டிக்குரோ எனும் பென்குவின் – பி.வி.சுகுமாரன் (எனக்குப் பிடித்த மலையாள சிறார் நூல்கள் – 02)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மலையாளத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது, அவர் பரிந்துரைக்கும் இரண்டாம் புத்தகம்.

இயற்கையை அழிக்கும் மனிதர்களின் நாசகரத் திட்டங்களைப் பற்றிய செய்திகளை, உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்டு சேர்த்துவருகின்றனர். அதனால்தான் உலகின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சுழலைக் காப்பாற்ற எண்ணற்ற போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதற்கு மிகச் சரியான உதாரணம் சூழலைக் காக்க போராடி வரும் கிரேட்டா தன்பர்க். ஆம்! இந்தத் தலைமுறையில் களத்தில் நிற்பதற்கு வயது ஒரு தடையாக இல்லை. மாறாக, உலகம் முழுவதும் எளிதாகக் கவனம் ஈர்க்கவும் இளம்வயது உதவியாக இருந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நேரடியாகக் களத்தில் நின்று தங்கள் பணிகளைச் செய்கிறார்கள். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளால் அப்பிரச்னையை மக்களிடம் கொண்டுசேர்ப்பதோடு, யாராலும் அழிக்க முடியாத ஆவணமாகவும் படைத்துவருகின்றனர். இனி, சூழலியல் இலக்கியம் உலகம் தழுவிய அளவில் இலக்கியத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது போராடுபவர்களுக்கு ஒரு கருவியாகவும் மாறும். பெரியவர்களுக்கான இலக்கியத்தில் மட்டும் இது நடந்தால் போதுமா? சிறார் இலக்கியத்திலும் இது எழுதப்பட வேண்டியது மிக மிக அவசியம் அல்லவா. ஏனெனில், நாளைய உலகம் சிறுவர்களின் வாழ்க்கைக்காகத்தானே. நமது முந்தைய தலைமுறை எப்படிச் செழிப்பாக இந்த இயற்கையை நமக்கு அளித்ததோ அதேபோல அடுத்த தலைமுறைக்கு நாம் அளிக்க வேண்டும் அல்லவா. உலகை இயக்கும் இயற்கை எவ்வாறு இருந்தது? எப்படி அதில் சீரழிகள் நடந்தன என்பதை சிறுவர்களுக்குப் பதிவு செய்ய வேண்டியது கடமை அல்லவா. அந்தக் கடமையைச் செய்யும் புத்தகமான “டிக்குரோ” பற்றிதான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.

நம்மை வசீகரிக்கும் உலகைக் காட்டும் “டிக்குரோ” கதைக்குள் செல்வதற்கு முன், அதை எழுதிய எழுத்தாளர் பி.கே.பாக்கிய லட்சுமியைப் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகத்தைப் பார்ப்போம். இவர் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. மிகவும் தேர்ச்சி பெற்ற நல்ல ஓவியர். பல ஓவியக்கண்காட்சிகளில் இவரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கதைகள் எழுதுவதோடு நல்ல கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். இப்படிப் பன்முக ஆற்றல் கொண்டவரே பி.கே.பாக்கிய லட்சுமி. இவர் எழுதிய “டிக்குரோ” எனும் கதைப் புத்தகம், பீமா பாலசாகித்ய புரஷ்காரம், எஸ்.பி.டி விருது உள்ளிட்ட ஐந்து விருதுகளைப் பெற்ற சிறப்புக்கு உரியது, மேலும் இவரின் கதை சொல்லும் விதமும் அடர்த்தியானதும் ஈர்க்கக் கூடியது கலந்த ஒரு வடிவம்.

டிக்குரோ எனும் பென்குவின்..

“பனி நாட்டில் கடலும் மண்ணும் ஒரே மாதிரி இருந்தது…” என்பதாகத்தான் கதையைத் தொடங்குகிறார் எழுத்தாளர். ஆம்; இந்தளவு மொழிசெறிவும் வாசிப்பவரைக் கற்பனையை விவரிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கிறது இக்கதை. டிக்குரோ என்னும் மிக அழகான பென்குவின்னிக்கு காலில் சிறு குறைபாடு உண்டு. அதன் தங்கை பென்குவின் யாரோவ். இருவரும் ரொம்ப மகிழ்ச்சியோடு அங்கு விளையாடி வாழ்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குப் பெரிய வருத்தம் ஒன்று உண்டு. அவர்களின் அம்மா-அப்பா இல்லை. தங்களின் பெற்றோர் எங்கே சென்றிருப்பார்கள் என்ற கவலை எப்போதும் அவ்ர்களுக்கு உண்டு. யாரிடம் கேட்டால் தங்கள் பெற்றோரைப் பற்றித் தெரிய வரும் எனத் தேடுகையில் அவர்களின் அத்தை மார்ஷாவைப் பார்க்கின்றனர். அவரோ “உங்கள் அம்மா-அப்பா சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.

