பார்வையற்ற பாடகன் பி. நரேந்திரநாத் – பி.வி.சுகுமாரன் (எனக்குப் பிடித்த மலையாள சிறார் நூல்கள் – 01)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நம் அண்டை மாநிலமான கேரளத்தில் இலக்கியம் வளம்பெற்றிருப்பதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, மலையாள சிறார் இலக்கியம் ஆரோக்கியமான வளர்ச்சியில் திகழ்வது. ஆம். சிறுவர்களின் வாசிப்புக்கு ஏற்ற படைப்புகள் ஏராளம் மலையாளத்தில் வெளிவருகின்றன. அவை அங்குள்ள வாசகர்களால் சரியான முறையில் நுகரவும் படுகின்றன. புராண, இதிகாச கதைகள் அடங்கிய நூல்கள் ஒருபக்கம் இடம்பெற்றாலும் சிறுவர்களில் கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமான ஆக்கங்களும், அறிவியலை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் பகிர்கின்ற கதைகளும் அதிகளவில் எழுதப்படுகின்றன என்பதையும் மறுக்கவியலாது. மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான பி.வி.சுகுமாரன் தனக்குப் பிடித்த நூல்களைப் பற்றிச் சுருக்கமான அறிமுகத்தை பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக வழங்குகிறார்.

அந்தக்காயகன் – (பார்வையற்ற பாடகன்) பி. நரேந்திரநாத்

மலையாள இலக்கியத்தில் அதிலும் குறிப்பாக சிறார் இலக்கியத்தில் எழுத்தாளர் பி.நரேந்திரநாத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. அவர் பல்வேறு விதமான கதைகளை சிறார்க்கு எழுதியிருக்கிறார்.அவற்றுள் ஒன்றுதான் அந்தக்காயகன். அது குறித்துப் பார்க்குமுன் நரேந்திரநாத் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

மலையாளத்தின் முன்னோடி சிறார் எழுத்தாளரான பி.நரேந்திரநாத், 1934 ஆம் ஆண்டு பாலகாட்டில் பிறந்தவர். மிக எளிமையான பொருளாதாரப் பின்புலம் கொண்டு குடும்பம் என்பதால், பள்ளிக் கல்வியையும் முழுமையாக முடிக்கும் சூழல் இல்லை. எனவே, வங்கியில் சிறிய வேலை ஒன்றில் சேர்ந்தார். அதன்பின் தனது ஆர்வத்தால் ஓய்வுநேரத்தில் படித்து பட்டப்படிப்பை முடித்தார்.

நரேந்திரநாத்துக்கு சின்ன வயதிலிலேயே புத்தக வாசிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அதுவே அவரை எழுத தூண்டியது. இவர் எழுதிய விகுருதி ராமன் (குறும்பு ராமன்) எனும் முதல் சிறார் நூலுக்கு கேரள சாகித்ய அகடாமி விருது கிடைத்தது. சிறார்க்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கான நாவல், நாடகம் உள்ளிட்ட 35-கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார்.  பல விருதுகள் இவரின் எழுத்தைத் தேடி வந்திருக்கின்றன. 1991 ஆம் ஆண்டு இவர் காலமானார். நரேந்திரநாத் எழுதிய நூல்களில் மிக இயல்பான வாழ்க்கை முறையைக் காட்சிப்படுத்திய சிறார் நாவல் ‘அந்தக்காயன்’  (பார்வையற்ற பாடகன்).

1963-ம் ஆண்டில் வெளியான சிறார் நாவல்தான் அந்தக்காயகன். நாவல் வெளியாகி 57 ஆண்டுகள் கழித்து அது குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். (பி.நரேந்திரநாத் வாழ்காலமும் 57 ஆண்டுகள்தாம்). இன்றிலிருந்து பார்க்கையில் அரைநூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட நாவல் என்பதால், அதன் கதை தேர்வும், நடக்கும் சூழலும் அக்காலத்தையொட்டியதாக இருக்கும் என்பதைத் தனித்து சொல்லவேண்டியதில்லை. சிலருக்கு இது எளிய கதையாகத் தோன்றக்கூடும். ஆனால், என் சிறுவயதில் புத்தக வாசிப்பின் மீது ஆர்வத்தை உருவாக்கிய நூல்களில் இதுவும் ஒன்று.

