ஒருமுறை எங்கள் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஓர் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஒரு வசதிக்காக ஆறாவது, ஏழாவது, எட்டாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒரு பிரிவாகவும் ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை மற்றொரு பிரிவாகவும் பிரித்துக்கொண்டார்கள். நான் இளநிலைப்பிரிவுக்கான போட்டியில் கலந்துகொண்டேன்.
எங்கள் பள்ளிக்கு நடுவில் ஆறேழு வேப்பமரங்களும் காட்டுவாகை மரங்களும் இருந்தன. பல நேரங்களில் நிழல் அடர்ந்திருக்கும் மரத்தடியில்தான் வகுப்புகளே நடைபெறும். ஓவியப்போட்டியும் மரத்தடியில்தான் நடைபெற்றது. தேர்வு அட்டையில் செருகப்பட்ட கெட்டியான வெள்ளைத்தாள்களோடும் வண்ணப்பென்சில்களோடும் நான் மரத்தடிக்குச் சென்றேன். ஒரு இளநிலைப்பிரிவைச் சேர்ந்த மாணவருக்கு அருகில் ஒரு முதுநிலைப்பிரிவைச் சேர்ந்த மாணவர் என்பதுபோல அனைவரும் வரிசையில் மாற்றி மாற்றி உட்கார வைக்கப்பட்டோம்.
அதற்குப் பிறகுதான் ஓவியத்துக்கான தலைப்பு அறிவிக்கப்பட்டது. இளநிலைப்பிரிவினர் வாத்து படமும் முதுநிலைப்பிரிவினர் மயில் படமும் வரையவேண்டும். மணியடித்ததும் எல்லோரும் வேகவேகமாக வாத்து படத்தை வரையத் தொடங்கினார்கள். நான் வாத்துகளைப் பார்த்த சூழல்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து சிறிது நேரம் அசைபோட்டேன். பிறகு மெதுவாக மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்திருக்கும் ஒரு குளத்தங்கரையை வரைந்தேன். தொடர்ந்து குளத்திலிருந்து மேலேறிச் செல்லும் படிக்கட்டுகளையும் அதற்கு அருகில் ஒரு பாழடைந்த கோவிலையும் மரத்தடியில் உட்கார்ந்து அசைபோடும் மாடுகளையும் வரைந்தேன். அதற்குப் பிறகே குளத்தில் ஒரு பெரிய வாத்தும் அதைச்சுற்றி குட்டிவாத்துகளும் செல்வதுபோல வரைந்தேன். பிறகு வண்ணம் தீட்டி முடித்தேன். இறுதியாக சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் வேலையில் மூழ்கியிருந்தார்கள். இன்னும் நேரமிருந்தது. என்னால் அமைதியாக உட்காரமுடியவில்லை. உடனே இன்னொரு தாளை எடுத்து அதில் மயில் படத்தை வரைந்தேன். போட்டி நேரம் முடிந்ததற்கு அடையாளமாக மணியடித்ததும் இரண்டு ஓவியங்களையும் பிடிப்பான் போட்டு இணைத்து பெயரெழுதிக் கொடுத்துவிட்டேன்.
குழந்தைகள் தினம் அன்று எல்லோரும் வண்ண ஆடைகளை அணிந்து பள்ளிக்குச் சென்றிருந்தோம். கொடி வணக்கம் முடிந்ததும் போட்டிமுடிவு அறிவிக்கபட்டது. இளநிலைப் பிரிவில் என் ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. தலைமை ஆசிரியர் எனக்குச் சான்றிதழும் பரிசும் அளித்தார். பக்கத்தில் நின்றிருந்த ஓவிய ஆசிரியர் “ஏன்டா, நீயே ஜூனியர், நீயே சீனியரா? ஒன்ன யாருடா ரெண்டு படத்தயும் வரையச் சொன்னாங்க?” என்று சொன்னபடி என் முதுகில் செல்லமாகத் தட்டினார். பரிசு வாங்கிய ஓவியங்கள் அன்று மாணவர்கள் பார்வைக்காக அலுவலக வாசலில் வைக்கப்பட்டன. எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. என் பரிசு வண்ணத்தாளால் சுற்றப்பட்டு நாடாவால் கட்டப்பட்டிருந்தது. கையில் வாங்கியதுமே அது புத்தகம் என்பது புரிந்துவிட்டது. வகுப்பு நண்பர்களும் அதை வாங்கி தொட்டுத்தொட்டுப் பார்த்தார்கள்.
