ஓர் அரசு பள்ளியில் கதை சொல்ல வேண்டும் என அழைப்பு வந்த போது, மிக சுவாரசியமான கதை ஒன்றை வாசித்து கொண்டிருந்தேன். மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனத்தின்(DIET) மாணவர்கள் நடத்தும் “நாட்டு நலப்பணி திட்டம்” முகாம் அருகிலிருக்கும் அரசு பள்ளியில் நடக்க இருப்பதாகவும், அங்கு 10 வயது முதல் 13 வரை குழந்தைகளுக்கு கதை நிகழ்வு நடத்துமாறும் கேட்டு கொண்டார்கள். இரட்டை மகிழ்ச்சி எனக்கு, குழந்தைகளுக்கு கதை சொல்வதோடு, நாளைய ஆசிரியர்களுக்கும் கதை சொல்வதில் இதமான மாலை நேரமாய் கடைசி வகுப்பு நேரம் கிடைத்தது, பள்ளி முடியப்போகும் வேளை என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வந்து அந்த சின்ன மைதானத்தில் வந்தமர்த்தனர்.
அறிமுகப்படலம் முதற்கொண்டு சில நடைமுறைகள் முடிந்து கதைக்கான நேரம் வந்தது. யார் வீட்டில் எல்லாம் கதை சொல்லறாங்க? என கேட்ட போது சில கைகள் உயர்ந்தது,யார் வீட்டில் எல்லா நீங்க சொல்ற கதையை கேக்கறாங்க ? என கேட்டதும் , ஒரே அமைதி இன்னிக்கு நீங்க எல்லாரும் போய் வீட்டில் உள்ள அம்மா அப்பா பாட்டி தாத்தா எல்லாருக்கும் கதை சொல்றதுக்கு ஒரு கதையை சொல்ல போறேன், யாரு சொன்னதுன்னு கேட்டா வணி அத்தை சொன்னாங்கன்னு சொல்லுங்க. நான்சொல்லப் போர கதை யாரு எழுதியது தெரியுமா? யாரு எனக்கு சொன்னாங்க தெரியுமா? ஒரு தாத்தா தான் சொன்னாங்க, ஆமா அந்த தாத்தாக்கு எத்தனை வயசுன்னு சொல்லுட்டுமா? 97 வயசு என்றதும், ஆஆ!!! என ஆச்சரியத்தில் கத்தினார்கள்! ஆமா அந்த தாத்தா பெரு கி,ரா தாத்தா. கீரை தாத்தா இல்ல, கி.ரா என்கிற கி.ராஜநாராயணன். அவரோட முழு பேரு “ராயங்ககுல ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள் ராமானுஜன்”. என்ன சிரிக்கிறீங்க , அதான் அவர் பேரு , ஆனால் கி.ரா ன்னு சுருக்கமா சொல்லுவாங்க. தமிழ்நாட்டோட மிக மூத்த கதைசொல்லி, மற்றும் எழுத்தாளர். நிறைய நிறைய கதைகள் எழுதி இருக்கார், புதுச்சேரியில் வாழுந்துட்டு இருக்கார். வழக்கம் போல் கதைக்குள் சிலதை கூட்டி குறைத்து, துவக்கினேன்.
ஒரு சின்ன ஆட்டுக்குட்டி, வெள்ளவெளேர்னு , எவ்ளோ வெள்ளைன்னா மின்னல் மின்னும் போது வரும் வெண்மை மாதிரி, நல்ல மென்மையா , தொட்டு பார்த்தா பஞ்சு மாதிரி இருந்துச்சாம். அந்த ஆட்டுக்குட்டி, அதை ஒரு வீட்டுல கட்டி போட்டு வளர்த்திட்டு இருக்காங்க, அந்த ஆட்டுக்குட்டிக்கு வெளி உலகத்தை பார்க்கணும்ன்னு ரொம்ப ரொம்ப ஆசையாம். கைத்த இழுத்து இழுத்து பார்த்துச்சு, ஆனா கயிறு கட்டி வச்சு இருக்கறதால அது எங்கயும் போக முடில. இப்பிடியே இழுத்து இழுத்து பார்த்துட்டே இருந்ததால ஒரு நாள் கயிறு பிஞ்சு போச்சாம். ஆட்டுக்குட்டி மெதுவா துள்ளி பார்த்திச்சு , கையிறு இழுத்து பிடிக்கவே இல்ல, ஹேய்ய்ய்ய் ஜாலின்னு துள்ளி துள்ளி குதிச்சுதாம், அப்புறம் மெதுவா வீட்டுக்காரங்க யாராச்சும் பார்க்கறாங்களான்னு பார்த்துச்சு, யாரையும் காணோம், அப்டியே வேலியை தாண்டி வீதிக்கு வந்துச்சாம், வீதியில வேடிக்கை பார்த்துட்டே பக்கத்து வீதிகள் எல்லா தாண்டி போயிட்டு இருந்துச்சாம்.
