ஓவியப்போட்டியில் பரிசு வாங்கியதிலிருந்து ஓவிய ஆசிரியருக்கு என்மீது ஆழமான அக்கறை பிறந்தது. ஒருநாள் வகுப்பைவிட்டுச் செல்லும்போது அப்பா என்ன வேலை செய்கிறார், வீடு எங்கே இருக்கிறது, கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்றெல்லாம் நிறைய கேள்விகள் எழுப்பி நான் சொன்ன பதில்களையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
அடுத்த வாரம் வகுப்புக்கு வந்தபோது ஒரு பெரிய ஓவியச்சுவடியை எனக்குக் கொடுத்தார். ஒவ்வொரு பக்கமும் ஒரு கோடு போட்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேலே உள்ள பகுதியில் அழகழகான கோட்டோவியங்கள். விறகு வெட்டுபவர். பானை செய்பவர். நாற்று நடுபவர். கதிர் சுமப்பவர். மரம் ஏறுபவர். அஞ்சல்காரர். எல்லோருமே ஏதோ தொழில் செய்பவர்கள். கீழே உள்ள பகுதி வெற்றிடமாக இருந்தது. “மேல இருக்கிற படத்த பாத்து, கீழ வரையணும். இயற்கைக் காட்சிகளுக்கு அடுத்த படி மனிதர்களை வரையறதுதான். இது உனக்கு நல்லா பிடிபடணும். அப்பதான் நல்ல ஆர்டிஸ்டா வரமுடியும். தெனமும் ஒன்னு ரெண்டு வரஞ்சி பாரு. உனக்கு நல்ல பயிற்சியா இருக்கும்”. எனக்கு அக்கணமே பெரிய ஓவியனாக வளர்ந்துவிட்டதுபோல பெருமையாக இருந்தது. உடம்பில் புது ரத்தம் பாய்ந்ததுபோல இருந்தது. மிகவும் ஆர்வத்தோடு “சரி சார்” என்று பதில் சொன்னேன். ஞாயிறுகளில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓவியங்களை வரைந்து பயிற்சி செய்து பழகினேன். சார் சொன்னதுபோல நேரிடையாக ஓவியச்சுவடியில் வரைய முற்படாமல் வெற்று வெள்ளைத்தாள்களில் பல முறை வரைந்து வரைந்து பழகினேன். நன்றாக வருகிறது என எனக்கே நிறைவாகத் தோன்றிய பிறகுதான் சுவடியில் வரைந்தேன். ஆறேழு படங்களை வரைந்த பிறகுதான் சுவடியை பள்ளிக்கு எடுத்துச் சென்றேன்.
நண்பர்கள் அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு “ரொம்ப நல்லா இருக்குதுடா. அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரி இருக்குது” என்றனர். உணவு இடைவேளை சமயத்தில் ஓய்வறைக்குச் சென்று ஓவிய ஆசிரியரைச் சந்தித்தேன். ”ஆறேழு போட்டிருக்கேன் சார். நீங்க பாத்து திருத்தம் சொன்னா கத்துக்குவேன்” என்றேன். “கொடு பார்ப்போம்” என்று கைநீட்டி வாங்கி மேசை மீது வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஓவியமாகத் திருப்பினார். திருப்தியில் அவர் முகம் மலர்வதைப் பார்த்தேன்.
“ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கே. கற்பூர புத்திதான் உனக்கு” என்று தனக்கு அருகில் என்னை இழுத்து நிற்கவைத்துக்கொண்டு முதுகைத் தட்டிக்கொடுத்தார். தன் இழுப்பறையிலிருந்து ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு “சின்னச்சின்ன திருத்தங்கள்தான் வேணும். நான் எப்படி செய்றேன்னு மட்டும் பாரு. பிறகு உனக்கு தானா புரிஞ்சிடும்” என்றபடி கன்னம், தோள், விரல்கள், முதுகு ஆகிய பகுதிகளில் உள்ள கோடுகளை சற்றே வளைத்தார் அல்லது விரிவாக்கினார். அந்தச் சிறு மாற்றங்களிலேயே ஓவியம் உயிர்கொள்வதைப் பார்க்கமுடிந்தது. அதற்குப் பிறகு ஒரே வாரத்தில் சுவடியில் இருந்த மற்ற ஓவியங்களை வரைந்து முடித்தேன். இந்த முறை அவர் எந்த மாற்றமும் சொல்லவில்லை. “வெரிகுட், வெரிகுட்” என்று தட்டிக்கொடுத்தார். தன் மேசையிலிருந்து இன்னொரு சுவடியை எடுத்து என்னிடம் கொடுத்தார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் ஒரு ஓவியப்போட்டியை அறிவித்தது. அதன் சுற்றோலை எங்கள் பள்ளிக்கு வந்தபோது, பள்ளியின் சார்பாக கலந்துகொள்பவர் பட்டியலில் என் பெயரையும் சேர்த்து எழுதி அனுப்பிவிட்டார் சார். நானும் கலந்துகொண்டேன். எனக்கு அதில் முதல் பரிசு கிடைத்தது. ”உனக்குத்தான் கிடைக்கும்ன்னு எனக்கு முதலிலேயே தெரியும்டா” என்று சொன்னார் சார். அவருடைய நம்பிக்கை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. மறுநாள் பள்ளிக்கு வந்ததும் நான் வாங்கிவந்த பரிசுப்புத்தகக் கட்டை வாங்கிவைத்துக்கொண்டார் தலைமை ஆசிரியர். காலை பிரார்த்தனை நேரத்தில் செய்தியை பொதுவில் அறிவித்த பிறகு அனைவருடைய முன்னிலையிலும் பரிசாகக் கொடுத்தார்.