சங்கரனுக்கு அப்போது 12 வயது. பிறந்ததிலிருந்து இரண்டு கண்களிலும் பார்வை இல்லை. அவனின் மிகச் சிறிய வயதிலேயே அப்பா இறந்துவிட்டார்.  அம்மாதான் அவனுக்கு எல்லாமே. அவர்கள் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்தார்கள்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவனின் அம்மாவும் இறந்துவிட்டார். அம்மா டெய்லர். அதனால் போதுமான அளவு வருமானம் வந்ததால் சித்தி வீட்டில் சங்கரனை ஓரளவு கவனித்துக்கொண்டார்கள். ஆனால், அம்மா இறந்ததும் நிலைமை மோசமானது.

சித்தப்பாவுக்கு ஒரு மகன் குட்டன், ஒரு மகள் தேவகி. சங்கரனை குட்டனுக்கு ரொம்பப் பிடிக்கும். குட்டனும் தேவகியும் இருவரும் பள்ளிக்குச் செல்வார்கள். சங்கரனுக்கும் பள்ளிக்குச் செல்ல ஆசை. ஆனால், எப்படிச் செல்வது… அதற்கு யாரிடம் கேட்பது என்று தெரியாது. சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சித்தி கடுமையாகக் கோபப்படுவார். சங்கரனுக்கு அவ்வப்போது அடிகளும் விழுந்தன. ஆனால், சங்கரன் மீது சித்தப்பாவுக்கு தனி அன்பு உண்டு. தம்பி குட்டனின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடியதுபோல தன் பிறந்த நாளுக்கும் நடக்கும் என நினைத்த சங்கரனுக்குக் கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான். ஒரு சட்டையும், கால் சட்டையும் சித்தப்பா எடுத்துவந்தார். அதைப் பார்த்த சித்தி கோபமாய் சித்தப்பாவுடன் சண்டை போட்டார். கடைசியில் சங்கரனுக்குத்தான் பலத்த அடிகள் கிடைத்தன. அந்தச் சட்டை திருடப்படுமோ என்ற கவலையும் சங்கரனுக்கு இருந்தது.

தன் மீது சித்தி காட்டும் வெறுப்பினால், வீட்டை விட்டு எங்காவது சென்றுவிடலாமா என்று பலமுறை யோசித்திருக்கிறான் சங்கரன். ஆனால், கண் தெரியாத நான் எங்கே சென்று, என்ன செய்வது என்று குழப்பத்தால் அந்த நினைப்பைக் கைவிடுவான். இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு வரும் பிச்சைக்காரத் தாத்தாவின் நட்பு சங்கரனுக்குக் கிடைக்கிறது. அந்தத் தாத்தாவுக்கும் கண் தெரியாது. இருவருக்கு இடையே நல்ல உறவு ஏற்படுகிறது. மனம் விட்டுப் பேசிக்கொள்கிறார்கள். திடீரென்று சிலநாள்களாக அந்தத் தாத்தா சங்கரனைத் தேடி வரவில்லை. என்ன காரணத்தால் தாத்தா வரவில்லை என்று தெரியாமல் சங்கரன் தவித்தான். தாத்தாவிடம் பேச வேண்டும் என்ற உந்துதலில் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிடுகிறான்.