அப்போ பெரிய பெரிய மரம், வீடுக, மனுஷங்க , எல்லா பார்த்துட்டு சந்தோசமா போய்ட்டு இருந்துச்சாம். அந்த ஊரு தாண்டி எங்கயோ நடந்து போய்ட்டு இருக்கு, நடந்து நடந்து களைச்சு போய் பசி வந்துருச்சாம். அய்யயோ! எங்க சாப்பிட? என்ன சாப்பிட?ன்னு யோசிச்சுச்சாம், சரி பச்சைய தேடுவோம்ன்னு நடந்துச்சாம். கொஞ்சம் தூரம் போன பிற்பாடு, ஒரு காடு தென்பட்டுச்சாம், ஐய்….ன்னு மேய ஆரம்பிச்சுச்சாம், அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் அது கொஞ்சம் இது கொஞ்சம்ன்னு, மாத்தி மாத்தி மேஞ்சு வயித்த ரொப்பிக்கிச்சாம், ஏவ்வ்ன்னு ஏப்பம் விட்டுக்கிட்டே, குடிக்க தண்ணி தேடுச்சாம், பக்கத்துல தண்ணி எங்கையும் இல்ல…தேடிகிட்டே காட்டுக்குள்ள போச்சாம், அங்க ஒரு சின்ன ஓடைல சலசலன்னு தண்ணி ஓடிட்டு இருந்துச்சாம். வீட்டுல குண்டாவுல தண்ணி வைப்பாங்க அதுதா ஆட்டுக்குட்டி பார்த்திருக்கு, இவ்ளோ தண்ணி பார்த்ததும் கொஞ்சம் மிரண்டு நின்னுச்சு, சரி என்னன்னு பார்த்துருவோம்னு, மெதுவா ஒரு காலை மட்டும் ஓடை தண்ணில விட்டு பார்த்துச்சு, சில்லன்னு இருக்கு. குடிக்கலாம், சளக்,சளக்ன்னு குடிச்சுட்டு கரை ஏறுது, அப்டியே கொஞ்சம் தூங்கினா பரவால்ல, எங்க தூங்கலாம்ன்னு யோசிச்சுகிட்டே நடந்து போச்சு, கொஞ்சம் குளுகுளுன்னு இருந்தா பரவால்லயேன்னு தேடிட்டே நடந்து போகையில் ஒரு இடம் ரொம்ப பிடிச்சுப்போச்சு. குளுகுளுன்னு நல்ல இடம், இங்க தூங்கலாம்ன்னு, பின்னாடி காலை நீட்டி போட்டு முன்னங்காலை மடக்கி போட்டு, கண்ணு அரைக்கண்ணு சொருகி, சொகமா அசை போட்டுக்கிட்டு தூங்க ஆரம்பிச்சுச்சு. அந்த ஆட்டுக்குட்டி எங்க போய் தூங்க அரபிஞ்சுச்சு தெரியுமா, சிங்கத்தோட குகைல……
ஐயோன்னு..குழந்தைங்க ஆரவாரிக்க கதை தொடர்ந்தது, சிறிது நேரத்தில் நிறைந்தது. கதை நிகழ்வு முடிந்து பல குழந்தைகள் வந்து பேசினார்கள். நானும் சிரித்து கொண்டே கேட்டேன். நிகழ்வில் பேசிமுடித்திட்டு திரும்பினேன். திரும்பும் வேளையில் ஒரு சிறுமி 13 வயது இருக்கும், வேகமாய் வந்தாள் என் மேல் மோதி நிற்குமளவு வேகமது, என்ன கண்ணு என்றேன், உங்கள அத்தைன்னுதா கூப்பிடணுமா? என்று கேட்டாள். நான் திருதிருவென விழித்து கொண்டிருக்கையில்..”ஏன் அம்மான்னு கூப்பிட கூடாதா?” என்றாள், தாராளமா கூப்பிடலாம் என்றேன், சரி அம்மா நன் போய்ட்டு வரேன் என்று ஓடி மறைந்தாள். அப்படியே சிலை மாதிரி நின்றேன், அருகிருந்த சிறுவன் அத்தை, அவ அம்மா இறந்துட்டாங்க என்றான். ஒருவாறு என்னை நானே தேற்றி வெளியேறினேன்.
குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிறோம் அதுவும் கதை மூலமாய் என்று இறுமாந்திருந்த என்னை, அது உண்மை இல்லை என்று உணர்த்திய நிகழ்வு அது. எப்போதும் குழந்தைகள்தான் பெரியவர்களுக்கு கற்று கொடுப்பார்கள் என்று உணர்த்திய வாழ்க்கைக்கான பாடம். குழந்தைகள் உலகிற்குள் நுழைய கதை ஒரு வெளிச்சம் காட்டும் என்பது உறுதி. கதைகளை கையிலெடுத்து அந்த சின்னஞ்சிறு உலகில் நுழைந்து நம் பிறவிப் பயனை அடைவோம்.