பெண்கல்வியின் ஆதார வேரை எங்கு தேடுவது? பாகுபாடுகள் நிறைந்த குருகுலங்களிலா? இல்லை அதற்கு பிறகு உருவான திண்ணைப் பள்ளிக் கூடங்களிலா? அவை இரண்டுமே ஆண்மையமானவை. பண்டைய இந்தியாவில் பெண் கல்வியின் ஆதார வேரைக் கண்டறிவது என்பது கடினமானது. ஒரு சில பெண்கள் இங்கும் அங்குமாக படித்திருக்கிறார்கள். புலவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அபூர்வமானவர்கள். அங்கு பெண் கல்விக்கான அடையாளம் ஏதும் இல்லை. பெண் கல்வியின் முதல் அடையாளம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியில் வகுப்பறைகள் மூலமாக நமக்கு கிடைக்கிறது. ஆனால் வகுப்பறையில் படித்தவர்கள் வசதியானவர்களாகவே இருந்துள்ளனர். அதே காலகட்டத்தில் வசதியற்ற பெண்களும் வகுப்பறைக்கு அப்பால் படித்திருக்கிறார்கள். எதன் மூலம் என்று வரலாற்றை தேடிப்பார்த்தால்… “இரவு பள்ளிகள்” என்பதை காண முடியும். வகுப்பறைகளில் படித்தவர்களில் பெரும்பாலனோர் வசதியானவர்கள், நகரத்தை சார்ந்தவர்கள் என்றால் இரவுப் பள்ளிகள் மூலம் படித்தவர்கள் கிராமப்புறத்தில் இருக்கிற ஏழை எளிய வீட்டு பெண்கள் அதுவும் ஒடுக்கப்பட்ட பெண்கள்.
1848யில் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே இருவரும் சேர்ந்து முதலாவதாக இரவு பள்ளியை அமைக்கிறார்கள். படிக்கும் வாய்ப்பை இழந்த ஏழை பெண்களுக்காகவே இரவுப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. அது வயது வந்த பெண்களின் கல்வி மையமாக இருந்தது. ஆனால் அங்கிருந்த பலர் இளம் விதவைகளாக இருந்தனர். அவர்களுக்கான ஒரு பிடிமானமாக இரவுப் பள்ளி இருந்தது. பள்ளிக்கு வந்த இளம் விதவைகளையின் துயரை உணர்ந்த பூலே தம்பதினர் “பெண்களுக்கு மறுமணம் தேவை” என்ற முக்கியமான முடிவை எடுக்கின்றனர். ஒரு இரவுப் பள்ளி, சமுதாயத்துக்கு கொடுத்த மிகப்பெரிய சிந்தனைதான் மறுமணம். அப்போது இதுமாதிரியான சிந்தனைகள் இல்லை. சதி பின்பற்றப்பட்ட காலத்தில், சதியை தீவிரமாக எதிர்த்த ராஜாராம் மோகன்ராய் கூட சதிக்கு மாற்றாக கடுமையான தவ வாழ்க்கையை தான் முன் நிறுத்தினாரே தவிர அவர் மறுமணம் பற்றி பேசவில்லை. மறுமணம் பற்றிய சிந்தனையை முதன் முதலாக நமது சமூகத்திற்கு முன்வைத்தது இரவு பள்ளியே. அந்த இரவு பள்ளி தான் பெண் கல்வியின் ஆதார வேர் என்று சொல்லலாம், அதன் பிறகு ஏராளமான இரவுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது கிறிஸ்தவ பாதிரியார்களின் முயற்சியில் நடந்த இரவுப் பள்ளிகள். குக்கிராமங்களில், விளக்கு வெளிச்சம் இல்லாத பகுதிகளிலும், பாதையில்லாத கிராமங்களிலும் பாதிரியார்கள் பெண்களுக்காக இரவுப் பள்ளிகளை அமைக்கிறார்கள். ஏராளமான பெண்கள் படிக்கிறார்கள் எந்த வசதியும் இல்லாத காலத்தில் பெண்களுக்கான கல்வியை இரவு பள்ளிகளில் முன்னெடுத்திருக்கிறது என்பதே வரலாறு.
