Hayao Miyazaki எனும் மாயவித்தைக்காரர் – அபிநிஷா

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

Hayao Miyazaki – ஒரு முக்கியமான ஜப்பானிய அனிமேஷன் படங்களை இயக்கும் ஆகச்சிறந்த இயக்குனர். அனிமேஷன் படங்கள் என்றதும் அவருடைய அனைத்துப் படங்களும் குழந்தைக்களுக்கான படங்களா என்ற கேள்வி எழும். அவருடைய பல படங்களை குழந்தைகளுடன் பார்க்கலாம். அவருடைய அனைத்து படங்களையும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், குழந்தை செயற்பாட்டாளர்களும் என சிறார் உலகம் சார்ந்து வேலைப் பார்க்கும் அனைவரும் நிச்சயமாக பார்க்க வேண்டும். ஒரு அறிமுகமாக, அவருடைய சில படங்களை பற்றியும், சில படங்களில் உள்ள முக்கியமான கதாபாத்திரங்களை பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

My neighbor Totoro – 1988யில் வெளியாகிய ஒரு அழகான feel good படமென்று சொல்லலாம். ஒரு சிறிய குடும்பம், அப்பா, இரண்டு சிறிய மகள்கள். ஒரு கிராமத்தில் சிறிய வீடு ஒன்றை வாங்கி அதில் குடியிருக்கிறார்கள். ஜப்பானில் உள்ள ஒரு அமைதியான கிராமம் அது. சிறு வயது முதல் எல்லா வயதினரும் நீண்ட நேரம் தோட்ட வேலைகளை பார்க்கிறார்கள். புதிதாய் கிராமத்திற்கு வந்த இந்த குடும்பத்திற்கு மிகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். அப்பா ஒரு கல்லூரி பேராசிரியர். மூத்த மகள் பள்ளிக்கூடம் செல்கிறாள். இன்னொரு மகளை அந்த ஊரில் இருக்கும் வயதான பாட்டி ஒருவர் பார்த்துக்கொள்கிறார். அந்த கிராமம் பெரிய காடுகளுக்கு பக்கமாக உள்ளது. காடுகளை குறித்தும், அதில் வாழும் உயிர்களை குறித்தும் spiritual ஆகவும் அழகாகவும் Hayao Miyazaki கதை கூறும் தோரணையே ஒரு அழகு தான். அவரது திரைக்கதையில் அமைதியும் வெளிச்சமும் கூட கதை சொல்லும்.அந்த காட்டில் வாழும் ஒரு கரடி போன்ற ஒரு உயிர் தான் Totoro.அந்த சிறுவர்களுக்கு Totoro அதனுடைய பூனைக்குட்டி வாகனத்தின் மூலம் செய்யும் உதவிகள் எல்லாம் fantasy ஆக இருக்கும். அந்தச் சிறுமிகளுக்கும் டோடொரொவுக்குமான அழகான உறவை தான் இந்தப் படம் நம் கண் முன்னே நகர்த்துகிறது.. இதே போன்று அவர் அவருடைய எல்லா படங்களிலும் ஜப்பானையும், ஜப்பான் மக்களின் வாழக்கையும் காட்டும் தோரணை மிகை படுத்தாமல் அழகாக இருக்கும்.

நாம் எளிதாக குழந்தைகளுடன் என்ன செய்தால் நன்றாக இருக்கும், எதை செய்தால் நம் குழந்தைகளுடன் எளிமையாக பயணிக்கலாம் என்று காட்டியிருப்பார். பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உரையாடல் எவ்வாறெல்லாம் நன்றாக அமைத்துக் கொள்ளலாம் என்று திரையில் அவருடைய கதாபாத்திரங்கள் மூலம் நேர்த்தியாக திரையிட்டிருப்பார்.

இன்னோரு முக்கியமான படம்தான் KIKI’s delivery service. ஒரு 13 வயது பெண்பிள்ளை எடுக்கும் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதும், அந்த முடிவினால் அவளுக்கு ஏற்படும் சவால்களை அவள் கையாளும் விதங்களும், அதை எதிர்கொள்ளும் முயற்சிகளும் Hayao காட்டியிருக்கும் விதம் அழகாகவும் நம் மனதை தூண்டும் வகையிலும் இருக்கும். இந்த படத்தில் ஜப்பானை காட்டும் விதமும், உணவையும், உணவின் முக்கியமான சில விவரங்களும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும். அனிமேஷன் தொழில்துறையில் இயங்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நபர் என்றால் அவர் Hayao Miyazaki தான்.

அவருடைய பல படங்கள் அவரது கைகளால் வரைந்த ஓவியங்களாலே உருவாகி உள்ளன. The Howl’s moving castle என்னும் படம் அவர் சொந்தமாக கைகளால் வரைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களால் உருவான படம். ஜப்பானை சித்தரிக்கும் ஒரு பொறுப்பான இயக்குனராக Hayao அவருடைய படைப்பில் நேர்மையாக பயணிக்கிறார். கடல் ஓரம் வாழும் மக்களை காட்டும் விதமும், அவர்களுடைய உணவு முறைகளையும் சிறு விவரம் கூட தப்பாமல் அவர் படங்களில் பதிவுசெய்கிறார்.

தற்போது வரும் ஜப்பானின் commercial அனிமேஷன் படங்களின் மீது பலருக்கும் வெவ்வேறான மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால், இப்போதும் குழந்தைகளுக்கும், குழந்தைகளைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தேர்ந்தெடுத்து நல்ல திரைப்படங்களை காட்ட விரும்புவர்களுக்கு Hayao அவரின் படங்களை முதன்மையான இடத்தில் வைக்கலாம் என்றே கூறுவேன்.

அவருடைய அனைத்து படங்களுமே felt concept (யாரேனும் சொல்வதை கேட்டு புரிந்து கொள்வதை தாண்டி நாம் பார்த்து உணர்ந்து புரிந்து கொள்வது) வகைமையில் இயங்குகின்றன. வெறும் திரையில் படங்களை பார்ப்பதை(watching) கடந்து உணர்தல்(feel) நிலைக்கும் நம்மை இழுத்துச் செல்லும். நான் கிராமத்தில் வளர்ந்ததினாலோ என்னவோ எனக்கு இவருடைய படங்கள் எளிதாகவும் அழகாகவும் இருக்கின்றன. நம்மில் பல பேர் கிராமத்தில் பிறந்து வாழாதவர்களாகவே இருப்போம். இந்தப் படங்களை கண்டு அந்த அழகான பழைய நினைவுகளை தாலாட்டலாம். கிராம வாழ்வை அனுபவிக்காத நண்பர்களும் இந்தத் திரைப்படங்களின் வழியே புதிய நினைவுகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று நம்புகிறேன். ஏனென்றால் Hayao அந்த மாயவித்தையை நன்கு அறிந்தவர்.

1 Comment

  • Sarumathi says:

    அழகான சொற்கள். எளிமையாய் Hayao மீது ஆர்வம் கொள்ள வைக்கிறது இந்த கட்டுரை:) அருமை அபிநிஷா. மேலும் எழுதவும்🤗🥰

Leave a comment