நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை செயல்பாட்டாளராக பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.
18 வயது வரையிலும் குழந்தைகள்தான் என்றபோதிலும் இவர்கள் அனைவரும் ஒரு படித்தானவர்கள் இல்லை. குழந்தைகளைக் கவரும் படைப்பு வளரிளம்பருவத்தினருக்குப் பிடிக்காமற்போகும். விழியன் போன்றோரது ‘வளரிளம்பருவ குழந்தை இலக்கியம்’ என்ற முன்னெடுப்புகளையும் இங்கு குறிப்பிட வேண்டும். எனவே 12 வயதிற்குள் இருக்கும் குட்டி வாசகர்களுக்காக அழகான வண்ணத்தில் ‘பஞ்சு மிட்டாய்’ என்னும் சிறுவர் காலாண்டு இதழை இவர் கொண்டுவருகிறார். வண்ண வடிவமைப்பு, எளிய மொழி, தரமான அச்சு, சிறுவர்களின் கற்பனைகளுக்கு முதன்மை என ‘பஞ்சு மிட்டாய்’ சிறார்களின் மகிழ்ச்சியை மட்டுமே ஆதாரமாக கொண்டு செயல்படுகிறது. அதனால் மொழியைப் பயன்படுத்துதல், வாசிப்பு பழக்கம் ஆகியன சிறார்களிடம் இயல்பாக வந்து சேர்கிறது.
பஞ்சுமிட்டாய்:
இவ்விதழில் குழந்தைகள் சொல்லும் கதைகள் அவர்களின் மொழியிலே பதியப்படுகிறது; ‘எடிட்’ செய்யப்படுவதில்லை. பள்ளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து நிகழ்வுகள் மூலம் கதைகள், ஓவியங்கள் அனைத்தும் இயல்பான சூழலில் பெறப்படுகிறது. நிகழ்வுகளில் ‘கதைப்பெட்டி’ வைத்துப் படைப்புகள் சேகரிக்கப்படுகின்றன. தற்கால சிறார் எழுத்தாளரின் கதை, சிறார் பாடல்கள், எளிமையான புதிர், சித்திரக்கதைகள் வடிவில் அறிவியல் புனைவுகள், பாரம்பரிய எளிய விளையாட்டு அறிமுகங்கள், நூல் அறிமுகங்கள், சுட்டிகளின் குட்டிக் கேள்விகள் என ஒவ்வொரு பக்கமும் குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகளின் கதைகள், பாடங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை அப்படியே வெளியிடுவது இதழின் தனிச்சிறப்பாகும். 100 சிறார் நிகழ்வுகளை பெங்களூரு, தஞ்சாவூர், விழுப்புரம், திருப்பூர், திருவாரூர் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைத்துள்ளனர். ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்ற அழ. வள்ளியப்பா பாடல் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். (விலை: ₹ 40)
இணையம்:
‘பஞ்சு மிட்டாய்’ இணையதளம் www.panchumittai.com வாயிலாக இணைய இதழும் தொடர்கிறது. சிறார் உலகம் பற்றிய உரையாடல்களுடன் இது பெரியவர்களுக்கான இணைய தளமாகச் செயல்படுகிறது. இணையத்தின் உள்ளடக்கத்தில் வாசிப்பவர்களின் வசதிக்காக குழந்தை வளர்ப்பு, கலை, சிறார் இலக்கியம், சிறார் நிகழ்வுகள், NEP 2019, ‘பஞ்சு மிட்டாய்’ பக்கம் என பல பிரிவுகளாகஉள்ளது. இதன் உள்ளடக்கம் குழந்தைகளின் அக மற்றும் புற உலகம், கல்வி, அரசியல், மருத்துவம், பாலியல், சிறார் இலக்கியம், சிறார் விளையாட்டு, கலைகள் என இதன் பார்வைக் கோணங்கள் விரிகின்றன.
குழந்தைகள் குறித்த சிறந்த பதிவுகளனைத்தையும் ஒரே இடத்தில் ஆவணப்படுத்த முயற்சி செய்கிறது. எழுத்தாளர் பாவண்ணன் (எனது வாழ்வில் புத்தகங்கள் – தொடர்), தியாக சேகர் (ஒரிகாமி – தொடர்) போன்றரது தொடர்களும் சிறார் நாடகக் கலைஞர் பேரா. வேலு சரவணன், எழுத்தாளர் உதயசங்கர் போன்றரது நேர்காணல்களும் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பதிப்பாளர்கள், மருத்துவர்கள், இயற்கை சார்ந்து உரையாடும் நண்பர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நண்பர்கள், கலைஞர்கள் என சிறார் உலகம் மற்றும் கல்வி சார்ந்து இயங்கும் அனைவரையும் இணைக்கும் ஒரு புள்ளியாகவும் ‘பஞ்சு மிட்டாய்’ இணையம் திகழ்கிறது.