அந்தக் கட்டில் இரு புத்தகங்கள் இருந்தன. இரண்டுமே அழ.வள்ளியப்பா எழுதிய புத்தகங்கள். குதிரைச்சவாரி. சிட்டுக்குருவி. குதிரைச்சவாரி புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருவதாகச் சொல்லி ஒரு நண்பன் வகுப்பறையிலேயே வாங்கிக்கொண்டு சென்றான். அவன் திருப்பிக்கொடுக்கும்போது, அதை நேரில் பார்த்த இன்னொரு நண்பன் வாங்கிக்கொண்டான். அவனிடமிருந்து இன்னொருவன் என ஒருவர் ஒருவராக வகுப்பில் இருந்த என் நண்பர்கள் அனைவருமே அந்தக் கதைப்புத்தகத்தை எனக்கு முன்னால் படித்துவிட்டனர். என் கைக்கு புத்தகம் திரும்பி வரும்போது பக்கங்கள் தளர்ந்து தொய்ந்துவிட்டது.
எங்கள் ஊரில் குதிரைவண்டிகள் உண்டு. ஆனால் நாங்கள் யாருமே அந்த வண்டியில் ஏறியதில்லை. குதிரைச்சவாரியை திரைப்படங்களில்தான் பார்த்திருந்தோமே தவிர, நேரில் பார்த்ததில்லை. அதனாலேயே அந்தக் கதைப்புத்தகத்தை அனைவருமே விரும்பிப் படித்தோம். சின்னஞ்சிறிய கதைதான் அது. ஆனால் படிப்பவர்கள் மனத்தை ஈர்க்கக்கூடிய கதை. கடற்கரைக்கு அருகில் உள்ள இடத்தில் ஒரு சிறுவன் வசிக்கிறான். அவனுடைய பெற்றோர் ஏழைகள். அவனுடைய கைச்செலவுக்கு என்று தனியாக பணம் கொடுக்கிற அளவுக்கு அந்த எழை அப்பாவுக்கு வசதி இல்லை. அந்தச் சிறுவன் ஒவ்வொரு மாலையிலும் வீட்டுக்கு அருகிலிருக்கும் கடற்கரைக்கு வந்து நிற்பான். அங்கே ஒருவர் இரு குதிரைகளோடு நின்றிருப்பார். வேடிக்கை பார்க்கவரும் சிறுவர் சிறுமியரிடம் சில்லறை வாங்கிக்கொண்டு, அவர்களை குதிரை மீது ஏற்றி ஒரு சுற்று சவாரி செய்யவைப்பார். ஏராளமான சிறுவர்கள் சவாரி செய்யும்போது ஏழைச்சிறுவன் மட்டும் வருத்தத்தோடு வேடிக்கை பார்ப்பான்.
மெல்ல மெல்ல சிறுவனுக்கும் குதிரைக்காரனுக்கும் நட்பு ஏற்படுகிறது. சிறுவனுடைய ஆசையைப் புரிந்துகொண்டு ஒருமுறை அவனிடமிருந்து பணம் வாங்கிக்கொள்ளாமலேயே சவாரி செய்ய வைக்கிறார் குதிரைக்கார்ர். எப்போதும் இறுதிச்சவாரி அவனுக்குக் கிடைத்துவிடுகிறது. வீட்டுக்குத் திரும்பும்போது சிறுவனும் குதிரைக்காரரும் சேர்ந்து செல்லும் அளவுக்கு, இருவருக்குமிடையே நல்ல நட்பு மலர்கிறது.
ஒருநாள் மாலையில் குதிரைகளை கடற்கரைக்கு ஓட்டிச் செல்லும் வேலையை அச்சிறுவனிடமே ஒப்படைக்கிறார் குதிரைக்கார்ர். வழியில் சில குறும்புக்காரச் சிறுவர்களின் விளையாட்டால் குதிரைகள் அவனுடைய பிடியிலிருந்து விடுபட்டு ஓடிவிடுகின்றன. குதிரைகளைப் பறிகொடுத்துவிட்டதால் குதிரைக்காரருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழப்பமடைகிறான் சிறுவன். அச்சத்தின் காரணமாக தன் வீட்டுக்குச் சென்று மறைந்துகொள்கிறான்.