1900 தொடக்கத்தில் தரம் சம்பந்தமான தரவு ஒன்று எடுக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பொருளாதாரம், விவசாயம், ஆரோக்கியம் குறித்த தரவுகளை எடுக்கும்போது சென்னை தஞ்சாவூர் போன்ற நகரங்கள் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால் பெண் கல்வி பற்றி ஆராயும்போது திருநெல்வேலி முன்னிலையில் வருகிறது, காரணம் கிறிஸ்தவர்களின் இரவுப் பள்ளிகள். அதிலும் பனையேறி குடும்ப பெண்களுக்கு கல்வி கிடைக்கப்பெற்றது மிக புரட்சிகரமான செயல் என்றே சொல்ல வேண்டும்.
கேரளாவில் பள்ளர் சமூகத்தவர் எவ்வாறு பள்ளிக்குச் சென்றார்கள் என்ற வரலாற்றை நாம் அறிய வேண்டும். அவர்கள் போலீஸ் துணையுடன் பள்ளிக்கு சென்றார்கள், ஆனாலும் இதனை கண்டு பொறுக்காத உயர் சாதியினர் பள்ளர் சமூகத்தினர் குழந்தைகளை பள்ளிக்கு வரக்கூடாது என அடித்தனர். அடி வாங்கி வாங்கியே பள்ளிக்கு சென்றனர் பிள்ளைகள். இந்த சூழலில் வகுப்பறை செல்லும் வாய்ப்பை முற்றிலும் இழந்தவர்கள் அங்குள்ள பெண்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பை மீண்டும் உருவாக்கி அந்த சமூகத்திற்கு கல்வியை அளித்தவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள்.
நமது சமூகத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பெரிய வரலாறு உண்டு. அறிவொளி காலத்தில் கிராமங்களில் பெரிய பழமையான பள்ளிகளை பார்த்திருக்கிறோம். அங்கிருந்த கிராமத்துப் பெரியவர்களும் உரையாடிய போது அவர்கள் கூறியது; பாதிரியார்கள் சர்ச் கட்ட வந்தபோது, “ஐயா! முதலில் பள்ளிக்கூடம் வேண்டும்” என்று மக்கள் கேட்டதும் அவர்களும் அதனை புரிந்துக்கொண்டு முதலில் பள்ளிக்கூடம் கட்டித் தந்தார்கள் பிறகு தான் சர்ச்சுகளை கட்டினார்கள் என்றனர். இது தமிழ்நாடு-கேரளா வரலாறுகளை படித்தவர்களுக்கு தெரியும். கன்னியாகுமரி மாவட்டம் சென்று பார்த்தால் இன்றும் கூட பழைய பள்ளிகளை பார்க்க முடியும். ஆனால், இன்று திரைக் கலைஞர் ஜோதிகா அவர்கள் கோயிலைப் போல பள்ளியும் முக்கியம் என்று சொன்ன நேர்மையான கருத்தை திரித்து அவர் மீது அநாகரிகமான வார்த்தைகளைப் பேசினார்கள். ஆனால் அப்போது கிறிஸ்துவ பாதிரியார்கள் யாரும் சீறி விழவில்லை. ஊர் பெரியவர்கள் கேட்ட நியாயமான கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். அப்படிப்பட்ட ஒரு வரலாறு பெண் கல்வியை உயர்த்திய வரலாறு இரவு பள்ளிகளுக்கு உண்டு .
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இரவுப் பள்ளிகள் எடுத்த மறுவடிவமே அறிவொளி இயக்கம். அறிவொளியில் கற்றோரும் பெண்களே! கற்பித்தோரும் பெண்களே! இது பெண்கள் இயக்கமோ என்று நினைக்கும் அளவிற்கு 90 சதவீதத்திற்கு மேல் பெண்களாகவே இருந்தனர். இரவு பள்ளி துவங்கி நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், எவ்வளவோ பள்ளிகள் கல்லூரிகள் உருவாகியிருந்த பிறகும் வகுப்பறை வாய்ப்பை இழந்த ஏராளமான பெண்கள் கிராமங்களில் இருக்கத் தான் செய்தார்கள்.