என்ன மாதிரியான புத்தகங்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் ”பிரிச்சிப் பார்க்கலாமாடா?” என்று கேட்டான் ஒரு நண்பன். நான் தலையசைத்ததும் ஒரே கணத்தில் பிரித்துவிட்டான். அழகான மூன்று புத்தகங்கள். நாட்டியராணி. நல்லநல்ல பாட்டு. பட்டிப்பறவைகள். எல்லாமே பெ.தூரன் எழுதிய புத்தகங்கள். நண்பர்கள் ஆவலோடு ஆளுக்கொன்றை எடுத்து புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். திடீரென குமாரசாமி எழுந்து “டேய், இந்த புத்தகத்துல நத்தையாரே நத்தையாரே அத்தைவீடு பயணமோ பாட்டு இருக்குதுடா” என்று மகிழ்ச்சியோடு ஒரு பக்கத்தைக் காட்டிச் சிரித்தான். உடனே “இங்க காட்டு, படிச்சிப் பார்க்கலாம்” என்று ஆவலோடு அனைவரும் அவனைச் சுற்றி நின்றுகொண்டோம். ஒரு பெரிய நத்தையின் படத்தோடு அந்தப் பாடல் காணப்பட்டது.
குமாரசாமியிடமிருந்து புத்தகத்தை வாங்கிய ராஜசேகர் தோராயமாக பக்கத்தைப் புரட்டி “பக்கத்துக்குப் பக்கம் படமா இருக்குதுடா. இதப் பார்த்தே நீ நிறைய வரைஞ்சி பாக்கலாம்” என்று சொன்னான். திடீரென ஒரு பக்கத்தில் விரலை நிறுத்தி “இங்க பாருடா, பூனையாரே பூனையாரே என்ன செய்கிறீர் பாட்டு கூட இருக்குதுடா” என்று மகிழ்ச்சியோடு துள்ளினான். “இதுல எல்லாமே கதைடா” என்று நாட்டியராணி புத்தகத்தைப் புரட்டியவன் அறிவித்தான். பட்டிப்பறவைகள் புத்தகத்தைப் புரட்டியவன் “இதுல எல்லாமே சின்னச்சின்ன கட்டுரைகளா இருக்குதுடா” என்று முகத்தைச் சுருக்கினான்.
வீட்டுக்குப் போனதும் அம்மாவிடமும் தம்பிதங்கைகளிடமும் புத்தகங்களைக் காட்டினேன். அம்மா ஒருமுறை எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிட்டார். “பரிசு கொடுக்கறதுக்கு புத்தகம்தானா கிடைச்சிது? ஒரு டிபன்பாக்ஸ், தட்டு தம்ளர்னு கொடுக்கக்கூடாதா? மதிய சாப்பாடு கட்டிக் குடுக்கறதுக்காவது ஆவும்ல” என்று முணுமுணுத்தபடி எழுந்துபோனார். நல்ல நல்ல பாட்டு புத்தகத்தில் பூனைப்பாட்டு, நிலாப்பாட்டு, தவளைப்பாட்டு, குருவிப்பாட்டு என்று ஏராளமான பாடல்கள் இருந்தன. எல்லாமே ராகம் போட்டும் கைதட்டிக்கொண்டும் பாடத்தக்க பாடல்கள். நான் பாடப்பாட தம்பிகளும் தங்கையும் உற்சாகமாகப் பாடினார்கள். அன்றுமுதல் சாயங்கால வேளைகளில் அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பாட்டுப்பாடி ஆடுவதுதான் பெரிய பொழுதுபோக்கு. அதிக அளவில் நாங்கள் பாடிப்பாடி சிரித்தது ஒரு தாத்தாப்பாட்டு. ஒரு தாத்தாவுக்கு ஆலம் விழுதுபோல நீளமாக தாடி வளர்ந்திருக்கும். உட்கார்ந்தால் மடியில் விழும் அளவுக்கு நீளமான தாடி. அதில் ஏராளமான கூடுகள் இருக்கும். ஒரு கூட்டில் குருவிகள். இன்னொரு கூட்டில் புறா. மற்றொரு கூட்டில் மைனா. எல்லாமே முட்டையிட்டு குஞ்சு பொரித்து மகிழ்ச்சியோடு வாழ்க்கையை நடத்தும். அதைப் பாடத் தொடங்கினாலே எங்களுக்கு சிரிப்பு வந்துவிடும்.
‘நாட்டிய ராணி’ புத்தகத்தின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. நாட்டிய ராணி என்பது எந்த ராணியுடைய பெயருமல்ல, பட்டமுமல்ல. ஒரு ஆட்டுக்குட்டிக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர். எல்லா நேரமும் துள்ளித்துள்ளி திரிந்துகொண்டே இருந்ததால் அதற்கு அந்தப் பட்டப்பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தில் பல கதைகள் இருந்ததென்றாலும் இந்தக் கதை இப்படிப்பட்ட விசித்திரமான பட்டப்பெயர் காரணமாகவே நினைவில் பதிந்துவிட்டது. ஒரு ஊரில் ஒரு ஆட்டுப்பட்டி இருக்கிறது. அது ஒரு ஆட்டுக்காரனுக்குச் சொந்தமானது. ஊருக்கு வெளியே உள்ள புல்வெலிக்கு காலையில் அழைத்துச் சென்று மாலையில் திரும்பவும் அழைத்துவந்து பட்டியில் அடைத்துவிடுவான். இதுதான் அவன் தினசரி வாழ்க்கை. அவனுக்குத் துணையாகவும் காவலாகவும் ஆறேழு வேட்டை நாய்கள் உண்டு. அவை எப்போதும் அவனோடேயே செல்லும். திரும்பும். வழக்கம்போல ஒருநாள் குட்டி ஆடுகளையெல்லாம் பட்டியிலேயே விட்டுவிட்டு பெரிய ஆடுகளையெல்லாம் மேய்ச்சல்வெளிக்கு அழைத்துச் சென்றான் ஆட்டுக்காரன்.