ஒரு வார காலமாக வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறான் சிறுவன். குதிரைக்காரரைச் சந்திக்க நேர்ந்தால் என்ன பதில் சொல்வது என்று நினைத்து நினைத்து ஒவ்வொரு கணமும் கலங்குகிறான். அந்த வார இறுதியில் சிறுவனுடைய அப்பா அவனை கட்டாயப்படுத்தி கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார். தொலைவில் குதிரைச்சவாரி நடப்பது தெரிகிறது. அப்பா குதிரைச்சவாரி செய்ய ஆசையாக இருக்கிறதா என்று கேட்கிறார். அவனோ அச்சத்தின் காரணமாக வேண்டாம் என்று மறுக்கிறான். இறுதியில் அப்பாவின் வற்புறுத்தலுக்குக் கட்டுப்படுகிறான். சவாரி நடைபெறும் இடத்துக்கு அருகில் சென்ற பிறகுதான் அங்கே இருப்பவர் அதே குதிரைக்காரர், அங்கே ஓடுவதும் அதே குதிரைகள்தான் என்பது அவனுக்குப் புரிகிறது. அவனுடைய குழப்பம் அதிகரிக்கிறது.
குதிரைக்காரர் சிறுவனைப் பார்த்ததும் அன்போடு சிரித்து அருகில் அழைத்துப் பேசுகிறார். “ஒரு வாரமாக ஏன் பார்க்கமுடியவில்லை?” என்று கேட்கிறார். சிறுவன் தான் விரட்டப்பட்ட விவரங்களையும் குதிரைகள் தப்பித்து ஓடிய விவரங்களையும் ஒன்றுவிடாமல் சொல்கிறான். குதிரைக்காரர் அவனுக்கு ஆறுதல் சொல்கிறார். தான் கடற்கரைக்கு வந்த சமயத்தில் குதிரைகள் கரையிலேயே நின்றிருந்தன என்று சொல்லி, அவனுடைய அச்சத்தைப் போக்குகிறார். பிறகு சிரித்துக்கொண்டே சிறுவனை குதிரைமேல் ஏற்றி ஒருமுறை சவாரி செய்யவைக்கிறார்.
ஏழைச்சிறுவனின் விருப்பமும் குதிரைக்காரரின் இரக்கமும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. நண்பர்கள் அனைவரும் கூட்டமாகக் கூடி உட்கார்ந்து, வாய்விட்டுப் பாடிப்பாடி மகிழ்ச்சியடைந்த புத்தகம் சிட்டுக்குருவி. ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு விதம். தாளம் போட்டு பாடுவதற்குப் பொருத்தமான பாடல்கள். ’உலகம் சுற்றிய தவளை’ என்றொரு முக்கியமான பாடல் அப்புத்தகத்தில் இருந்தது. ஒரு கிணற்றில் ஒரு தவளை வசிக்கிறது. அந்தக் கிணற்றுத்தவளைக்கு கிணற்றிலிருந்து வெளியேறி உலகத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று ஆசை பிறக்கிறது. ஒருமுறை தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறக்கப்பட்ட வாளிக்குள் அந்தத் தவளை உட்கார்ந்து கொள்கிறது. வாளி மேலே வரும்போது தவளையும் வெளியேறி வந்துவிடுகிறது. வாளியிலிருந்து தப்பித்து உலகத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறது. வாய்க்கால் வரப்பையெல்லாம் பார்த்தபடியே ஆனந்தமாக நடந்து போகிறது. குளக்கரை ஓரமாக மேய்ந்துகொண்டிருந்த ஒரு வாத்து சத்தம் காட்டாமல் நெருங்கிவந்து அந்தத் தவளையை விழுங்கிவிடுகிறது. பள்ளிக்கூடத்தை விட்டு நீங்கும்வரை நடைபெற்ற எல்லா ஓவியப்போட்டிகளிலும் நான் பரிசு வாங்கினேன். பரிசுகள் வழியாகவே என்னிடம் அடுத்தடுத்து புத்தகங்கள் சேரத் தொடங்கின. மலரும் மாலையும், பாரதியார் பாடல்கள், மலரும் உள்ளம், நேரு கதை, சத்திய சோதனை, பர்மா ராணி, பிள்ளைப்பருவத்திலே, சின்னஞ்சிறு வயதில், நாட்டுக்குழைத்த நல்லவர்கள், இரும்பின் கதை என்று ஒவ்வொன்றாக என் பெட்டிக்குள் புத்தகங்கள் நிறைந்தன.