. பணமும் ஒரளவு சேர்கிறது. ஆனால், அதை யாரோ திருடிகொண்டு சென்றுவிடுகின்றனர். என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறான். செளதாமினி எனும் ஆசிரியை அவனைப் பார்க்கிறார். தன்னோடு அவனை அழைத்துச்சென்று தங்க வைத்து படிக்க வைக்கிறார்.

இங்கே ஊரில், பெரியம்மாவின் கண்டிப்புகளும் தொந்தரவுகளும் அதிகரிக்கின்றன. ஒருநாள் லில்லி சாப்பிட்ட தட்டைக் கீழே போட்டுவிடுகிறாள். அதற்கு பெரியம்மா திட்டியதோடு கடுமையாக அடிக்கவும் செய்துவிடுகிறார். அதனால், அண்ணனைப் போல தானும் வீட்டை விட்டு ஓடிவிட முடிவெடுத்து சென்றுவிடுகிறாள். நல்ல வாய்ப்பாக அவரை ஒருவர் பர்த்து விசாரிக்கிறார். பின் லில்லியை தன் வீட்டுக்கே அழைத்துச் சென்றுவிடுகிறார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் அவர்களோடு லில்லியையும் படிக்க வைக்கிறார்.

காலம் விரைந்து ஓடுகிறது. பேபி படித்து டாக்டராகி விடுகிறான். லில்லியை வளர்த்தவர் தம் மகனுக்கே திருமணம் செய்துவைக்கிறார். ஒரே நகரில் இருக்கும் லில்லியும் பேபியும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொள்கின்றனர். மகிழ்ச்சியோடு அண்ணன்-தங்கை உறவில் வாழ்வை மீண்டும் தொடர்கின்றனர். கிரேஸிக்கு உடல்நிலை சரியில்லாது சிகிச்சை பெற, பேபியிடம் வருகிறாள் தன் கணவனோடு. கிரேஸியை அடையாளம் கண்டுக்கொள்கிறான் பேபி. சிகிச்சை முடிந்ததும் கட்டணமாகப் பணம் கேட்காமல், ஒரு குடை கேட்கிறான். கிரேஸியின் கணவரும் வாங்கித் தருகிறார். அந்தக் குடையை தன் தங்கை லில்லிக்குக் கொடுக்கிறான்.

இக்கதையில் குடை என்பது ஒரு குறியீடாக வருகிறது. முன்பின் தெரியாதவர் என்றாலுமே மழையில் நனையும் ஒருவரை குடைக்குள் சேர்த்துக்கொள்வது மிக இயல்பாக நடக்கும் செயல். குளிரில் சிலிர்க்கும் உடலை குறுக்கிக்கொண்டே குடைக்குள் வரும் அந்த மனிதர் நெகிழ்ந்து அல்லவா போய்விடுவார். அத்தனை நெருக்கமாக ஒரு மனிதரை தம்முடன் இணைத்துக்கொள்வது அன்பின் வெளிப்பாடு அல்லவா… ஒருவேளை அது கிடைக்காவிட்டால், இந்தப் பிணைப்பின் நெருக்கத்திற்கு மாறாக நிரந்தர விரிசல் வந்துவிடக்கூடும். அதைத்தான் சிறார் மனதில் விதைக்க “ஒரு குடையும் குஞ்சுபெங்கலும்” கதை முயற்சி செய்திருக்கிறது. இதை வாசிக்கும் சிறுவர்களுக்குத் தொடக்கத்தில் கதையின் சுவாரஸ்யமும் பின்னாளின் கதையின் மையச்சரடான அன்பைப் பகிர்தலும் உள்ளுக்குள் இறங்கும்.

மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் முட்டத்து வர்க்கி எழுதிய நூல் இது. இது 1961 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு டிவி சீரியலாகவும் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. (என்ன காரணத்தாலோ அத்திரைப்படம் வெளி வரவில்லை) திரைப்படத்தில் யேசுதாஸூம் சித்ராவும் பாடிய பாடல்களும் இப்போது யூடியூபில் பார்க்கலாம். இந்தக் கதை எழுதப்பட்டு 59 ஆண்டுகளாகியிற்று. ஆனால், இன்றளவு மலையாளத்தில் சிறுவர்களால் விரும்பிப் படிக்கப்படும் நூலாக இருக்கிறது. இணையத்தில் இப்புத்தக்த்தின் பெயரைப் போட்டு தேடினால், பலபேர் இந்த நூலுக்கு விமர்சனம் செய்திருக்கும் வீடியோக்களைப் பார்க்க முடியும். அவர்களில் அநேகர் சிறுவர்களே. இக்கதை நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டதும் உண்டு. சென்ற ஆண்டுகூட கேரளா, கடம்பழிபுரம் அரசுப் பள்ளி மாணவர்களால் இந்தக் கதை நாடகமாக நடிக்கப்பட்டது என்பது இப்பிரதியின் உயிர்ப்புக்கு ஒரு சாட்சி. இக்கதையைச் சிறார்க்கு இன்னும் நெருக்கமாக்கி விடுகிறார் லில்லி, பேபி, கிரேஸிக்கு உருவம் கொடுத்த ஓவியர் கே.ராஜி.