மார்ஷாவுக்கு அவரின் தாத்தா, சொர்க்கம்-நரகம் தொடர்பான ஏராளமான கதைகளைச் சொல்லியிருக்கிறார். டிக்குரோவுக்கு யாரோவுக்கும் எப்படியாவது சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் வந்துவிடுகிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

ஒரு தேவதையின் உதவியோடு மேகத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். சொர்க்க வாசலில் இருக்கும் கிளியிடம் செல்வதற்கான மந்திரங்களைச் சொல்லிக்கொடுக்கிறது தேவதை. இந்தப் பகுதியில் ஓசோன் படலம் குறித்த உரையாடல் கதைக்கு இடையூறு இல்லாது இருக்கின்றன. ஒருவழியாக, சொர்க்க வாசல் கிளியை அடைந்துவிடுகின்றனர் இருவரும். “சொர்க்கம் என்பது மேலோகத்தில் மட்டுமல்ல, பூமியுமே சொர்க்கம்தான். ஆனால், மனிதர்கள் அதைப் பாழ்ப்படுத்தி விட்டனர். அதனால், நீங்கள் இருவரும் பூமிக்குச் சென்று சில மாற்றங்களையாவது ஏற்படுத்தி, அந்த நல்ல செய்தியை எனக்குச் சொன்னால் சொர்க்கத்திற்குள் அனுமதிப்பேன்” என்கிறது. “நாங்கள் இருக்கும் மேகத்திலிருந்து எப்படி நாங்கள் பூமிக்குச் செல்வது?” எனக்கேட்கும் டிக்குரோவுக்கும் யாரோவுக்கும் மாய ஆடையைப் பரிசாகத் தருகிறது கிளி. அந்த ஆடையை உடுத்திக்கொண்டால் இவர்களை வேறு யாரும் பார்க்க முடியாது. ஆனால், இவர்கள் எல்லாவற்றையும் பார்க்க முடியும். இருவரும் பூமியில் இறங்குகிறார்கள். அங்கே ஒருவர் அழுக்கோடு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இன்னோர் இடத்தில் ஒருவர் கெட்ட கெட்ட வார்த்தைகளாகப் பேச்க்கொண்டிருக்கிறார். ஆறு, குளம், சாலைகள் எல்லாம் எப்படி பாழாக்கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். சொர்க்க வாசல் கிளி சொன்னதுப் போலவே பூமியே சொர்க்கமாக இருந்திருக்கிற்து என்பதைக் கண்கூடாகப் பார்த்து தெரிந்துகொள்கின்றனர். அவர்களின் பயணத்தில் இப்படி பல்வேறு சம்பவங்களை, மனிதர்களை, இடங்களைப் பார்க்கிறார்கள். ஒவ்வொன்றையும் பற்றியும் நிறைய கேள்விகள் அவர்களுக்கு எழுகின்றது. இறுதியில், “அடுத்த ஜென்மத்தில் நாங்கள் மனிதர்களாகப் பிறந்து பாழாக்கப்பட்ட இயற்கையை சரி செய்வோம்” என்று இயற்கையிடம் பிரார்த்திக்கிறார்கள்.

சிறுவர்களை சட்டென்று சுண்டி இழுக்கும் மாயப் புனைவு கதையில் இயற்கை சீரழிக்கப்பட்டதையும் அதை சரிசெய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அக்கருத்தை எந்த இடத்திலும் பிரச்சாரமாகக் கூறிவிடாது டிக்குரோவின் பயணக் கதையின் ஊடாக உணர்த்திவிடுகிறார் பாக்கிய லட்சுமி. இந்தக் கதையை வாசிக்கும் சிறார் மனத்தில் இயற்கையை நேசிக்கவும் அதைப் பாதுகாக்கவும் எண்ணம் உருவாகும். ஒருவேளை சிறுவயதில் ஃபேன்டஸி கதை மட்டும் மனதில் தங்கினாலும், இயற்கை குறித்து கவனம் அவர்களின் அடியாழத்தில் நிச்சயம் தேங்கச் செய்துவிடும் இக்கதை. அது பின்னாளில் விரிவடைந்து இயற்கையை அழிப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்க வைப்பதும் நிச்சயம்.

டிக்குரோ நாவல், கேரளா மாநிலா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சில்டரன் லிட்ரச்சர் மூலம் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கதையை கண்முன் நடக்கும் விதமான ஓவியங்களை பி.எஸ். பேனர்ஜி வரைந்திருக்கிறார். சிறார் இலக்கியமாகவும் சூழலியல் இலக்கியமாகும் டிக்குரோ முக்கியமான கதை(பதிவும் கூட). இந்தப் புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். இதுபோன்ற கதைகள் அனைத்து மொழிகளிலும் அதிகளவில் எழுதப்பட்டு, எல்லாக் குழந்தைகளும் படிக்கும் சூழல் அமைய வேண்டும். அதற்கான கதைகளை உருவாக்க சிறார் எழுத்தாளர்கள் முன்வர வேண்டும்.

– எழுத்தாக்கம்: தமிழினி

Leave a comment