அந்தப் பட்டியில் ஒரு குட்டி ஆடு இருந்தது. அதுதான் நாட்டியராணி. ஒரு நொடிகூட அது ஓரிடத்தில் நிற்காது. துள்ளித்துள்ளி ஓடிக்கொண்டே இருக்கும். அம்மா ஆடு பலமுறை அதற்கு அறிவுரை சொல்லியும் தன் பழக்கத்தை அது மாற்றிக்கொள்ளவே இல்லை. ஒருநாள் ஆட்டுக்காரன் மேய்ச்சல்வெளிக்குப் புறப்படும்போது குட்டி ஆடு பட்டிக்குள் செல்ல மறுத்து வெளியேயே தங்கிவிட்டது. அம்மா ஆடு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அது கேட்கவில்லை. அதற்குள் நேரமாகிவிட்டதாலும் ஆட்டுக்காரன் விரட்டிக்கொண்டே இருந்ததாலும் அம்மா ஆடு புறப்பட்டுச் சென்றுவிட்டது. வேட்டை நாய்களும் கிளம்பிவிட்டன. தன்னந்தனியே மகிழ்ச்சியோடு ஆடிக் களித்தது குட்டி ஆடு. இந்த சுதந்திரத்தின் மகிழ்ச்சி அம்மாவுக்கு ஏன் புரியவில்லை என்று மனத்துக்குள் நினைத்தது. எதிர்பாராத கணத்தில் ஒரு புதரிலிருந்து வெளிப்பட்ட நரி குட்டி ஆட்டின் முன்னால் வந்து நின்றது. உன்னைத் தின்னப் போகிறேன் என்று ஊளையிட்டது. அப்போதுதான் முதல்முறையாக வாழ்க்கையில் அச்சத்தை உணர்ந்தது குட்டிஆடு. அம்மா சொன்னதைக் கேட்காமல் போய்விட்டோமே என்று நினைத்து வருந்தியது.
திடீரென அதன் நெஞ்சில் ஓர் எண்ணம் எழுந்தது. “உன் விருப்பப்படியே நீ என்னைச் சாப்பிடலாம். நான் அதற்குத் தடை சொல்லமாட்டேன். அதற்கு முன்பு என் ஆசைப்படி நடந்துகொள்ள நீ அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. நரியும் அதற்குச் சம்மதம் தெரிவித்தது. ஆட்டுக்குட்டி உடனே சுற்றுப்புறத்தில் நடனம்போல துள்ளித்துள்ளி வந்தது. நாலைந்து சுற்றுக்குப் பிறகு சுவரோரமாக வைக்கப்பட்டிருந்த ஒரு மேளத்தின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டது. மேளத்திலிருந்து உடனே தொம்தொம் என்று சத்தமெழுந்தது. நரி “என்ன இது?” என்று கேட்டது. ”இப்படி சத்தமெழுப்பி ஆடுவதுதான் என் தினசரி வழக்கம்” என்று பணிவோடு சொன்னது. நரி “சரி, சீக்கிரம் ஆட்டத்தை முடி” என்று சொன்னது நரி.
அடுத்தடுத்த சுற்றுகளிலும் மேளத்தில் குதித்து ஓசை எழுப்பியது நரி. மேளத்தின் சத்தம் ஆட்டுக்காரன் போயிருக்கும் தொலைவு வரைக்கும் கேட்டது. சத்தத்தைக் கேட்டதும் பட்டியில் ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்துகொண்டான். நாய்களும் அதை உணர்ந்துகொண்டன. உடனே
அவை பட்டியை நோக்கி வேகமாக குரைத்துக்கொண்டே ஓடி வந்தது. நாய்கள் குரைக்கும் சத்தம் நெருங்கிவந்த பிறகே நரி அதை உணர்ந்தது. ஆனாலும் எதுவும் புரியாமல் குழம்பி நின்றது. ஒரு கோணத்தில் பட்டியை நோக்கி ஓடிவரும் நாய்களைப் பார்த்ததும் ஆட்டுக்குட்டி தன்னை வஞ்சித்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டது. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. நாய்கள் அதை வெகுதொலைவு விரட்டிச் சென்று அனுப்பிவிட்டுத் திரும்பின. நிலைகுலைந்து போகாமல் சரியான நேரத்தில் திட்டமிட்டுச் செயல்பட்டதால் நாட்டிய ராணியான ஆட்டுக்குட்டி உயிர்பிழைத்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு ஆடிக்கொண்டும் துள்ளிக்கொண்டும் செல்கிற ஆடு, மாடு, கோழி, குருவி, பன்றி என எதைப் பார்த்தாலும் அதற்கு நாட்டியராணி என்று பெயர்சூட்டுவது என் வழக்கமாகிவிட்டது.