சிறார் நாவல்:
‘பஞ்சு மிட்டாய்’ பிரபு எழுதிய சிறார் நாவல் ‘எனக்குப் பிடிச்ச கலரு’. இக்கதையின் மூலம் குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மை வளர்க்கவும் ஆர்வத்தைத் தூண்டவும் முயல்கிறார். சிறார்களுக்கு கதைகள் மூலம் ஒழுக்கத்தைக் கற்றுத் தரலாம் என்கிற பாவனையும், கற்பிதங்களும் இங்கு அதிகம். நமது அரசியலமைப்பின் நெறிமுறைக் கோட்பாடுகளுள் ஒன்று ‘அறிவியல் மனப்பான்மையை’ வளர்க்க வலியுறுத்துகிறது. விடுதலைக்கு பிந்தைய பல கல்விக்குழுக்களும் இதையே வலியுறுத்தின. அடிப்படை உரிமைகளே கேள்விக்குரியதாக மாறும் சூழலில் ‘நெறிமுறைக் கோட்பாடுகளின்’ நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சூழலியல் சார்ந்த சிறார் கதைகளைப் போல (எ.கா. விஷ்ணுபுரம் சரவணன் – ஒற்றைச்சிறகு ஓவியா) அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் சிறார் கதைகளும் அதிகம் உருவாக வேண்டும்.
வண்ணங்கள் என்பது வெறும் நிறங்கள் மட்டுமா? அவற்றுள் மொழி, இனம், சாதி, மதம், குணம், ருசி, பண்டிகை என பலவற்றின் குறியீடாக இருப்பதையும் கருப்பு வண்ணம் விலக்கப்பட்ட ஒன்றாக இருப்பதையும் தனது முன்னுரையில் பதிவு செய்கிறார்.
வண்ணங்களின் நண்பராக இருக்கும் சிறுமி வனிதாவிற்கும் வண்ணங்களுக்கும் இடையே இந்த கதையாடல் நிகழ்கிறது. எல்லா வண்ணங்களையும் விரும்பும் வனிதாவிற்கு இருட்டுப் பயம்; எனவே கருப்பு இயல்பாகவே பிடிக்காமற்போனது.
அவளது கனவில் பூமியில் ஒருநாள் நிறங்கள் இல்லாமல் போகிறது. முதன்மை நிறங்களான சிவப்பு, நீலம், பச்சை ஆகியன வானவன் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. ‘கருப்பு’ வண்ணம் மற்றும் எலியின் உதவியுடன் அவர்களை மீட்டு வருவதுதான் கதை.
வண்ணங்களை மீட்பதற்கு ‘கருப்பு’ம் வனிதாவிற்கு உதவுகிறது. எனவே ‘இருட்டுப் பயம்’ நீங்கி இருவரும் நண்பர்களாகி விடுகின்றனர். மீட்பதற்கு விடுகதைக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. ஆனால் வானவன் கோட்டை அரக்கன் இவர்களை பயமுறுத்துவதில்லை.
“சிவப்புச் சட்டைக்காரன்,
நிக்காமல் ஓடும் ஓட்டப் பந்தயக்காரன்,
கூடுவிட்டு கூடு பாயும் வித்தைக்காரன்,
காண்போரை மயக்கும் மாயக்காரன்” (பக்.32) என்ற விடுகதைப் புதிருக்கு விடை கண்டு நண்பர்களை மீட்டு விடுகின்றனர்.
பின்வரும் தலைப்பில் அறிவியல் கருத்துகள் பெட்டிசெய்திகளாகக் கூறப்பட்டுள்ளன. இவை கதைகளுக்கு மட்டுமல்ல; அறிவியல் ஆர்வத்தையும் கூடுதலாக்குகின்றன.
வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றது? (பக்.11)
VIBGYOR (பக்.17)
முதன்மை நிறங்கள் (பக்.24)
சிவப்பு நிற ஆடையைப் பார்த்தால் மாடு முட்டுமா? (பக்.35)
நிறக்குருடு (பக்.36)
தாவர ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசம் (பக்.47)
வானவன் கோட்டையில் பச்சை நிற அறையில் தாவர ஒளிச்சேர்க்கை சொல்லப்படுகிறது. நீர், காற்று (கார்பன் டை ஆக்சைடு), சூரிய ஒளி, பச்சையம் கொண்டு உணவு தயாரிக்கும்போது புகையாக ஆக்சிஜன் வெளியாகிறது. தாவரங்களில் உணவு தயாரிக்கும் (Starch) ஒளிச்சேர்க்கை (Photosynthesis) நிகழ்வை மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் இக்கதை எடுத்துரைக்கிறது.
தாவரங்கள் எதை சுவாசிக்கும் என்கிற குழப்பத்தை இம்மாதிரியான கதைகள் போக்கும் என்பதோடு குழந்தைகளிடையே அறிவியல் ஆர்வமும், மனப்பான்மையும் மிகும் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏற்கனவே சமூகத்தில் பிளவை உண்டாக்கியிருக்கும் ‘மநு’ தர்ம ஒழுக்கங்களையும் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட நீதிகளையும் குழந்தைகளிடம் திணிப்பதைத் தடுக்கவும் மாற்று வழிமுறைகளைத் தேடவும் இவை சிறந்த முன்முயற்சிகளாக இருக்கின்றன.
பஞ்சு மிட்டாய் காலாண்டு இதழ் : தனி இதழ்: ₹ 50 | 10 இதழ்கள் சந்தா: ₹ 500 | மின்னஞ்சல்: editor.panchumittai@gmail.com | அலைபேசி: 9731736363