மூன்றாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியேறிய பெண்கள். குழந்தை தொழிலாளர்களாய் மாறிய பெண்கள் என பலரும் இரவு பள்ளியின் புதிய வடிவமான அறிவொளி இயக்கத்தில் கல்வி பெற்றனர். அறிவொளியில், பெண்கள் புதிய எழுச்சியை காணமுடிந்தது. அறிவொளிக்கு கற்றுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் மட்டும் பெண்கள் வரவில்லை. அறிவொளியின் முகத்தையே பெண்கள் மாற்றினார்கள். அறிவொளி இயக்கத்தின் திட்டங்களை மறுவடிவமைப்பு செய்தார்கள். பாடப்புத்தகத்தில் புதிய பாடங்களை உருவாக்கினார்கள். அதன் தொடர்ச்சியாக புதிது புதிதான வடிவங்களை அறிவொளி ஏற்படுத்தியது. தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளில் இயங்கும் பள்ளி வகுப்பறையில் இவை கண்டிப்பாக சாத்தியமாகாது.
பெண்கள் ஏராளமானோர் கற்க வாய்ப்பை அறிவொளி உண்டாக்கியது. அதற்கு அறிவொளி செய்திட்ட நிறைய முயற்சிகள் காரணமாக இருந்தது. உதாரணமாக அறிவொளியில் “நீத்தா” என்ற பெண்ணைப் பற்றிய புத்தகத்தை எழுதி நாங்கள் விவாதித்தோம். ஒவ்வொரு கிராமத்திலும் விவாதித்தோம். நீத்தா, குஜராத்தில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண். திருமணமானவள். அவளை பட்டேல் சமூகத்தை சேர்ந்த உயர்சாதியினர் கேலி பேசிய போது நீத்தா எதிர்த்துப் பேசினாள். அதனைக் கண்டு கோபம் கொண்ட படேல் சமூகத்தை சேர்ந்த சிலர் அவளை துன்புறுத்தியும், அடித்தும், பாலியல் வன்முறை செய்தும் வீதியில் அவமானப்படுத்தினர். அவள் அழுது கொண்டே வீடு திரும்பினாள். தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அப்போது அவளுடைய கணவன் தினேஷ் தடுத்து நிறுத்தி இது உன்னுடைய தப்பா? என்று கேட்கிறான். அந்த சில வார்த்தைகள், அவளை யோசிக்க வைத்தது. அவள் வாழ முடிவு செய்கிறாள். கணவன்-மனைவி இருவருமாக காவல் நிலையம் செல்கிறார்கள். ஆனால் காவலர்கள் இவர்களைத்தான் அடிக்கிறார்கள். இதை அறிந்து அந்த ஆதிக்க சாதியினர் அவர்களின் வீட்டுக்கு தீ வைக்கிறார்கள். பரிதவித்து அவர்கள் அலையும் போது சில பத்திரிக்கையாளர் தொடர்பு கிடைக்கிறது அதன் மூலம் உலகம் முழுவதும் இருந்து ஆதரவு திரள்கிறது. பல விஷயங்களில் வெற்றி அடைகிறாள். குறிப்பாக பஞ்சாயத்து தேர்தலில் 90%பட்டேல் இனத்தவர் 10% தலித் இனத்தவர் இருக்கும் அந்த கிராமத்தில் நீத்தா வெற்றியடைந்து பஞ்சாயத்து தலைவி ஆகிறாள். இப்படியான நீத்தாவின் வரலாற்றை கிராமந்தோறும் விவாதித்தோம். அறிவொளியின் இந்த செயல்பாட்டை கண்டு அன்று பலரும் அதிசயித்து போனார்கள். இந்த விவாதங்களையெல்லாம் பள்ளி வகுப்பறையில் செய்திட முடியுமா? என்ற கேள்வி எப்போதும் எனக்கு உண்டு. ஆனால் இவை அனைத்துமே அறிவொளியில் சாத்தியமானது.
உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் பாடப்புத்தக பொறுப்பாளராக இருந்த போது, “ஒவ்வொரு தமிழ்ப் பாட புத்தகத்திலும் 3 கடவுள் வாழ்த்து இருந்தது. ஏன் பிள்ளைகளை சித்திரவதை செய்யவா இத்தனை கடவுள் வாழ்த்து பாடல்கள்?” என கேட்டோம். உதயச்சந்திரன் உடனே மூன்றை ஒரு பாடலாக மாற்றினார். அதற்காக அவருக்கு கிடைத்த எதிர்ப்பு அதிகம். இந்தியப் பண்பாடு சிதைந்து போனது போல பேசினார்கள். இப்படி இருக்கும் சூழலில்பள்ளி வகுப்பறையில் நீத்தா பாடத்தை கொண்டு வரமுடியுமா? கொண்டு வந்தாலும் வகுப்பறைக்கு புள்ளிவிவரம் தகவல்தானே வேண்டும். திருமணம் ஆகும்போது நீத்தா வயது என்ன? நீத்தாவின் கணவர் பெயர் என்ன? இப்படி கேள்வி கேட்டு பாடத்தின் உயிரைச் சிதைத்துவிடும் பள்ளி வகுப்பறைகள்.
ஆனால் அறிவொளியில், சுதந்திரமான வகுப்பறை இருந்தது. அது பெண்கள் பேசிய விவாதித்த வகுப்பறை. கோபம் கொண்ட வகுப்பறை அது, அநீதியை கண்டு “இதை விடக் கூடாது” என்று சொல்லிய வகுப்பறைகளை அறிவொளியில் மட்டும் தான் பார்க்க முடிந்தது.
பெண் கல்வி என்றதும் வீதிகள் தான் நினைவுக்கு வரும். மறைந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி செம்மலரில் ஒரு கதை எழுதி இருந்தார். தரகன்பாடு என்பது கதையின் பெயர். அந்த கதையை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கடுங்காப்பி என வடிவமைத்திருந்தார். அற்புதமான கதை. ஜனநாயக மாதர் சங்க கூட்டங்களில் படித்து விவாதிக்கப்பட வேண்டியது.
ஒரு ஆண் தைரியமாக எடுக்கும் திருமணம் சார்ந்த முடிவு தான் கதை. அறிவொளியில் இந்தக் கதையை பெண்கள் எப்படி எல்லாம் விவாதித்தார்கள் என்பது ஆச்சிரியமாக இருந்தது. திருமணம் என்றாலே நிறைய பாசாங்குகள் தான் வெளிவரும், இவ்வளவு தைரியமாக கூட ஒரு ஆண் முடிவெடுப்பானா என்று கேட்டார்கள். எத்தனை விவாதங்கள் எவ்வளவுஉரையாடல்கள். இதுப் போன்று நிறைய விவாதங்கள் அறிவொளி வகுப்பறையில் நடந்தது. அதுவரை பள்ளி வகுப்பறை பாடங்களை பார்த்து பயப்படாத அரசாங்கம் முதன்முதலாக இந்த வகுப்பறையின் விவாதங்களையும் பாடங்களையும் கண்டு பயந்தது. ஏனென்றால் அறிவொளியில் முதல் பாடத்திலே பட்டா,படி, பசி என்ற வார்த்தைகளை இருந்தது. இந்த பசி என்ற வார்த்தையை கண்டு அதிகாரிகள் பயந்தனர். அதனால் அதனை உடனே நீக்கி விட்டனர். “மக்கள் கண்டபடி பேசுகின்றனர்” என்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு தகவல் கொடுத்து அதனை எடுத்தனர். பசி என்பதை மக்கள் வயிற்றிலிருந்து தான் எடுக்க வேண்டும். பாடங்களிலிருந்து எடுத்து என்ன செய்வது?
அறிவொளியில் ஒவ்வொரு வார்த்தையையும்அரசு அதிகாரிகள் கூர்ந்து கவனித்தார்கள். அதனால்தான் என்னவோ ஜூலியஸ் நைரேரே, “வகுப்பறையில் விழிப்புணர்வு வருவது என்பது ஸ்டவ் தீப்பிடிப்பது போல, அனால் வீதியில் விழிப்புணர்வு ஏற்படுவது என்பது காடு தீப்பிடிப்பது போல” என்று சொல்லியிருந்தார். அறிவொளிக் கூட்டங்களுக்குச் சென்றால் காடு தீப்பிடிப்பது போல் இருக்கும்.