வீட்டை விட்டு தனியே வெளியே வருவது அதுதான் முதன்முறை. தாத்தா வழக்கமாகச் செல்வதாகச் சொல்லும் இடங்களுக்குப் பலரின் உதவியோடு செல்கிறான் சங்கரன். எப்படியோ தாத்தாவுக்கும் சங்கரன் தேடி வந்தது தெரிந்துவிடுகிறது. இருவரும் சந்தித்துக்கொள்கின்றனர். சங்கரனை அழைத்துக்கொண்டு, தான் தங்கியிருக்கும் இடத்துக்கு வருகிறார் தாத்தா. கண் தெரியவில்லை என்றாலும் எவர் உதவியுமின்றி வாழும் தாத்தாவைப் பற்றி தெரிந்ததும் வாழ்க்கை மீது மிகப் பெரிய நம்பிக்கை சங்கரனுக்கு வருகிறது. அடுத்த நாள் காலையில் தாத்தா எழுந்து, இவனுக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்துவைத்து பிச்சை எடுக்கச் செல்கிறார்.  பிச்சை எடுக்கும் இடத்திற்கு சங்கரனை அழைத்துச்செல்லக்கூடாது என்பதில் தாத்தா மிகவும் உறுதியாக இருக்கிறார்

ஒருநாள் தாத்தா வெளியே சென்றுவரும்போது புல்லாங்குழல் ஒன்றை வாங்கிவருகிறார். அதை வாசித்துப் பார்க்கும் சங்கரனுக்கு புல்லாங்குழல் ரொம்பவே பிடித்துவிட்டது. சங்கரனின் மகிழ்ச்சியை உணர்ந்த, தாத்தா இசை ஆசிரியர் ஒருவரை வைத்து சங்கரனுக்குப் புல்லாங்குழல் கற்றுக்கொடுக்க வைக்கிறார். சங்கரனும் முழு ஈடுபாட்டுடன் இசை பழகுகிறான். இப்படியே நான்காண்டுகள் செல்கின்றன. சங்கரன் மிக இனிமையாகப் புல்லாங்குழல் இசைக்கக் கற்றுக்கொள்கிறான். அந்தப் பகுதியில் ஒரு விழாவில், சங்கரன் புல்லாங்குழல் வாசிக்க வாய்ப்பு வருகிறது. தாத்தா முன் வரிசையில் உட்கார்ந்து சங்கரன் இசைப்பதைக் கேட்க காத்திருக்கிறார். அவன் புல்லாங்குழலை இசைக்கிறான். ஊரே மயக்கும் விதத்தில் நீண்ட நேரம் இசைக்கிறான். அதைக் கேட்டு தாத்தாவின் மனம் பூரித்துப்போகிறது. எல்லோரும் கைத்தட்டுகிறார்கள். மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தாத்தாவின் உயிர் பிரிந்துவிடுகிறது. பெரிய பரிசுகளோடு மேடையிலிருந்து இறங்கிய சங்கரன் தாத்தா இறந்ததை அறிந்து கதறி துடிக்கிறான். பின், தன் சித்தி, சித்தப்பா, தம்பி, தங்கையைத் தேடி வருகிறான் சங்கரன். குட்டன், தேவகி இருவரும் பெரிய பிள்ளைகளாகி இருக்கின்றனர். சங்கரனைப் பார்த்த சித்தி, இவனைத் தண்டித்துவிட்டோமே என்று குற்றவுணர்வு அடைகிறார். சங்கரன் அவற்றை மறந்துவிட்டு அக்குடும்பத்துடன் இணைந்து வாழ்கிறான்.

சிறுவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக, எந்தவித மாயஜாலத்தைக் கதையில் புகுத்தாமல், பார்வையற்ற சிறுவனின் நடக்கும் விஷயங்களே மேஜிக்கான சம்பவங்களைக் கொண்டே எழுதியிருப்பார் நரேந்திரநாத். வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களில் கற்பனையில்கூட நடக்காது அல்லவா… சிறிய நாவல் என்றாலுமே மலையாள சிறார் இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த நூல். சந்திரசேகர் இதற்கு சிறப்பான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவை கதையோட்டத்தை சிறுவர்கள் புரிந்துகொள்ள பெரும் பலமாக இருக்கின்றன. பல பதிப்புகள் கண்ட இந்த நாவல், சாகித்ய ப்ரவர்த்திகா சி.எஸ். லிட் பதிப்பக வெளியீடு. எனக்குப் பிடித்த சிறார் நூல்களில் அந்தக்காயகன் முக்கியமானது. பலருக்கும் நான் பரிந்துரைப்பதும் ஆகும்.

எழுத்தாக்கம்: தமிழினி

Leave a comment