கலைக்களஞ்சியம் – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 19)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் காலையில் கொடி வணக்கத்தைத் தொடர்ந்து எங்கள் தலைமையாசிரியர் ஒருசில மணித்துளிகள் மாணவர்களிடையே உரையாற்றுவது வழக்கம். “அன்பான மாணவமணிகளே” என்று அவர் வழக்கமாகத் தொடங்குவதைப் பார்த்தால் ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கான தொடக்கத்தைப்போல இருக்கும்.

ஆனால் மிகவும் சுருக்கமாக கல்வியின் அவசியம், ஒழுக்கத்தின் அவசியம், தேர்வுக்குப் படிப்பது என்பதைப்பற்றி இரண்டு மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசுவார். சிற்சில சமயங்களில் இடையிடையே உதாரணக்கதைகள் சொல்வார். அவை மிகவும் நன்றாக இருக்கும்.

ஒருநாள் அவர் உரையாற்றும்போது முற்றிலும் புதிதாக ஒரு செய்தியைச் சொன்னார். “இந்த வட்டாரத்திலேயே நமது பள்ளி மிகமுக்கியமான உயர்நிலைப்பள்ளி என்பதாலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கிற பள்ளி என்பதாலும் தமிழில் எழுதப்பட்ட பத்து தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தை அரசாங்கம் அனுப்பிவைத்திருக்கிறது. அது ஒரு பெரிய அறிவுச்சுரங்கம். நூலக வகுப்பு பாடவேளையில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் நூலகத்துக்கு வந்து கலைக்களஞ்சியத்தைப் பார்வையிட்டு பயன்பெறவேண்டும்” என்று சொல்லிமுடித்தார்.

வகுப்புக்குச் சென்று சேரும் வரையில் அமைதியாகச் சென்ற மாணவர்கள் வகுப்பறையை அடைந்ததும் ஆளாளுக்கு அதைப்பற்றிய ஐயங்களை முன்வைத்து உரையாடத் தொடங்கிவிட்டனர்.

“கலைக்களஞ்சியம்ன்னா என்னடா?”

“பத்து தொகுதிதான் அனுப்பியிருக்காங்கன்னா மிச்ச தொகுதிகள் ஏன் வரலை?”

“நெல்லு கம்பு மாதிரி கொட்டிவச்சி பாதுகாக்கறது அளவுக்கு கலைக்கு என்ன வந்தது? அது என்ன தானியமா?” பேசப்பேச ஐயங்கள் பெருகிக்கொண்டே சென்றன.

அன்று முதல் பாடவேளை ரங்கநாதன் ஐயா. தமிழ்வகுப்பு. அடிக்கடி தப்பான இலக்கணக்குறிப்பு எழுதுபவனின் காதைத் திருகியபடியே “சரியான அறிவுக்களஞ்சியம்டா நீ” என்று சொல்லிக்கொண்டே சிரிப்பவர் அவர். களஞ்சியம் என்பதையே ஏதோ கெட்ட வார்த்தை என்ற எண்ணத்தை அவர் விதைத்திருந்ததால் அவரிடத்திலேயே எப்படி இந்த ஐயத்தைக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. அதற்குள் ஏழுமலை முந்திக்கொண்டு “கலைக்களஞ்சியம்னா என்ன ஐயா?” என்று கேட்டுவிட்டான். என்ன சொல்வாரோ என்று ஒருகணம் பதற்றமாக இருந்தது.

அவர் “இப்ப ஆங்கிலத்துல ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியலைன்னா என்ன செய்றோம்? உடனே அகராதியை எடுத்துப் பார்க்கிறோம், இல்லையா? அது மாதிரி ஒரு சொல்லுக்கான விளக்கத்தை தெளிவா தெரிஞ்சிக்கணும்ன்னா அதுக்கும் தனிப்பட்ட விதத்துல ஒரு அகராதி வேணும். அதுக்குப் பேருதான் களஞ்சியம். அகராதின்னா பொருள். களஞ்சியம்ன்னா விளக்கம். புரியுதா?” என்று விளக்கினார்.