அறிவொளியின் வீதி வகுப்பறை என்பது நச நசவென்று தூங்கி வழியும் வகுப்பறை அல்ல, சோர்ந்துபோன வகுப்பறை அல்ல, ஆசிரியரைக் கண்டதும் பதுங்கும் வகுப்பறை அல்ல. உணர்ச்சிமயமான, உணர்வுமயமான வகுப்பறை அது. அதன் பிறகுதான் கல்வி குறித்து பேசத் தொடங்கினோம் எங்கள் பார்வைகளை திருத்தியது அறிவொளி.
ஆறாவது ஏழாவது படித்த பிள்ளைகள் கூட பாடம் நடத்திய வகுப்பறை அறிவொளி. என்னுடைய மாணவி உமாமகேஸ்வரி பாடம் நடத்த இயலாமல் ஓடி வந்து சொன்ன நிகழ்வு நினைவுக்கு வருகிறது. “குட்டப்பிள்ளைக்கு குருணிநகை” என்று விடுகதை போட்டு அவர் பாடம் நடத்துகையில், அங்குள்ளோர் “ஒன்பது பேருக்கு ஒரே குடுமி அது அது என்ன” என்று கேட்டிருக்கிறார்கள். பதில் தெரியவில்லை என்பதால் ஓடி வந்துவிட்டார். அவர்களிடையே இருந்த இந்த விவாதப் போக்கு மிகவும் அழகானது.
“வெங்கலப்பூட்டு உடைத்து வெளக்குமாத்த திருடினானாம்” என்பார்கள். கடும் முயற்சி செய்து சாதாரண வேலையை செய்ததை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா? “ஒரு கரண்டி மாவினில் ஊருக்கெல்லாம் தோசை அது என்ன?” என்று நிலவைப் பற்றிப் பேசிய சனநாயகம், அன்பு, மனித நேயம் இதெல்லாம் எங்கே காணமுடியும்? எங்களுக்கு அறிவொளி வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது. பெண்கல்விக்கு வீதிதான் சரியான இடம் என்ற முடிவை எடுக்க வைத்தது.
கல்வியைப் பொறுத்தவரை மனங்களில் முதலில் மாற்றம் வர வேண்டும். தேர்வு எழுதுவது, பள்ளி செல்வது, மதிப்பெண் வாங்குவது, தேர்ச்சி செய்வது என்பது கல்வி முறையல்ல. மனோபாவத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை கல்வி தர வேண்டும். பள்ளி வகுப்பறையில் இது சாத்தியமே ஆகவில்லை. பள்ளிக்கூடம் உருவாக்கிய படிப்பு எப்படி இருந்தது எனில் படித்தவர், படிக்காதவர் இருவரிடையேயும் மூடப் பழக்கம் இருந்தது. இதில் படித்தவரின் மூட நம்பிக்கை மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. சுயநலத்தை ஏற்படுத்தக்கூடியது, வர்த்தக ரீதியானவை, திட்டம் உள்ளவை. உதாரணமாக அட்சய திருதி ஏன் இவ்வளவு ஆர்வம்? இன்றைக்கு திருமணம் என்றவுடன் ஜாதகம் முன்னிலையில் வருவது எப்படி? வீடுகளில் யாகங்கள் நடப்பது எப்படி? பகையை உருவாக்குபவர்கள் நாற்காலியில் அமர்வது எப்படி? எல்லாம் வகுப்பறை உருவாக்கிய படிப்பாளிகள் கொடுத்த வேதனை.
வீதிகள் வேறு! வகுப்பறைகள் வேறு! நான் வகுப்பறையிலும் இருந்திருக்கிறேன், வீதிக்கும் சென்றிருக்கிறேன். வகுப்பறையில் பார்த்த தேக்கத்தை வீதியில் பார்க்கவே இல்லை. பொருளாதாரம் போன்ற பல்வேறு தடைகள் வீதியில் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி வீதி கொடுத்த அனுபவங்கள் அற்புதமானவை.