மலையாளத்தில் வணிக, கேளிக்கை எழுத்து வகையை “பைங்கிளி சாஹித்யம்” என்று சொல்வதற்கு தொடக்கமே முட்டத்து வர்க்கியே. இவரின் முதல் நாவலின் பெயர் “பாடாத்தா பைங்கிளி”. அதன்பிறகே இவ்வகை எழுத்து வகையில் புத்தகங்கள் அதிகம் வெளியிடப்பட்டன. அதனால் பைங்கிளி எழுத்தின் தந்தை என்றும் வர்க்கியைச் சொல்வதுண்டு. குடும்ப நாவல்கள் 65-யும் சேர்த்து சிறுகதைகள், கவிதைகள் என 132 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கேரளா, கோட்டம் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்தவர். பள்ளி ஆசிரியராக, மரப்பட்டறையில் கணக்காளராக, “தீபிகா” எனும் செய்தித்தாளில் இணையாசிரியராக, திரைப்படத்தில் கதை, வசனம் எழுதுபவராக என இவர் வேலை செய்தவற்றின் பட்டியல் மிக நீண்டது. இவரின் கதைகள் பலவும் திரைப்படங்களகியுள்ளன. புகழ்பெற்ற நடிக்ர் பிரேம் நசீர் நாயகான நடித்த “பாடாத்தா பைங்கிளி” படத்தின் கதை இவருடையதுதான். அதேபோல மம்முட்டி நடித்த “மகாநரம்” படமும் இவரின் கதையில் உருவானதே.

வர்க்கியின் எழுத்துகள் வாசிப்பை நோக்கி வரும் முதல் நிலை வாசகரை ஈர்க்கும் வகை சார்ந்ததே. எளிமையான, சின்ன வாக்கியங்களோடு இயல்பான கதைகளை எழுதியவர். இவரைப் படிக்கத் தொடங்கி பின் தீவிர இலக்கிய வாசிப்பை நோக்கிச் சென்றவர்கள் என்னையும் சேர்த்து ஏராளம். தமிழின் முக்கியமான எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் தனது தொடக்கக்காலத்தில் முட்டத்து வர்க்கியின் நூல்களை வாசித்ததாகக் கூறியுள்ளார். மிகச் சிலர் பைங்கிளி சாஹித்யம் வகை எழுத்து வாசிப்போடு தேங்க விடுவது நடப்பதுண்டு.

முட்டத்து வர்க்கி 1989-ம் ஆம் ஆண்டு இவர் இறக்கிறார். 1992-ம் ஆண்டிலிருந்து இவர் பெயரில் இலக்கிய விருது கொடுப்ப்படுகிறது. முட்டத்து வர்க்கி ஃபவுண்டஷேசன் நிறுவப்பட்டு, சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட நடுவர்களால் ஒவ்வோர் ஆண்டும் இவ்விருது தகுதியான படைப்பாளிக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு (1992) ஓ.வி. விஜயனுக்கும் அடுத்த ஆண்டு வைக்கம் முகம்மது பஷீருக்கும் வழங்கப்பட்டன. அவர்களைத் தொடர்ந்து எம்.டி. வாசுதேவநாயர், காக்கநாடன், எம்.முகுந்தன், சேது, கமலா சுரேயா, எம்.சுகுமரன், கே.சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் பெற்றிருக்கிறார்கள். இதுவரை 22 பேர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள். விருதுடன் ரூபாய் ஐம்பாதாயிரம் தொகையும் அளிக்கப்படுகிறது. மலையாள இலக்கியத்தில் மதிப்புமிகுந்த விருதாக இது மதிக்கப்படுகிறது.

முட்டத்து வர்க்கி மலையாளச் சிறார் இலக்கியத்தில் குறைவான பங்களிப்பு செலுத்தியிருக்கிறார் என்றாலும், “ஒரு குடையும் குஞ்சுபெங்கலும்” எனும் இந்தப் புத்தகம் எந்நாளும் சிறார் மத்தியில் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்கான எளிமையும் ஈர்ப்பும் வசீகரமும் அந்த நாவலில் இழைந்தோடிக் கிடைக்கின்றன. இப்போதும் அமேசன் உள்ளிட்ட இணையத்தளங்கள் மூலம் விற்பனையில் கிடைக்கிறது.

நூல்: ஒரு குடையும் குஞ்சுபெங்கலும் (சிறார் நாவல்)
ஆசிரியர்: முட்டத்து வர்க்கி
ஓவியம்: கே.ராஜி
வெளியீடு: டி.சி. புக்ஸ்

Leave a comment