“எல்லாத்துக்கும் விளக்கம் அதுல இருக்குமா ஐயா?”

“உலகத்துல இருக்கப்பட்ட எல்லாத்துக்குமே கலைக்களஞ்சியத்துல விளக்கம் உண்டு. இப்ப ஆங்கிலத்துல ப்ரெய்ன்ங்கற சொல்லுக்கு என்ன பொருள்னு அகராதியில பார்த்தா மூளைன்னு மட்டும் போட்டிருக்கும். அதே சமயத்துல களஞ்சியத்துல மூளை சம்பந்தப்பட்ட எல்லா விளக்கங்களும் இருக்கும். மூளையின் அமைப்பு எப்படி, அது எப்படி வேலை செய்யுது? அதுல எத்தன மடிப்பு? அதன் எடை என்ன? அது இயங்க எவ்வளவு ரத்தம் வேணும்? அதுல எவ்வளவு செல்கள் இருக்குது? எத்தனை கோடி நியூரான்கள் இருக்குது? விலங்குகளுடைய மூளைக்கும் மனித மூளைக்கும் என்ன வேறுபாடு? எல்லாமே இருக்கும்.”

ஒருகணம் ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டு, பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொருவராக திகைப்பிலிருந்து விடுபட்டு கேள்வி கேட்கத் தொடங்கினோம்.

“ஐயா, இமயமலையைப்பற்றி இருக்குமா? வானவில் பற்றி இருக்குமா? திருவள்ளுவர் பற்றி? அண்டங்காக்கை?”

அவர் எல்லாக் கேள்விகளுக்கும் “இருக்கும் இருக்கும்” என்று தலையசைத்தபடியே இருந்தார். பிறகு “நூலக வகுப்புல நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கலாம்” என்று சிரித்தார். இடையில் “அதுக்கு வெள்ளிக்கிழமை வரைக்கும் காத்திருக்கணுமே ஐயா” என்று இழுத்தான் ஒருவன். “இன்னும் நாலு நாள் இருக்குதே” என்று ஐயாவும் கணக்குப் போட்டார். “ஒன்னு செய்யலாம். மதிய இடைவேளையில ஒரு பத்து பதினஞ்சி நிமிஷத்துக்குள்ள சீக்கிரமா சாப்ட்டு முடிச்சிடுங்க. நான் வந்து அழச்சிட்டு போறன்” என்றார். எங்கள் ஆவலில் அடுத்தடுத்த வகுப்புகள் தொடங்கியதும் தெரியவில்லை. முடிந்ததும் தெரியவில்லை. உணவு இடைவேளை மணி அடித்துவிட்டார்கள்.

ரங்கநாதன் ஐயா எங்களை வரிசையாக நிற்கவைத்து நூலக அறைக்கு அழைத்துச் சென்றார். நூலகரின் மேசையில் ஒன்றன் மீது ஒன்றாக சேட்டுக்கடையில் நகைப்பெட்டிகளை அடுக்கிவைத்ததுபோல கலைக்களஞ்சியம் தொகுதிகள் இருந்தன. நான் வேகவேகமாக அவற்றை எண்ணிப் பார்த்தேன். பத்து இருந்தன. ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்கள் இருக்கும். அந்த அளவுக்கு தடியாக இருந்தது. ஐயா நாற்காலியை மேசைக்கருகில் இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு ஒரு தொகுதியை எடுத்துப் பிரித்தார். தோராயமாக ஒரு பக்கத்தைப் பிரித்து “இங்க பாருங்க, அரேபியாங்கற பேருல எவ்வளவு விளக்கங்கள் இருக்குது பாருங்க. அது ஒரு நாடுன்னு மட்டும்தான் நமக்குத் தெரியும். இதுல எவ்வளவு தகவல்கள் இருக்குது பாருங்க. எந்த கண்டத்துல இருக்குது, என்ன மொழி பேசறாங்க, மக்கள் தொகை என்ன, என்ன தொழில் செய்யறாங்க, என்னென்ன விலங்குகள் இருக்குது, என்னென்ன நதிகளும் கடல்களும் அங்க ஓடுதுன்னு எல்லாத் தகவல்களும் இருக்குது” என்றார்.