இருபது வருடத்துக்கு முன்பு திருக்குறளில் இல்லறவியலில் 5 பாட்டுகள் மூன்றாம் வகுப்புக்கும், துறவறவியலில் ஐந்து பாடல்கள் நான்காம் வகுப்புக்கும், ஐந்தாம் வகுப்புக்கு குடும்ப கட்டுப்பாடு பற்றிய பாடல் இருந்தது. வகுப்பறையில் இருந்து ஒரு எதிர்ப்புக் குரலும் எழவில்லை. எதிர்ப்புக் குரல் எங்கிருந்து வந்தது என்றால் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திடமிருந்து வந்தது. சின்ன குழந்தைகளிடமா இல்லறவியல், துறவறவியல், குடும்பக்கட்டுப்பாடு பற்றி பேசுவார்கள் என்று கேட்டதால் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் இவற்றை பாடத்தில் இருந்து நீக்கினார்.
சென்ற ஆண்டுவரை காந்தியை கொன்றது கோட்சே என்று இருந்த பாடம் இந்த ஆண்டு ஆட்சியாளர்களால் நீக்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு என்று இருந்த பாடமும் தடாலடியாக நீக்கப்பட்டுள்ளது. அக்பர் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது. நியூட்டன் பாடம் நீக்கப்பட்டுள்ளது. அக்பர் ஒரு முஸ்லிம் நியூட்டன் ஒரு கிறிஸ்துவர் என்பதால். வகுப்பறையில் இருந்து ஒரு குரலாவது வரவேண்டும் அல்லவா? வரவில்லை. என்ன அநியாயம் இது? இந்தியா முழுவதும் கூப்பாடு எழுந்தது வகுப்பறைக்கு வெளியிலிருந்து. வகுப்பிலிருந்து ஒரு குரல் கூட எழ வில்லை.
வகுப்பறைக்குள் பெரிய நம்பிக்கையை நாங்கள் வைக்கவில்லை. ஆனாலும் வகுப்பறைகள் வேண்டும். பெண்களுக்கு வகுப்பறை வேண்டும். ஆண்களுக்கு வகுப்பறை வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு வகுப்பறை வேண்டும். வகுப்பறை ஒரு சிலரின் வாய்ப்பாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. எல்லோருக்குமானதாக மாற வேண்டும் என்றாவது ஒரு நாள் வகுப்பறையில் மாற்றம் வந்து விட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் இதெல்லாம் வீதியில் சுலபமாக நடந்தது.
நாங்கள் அறிவொளியில், “படைப்பாளி வைத்திருந்த காகிதம் எல்லாம் உழைப்பாளி தொட்டவுடன் ஆயுதம் ஆச்சு” என்று பாடுவோம். வகுப்பறையில் இருக்கும் வரை அது காகிதம் வீதிக்கு வந்ததும் ஆயுதம். வீதி அவ்வளவு பெரிய கனவுகளை எங்களிடம் கொடுத்தது. வாய்ப்புகளை இழந்தவர்களுக்கான கல்வி வீதியில் இருக்கிறது. இரவுப் பள்ளிகள் ஆகட்டும், அறிவொளி ஆகட்டும் லேசாக எண்ணி விட முடியாது அவற்றின் பணிகளை அதைச் செய்தவர்கள் கிறிஸ்துவ பாதிரிமார்களும், முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்களும். ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்றோர் இரவு பள்ளிகளின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்தார்கள் ஆனால் அதெல்லாம் பெரிதாக நடக்கவில்லை.
இரவுப் பள்ளிகள் அரிக்கேன் விளக்கில் நடந்தன நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் நடத்திய அறிவொளிக்கூட அரிக்கேன் விளக்கில் தான் நடந்தது. அவ்வளவுதான் இந்தியா மாறி இருக்கிறது. வெறும் வகுப்பறைக்குள் இருந்து இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இப்போது இந்த காலகட்டத்தில் பள்ளிகள் மூடி இருக்கின்றன. பள்ளிகளில் புதிய வகுப்பறை வேண்டும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. பள்ளிகள் ஒரு வருடம் கூட மூடி இருக்கலாம். உயிர்கள் முக்கியம் விதிகள் அல்ல.