ஒருவனை அழைத்து அந்த விளக்கங்களை வாய்விட்டுப் படிக்கும்படி சொன்னார். கேட்கக்கேட்க அது ஒரு அதிசயமான தொகுதி என்றே தோன்றியது, அவர் புரட்டிக் காட்டிய ஒவ்வொரு பக்கத்திலும் வெவ்வேறு விதமான தகவல்கள் இருந்தன. உண்மையிலேயே அறிவுக்களஞ்சியம் என்னும் சொல்லுக்கு அன்றுதான் பொருள் புரிந்தது. “ஒவ்வொரு ஆளா சீக்கிரம் ரெண்டுமூணு பக்கம் பாத்து முடிங்க. மணியடிச்சிடும்” என்று அவசரப்படுத்தினார் ஐயா. பத்து தொகுதிகளையும் எடுத்துப் பரப்பிவைத்தார். நாங்கள் பத்து பத்து பேராகச் சென்று பார்த்தோம். என் கைக்குக் கிடைத்த தொகுதியில் நானும் ஒரு சொல்லுக்கான விளக்கத்தைப் படித்து வியப்பில் மூழ்கிவிட்டேன். ஒவ்வொரு சொல்லைப்பற்றியும் ஒரு கட்டுரை அளவுக்கு தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. “ஏதாவது கட்டுரை எழுதணும்ன்னா, இதப்பாத்து தகவல் தெரிஞ்சிக்கலாம் ஐயா, போட்டியில முதல் பரிசு நிச்சயம்” என்றேன். ஐயா என்னைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்தார்.

நூலகத்தை விட்டு வெளியே வந்ததும் “இந்தத் தொகுதிகளை எழுதிமுடிக்க எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் ஐயா?” என்று கேட்டேன். “ஒரு பத்து பன்னெண்டு வருஷமாவது தேவைப்பட்டிருக்கலாம்” என்றார் ஐயா. “ஒரே ஒரு ஆளா செஞ்சிருப்பாங்களா, பல பேரு கூட்டா சேர்ந்து செஞ்சிருப்பாங்களா?” என்று மீண்டும் கேட்டேன். “தனியா எப்படிடா முடியும்? இருபது முப்பது பேர் கூட்டா சேர்ந்து செஞ்ச வேலைதான் இது” என்றார்.

அடுத்த கேள்வியைக் கேட்கத் தொடங்குவதற்குள் மதியப் பாடவேளைக்குரிய மணியடித்தது. “சரி சரி கெளம்புங்க, வகுப்புக்கு நேரமாய்டுச்சி” என்று சொன்னார் ஐயா. நாங்கள் உடனே வரிசை அமைத்து வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அப்போது ஒருவன் குனிந்து “அண்டங்காக்கையைப் பற்றிக்கூட போட்டிருக்கும்னு ஐயா சொன்னாரே, அது உண்மையா இருக்குமாடா?” என்று கேட்பதும் பக்கத்தில் இருந்தவன் “இவ்வளவு தகவல்கள் இருக்கும்போது காக்கையைப்பற்றி இருக்காதா? காக்கையைப் பற்றி மட்டுமல்ல, குருவி, மயில், குயில், மீன்கொத்தி, கொக்குன்னு எல்லாவற்றைப்பற்றியும் நிச்சயம் இருக்கும், போதுமா?” என்று பதில் சொல்வதும் கேட்டது.

Leave a comment