குழந்தைத் தொழிலாளர்களை அறிவொளி காலத்தில் தீப்பெட்டி கம்பெனிகளில் பார்த்திருக்கிறோம். சின்னக் குழந்தைகள் எல்லாம் கணக்கு படத்துக்கு பயந்து வேலைக்கு சென்ற பிள்ளைகள். எவ்வளவோ சிரமப்பட்டோம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க. ஆனால் இப்போது பள்ளிகள் மூடிக்கிடக்ககின்றன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்தை முதன் முறையாக இந்தியா தற்போது பார்த்தது. ரொம்ப வருடத்திற்கு பிறகு குழந்தை தொழிலாளர்கள் பெருகும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வகுப்பறை புதிய ரூபம் எடுக்க வேண்டும் என பேசுகிறோம்.
பள்ளி வகுப்பறை மட்டுமல்ல வீதியும் புதிய ரூபம் எடுக்க வேண்டும். வீதி தான் பெண் கல்விக்கும் விழிப்புணர்வுக்கும் முக்கியமான இடம். ராஜஸ்தானில் 2012இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்கள் பள்ளிகளை சென்று பார்த்தபோது ஐந்து வயது பெண்கள் எல்லாம் தாலியைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து உள்ளனர். பெற்றோர்களிடம் கேட்டால் பெண் குழந்தைகள் கிரகலஷ்மியாவது முக்கியம் என்கிறார்கள். இது எவ்வளவு ஆபத்தான மனோபாவம்.
சாரதா சட்டம் குழந்தைத் திருமணத்தை ஒழித்து எத்தனை வருடம் ஆகிறது. ஆனால் இன்றைக்கும் ஐந்து வயது, ஆறு வயது குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறது. நாம் பொத்தாம் பொதுவான பொதுவெளியினை மட்டுமே பார்க்கிறோம், பேசுகிறோம். ஆனால் ஆங்காங்கே சந்துகளிலும், இருட்டிலும், தூரத்திலும், ஒடுங்கிய குடிசைகளிலும் என்னென்னவோ நடக்கிறது. சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் குழுவினர் கிராமங்களில் சமையல்கட்டும், கக்கூஸூம் ஒன்றாக இருக்கிறது என்று கண்ணீர்விட்டு எழுதிய கட்டுரைகளை வாசித்து இருக்கிறேன். இங்கு பெரிய மாற்றங்கள் எல்லாம் நடந்து விடவில்லை என்றே தோன்றுகிறது. மாற்றங்கள் பத்திரிக்கையிலும், டிவியிலும், கையை கையை ஆட்டி பேசும் பிரதமர் உரையிலும் இருக்கிறதே அன்றி கிராமங்களில் மாற்றம் வரவில்லை. இன்றைக்கு குழந்தை தொழிலாளர் பெருகும் வாய்ப்புள்ள நேரத்தில் வகுப்பறை புதிய ரூபம் எடுப்பதோடு, வீதியும் புதிய ரூபம் எடுக்க வேண்டும்.
பாதிரியார்கள் தொடங்கி வைத்த இரவு பள்ளி, இடது சாரிகள் முயற்சி செய்த அறிவொளிக் கல்வி இன்றைக்கு ஒரு புதிய ரூபம் எடுக்க வேண்டும். இதுதான் நம் சந்திப்பின் இந்த உரையின் நோக்கம். சந்தித்து பேசவேண்டும். மீண்டும் வேலைக்குச் செல்லும் பெண் குழந்தைகளை அழைத்து பேசவேண்டும். இதைச் செய்ய புதிய தலைமுறை வேண்டும் அதுதான் என் வேண்டுகோள். பெண் கல்விக்கான தேவை புதிய வகுப்பறை. அதற்கு தேவையான விழிப்புணர்வு வீதியில் இருக்கிறது. வீதிகள் மீது புதிய நம்பிக்கை வைப்போம். அதன் வழியே மாற்றங்களுக்கு வழி செய்வோம். அதுதான் வரலாறும் நமக்கு கொடுத்திருக்கும் பாடம்.
குறிப்பு : AIDWA TN அமைப்பு சார்பாக இணைய வழியே கல்வியாளர் ச.மாடசாமி அவர்கள் ஆற்றிய உரை. இதனை உதயலட்சுமி அவர்கள் எழுத்தாக்கம் செய்தது.